மனுதர்ம சாஸ்திரம் – அயோத்திதாசரும் பெரியாரும்  

மனு இன்று

மனு இறுதியாக…

வணக்கம் ஜெ

பேரா.டி.தருமராஜ் அவர்களின் ‘மனுதர்ம சாஸ்திரம் – அயோத்திதாசரும் பெரியாரும்’ என்கிற இந்தக் கட்டுரையில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம், ‘கலகத்தின் அகச்சிக்கல்’ பற்றி அவர் கூறியது. இத்தகைய உண்மைகளைப் பேசக்கூடியவர்கள் சிலரே உள்ளனர். இங்கு எல்லோருக்கும் ‘எதிர் தரப்பு’ என்று ஒன்று உண்டு.நடுநிலையாளர்களுக்குக் கூட அவர்களுக்கேற்றவாறு எதிர் தரப்புகள் இருக்கவே செய்கின்றன. எதிர் தரப்புகள் எதுவும் இல்லாமல் ஆகும்போது நாம் என்ன செய்வோம் ? தேச எல்லைகள், போர்கள், இன, மத, மொழி பிரச்சனைகள், ஏன் உறவுப் பிரச்சனைகள் கூட, எதுவும் இல்லாமல் ஆகும்போது என்னவாகும் என்பதை எப்படி கற்பனை செய்வது ? இன்றுவரை நாம் எதிர்ப்பிலேயே வாழ்ந்து வந்திருக்கிறோம். அது இல்லாமல் நம்மால் வாழ முடியாதா ?

இவ்விஷயத்தில் அவர் பெரியாரியர்களை உதாரணமாகக் காட்டுகிறார். பெரியாரியர்கள் விஷயத்தில் இது முழுக்க உண்மை. அவர்கள் எதிர்ப்பின் கதகதப்பையே விரும்புகிறார்கள். அவர்கள் சீர்திருத்தவாதிகள் அல்ல; சீர்திருத்தம் நடக்காமல் பார்த்துக் கொள்பவர்கள். சீர்திருந்திவிட்டால் அவர்களுக்கு வேலை ஏது ? அந்தக் காலத்தில் செருப்பு மாலை அணிவித்தது முதல் இப்போது கந்தசஷ்டிக் கவசத்தை வம்பிழுத்தது வரை அவர்கள் செய்வது ஒன்றுதான். இவ்வளவு பெரிய கூட்டத்தை நாம் சிலபேர் சேர்ந்து சீண்டிவிட்டோம் என்கிற நிறைவே அவர்களை மேலும் மேலும் செயல்படத் தூண்டுகிறது.

இப்போது என்னை நான் இந்துத்துவானாகக் கற்பனை செய்து கொள்கிறேன். இப்போது நான் என்ன செய்வேன் ? உள்ளூர நான் பெரியாரையும், பெரியாரிசத்தையும் விரும்பவே செய்வேன். ஏனெனில் அப்படியொரு பலவீனமான தரப்பு நம் எதிராளியாக இருப்பது நமக்கு வசதியான ஒன்றுதான். அவர்கள் ஏதாவது பேசிவிட்டால், ‘ஐயோ, என் உணர்வைப் புண்படுத்திவிட்டானே… பாவி சண்டாளா…’ என்று எல்லோரும் சேர்ந்து கூக்குரல் இடுவோம். அவர்களும் நம்மைச் சீண்டிவிட்டதாக நினைத்து நிறைவு கொள்வார்கள். இது ஒரு ஆர்வமூட்டும் விளையாட்டு.

இந்துத்துவர்கள் அயோத்திதாசருக்கு எதிரி அந்தஸ்து தர மாட்டார்கள். அவர்கள் பெரியாரையே விரும்புவார்கள். பெரியாரும் அயோத்திதாசரைக் கூட்டுசேர்க்க மாட்டார். ‘உன்னால் அவனை அழிக்க முடியாது, என்னால்தான் முடியும், ஓரமாப் போ’ என்று சொல்லிவிடுவார்.

இந்த விளையாட்டு வேடிக்கை பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.

விவேக் ராஜ்

மனுதர்ம சாஸ்திரம் – அயோத்திதாசரும் பெரியாரும்

மனு- கடிதங்கள்

முந்தைய கட்டுரைசெவ்வியலின் இயல்பு
அடுத்த கட்டுரைஅழகியநம்பியின் ஊர்- கடிதம்