தமிழ்நாட்டுக்கு ஒரு விசித்திரமான சாபம் உண்டு, இங்கு பொய்வரலாறுகள் இடைவிடாமல் பேசப்படும். மெய்வரலாறு அனாதையாக கிடக்கும். பொய்வரலாற்றின் சான்றாக திரிபுபட்டாலொழிய மெய்வரலாற்றை எவரும் கவனிக்கமாட்டார்கள்.
பொய்வரலாற்றுக்கு அடிப்படை எப்போதுமே குலப்பெருமை, இனப்பெருமை. ஒரு அயலவன் கேட்டால் நம்மை நோக்கி நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு அசட்டுத்தனமான வரலாற்றுக் கற்பனைகள். முதிராப்பழங்குடிகளிடம் மூன்று நம்பிக்கைகள் உண்டு. ஒன்று, தங்கள் குடியே உலகின் தொல்குடி, இரண்டு, உலகிலுள்ள அனைவருமே தங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள், திரிபடைந்தவர்கள். மூன்று, தாங்களிருக்கும் நிலமே உலகின் மையம். தமிழில் பொய்வரலாறு பேசுபவர்கள் வெளிப்படுத்துவதும் இதே மூன்று மனநிலையைத்தான்.
இந்தவகையான போலிப்பெருமிதம் வரலாற்றுணர்வால் எழுவதல்ல, பழக்குடிமனநிலையில் இருந்து எழுவது.ஆகவே அது எளிதாக பாமரர் நடுவே புகழ்பெறுகிறது. மெய்வரலாற்றிலேயே தமிழர் பெருமைகொள்ள எவ்வளவோ சான்றுகள் உள்ளன. அவற்றை மிகையின்றி சொல்லப்போனாலே உலகுக்கு முன் தொல்குடிகளில் ஒன்று என நிலைகொள்ளமுடியும். ஆனால் அதற்கு வரலாற்றுக் கல்வியும் அது அளிக்கும் சமநிலையும் தேவை. அது இங்கே இல்லை.
தமிழக வரலாறு தொகுத்து எழுதப்பட்டே நூற்றைம்பதாண்டுகள்தான் ஆகின்றது. இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், செவிச்சொல் சான்றுகள், மொழிக்கூறுச் சான்றுகளைக் கொண்டு அது ஒருவாறாக எழுதப்பட்டது. அதன் சிறுபகுதியே தெளிவுற எழுதப்பட்டுள்ளது. பெரும்பகுதிக்குச் சான்றுகள் முறையாக இல்லை.
ஆனால் அறுபதுகளுக்குப்பின் தமிழகத்தில் நம்பகமான, முறைமைசார்ந்த வரலாற்று- தொல்லியல் ஆய்வுகள் மிக அரிதாகிவிட்டன. மேலேசொன்ன பொய்யான பெருமிதவரலாறு, சாதிவரலாறு எழுதுவதில் நமக்கு கவனம் திரும்பி விட்டது. எங்கும் கள்ளநாணயங்களின் ஓசையே முழங்குகிறது. யூடியூபில் தமிழக வரலாற்றைப் பற்றி இருக்கும் பதிவுகளைப் பார்க்கையில் அச்சம் ஏற்படுகிறது. தமிழகம் இனி என்றேனும் மெய்யான வரலாற்று ஆய்வு மனநிலைக்கு மீளமுடியுமா என்ற பதைப்பு உருவாகிறது
தமிழகவரலாறு எழுதப்பட்டபோது மிகக்குறைவாக எழுதப்பட்டது இங்குள்ள வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். ராபர்ட் புரூஸ் ஃபூட் காலம் முதலே இங்குள்ள வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பற்றிய ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நமது கற்கால பண்பாடு, பெருங்கற்கால பண்பாடு ஆகியவை பதிவாயின. ஆனால் நாம் அவற்றில் செய்யவேண்டிய ஆய்வுகள் இன்னும் ஏராளமாக உள்ளன
இங்கே நிலமெங்கும் பெருங்கற்காலச் சின்னங்கள் சிதறிக்கிடக்கின்றன. அவை ஆலயங்களாக மாறி வழிபடப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் அவை விவசாயிகளால், ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்படுகின்றன. கொடுமணல் பெருங்கற்களில் பெரும்பகுதி விவசாயநிலமாக அப்பகுதியை மாற்றியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. ஒருமுறை அங்கே சென்றபோது சாலைபோடுவதற்காக எர்த்மூவரால் வெட்டியிருந்தனர். வெட்டுபட்ட நிலத்தில் பாதிப்பாதியாக முதுமக்கள் தாழிகள் சாலையோரம் நெடுக தெரிந்தன.
