அழகியநம்பியின் நகரில்

வெண்முரசின் இணையாசிரியர்கள்

திடீரென்று ஒரு பயணம். நேற்றுதான் ஈரோட்டிலிருந்து வந்தேன். ஒருவாரம் மலையில் ஈரட்டி விடுதியில் இருந்தேன். வந்த மறுநாளே அருண்மொழி திருக்கணங்குடிக்குச் செல்லலாம் என்றாள். அவள் வீட்டிலேயே இருந்து சோர்ந்திருந்தாள்.

ஸ்ரீனிவாசனும் சுதாவும் திருக்கணங்குடியில் குடியேறி ஓரிரு மாதங்களாகின்றன. நடுவே ஒரு திருமணத்துக்காக சென்னை சென்றிருந்தனர். மீண்டும் இங்கே வந்துவிட்டனர். அவர்களை ஒரு பேட்டி எடுக்கவேண்டும் என்று புகைப்படக்காரர் ஆனந்த் எண்ணினார். அவருடன் அருண்மொழியும் நானும் செல்வதாக தீர்மானித்தோம். காலையிலேயே கிளம்பி திருக்கணங்குடி சென்றோம்

ஸ்ரீனிவாசன் அங்கே ஒரு பாரம்பரிய வீட்டின் மாடியை வாடகைக்கு எடுத்திருக்கிறார். மரபான மெட்ராஸ் டெரெஸ் பாணியில் கட்டப்பட்டது.திருக்கணங்குடியின் ரதவீதிகள் மிக அகன்றவை. அது டிவிஎஸ் குடும்பத்துக்கு சொந்த ஊர்.ஆகவே சுத்தமாகவும் அழகாகவும் பேணப்படுகிறது.

குளிர்காலம் இப்பகுதியின் மிக அழகிய பருவம்.தொடர்மழையால் எங்கும் பசுமை.மிக அருகே என நம்பிமலை, அப்பால் வேளிமலைத்தொடர்கள். ஒளி ஊடுருவும் மழைமுகில் பெருகி நின்ற வானம். தொட்டுவிடலாம் என அண்மையில் திருக்கணங்குடி அழகியநம்பிப் பெருமாள் ஆலயத்தின் கோபுரம்

ஸ்ரீனிவாசனின் தாத்தா பிறந்த ஊர் இது. இங்கே சிலநாட்கள் வாழவேண்டும் என்ற விருப்பத்தால் வந்திருக்கிறார். ஆனால் அவருடைய தாத்தாவே இங்கிருந்து இளமையில் சென்றுவிட்டவர். ஒருவகையான உருவக ஏற்புதான் இவ்வூருடன். அத்தகைய ஏற்புகள் வழியாகவே மனிதர்களுக்கு அடையாளங்கள் உருவாகின்றன, பற்றுகள் பிறக்கின்றன. பற்றுகளும் அடையாளங்களுமே மகிழ்ச்சிக்கு ஊற்றுமுகங்கள். எந்தப்பற்றாக இருந்தாலும், எந்த அடையாளமாக இருந்தாலும்

பலசமயம் இந்தப் பற்றுகளை நாம் ஒருவகையான சங்கிலிகளாக காண்கிறோம். இளமையில் அவற்றிலிருந்து மீறிச் சிறகடித்து எழுந்துவிடுவதைப் பற்றி யோசிக்கிறோம். விழைவும் வாய்ப்பும் செலுத்தும் திசைகளில் அலைகிறோம். ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் ஒன்றைக் கண்டடைகிறோம். எங்கும் புறத்தை நாம் அகத்துக்கு இழுத்துக்கொண்டு நம் உலகை கட்டமைக்கிறோம். புறம் என்ற ஒன்றின் இடம் அகத்தை தூண்டுவது என்ற அளவில் மட்டுமே

