அறிவுரைகள்

 

ஜெ,

உங்களது தேர்வு செய்யப்பட்ட சிலர் கட்டுரை மிகவும் நகைப்புக்குரியது.
மானுட இனத்தின் மேன்மைக்காக பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறன் அரை சதவீதத்துக்கும் கீழே உள்ளோரிடம் மட்டுமே உள்ளதாக கூறுவது உங்கள் அறியாமையையே காட்டுகிறது.

இயற்கையின் படைப்பில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் மனதின் எழுச்சி மூலம் நேர் செய்ய முடியும். தேவை மானுட தன்னுணர்வே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

இதன் ஆழ்ந்த பொருளை எந்த முன்முடிவும் இன்றி சிந்திக்கவும்.

வெறும் விவாதம் செய்வதையே கடமையாக கொண்டு, பக்கம் பக்கமாக கட்டுரை எழுதாமல் , குறைய சொல்லி நிறைவாக செயல்களை செய்யவும்.

புத்தகங்கள் பல படிப்பதால் மட்டுமே பெரும் பணிவும், தன்னடக்கமும் வந்து விடாது என்பதற்கு நீர் ஒரு வாழும் உதாரணம்.

ஆனந்த்.

நன்றி

தாங்கள் அந்த கருத்தை அப்படி உள்வாங்கிக்கொள்ள மாட்டீர்கள் என எனக்கு
தெரியும். எனக்கே அதை உள்வாங்க சில காலம் ஆகியிருக்கிறது.

நான் சொல்லியிருப்பதற்கும் பிறப்பின் சமூகக்குழு , சூழல்
போன்றவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையாவது எப்போதாவது
சிந்திக்கவும்.

இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருள் ஒருவன் என்ற தன்னுணர்வு இல்லாத
அறிவுஜீவி இல்லை. அது அவனுக்கு தளராத ஊக்கத்தையும் தன் பங்களிப்பு பற்றிய
பெருமிதத்தையும் அதேசமயம் பெரும் பிரவாகத்தின் துளி என்ற
தன்னடக்கத்தையுமே உருவாக்கும். தன்னடக்கம் என்பது காலத்தின்முன்,
பண்பாட்டின் விரிவின் முன் கொள்ளவேண்டிய உணர்வு. துண்டை எடுத்து
அக்குளில் வைத்துக்கொண்டு அடியேன் என்று பேசிக்கொண்டிருப்பதல்ல. அது
சாமானியர்களுக்கு இச்சமூகம் கற்பிக்கும் உணர்ச்சி. எந்த கலைஞனிடமும்
சிந்தனையாளனிடமும் அதை எதிர்பார்க்க முடியாது.

என்னைப்பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி

ஜெ

திருவாளர் ஜெ,

உங்களுடைய திமிரான கட்டுரையை வாசித்தேன். மனிதர்கள் எல்லாருக்கும் இறைவனின் அருள் சமமானது. புல்லுக்கும் புழுவுக்கும் வாழ்க்கையை அளித்தவன் இறைவன். இறைவனின் படைப்பில் எல்லாருமே சமம்தான். ஒவ்வொருவருக்கும் அவரவர் கடமை இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது. சாதாரண செருப்பு தைப்பவனும் ஐன்ஸ்டீனும் செய்யும் செயல்கள் எல்லாம் இறைவனின் கண்ணில் சரிதான். சொல்லப்போனால் செருப்பு தைப்பவன் நான் என்ற அகங்காரம் இல்லாமல் செய்யக்கூடிய தொழில் ஐன்ஸ்டீனின் சிந்தனையை விட பல மடங்கு மேலானது.

சிந்தனையால் பெரிய பயன் ஏதும் கிடையாது. வேதங்களை எல்லாம் கற்றறிந்த சிவாச்சாரியாருக்கு இறைவன் தோற்றம் அளிக்கவில்லை. சாதாரணமான கண்ணப்பநாயனாருக்குத்தான் காட்சி அளித்தான். அர்ப்பணம் , தியாகம் மூலம்தான் மனிதன் கடவுளை நெருங்குகிறான். பயனுள்ள பணி ஆற்றுகிறான். கல்வியாலும் சிந்தனையாலும் ஆணவம்தான் பெருகும்.

கல்வியாளர்களும் சிந்தனையாளர்களும் இந்த விஷயத்தை உணர்ந்து அடக்கமே உருவானவர்களாக இருக்கவேண்டும். நிறைகுடம் கூத்தாடாது. முதிர்ந்த கதிர் தலை கவிழ்ந்தாகவேண்டும்.

உங்கள் இணையதளத்துக்கு அவ்வப்போது வருவதுண்டு. நிறைய எழுதித்தள்ளுகிறீர்கள். இதெல்லாம் யாருக்காக, எதற்காக? இப்படியெல்லாம் எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் கட்டுகட்டாக தூங்குகின்றன. ரமணரின் நூல்களை முடிந்தால் படித்து பாருங்கள். ஒரு சில வரிகள். அவற்றிலேயே சொல்லவேண்டிய எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. அதைவிட பெரிதாக நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

பிறருக்கு அறிவுரை சொல்பவன் ஆணவம் மிக்கவன். அவன் இருட்டிலே இருக்கிறான். நீங்கள் மிகப்பெரிய இருட்டிலே இருக்கிறீர்கள். அதனால்தான் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்களை ரமணர் சொன்னது போல கடையனிலும் கடையனாக எப்போது உணர்கிறீர்களோ அப்போதுதான் உங்களுக்கு விடிமோட்சம்

இந்த எழுத்து குப்பை எல்லாவற்றையும் நிறுத்திக்கொண்டு அர்த்தபூர்வமாக ஏதாவது செய்யுங்கள். உங்கள் கடமையை நிறைவாக செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள். யாவர்க்கும் ஆம் இறைவர்க்கொரு பச்சிலை . யாவர்க்கும் ஆம் பசுவுகொரு வாயுறை. ஒருபசுவுக்கு ஒருவாய் புல்லை கொடுத்தாலே போதும். மிச்சமெல்லாம் வேண்டாத வேலை

உங்கள் புத்தி தெளிய பிரார்த்திக்கிறேன்

குமரவேல்

அன்புள்ள குமரவேல்

நன்றி.

பிரார்த்தனைக்கும் அறிவுரைகளுக்கும்

ஜெ

ஜெயமோகன்,

நீங்கள் பேசிக்கொண்டிருப்பது எலீட்டிச மேட்டிமைவாதம் என்பதற்கு இந்தக்கட்டுரையே ஆதாரம். மக்களை ஒருபொருட்டாக கருதாத மனநிலையே இதில் உள்ளது. மக்களிடமிருந்துதான் எல்லா அறிவும் உருவாகின்றன. மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளாதவனுக்கு ஒன்றும் தெரியமுடியாது. அவன் தன்னை மக்களைவிட பெரியவனாக நினைத்துக்கொண்டிருப்பான். ஆனால் அவன் ஒரு முட்டாள் மட்டுமே. மக்களிடம் செல்லுங்கள். மக்களில் ஒருவராக உங்களை வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் போராட்டத்திலே சென்று ஒரு தடியடி வாஙக்கூடிய தொண்டனை விட எந்த சிந்தனையாளனும் மேலானவன் அல்ல. அந்த உணர்ச்சி என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் உங்களுக்கு உண்ஐயான எழுத்தை எழுதும் சக்தி வரும்.

அன்பு பொன்ராஜ்

அன்புள்ள பொன்ராஜ்

மார்க்ஸியத்துக்கு இப்படி ஒரு முகமிருப்பது அறிந்து மகிழ்ச்சி

நன்றி

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்