வெண்முரசு செவியில்…

தளத்தை ஆடியோ வடிவில் கேட்க

அன்புள்ள ஜெ

இணையத்தில் வெண்முரசின் ஏராளமான ஒலிவடிவங்கள் உள்ளன. இவையெல்லாம் ‘அதிகாரபூர்வமானவை’ என்று சொல்லமுடியுமா? இவற்றை வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?

இந்த ஒலிவடிவங்கள் எனக்கு நேரடியாக உதவியாக இல்லை. இவற்றை கேட்கையில் எனக்கு மனசு நிற்கவில்லை. கொஞ்சம் கேட்டதுமே என் மனம் விலகிவிடுகிறது

ஆனால் நான் வாசித்த நாவலை காரில் செல்லும்போதோ, இரவு மொட்டைமாடியில் அமர்ந்திருக்கும்போதோ மீண்டும் கேட்கும்போது ஆழமாக அவற்றை உணரமுடிகிறது. இப்போது சிந்தனைகள் ஊடாக வந்து கலப்பது உதவியாக உள்ளது. வெண்முரசிலிருந்து மொத்த வாழ்க்கையை நோக்கிச் செல்லவும் உலவிவிட்டுத் திரும்பிவரவும் முடிகிறது.

எண்பது வயதான என் அம்மாவுக்கு ஒலிவடிவத்தில் இருப்பது உதவியாக இருக்கிறது. அவர்களுக்கு அரைமணிநேரத்துக்குமேல் கண்ணால் படிக்கமுடியாது. கண்ணீர் வழிய ஆரம்பிக்கும். கேட்டால் இரண்டுமணிநேரம்கூட அவர்களால் நாவலை வாசிக்கமுடியும்.

அதோடு காதில் ஒலியை மாட்டிக்கொண்டு அதையே படிப்பது அவர்களுக்கு மிக எளிதாக உள்ளது. வாசிக்கும்போது மனதை ஃபோகஸ் செய்துகொள்ளும் சிரமம் அவர்களுக்கு இருக்கிறது. வார்த்தை வார்த்தையாக வாசிக்கவேண்டும். காதில் வாசிப்பு ஒலித்துக்கொண்டும் இருந்தால் சரளமாக வாசிக்கமுடிகிறது. ஒரு வார்த்தையை சும்மா கண்ணால் பார்த்தாலேபோதும். எல்லா எழுத்தையும் வாசிக்கவேண்டியதில்லை.

ஒலிவடிவமாக வெண்முரசு முழுக்க வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம் முகுந்த்

அன்புள்ள ஸ்ரீராம்

அதிகாரபூர்வமாக வெண்முரசின் ஒலிவடிவம் இன்னும் வரவில்லை. ஆனால் வெண்முரசு முழுமையாகவே ஓப்பன் சோர்ஸ்தான். சொந்தமாக ஒரு பிரதி முழுமையாக இருக்கவேண்டும், கையால் நூலை படிக்கவேண்டும் என்பவர்களுக்காகவே அதை அச்சிலும் கொண்டுவருகிறோம்.

ஒலிவடிவங்கள் பலருக்கும் உதவியாக உள்ளன. ஒலிவடிவம் முழுமையாக வரவில்லை. ஆனால் ஒலிவடிவில்- மிகநேர்த்தியாக வாசிப்பதற்கு உதவியான மென்பொருட்கள் உள்ளன

ஜெ

முந்தைய கட்டுரைவீடுபெறுதல்
அடுத்த கட்டுரைஇந்த இவள் – கி. ரா- வாசிப்பனுபவம்