அந்த இடங்களுக்கு நம் ஆழம் பொருளேற்றிக்கொள்கிறது. நினைவுகளைப் போல ஆழமாக பொருளேற்றம் செய்பவை வேறில்லை. நம் வாழ்க்கையின் நினைவுகளே ஆற்றல் மிக்கவை. பாரம்பரிய நினைவுகள் மேலும் ஆற்றல் கொண்டவை. கலாச்சார நினைவுகள் நினைப்புக்கெட்டாத காலத்தின் ஆழம் வரைச் செல்பவை. அத்தகைய நினைவு ஒரு செல்வம், அது இல்லாதநிலை ஒரு வறுமை. புலம்பெயர்ந்த படைப்பாளிகளில் மிகப்பெரும்பாலானவர்கள் நினைவுகளை எழுதுவதை, பலர் எழுதாமலே ஆகிவிடுவதை இதைக்கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். அலக்ஸாண்டர் குப்ரின் இதை எழுதியிருக்கிறார் என்று நினைவு

ஸ்ரீனிவாசன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.ஒரு சிறு காலப்பயணம் செய்ததுபோற வீடு. வீட்டுக்குப்பின்னால் நார்தங்காய் மரம் கருவேப்பிலை வாழை பிரண்டைக்கொடி என செறிந்த சிறிய தோட்டம். மொட்டைமாடியில் நின்றால் நம்பிமலையை பார்க்கமுடியும். நம்பிமலை அப்பாலுள்ள குமரிமாவட்டத்தின் முகில்களைச் சூடி ஒளிகொண்டிருக்கும் எப்போதும். காலைநடை செல்ல அழகான பெரிய தெரு. சூழ்ந்திருக்கும் பசுமைவயல்கள், மாபெரும் ஏரி ஒன்று

சுதா ஸ்ரீனிவாசன்

காலைமுதல் மாலைவரை அவருடன் செலவிட்டேன். திருக்கணங்குடிகோயிலுக்கு முதல்முறையாக வந்தது 1980ல் நால் கல்லூரி முதலாண்டு மாணவனாக நாகர்கோயில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் சேர்ந்தபோது. திருக்கணங்குடியிலிருந்து ஒரு மாணவன் என்னுடன் படித்தான். அவனைக் காணவந்து ஒருநாள் தங்கி ஆலயத்தைப் பார்த்துவிட்டுச் சென்றேன். அதன்பின் பலமுறை வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இந்த ஆலயத்தின் அமைதியும் விரிவும் நெஞ்சை நிறைக்கும். பக்தர்பெருக்கு இல்லாமையால் கல்மண்டபங்களிலிருந்து கல்மண்டபங்களாக தொடுத்து சென்றுகொண்டே இருக்கும் பேராலயத்தின் ஆழ்ந்த ஒலியின்மை குறைவுபடுவதே இல்லை. நம் பேச்சொலியை பெருக்கி நாம் வான்வடிவுகொண்ட காலத்துடன் பேசுவதுபோன்ற உளமயக்கை உருவாக்கிவிடுகின்றன இந்த கல்லலைப்பெருக்கின் உறைவுகள்.

திருக்குறுங்குடி என்று ஊரின் பழைய பெயர். மகேந்திரகிரி – நம்பிமலை அடிவாரத்திலுள்ளது இக்கோயில். நம்பியாறு அருகே ஓடுகிறது. மலைமேல் இன்னொரு பெருமாள்கோயில் உள்ளது, நம்பிகோயில் என்று பெயர். கீழிருக்கும் இந்த ஆலயத்தில் இருப்பவர் பெயர் அழகியநம்பி. குமரிமாவட்டத்தில் பரவலாக இருக்கும் பெயர்களில் ஒன்று. எழுத்தாளர் கிருஷ்ணன்நம்பியின் இயற்பெயர் அழகியநம்பிதான்

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் பாடப்பெற்றது இந்த ஆலயம். ஐந்து சன்னிதிகளில்   நின்ற  அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் காட்சி தருகிறார். சுதையாலான திருமேனிகள். ஆழ்வார், ஆண்டாள் என வைணவ ஆலயங்களின் அத்தனை தெய்வங்களும் எழுந்தருளிய சிற்றாலயநிரைகள். கூடுதலாக சிவன் சன்னிதி ஒன்றும் காலபைரவர் சன்னிதி ஒன்றும் உள்ளது.