இங்கே ஆய்வாளர்களுக்குக் கூட நடுகல்- பெருங்கல் இரண்டுக்கும் வேறுபாடு தெரியாது. நடுகல் என்பது வீரன் ஒருவனின் நினைவாக நாட்டப்படுவது. நவகண்டக்கல், புலிக்குத்திக்கல் என்றெல்லாம் அதில் பல வகை உண்டு. அவை போர்ச்சமூகம் உருவானபிறகு நடப்பட்டவை. புறநாநூறு முதல் திருக்குறள் வரை நடுகற்கள் பற்றி நிறைய பேசப்பட்டுள்ளன
பெருங்கற்கள் அப்படி அல்ல. அவை பழங்குடிச் சமூகத்தால் நாட்டப்படுபவை. வெறும் நினைவுக்கல் அல்ல அவை, அவை அரசசின்னங்கள்.வழிபாட்டிடங்கள். மிகப்பெருந்திரளாக மக்கள் கூடி பல்லாண்டுகள் உழைத்து நிலைநாட்டுபவை. அதாவது பிற்காலத்தைய ஆலயங்கள், கோபுரங்கள் போல. பெருங்கற்களை நடுகற்கள் என்பது மிகப்பெரிய வரலாற்றுக்குழப்பத்தை உருவாக்குவது.
தமிழகத்தில் நான்குவகை பெருங்கற்கால சின்னங்கள் உள்ளன. கல்வட்டங்கள் [rounds], கல்அறைகள் [cist], பெருங்கற்கள் [menhir] ,தொப்பிக்கற்கள் [cape stones] இவை தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய தென்னிலங்களில் அதிகமாக உள்ளன. சீராக இந்தியா முழுக்கவே காணக்கிடைக்கின்றன. உலகம் முழுக்க இவற்றுக்கு இருக்கும் பொதுத்தன்மை ஆச்சரியமளிப்பது.
ஈரோட்டிலிருந்து சென்ற நவம்பர் பதினேழாம் தேதி நான், அஜிதன், கிருஷ்ணன், ராஜமாணிக்கம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கிளம்பி குமரிக்கல்பாளையம் என்னும் ஊரில் இருக்கும் மாபெரும் பெருங்கல்சின்னத்தை பார்க்கச் சென்றோம்.ஈரோடு- திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி வட்டத்தில் இருக்கிறது குமரிக்கல்பாளையம்
இங்குள்ள பெருங்கல் மண்ணுக்குமேலே 35 அடி ஆழம் உள்ளது. மண்ணுக்கு அடியில் 12 அடி. இருபது டன் எடைவரை இருக்கலாம். இந்தியாவிலுள்ள பெருங்கல்நிலைகளில் எது பெரியது என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. மேகாலயாவிலுள்ள நார்டியாங், கேரளத்தில் பொத்தமலை போன்ற இடங்களில் அவ்வகையில் உயரமான பெருங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
என் வாசகரும் நண்பருமான விசாலாட்சி தெலுங்கானாவில் தொல்லியல் துறை இயக்குநராக இருக்கிறார். அவர் அங்கே நல்கொண்டா அருகே அப்பாஜிபேட்டை என்னும் ஊரில் 30 அடி உயரமான பெருங்கல்லை கண்டுபிடித்து ஆவணப்படுத்தினர். அதுதான் இந்தியாவிலேயே உயரமான பெருங்கல் என்று சொல்லப்பட்டது
குமரிக்கல்பாளையம் பெருங்கல் அதைவிட ஐந்தடி உயரமானது. உண்மையில் மேலும் 3 அடி உயரம் இருந்தது. அது உடைந்துவிழுந்து தனியாக வைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இன்று இதுதான் இந்தியாவிலேயே பெரிய பெருங்கல்லாக இருக்கவேண்டும்
இது பிற்காலத்தைய தூணாக இருக்கலாம் அல்லவா? அப்படி ஓர் ஐயம் இத்துறையை அறியாதவர்களிடம் இருந்து எழும். அதற்கு முதல்பதில் என்னவென்றால், பெருங்கற்கள் உளிபடாதவை என்பதுதான். அவை நடப்பட்ட காலகட்டத்தில் உலோகப்பயன்பாடு இல்லை. ஆகவே அவை செதுக்கி எடுக்கப்பட்டவை அல்ல. மர ஆப்புகள் வைத்து பாறையிலிருந்து பிளந்து எடுக்கப்பட்டவை. ஆகவே இயற்கையான பாறைபோலத்தான் இருக்கும். அவை செங்குத்தாக நடப்பட்டிருப்பதிலிருந்து மட்டுமே அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று தெரியும்
மேலும் குமரிக்கல்பாளையத்தில் கிடைத்த ஏராளமான முதுமக்கள் தாழிகள் இது தொன்மையான ஒரு புதைநிலம் என்பதை காட்டுகின்றன. அத்துடன் கற்காலத்தைய கற்கருவிகளும் இங்கே கிடைத்துள்ளன. அவை சாமிகளாக வழிபடப்படுகின்றன.
