ஊடுபிரதிகள்

அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா.

வெண்முரசின் நிலங்கள் தோறும் அறிமுகமாகும் சிந்தனை முறைகள் குறித்து தொகுத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். வண்ணக்கடலில் காளாமுக சிவமார்க்கம் அறிமுகமாகிறது. காளாமுகம் என்பது விடுதல், புறத்தை, அகத்தை, அகத்தெழுந்து அகமாகி நின்றருளும் அவனையும் விடுதலே முழுமை என்றும் “ஒன்றொன்றாய் தொட்டெண்ணி இக்கணம் இக்கணம் என விட்டுவிட்டு முன்சென்று வெறுமையின் பெருங்களி ஏந்தி நிற்றலே அதன் செயல்முறை” என்று சிவப்படிவர் கூறுகிறார் – நாராயணகுருவின் வரி.

திசைதேர் வெள்ளத்தில் அசங்கனின் காவல் வாழ்க்கையில் வேதமுடிபுச் செய்யுளின் இவ்வரியை அவன் எண்ணிக் கொள்வான்:

“ஒன்றொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்குகையில் நின்றிடும் பரம்”. மீண்டும் முழுமையாக இவ்வரி வருகிறது. விஷ்ணுபுரத்தின் முகப்பு வரி.

பிருஹதாரண்யக மரபின் நேதி நேதி என மறுத்துச்சென்று

இறுதி உண்மையைத் தேடுவது.

ஒரே இருளை அறிய ஓராயிரம் வழிகள் என்ற வெண்முரசின் வரிகளையே எண்ணிக்கொள்கிறேன். திசையெங்கும் சிதறிய ஒலி மலைமுகட்டில் எதிரொலித்து மீள வருவது போல இன்று

அனைத்து திக்கிலும் ஒரே சொற்கள் உள்ளே எழுந்து வருகின்றன.

வணக்கங்களுடன்,

சுபா

***

அன்புள்ள சுபா

நான் ஏற்கனவே சொல்லியிருப்பதுபோல ஊடுபிரதித்தன்மை என்பது ஓரு காவிய இயல்பு. பிறநூல்களின் வரிகளை காவியம் இயல்பாக எடுத்தாளும். இந்நாவலில் உவமைகள், அணிகள் அவ்வண்ணம் எடுத்தாளப்படவில்லை. ஆனால் அரிய சொல்லாட்சிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. அதிலொன்று நாராயணகுருவின் இந்த வரி.

இவை அளிக்கும் இலக்கிய இன்பம் என்பது என்ன? அந்த வரி இயல்பாக சிந்தையில் தட்டுபடும்போது உருவாகும் பரவசமும் ,அந்த வரி இந்தப்பரப்பில் பொருந்தியிருப்பதன் அழகும், அந்த வரி எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதை காணும்போது உருவாகும் நிறைவும்தான்

ஜெ

***

ஜெ

பாண்டுவை பற்றி சத்யவதி சொல்லும் வரி இது,  இதை கற்பனை கொண்டு யோசிக்கும் போது மிரண்டு விட்டேன் !

”கூரிய வாளை நோக்கி வானிலிருந்து விழுபவனின் பெருங்களி கொண்ட முகம் அவனிடமிருந்தது.”

ராதாகிருஷ்ணன்

***

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

நல்ல வரிதான். அத்தகைய பல வரிகள் துணுக்குறும்படி நிகழ்வதன் பெயர்தான் படைப்பூக்கம். உண்மையில் அகத்தில் இருந்து ஒன்று தவித்து துழாவி சட்டென்று சரியான சொல்லைக் கண்டடைகிறது. அது அப்படியே பதிவாகியிருக்கிறது.

இப்படி பல்லாயிரம் வரிகளால் ஆனது வெண்முரசு. அவற்றில் சில வரலாற்றில் முழுக்க எவர் கண்ணுக்கும் படாமல் போகக்கூடும். அதைப்பற்றிய அக்கறை எனக்கில்லை. எழுதியதுமே அது முடிந்துவிட்டது

கோபுரங்களில் கட்டிட மடிப்புக்குள்கூட சிலைகள் இருக்கும். முழுமைகொண்ட சிலைகள். அவற்றை எவருமே பார்க்கமுடியாது, வண்ணம்பூசுபவன் தவிர. எனில் ஏன் அவை அங்கிருக்கின்றன? செவ்வியலின் இயல்பு அது. அது நாடுவது கணம்தோறும் முழுமையை, கணுதோறும் மலரை

ஜெ

***

அன்புள்ள ஜெ

வெண்முரசின் நீலம் நாவல் வரை வந்துவிட்டேன். addictive என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை சீக்கிரம் இவ்வளவு வாசிப்பேன் என நினைத்தே பார்க்கவில்லை. ஒருநாளில் ஐந்துமணிநேரம் வாசிக்கிறேன். நீலம் கொஞ்சம் வேகத்தடை. துளித்துளியாக வாசிக்கவேண்டியது. ஆனாலும் வேறொன்றை நினைக்கமுடியவில்லை. இலக்கியம் இப்படி வாழ்க்கையை முழுமையாக நிறைக்கமுடியும் என்று முன்பு எவராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன்

நீலம் நாவலில் பல ஆழ்வார்பாடல்களின் வரிகளை காணமுடிகிறது. ஆனால் நேரடியாக அல்ல. பல சொல்லாட்சிகளுக்கு சமானமான சொல்லாட்சிகள் இதிலுள்ளன. அதாவது ஒரு மறைமுகமான நிழல்போல. ஆழ்வார்களின் சொல்லின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதை வாசிப்பதை ஒரு தியான அனுபவம் என்றே சொல்வேன்

ஆர்.கிருஷ்ணன்

***

முந்தைய கட்டுரைஆங்கு
அடுத்த கட்டுரைசெல்வேந்திரன் வாசித்தது எப்படி?