இங்கே உள்ள சிவன் ஒரு ‘விருந்தினர் தெய்வம்’தான். ஒரு சிறு துணைச்சன்னிதி. நாயக்கர்களால் நிறுவப்பட்ட சிவலிங்கம். எண்பதுகளில் ஆலயத்திருப்பணியின் ஒருபகுதியாக லிங்கத்தை வைணவர் எடுத்து வெளியே வைத்துவிட்டனர் என்ற சர்ச்சை எழுந்தது. நீதிமன்றம் தலையிட்டு மறுபடியும் நிறுவவேண்டியிருந்தது

ஆனால் உள்ளூரில் மிக சக்திவாய்ந்தவராக கருதப்படும் தெய்வம் காலபைரவர், அவர் சிவனின் உருவம் என்பதில் எவருக்கும் புகார் ஏதும் இல்லை. அச்சம்தவிர்ப்பதெ தெய்வங்களின் முதல்பணி. அகோரரூபம் கொண்ட தெய்வங்கள் அகத்துணையென அமைபவை

மணற்கற்களாலான பெருந்தூண்கள் தாங்கும் கற்கூரைக்கு அடியில் நடந்துகொண்டிருக்கையில் மீண்டுமொரு காலம் மறந்த நிலை. கற்களைப்போல காலம் கடந்தமைந்தவை பிறிதில்லை. அவற்றிலிருப்பது நூற்றாண்டுகளின் தண்மையும் அமைதியும். மலைமுடிகளில் அமர்ந்த பெரும்பாறைகளின் தவம் இங்கே தூண்களென கூரையென சிற்பங்களென ஆனபின்னரும் தொடர்கிறது. வெறித்த யாளிகளின் விழிகளிலும் இளிப்பிலும்கூட அமைதியையே உணரமுடிகிறது

திருக்குறுங்குடியின் சிற்பங்கள் புகழ்பெற்றவை.தென்தமிழகத்தின் நாயக்கர் காலச் சிற்பக்கலையின் எல்லா மாதிரிகளும் இங்குள்ளன. அகோரநரசிம்மர், உக்ரநரசிம்மர் சிலைகள். குறவன் குறத்தி சிலைகள். அரசமைந்தனை கவர்ந்துசெல்லும் குறத்தியும் அரசமகளை கவர்ந்துசெல்லும் குறவனும். அர்ஜுனன், கர்ணன், ரதி, மன்மதன். சிலைகளை நோக்கி நோக்கி நின்று நின்று மீண்டு வருகையில் நீர்க்காகம் போல ஆழத்தில் மூழ்கி மூச்சுக்கு மேலே வருவதுபோலத் தோன்றியது

திருக்குறுங்குடியின் மோகினி சிலை அழகானது, மிக அழகான ஒளி அதன்மேல் விழுந்துகொண்டிருந்தது. அருண்மொழியை அருகே நிறுத்தி ஒரு படம் எடுத்தேன். ரதிதேவியின் சிலை தென்னக ஆலயங்கள் முழுக்க உண்டு, ஒரேபோலத்தான் இருக்கும். அன்னம்மேல் கால்மடித்து அமர்ந்தகோலம் [சில்பி மிக அழகான கோட்டோவியம் ஒன்றை வரைந்திருக்கிறார்] ரதி சிற்பத்தின் படத்தை கடலூர் சீனுவுக்கு அனுப்பினேன். அடுத்த கணமே “ஆ, திருக்குறுங்குடி!” என்று பதில் அனுப்பினார்.

திருக்குறுங்குடியில் இரண்டு யானைகள். இரண்டுமே குண்டாக இருந்தன. இளையவை, ஆனால் கொழுத்த யானை ஆரோக்கியமானது அல்ல. சலித்துப்போய் அசைந்துகொண்டே நின்றன. ஒவ்வொருநாளும் யானைகள் வந்துதான் அழகியநம்பிக்கு காலைபூசனை நடக்கிறது என்றார் ஸ்ரீனிவாசன்.

திருக்கணங்குடி மார்த்தாண்டவர்மா காலம் வரைக்கும்கூட திருவிதாங்கூரின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. அதன்பின்னர்தான் இத்தகைய சமநிலப்பகுதியை காவல்காக்க முடியாது, அதற்கு பெரும்படை தேவை என உணர்ந்து இதை கைவிட்டு ஆரல்வாய்மொழியை எல்லையென கொண்டார்கள்.