மேலும் ஒரு வியப்புக்குரிய சான்று உள்ளது. குழியடையாளம் [ cup marks] என்ற ஒன்று வரலாற்றுக்கு முந்தைய தொல்லியலில் வியப்புடன் குறிப்பிடப்படுகிறது. கற்பாறையில் மனிதர்கள் உருவாக்கிய குழிகள் இவை. தொல்கற்காலத்தைச் சேர்ந்தவை, அதாவது முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரை தொன்மையானவை. நெடுங்காலம் இவை இயற்கையானவை என்றே எண்ணியிருந்தனர், இப்போதுதான் இவை தொல்மனிதர் செதுக்கியவை என நிறுவப்பட்டுள்ளது
இவற்றின் தேவை என்ன என்பது தெரியவில்லை. பயணிகளுக்கான செய்தியா, வழிபாட்டு அடையாளங்களா? இல்லை , இவை விண்மீன் நிலைகளை கல்லில் பொறித்து வைத்தவை, கால அடையாளத்துக்காக என்றும் ஆய்வாளர் சொல்கிறார்கள். இப்பகுதியிலேயே பிள்ளைதின்னிக் கரடு என்னும் இடத்திலுள்ள தொன்மையான குகைகளில் இந்த குழியடையாளங்கள் உள்ளன.
ஆகவே குமரிக்கல்பாளையத்தில் உள்ள பெருங்கல் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்பதில் ஐயமில்லை. தமிழக வரலாறு தெளிவான சான்றுகளுடன் ஊர்களாக அமையத்தொடங்கி மூவாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆதிச்சநல்லூரிலும் கொடுமணலிலும் கிடைக்கும் சான்றுகள் அதைக் காட்டுகின்றன. எனில் இந்த பெருங்கல் மேலும் பல ஆயிரமாண்டுகளுக்கு முந்தையது. எப்படியும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நிறுவப்பட்டது
இந்தப் பெருங்கல் குமரிக்கல் என்று இங்கே சொல்லப்படுகிறது. இவ்வூருக்கே அப்பெயர்தான். ஆனால் அது பின்னர் வந்த பெயர்.தெலுங்கு நாயக்கர்களுக்கு குமரிவழிபாடு உண்டு. இளமையில் மாய்ந்த கன்னியரை நடுகற்களாக வழிபடுவது அது. ஐநூறு ஆண்டுகளுக்குள் இங்கே குடியேறிய தெலுங்குமக்கள் இந்த மாபெரும் கல்லை குமரிக்கல் என எண்ணி வழிபட்டார்கள். இன்று ஒரு காட்டுத்தெய்வமாக நிலைகொள்கிறது இது
தமிழகத்தின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் உடையது குமரிக்கல்பாளையத்துக் கல். பக்தி காரணமாகப் பேணப்படுகிறது. ஆனால் எப்போதுவேண்டுமென்றாலும் பக்தர் ஒருவர் அதை ‘சீரமைக்கும்பொருட்டு’ சரித்திட்டு உடைத்து ‘திருப்பணி’ செய்யவும் வாய்ப்புண்டு.
