கமல், ஒரு வினா

அன்புள்ள ஜெமோ,

‘என் நவீன இலக்கிய அறிமுகமே கமல் வழியாக நிகழ்ந்தது’ என்று நீங்கள் எழுதியிருப்பது எனக்கு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. கமல்ஹாசனை குளிர்விப்பதற்காக இதை நீங்கள் எழுதியிருந்தாலும் உங்கள் வாசகர்களுக்கு இதைவிட சோர்வான ஏதுமில்லை

அன்புடன்

ராம்

கமல்,வெண்முரசு, ஒரு பதில்

அன்புள்ள ராம்,

புதிய ஐடி. ஆகவே போலி. ஆனால் உங்கள் உலகையே என்னால் ஊகிக்க முடிகிறது.

சரி, என் வாசகர்களுக்கு எந்த சோர்வும் ஏற்படாது. அவர்கள் முதலில் அக்கட்டுரையை படிப்பார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று புரிந்துகொள்ளும் அடிப்படை அறிவும் கொண்டிருப்பார்கள். நான் சொல்லியிருப்பது தொடர்ச்சியாக நான் பேசிவருவனவற்றின் நீட்சி என அறிந்திருப்பார்கள்.

அக்கட்டுரை மிகத்தெளிவாகவே “மலையாள நவீன இலக்கியம் வாசித்து, தமிழில் ஜெயகாந்தனையும் ஜானகிராமனையும் பற்றி மட்டுமே அறிந்திருந்த ஒரு காலகட்டம் எனக்கிருந்தது” என்று சொல்கிறது. எழுபதுகளில் இருந்த சூழலை இப்படிச் சொல்கிறது “அன்று நவீன இலக்கியம் இருநூறு பிரதி அச்சிடும் சிற்றிதழ்களில் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்தது.எந்த கல்லூரியிலும் நவீன இலக்கியத்தின் பிதாமகர்களின் பெயர்கள்கூட உச்சரிக்கப்பட்டதில்லை

நான் 1981ல் என் 19 வயது வரை நவீனத் தமிழிலக்கியம் பற்றிய அறிமுகமே இல்லாதவனாகவே இருந்தேன். ஆனால் மலையாளத்தில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் உலக இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். இதைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

அன்று கணையாழி மட்டுமே சீராக வந்துகொண்டிருந்த சிற்றிதழ்- 300 பிரதிகள். தீபம் நின்றுவிட்டிருந்தது. இலக்கியம் மிகமிகச்சிறிய சூழலில் புழங்கியது. புதுமைப்பித்தனைப் பற்றி கல்லூரிகளில் தமிழிலக்கியம் படிக்கிறவர்களுக்கே தெரியாத நிலை இருந்தது. தமிழின் முன்னோடிகளின் நூல்கள் எவையுமே அச்சில் இல்லாத காலகட்டம்.

அன்றிருந்த தேர்ந்த வாசகர்களுக்கே புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன் பெயர்கள் தெரியாது. 1986ல் மறைந்த என் அம்மா மாபெரும் படிப்பாளி. ஆனால் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் எழுதிய புகழ்பெற்ற கதைகளுக்கு அப்பால் தமிழில் நவீன இலக்கியம் இருப்பதே அம்மாவுக்கு தெரியாது.

அந்தச் சூழலில் நவீன இலக்கியம் பற்றிய எந்த சிறு செய்தியும் மிகமிக முக்கியமானவையாக இருந்தன. அச்சூழலில் கமல் அசோகமித்திரன், ஞானக்கூத்தன்,சுந்தர ராமசாமி , வண்ணதாசன் ஆகியோர் பற்றி பெரும்பத்திரிகை சூழலில் பேசுபவராக இருந்தார். அவர் வழியாகவே எனக்கு தமிழ்நவீன இலக்கியம் அறிமுகமாகியது. அதாவது சிலபெயர்களை எனக்குக் கொண்டுவந்து சேர்த்தது அவருடைய பேச்சுக்கள்தான்.

நான் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் உட்பட பல பெயர்களை கமல் சொல்லி அறிந்தேன் என முன்பும் சொல்லியிருக்கிறேன். ரயிலில் தற்செயலாகவே ஜே.ஜே.சிலகுறிப்புகளை வாசித்தேன். சுஜாதாவின் வசந்த் சொன்ன ஒரு வசனம் வழியாகவே வண்ணதாசனை அறிந்தேன். என் தலைமுறையில் இளமையிலேயே இலக்கியத்துக்குள் வந்தவர்கள் அப்படித்தான் வரமுடியும்.

மேலும் பத்தாண்டுகள் கழித்து நான் அசோகமித்திரனுக்கு ஒரு மலர் வெளியிட்டபோதும்கூட தமிழின் பெரும்பாலான இலக்கியவாசகருக்கும் பேராசிரியர்களுக்கும் கூட அசோகமித்திரன் பெயர் தெரியாமலிருந்தது. அதையும் பதிவுசெய்திருக்கிறேன்.

இச்சூழலில் மாற்றம் ஏற்பட்டது 1988ல் ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்து தமிழ்மணி நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்யத் தொடங்கியபோது. இன்று பேசும் பலருக்கு அதன்பின்னரே நவீன இலக்கியமென ஒன்று இருக்கும் செய்தியே தெரிந்திருக்கும். [ஆனால் பலர் பிறவிமேதைகள் என வேடமிடுவதையும் கண்டிருக்கிறேன். தவறாமல் அவர்களெல்லாம் அசட்டு மொக்கைகளாக இருப்பதையும் காண்கிறேன்.]

இந்த தளத்திலேயே பத்துமுறைக்குமேல் இதை எழுதியிருக்கிறேன். அதை என் வாசகர்கள் வாசித்திருப்பார்கள். முகநூலில் அன்றாடம் எதையாவது பிடித்துக்கொண்டு இளிக்கும் கீழ்த்தர வம்பர்களுக்கு அன்றும் இன்றும் இலக்கியம் தெரியாது. ஒரு கட்டுரையை பார்த்து அவர்கள் இளிக்கும்போது குறைந்தபட்சம் அதை வாசிக்கும் வழக்கம் கொண்டவர்களே என் வாசகர்கள்.

நான் இத்தகைய இழிமக்கள் எப்போதும் இருப்பார்கள் என்று அறிவேன், ஆகவே இவர்களை கடந்துசெல்வது என் வழக்கம்.ஆனால் சட்டென்று இந்த சும்பர்கள் கூடிக் கும்மாளமடிக்கும் வெளியில் சிக்கிக்கொண்ட இளைய தலைமுறையினர் எப்படித்தான் இலக்கியத்துக்குள் வரமுடியும் என்னும் திகைப்பு உருவாகிறது.

ஒவ்வொன்றைப்பற்றியும் அறியாமைமிக்க உளறல்களும் அரசியல்காழ்ப்புகளும் அசட்டு இளிப்புகளும் நிறைந்திருக்கும் சூழலே அவர்களை இலக்கியத்திலிருந்து தடுத்துவிடும். ஊடகம் இல்லாத நிலை எழுபதுகளில் பெருந்தடையாக இருந்தது என்றால் உளறல்கள் நிறைந்த ஊடகப்பெருக்கம் இன்றைய தடை. இவர்களை இளம் வாசகர்கள் தாண்டிவரவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைவேலி
அடுத்த கட்டுரைபண்பாடு- கேரளம்- ஒரு கடிதம்