பழைய வாய்மொழிக் கதைப்பாடல்களில் நான்குநேரி,சீவைகுண்டம், சங்கரன்கோயில் கூட திருவிதாங்கூரின் பகுதிகளாக இருந்துள்ளன.இவ்வாலயங்களில் பண்டைய சேரமன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. அன்றெல்லாம் இப்பகுதி பெரும்பாலும் பொட்டல்காடும் சற்றே விளைநிலங்களும் கொண்டதாக இருந்திருக்கலாம். ஏரிகளை வெட்டி இப்பகுதியை வாழ்நிலமாக்கியவர்கள் மதுரை நாயக்கர்கள்

திருக்கணங்குடி அருகே செங்குத்தாக ஒரு குவைமலை உள்ளது. அதுவே இந்த ஊரை ஒரு ராணுவநிலையாக ஆக்கியது. நாயக்கர் ஆட்சிக்காலம் முழுக்க இங்கே கிட்டத்தட்ட ஒருலட்சம் பேர்கொண்ட ஒரு நிலைப்படை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக்குன்றின்மேல் ஒரு காவல்மாடம். அதன்மேலிருந்து சுற்றிலும் ஐம்பது கிலோமீட்டர் வரை படைநகர்வு இருந்தால் பார்க்கமுடியும். மேலே வெடியும் புகையும் எழுந்தால் படை கிளம்பிவிடும்

திருக்கணங்குடியிலிருந்து மலையை ஏறிக்கடந்து இரண்டுமணிநேரத்தில் புலியூர்க்குறிச்சி உதயகிரி கோட்டையை அடையமுடியும். அருகேதான் பத்மநாபபுரம். மார்த்தாண்டவர்மா ஆட்சிக்காலம் வரை திருக்கணங்குடியில் இருந்த நாயக்கர் படைகளே திருவிதாங்கூரில் எவர் ஆட்சிசெய்யவேண்டும் என முடிவெடுத்தன. தளவாய் சுப்பையன்தான் மார்த்தாண்டவர்மாவை அரசராக்கியவர். அவருடைய இருநூறு குதிரைகள் திருவிதாங்கூரில் சட்டம் ஒழுங்கை உருவாக்கி மார்த்தாண்டர்வர்மாவுக்கு எதிர்ப்பில்லா ஏற்பை அளித்தன.

காவல்மாடத்து மலை

மார்த்தாண்டவர்மா காலத்தில் நாயக்கர் அரசு சந்தாசாகிபால் சூறையாடப்பட்டது. திருக்கணங்குடியில் இருந்து ராணி மீனாட்சிக்கு உதவச்சென்ற கஸ்தூரிரங்கய்யாவின் படையை சந்தாசாகிப் தோற்கடித்தார். சந்தா சாகிப்பின் அந்தப்படையில் அப்போது வீரமாமுனிவர் என பின்னர் அறியப்பட்ட ஜோசப் கான்ஸ்டண்டைன் பெஸ்கியும் இருந்தார் எனப்படுகிறது.

திருக்கணங்குடியை மார்த்தாண்டவர்மா கைப்பற்றினார். ஆனால் இதை தக்கவைக்க சிலலட்சம் படைவீரர்கள் தேவை என உணர்ந்தார். ஆரல்வாய்மொழி குறுகலான கணவாய். அதைக் காப்பது எளிது. ஆகவே அங்கே உச்சிமலைமேல் ஒரு காவல்மாடம் கட்டி அதை தன் வடகிழக்கு எல்லையாகக் கொண்டார். அதுவே குமரிமாவட்டத்தின் எல்லையாகியது. மானசீகமாகவும் அது ஓர் எல்லை.

ஒரு கோயிலில் ஆண்கள் சட்டையை கழற்றவேண்டுமென்ற சடங்கு இருந்தால் அது எப்போதேனும் கேரள வழிபாட்டு மரபுக்குள், திருவிதாங்கூர் அல்லது கொல்லம் ஆட்சிக்குள் இருந்திருக்கவேண்டும்.நான்குநேரியும், திருக்கணங்குடியும் பதினைந்தாம் நூற்றாண்டுவரை நம்பூதிரிகளால் பூசைசெய்யப்பட்டவை. அவர்கள் விட்டுச்சென்றபின்னரே ஜீயர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தன.