மழைநனைந்து காலை உள்ளிழுத்த வயல்வெளிகள் வழியாக குமரிக்கல்பாளையம் கல்நிலைக்குச் சென்று சேர்ந்தோம். சுற்றிலும் சோளமும் ‘குச்சிக்கிழங்கும்’ பயிரிட்டிருந்தார்கள். அந்த கல்லைச் சுற்றியபகுதி மட்டும் குறுங்காடாக விடப்பட்டிருந்தது. கல்லை முழுமையாக பார்ப்பது கடினம், காடு சூழ்ந்து மறைக்கிறது. மஞ்சளாடை கட்டி, காலடியில் சிறுகுழவிகளுடனும் முட்டைகளுடனும் மாபெரும் டைனோசர்த்தாய் போல நின்றிருக்கிறது பெருங்கல்
அன்று மாலை பிள்ளைதின்னிக் கரடு சென்றோம். இதுவும் தொன்மையான ஒரு பழங்குடி உறைவிடம். இயற்கையான குகைகள் உள்ளன. கற்கால மக்களின் குகைகள் எவையுமே சரியான பொருளில் குகைகள் அல்ல. அதாவது அவை துளைகள் அல்ல. சரிவான மாபெரும் பாறைகளின் அடிப்பக்கம் மட்டுமே. குகைகளில் வாழும் விலங்குகள், பாம்புகள் இங்கே இருப்பதில்லை. நச்சுவாயுக்களும் இருட்டும் ஈரமும் இல்லை. ஆகவே இவையே அம்மக்களுக்கு உகந்தவை. இத்தகைய குகைகளில்தான் பெரும்பாலும் கற்காலக் குகையோவியங்கள் உள்ளன
பிள்ளைதின்னிக்கரடில் இருந்த குகையோவியங்கள் மறைந்துவிட்டன. குழியடையாளங்கள் எஞ்சியிருக்கின்றன. இது பின்னர் சமணத்துறவிகளின் தங்குமிடமாக ஆகியது. பிள்ளைதின்னிக் கரடு என்பது சமணர்களின் தொன்மத்தில் இருந்து வந்திருக்கலாம். பிள்ளைதின்னி என்பது பழையன்னூர் நீலி, கள்ளியங்காட்டு நீலி , பஞ்சவன்காட்டு நீலி போன்ற நீலியரின் பெயர். வாயில் பிள்ளையை கவ்வியிருப்பார்கள்.
இவர்கள் நாட்டார் தெய்வங்கள், ஆவித்தெய்வங்கள். சமணமுனிவர் அவற்றை தங்கள் கருணையால் வென்று தங்களுக்குக் காவலாக்கிக் கொள்வார்கள். அத்தகைய ஒரு நீலி மதுரை சென்று அத்தனை பிற சமயத்தவரையும் வென்றகதையே நீலகேசி. இந்த பிள்ளைதின்னிக்கரடு சமணர்கள் வருவதற்கு முன் நீலி என்னும் தெய்வத்தின் காடாக இருந்திருக்கலாம்
குளிர்நிறைந்த பாறைகள் தலைக்குமேல் உருண்டு நின்றன. மாபெரும் நீர்த்துளிகள் என தோன்றின. குளிர் கூடிக்கூடி வந்தது. மழை பெய்யத்தொடங்கியது. அந்த தன்னந்தனிக் காட்டில் குகையின் கூரையில் வண்டுகள் போல ஓடிச் சரிந்து வந்து சொட்டிய நீர்த்துளிகளின் கீழே அமர்ந்திருந்தோம். இடியோசைகளை கேட்டு மின்னலில் காடு சுடர்ந்தணைவதை பார்த்துக்கொண்டிருந்தோம்
பிள்ளைதின்னிமலையின்மேல் செல்லமுடியும். செங்குத்தான சிவந்த மலைமுடி ஒன்று செந்நிறத் தசையாலானது போல எழுந்து நின்றது. முன்பு இங்கே வந்து மேலே சென்றபோதுதான் கிருஷ்ணன் விழுந்து கையை உடைத்துக்கொண்டார். மழைபெய்தமையால் மேலே செல்லாமல் திரும்பிவிட்டோம்
ஒரு கோடு என நினைத்துக்கொண்டேன். அறியாத்தொல்காலத்தைய குழியடையாளங்கள், பெருங்கற்கள். அங்கிருந்து சமணர்களின் பிள்ளைதின்னி நீலிகள், கற்படுக்கைகள். அவை திரிந்து கன்னித்தெய்வங்களாயின. காணிக்கையும் பலியும் கொண்டு நின்றிருக்கின்றன. வரலாறு என்ற மரத்தில் ஒரு கனி.