அழகியநம்பியின் நகரில்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
சற்றுமுன் அழகியநம்பியின் நகரில் பதிவை படித்தேன் திருக்குறுங்குடியை மனக்கண் முன் கொண்டு நிறுத்திவிட்டீர்கள்!.மலைநம்பியை காண போகவில்லை போலும். கோயில் சிற்பங்களின் புகைப்படங்கள் அருமையாக இருந்தன.திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்தவிருத்த பாசுரத்தில் உள்ள முற்பகுதியை
மேற்கோளாக காட்டி திருக்குறுங்குடியை அழகாக விவரித்திருந்தீர்கள். அந்த பாசுரத்தின் மீதி பகுதி தாங்கள் பதிப்பிருந்த நரசிம்மமூர்த்தியின் சிற்ப புகைப்படத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது!.
813:
கரண்டமாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம்
புரண்டுவீழ வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய்!,
திரண்டதோளிரணியன் சினங்கொளாக மொன்றையும்,
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பது உன்னையே 62
அன்புடன்,
அ.சேஷகிரி
அன்புள்ள சேஷகிரி,
திருத்திக்கொண்டேன் நன்றி
என் பார்வையில் தமிழகத்திலுள்ள மிகச்சிறந்த நரசிம்மர் சிலைகள் திருக்குறுங்குடியில் உள்ளவைதான்
ஜெ
மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,
‘கரண்டம் ஆடு பொய்கை’ பாடியது திருமங்கையாழ்வார் இல்லை, திருமழிசையாழ்வார். திருச்சந்தவிருத்தம் – அதன் ஓசையே அலாதி.
அழகிய நம்பிக்கு சமஸ்கிருதத்தில் ‘சுந்தர பரிபூரணன்’ என்று பெயரைப் பார்த்தது நீங்கா ஞாபகம். நம் கோவில்களில் இவ்வகைப் பெயர்கள் சிலசமயம் மொழிபெயர்ப்பாகவும், சில சமயம் இணையாக வைக்கப்பெற்ற மாற்றுப்பெயர்களாகவும் இருப்பதை கவனித்துள்ளேன். உதாரணமாக, திருக்கொள்ளிக்காட்டில் அம்பாளின் பெயர் ‘மிருது பாத நாயகி’, தமிழில் ‘பஞ்சின் மெல்லடி அம்மை’.
நம்பி என்ற சொல்லுக்கு பரிபூரணன் என்பது இணையான மொழிபெயர்ப்பா (equivalent translation) அல்லது மாற்றுப்பெயரா (alternative)?
அன்புடன்,
பிரபு ராம்
அன்புள்ள பிரபுராம்
நம்பி என்ற சொல் இளையோன், சிறந்தோன் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. கம்பன் ராமனை நம்பி என்றே அழைக்கிறான்.
பேராசிரியர் ஜேசுதாசனின் மகன்கள் நம்பி, தம்பி- கம்பராமாயணப்பெயர்கள். நம்பி என்ற சொல்லை அவர் ஒரு கீர்த்தனையில் ஏசுவுக்கு பயன்படுத்தியிருந்தார்
கேட்டபோது நம்பிரான் என்பதன் சுருக்கம் அச்சொல், அது சிறந்தோன், முதல்வன், தலைவன் என்ரு பொருள்கொண்டது என்றார்
அதுவே உண்மை என்று படுகிறது
ஜெ
அன்புள்ள ஜெ,
உங்கள் குறுங்குடி படங்கள் நன்றாக உள்ளன. ஆனால் அவை செல்போனில் எடுக்கப்பட்டவை. அதிலும் ரெட்மி. அது மலிவான செல்போன். ஒரு நல்ல ஆப்பிள் ஐஃபோன் வாங்கிக்கொள்ளுங்கள். அல்லது புகைப்படநிபுணரை சேர்த்துக்கொள்ளுங்கள்
ராமச்சந்திரன்
அன்புள்ள ராமச்சந்திரன்
ஐபோனெல்லாம் எனக்கு கட்டுப்படியாகாது- நான் மின்பொருட்களுக்குச் செலவழிப்பதில்லை.
புகைப்படநிபுணர் எப்போதும் உடனிருக்கமுடியாது. அன்று உடனிருந்தார். அவர் எடுத்த சிலபடங்கள் அதிலுள்ளன. எஞ்சியவற்றை இத்துடன் வெளியுட்டுள்ளேன், சரிதானே?
புகைப்படநிபுணர் எடுக்கும் படங்கள் உடனே கிடைக்காது, அவை மிகப்பெரிய அளவு கொண்டவை. அவர்கள் செப்பனிட்டு சுருக்கி அனுப்புவதற்குள் கட்டுரை வெளியாகிவிடும்
புகைப்பட நிபுணரின் பெயர் ஆனந்த்குமார், திருவனந்தபுரம் மையமாக்கி புகைப்படங்கள் எடுக்கிறார். குறிப்பாக குழந்தைப்புகைப்படங்கள். சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர். படத்தில் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கிறார்
ஜெ