இன்று இந்த ஆலயங்களில் தமிழ்த்தன்மையே உள்ளது. மலையாளிகள் அன்னியமாக உணரக்கூடும். இந்த கல்பிரம்மாண்டம் எந்த மலையாள ஆலயங்களுக்கும் இல்லை. மலையாளிகள் தமிழகக்கோயில்களில் ஒரு திகைப்பை உணர்கிறார்கள். அதை இருவகையான ஆலயங்களிலும் சுற்றிவரும் என்னால் உணரமுடிகிறது. தமிழக ஆலயங்களில் கோயிலுக்குள் வெளி இருக்கும். கேரள ஆலயங்களில் கோயிலைச் சுற்றி அந்த வெளி இருக்கும்.

இங்குள்ள சிற்பங்களில் விழிகளை நிறைப்பவை இரணியன் கழுத்தைப்பிடித்துக்கொண்டு தூணிலிருந்து எழும் அகோரநரசிம்மரும் இரணியனை கிழித்து குடல்மாலை அணியும் உக்ரநரசிம்மரும். நாயக்கர்கள் தெலுங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த சிற்பங்கள் இவை என்று சொல்லலாம். இங்கும் நரசிம்மர் வழிபாடு இருந்தது என்றாலும் ஆந்திரர்களுக்கே நரசிம்மர் குலதெய்வம் என்று சொல்லத்தக்க அளவுக்கு முக்கியமானவர்

எனக்கு நரசிம்மர் சிலைகள் மேல் ஒவ்வாமை, ஒவ்வாமையிலிருந்து எழும் பெரும்கிளர்ச்சி ஆகியவை உண்டு. வீரம், பீபத்ஸம் [அருவருப்பு] ஆகிய இரு உணர்வுகளை காட்டுபவை அவை. உலகமெங்கும் செவ்வியல் கலையில் அவை மைய உணர்வுகள். உக்கிரமே செவ்வியல் என்றும் நாடும் நிலை. உக்கிரம் மிகவிசையுடன் வெளிப்படுவது வீரத்திலும் பீபத்ஸத்திலும்தான்.அவை உச்சங்கள். எல்லா உச்சங்களிலும் தூண் பிளந்து சிம்மம் எழுகிறது.

மாலையில் திருக்குறுங்குடிக்கு வெளியே அமைந்த ஏரிக்குச் சென்றோம். நீர் நிறைந்து அலையடித்து நெடுந்தொலைவு பரவியிருந்தது. கன்னங்கரிய பளபளப்பு கொண்ட சிறகுகளுடன் நாமக்கோழிகள் நீரில் மூழ்கி மூழ்கி எழுந்துச் சிலிர்த்துக்கொண்டிருந்தன.

கரண்டம் ஆடும் பொய்கையுள்  கரும்பனைப் பெரும்பழம்,

புரண்டு வீழ வாளைபாய்  குறுங்குடி

என்று திருமழிசையாழ்வார் பாடியதை நினைவுகொண்டேன். கரிய நீர்க்காகங்கள் ஆடும் பொய்கையில் கரும்பனையின் பழம் உதிர்ந்துவிழ அதை நீர்க்காகங்களோ என வாளைமீன் அஞ்சி பாய்ந்து செல்லும் திருக்குறுங்குடி அன்றும் இப்படியேதான் இருந்திருக்கிறது

அந்தியில் திரும்பி வந்தோம். வயல்வெளிகளில் ஒளி அணைந்துகொண்டிருந்தது. திருக்குறுங்குடியின் ஏராளமான சிறுசிறு ஆலயங்களிலெல்லாம் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.ஸ்ரீனிவாசன் அவர் வாழ்க்கையின் மிகச்சிறந்த காலகட்டங்களில் ஒன்றில் இருக்கிறார் என நினைத்துக்கொண்டேன்

தனிமை – கடிதங்கள்

நாயக்கர் கலை -கடிதம்

நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்

சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவெண்முரசு- சுருக்கமான மதிப்பீடுகள்