வெண்முரசு, குழந்தைகளுக்காக

அன்புள்ள ஜெ

இது காயத்ரி இந்த ஓவியம் பற்றி எழுதியது…

மகாபாரதம் அப்டேட்ஸ்:

இப்போது குழந்தைகளுக்கு வெண்முரசின் இரண்டாம் நாவலான மழைப்பாடலில் 46 வது அத்தியாயம் வரை சொல்லியிருக்கிறேன்.

இன்று மதியம் புதிய ஸ்கெட்ச் பேனாக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த கீர்த்தினி, திடீரென இதை வரைந்து கொண்டு வந்து காண்பித்து அசர வைத்தாள்!

“அம்மா, சுயம்வரத்துல அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூணு பேரும் இப்டி தான நின்னுட்டிருந்தாங்கன்னு சொன்னீங்க?”

ஜெமோவின் எழுத்து சொல்லாகி, சொல் அவள் மனதில் காட்சியாகி, அக்காட்சி இங்கே ஓவியமாகியிருக்கிறது!

கீழ்வரும் பத்தியை வாசித்த பின், மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்க்கவும்:

“காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் காசிமன்னனிடம் மூன்று மகள்களாகப் பிறந்திருக்கின்றன என்றனர் நிமித்திகர்கள்.”

– வெண்முரசு, முதற்கனல் 10

( அவள் வரைந்திருக்கும் சுயம்வரக் காட்சி 11 வது அத்தியாயத்தில் வருகிறது.)

சித்தார்த்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நான் பத்துவயது மகளுக்கு வெண்முரசின் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது வண்ணக்கடல் கடந்துவிட்டேன். வண்ணக்கடலில் இளநாகனின் பயணத்தை விட்டுவிட்டேன்.

குழந்தைக்கு மகாபாரதக் கதையை சொன்னபோது அதிலிருந்த மேஜிக்கை அவள் புரிந்துகொண்டாலும்கூட அவளால் அதை ஏனோ ஏற்கமுடியவில்லை. அதோடு கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களில் இருந்த முரண்பாடுகளும் சிக்கலை அளித்தன

ஆகவே நான் வெண்முரசைச் சொல்ல ஆரம்பித்தேன். வெண்முரசு அவளுக்கு மிகுந்த நிறைவை அளித்தது. குறிப்பாக அதில் வந்துகொண்டே இருக்கும் பெண்கதாபாத்திரங்கள். நான் படங்களையும் காட்டி கதை சொன்னேன். நீங்கள் பிரசுரித்த படங்களும்  வெண்முரசு விவாதங்கள் தளத்தில் இருந்த படங்களும் எனக்கு மிகவும் உதவின. பல படங்கள் மிகமிக அற்புதமானவை

வெண்முரசு குழந்தைகளிடம் உருவாக்கும் விளைவை டிரமாட்டிக் என்றுதான் சொல்வேன். துரியோதனனை பீமன் கரடியிடமிருந்து காப்பாற்றுகிறான். ஆனால் துரியோதனன் அதனாலேயே பீமனிடம் கடுமையான காழ்ப்பு கொள்கிறான். இது குழந்தைகளுக்கு புரியுமா என்று நி னைத்தேன். ஆச்சரியமாக குழந்தைகள் மிகச்சரியாக அந்த உணர்ச்சியை புரிந்துகொள்கின்றன

வெண்முரசு எனக்கு அளிக்கும் அர்த்தமே வேறு. ஆனால் என் மகளுக்கு அது இந்தியப்பண்பாடு, நம்முடைய வாழ்க்கைமுறை, நம்முடைய மதம் எல்லாவற்றையும் அறிமுகம் செய்கிறது. உதாரணமாக விதவிதமான மங்கலத்தாலங்களை நான் விளக்கிச் சொன்னேன். ஏதெல்லாம் மங்கலமாக கருதப்படுகிறது என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன்பின் ஒரு வீட்டில் ஆரத்தி எடுத்ததை கண்டதுமே அவளுக்கு அது என்ன என்று புரிந்துவிட்டது

அதோடு வெண்முரசு காட்டும் இந்தியாவின் வேல்யூ சிஸ்டம். மாத்ரியின் குழந்தைகளை தன் குழந்தைகளைவிட அன்பாக வளர்க்கும் குந்தியின் சித்திரம். அதைச்சொன்னபோது நானும் கண்கலங்கிவிட்டேன். குந்தி இஸ் சோ நைஸ் என்று என் மகள் சொன்னாள்

எனக்கே இந்த மாதிரி கதையாகச் சொல்லிக்கொள்வது மிகமிக பிடித்திருக்கிறது. சட்டென்று நானும் என் மகளும் மட்டும் அழிவில்லாத இந்தியாவின் மண்ணில் நின்றிருப்பதுபோல தோன்றுகிறது

நன்றி ஜெ

கே.அரவிந்தன்

முந்தைய கட்டுரைஒரு விமர்சனம்
அடுத்த கட்டுரைக்யோஜன்