இலங்கையிலிருந்து ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

என்றும் நலமாக இருக்க நினைத்துக் கொள்கிறேன்.

நீண்டநாட்களின் பின்பு இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.

உங்களுடைய ஜப்பான் ஒரு கீற்றோவியம் அண்மையில் வாசித்தேன். உங்களது பயணநூல்களில் நான் வாசிக்கும் நான்காவது நூல் இது. ஏற்கனவே முகங்களின் தேசம், இந்தியப்பயணம், ஆஸ்திரேலியப் பயணம் என்று மூன்று நூல்களை வாசித்துள்ளேன்..அதில் முகங்கள் தேசம் எப்போதும் எனக்கு நெருக்கமாக எடுத்துக் கொள்கிறேன். ஒவ்வொன்றையும் உங்களின் புனைவுகளுடன் நினைவுறுத்துகிறேன்.  இத்தொற்றுக் காலத்தில் உங்கள் நூல்களை அசைபோடுவது மகிழ்வளிக்கிறது. நானும் பயணங்கள் சென்று பல மாதங்கள் ஆகின்றது. மேலும் பலதூரம் செல்லவேண்டும். இறுதியாக ஒரு நெடும்பயணம் பைக்கில் சென்று வந்தேன். அதுபற்றி கீழே எழுதியுள்ளேன். http://www.suyaanthan.com/2020/07/blog-post_26.html?m=1

மேலும் அண்மையில் என்மீது இலங்கையைச் சேர்ந்த சில பெண்ணியவாதிகளும் அந்தப் பெண்ணியவாதிகளைத் தங்கள் தேவைக்கு உபயோகிக்கும் ஆண்களும் இணைந்து மேற்கொண்ட அவதூறுப் பிரச்சாரங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

விமலாதித்த மாமல்லனின் முகநூல் பக்கம் ஒன்றில் என்னால் ஒரு பின்னூட்டம் இடப்பட்டது என்றும் அந்தப் பின்னூட்டத்தில் “ஈ.வே.ராமசாமியை வைத்துக்கொண்டிருப்பாள்” என்று நான் எழுதியதாகவும் அந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மொத்தத்தில் என்னை ஒரு பெண்வெறியன் ஆக்கும் முயற்சிகள் நடந்தன. சந்தடி சாக்கில் உங்கள் மீதும் வசைபாடப்பட்டது. ஜெயமோகனின் சிஷ்யன் அப்படித்தான் இருப்பான் என்று முகநூலில் type மட்டுமே செய்யத் தெரிந்த பெண்கள் கூச்சலிட அந்தப் பெண்களை உபயோகிக்கும் ஆண்கள் ஆமோதித்தனர்.

அவர்களின் தற்குறித்தனத்தை இன்னொரு வழியில் நிறுவ முயன்றனர். நான் பணிசெய்யும் அலுவலகத்துக்குக் கடிதங்களை அனுப்பி என்மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். ஒருபடி மேலே சென்று அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி வைத்தனர்.. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க யாரும் முயலவில்லை..ஏனென்றால் நான் எவ்வித குற்றங்களும் செய்திருக்கவில்லை. இறுதியாக இப்போது சட்டத்துறையை நாடிச்சென்றுள்ளனர்.. அறம் மறுபடியும் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இவர்கள் யாவருமே தனிப்பட்ட வாழ்க்கையில் அத்தனை ஒழுக்க மீறலையும் மேற்கொள்பவர்கள்..ஒன்றுக்கு மேற்பட்ட ஆணுடனும் பெண்ணுடனும் தொடர்பிலுள்ளவர்கள்.. அதேநேரம் இலங்கை அரசுக்கும் ஒரே தேசம் என்ற கருத்துக்கும் எதிராகக் கருத்தை முன்வைப்பவர்கள். தொடர்ந்தும் பிரிவினை பேசுபவர்கள்.

இப்படியான எதிர்வினைகளை நீங்களும் எதிர்கொண்டதை சாட்சிமொழியை வாசித்து அறிந்திருக்கிறேன்..இன்று என்மீது பரப்பப்படும் அவதூறுகளை உங்களது எழுத்துக்களை வைத்தே எதிர்கொள்கிறேன். அதற்கு உங்களுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும்.

அன்புடன் சுயாந்தன்.

வவுனியா.

ஶ்ரீலங்கா.

ஜப்பான் கீற்றோவியம் 

சாட்சி மொழி

முந்தைய கட்டுரைமதுரையில்- கடிதம்
அடுத்த கட்டுரைஉலகுக்குப் புறம்காட்டல்