மெய்யான முன்னுதாரணங்கள்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ,

நீங்கள் எழுதும் அஞ்சலிக்குறிப்புகளை தொடர்ச்சியாக வாசிப்பவன் நான். அவற்றை போகிறபோக்கில் தூற்றும் சிலரையும் அறிவேன். ஆனால் இலக்கியச்சூழலில் அறியப்படாத பலரைப் பற்றி நீங்கள் பதிவுசெய்ததனால்தான் நான் அறிந்தேன். என்னைப்போன்றே பலர் இருக்கக்கூடும். என் ஊர் காஞ்சீபுரம். ஆனால் அங்கே வே.நாராயணன் என்பவர் ஓர் இலக்கிய இயக்கமாக இருந்தார் என்பதை நீங்கள் சொல்லவேண்டியிருந்தது.

சமீபத்தில் மறைந்த க்ரியா ராமகிருஷ்ணன் பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் அவருக்கு அஞ்சலி என ஏதும் எழுதவில்லை. அது வேண்டுமென்றே தவறவிடப்பட்டதா? ஓர் ஆர்வத்தில்தான் இதைக் கேட்கிறேன்

செந்தில்குமார்

***

அன்புள்ள செந்தில்,

இத்தளத்தில் வெளியிடப்படும் அஞ்சலிக்கட்டுரைகளை நீங்கள் கவனிக்கலாம். இலக்கியம்- கலை- அறிவுத்துறையில் குறிப்பிடும்படியான சாதனைகளைச் செய்தவர்கள், தங்கள் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை மட்டும் வெளிப்படுத்தி வாழ்ந்தவர்களே முதன்மையாக என் மதிப்புக்குரியவர்கள். அவர்களைப் பற்றியே நான் எழுதுகிறேன். பலசமயம் அவர்களைப் பற்றி பிற எவரும் எழுதியிருக்க மாட்டார்கள். போகிறபோக்கிலான ஒற்றைவரிகளுக்கு அப்பால் எவருமே பேசியிருக்க மாட்டார்கள் – உதாரணம் மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி. முதன்மையாக என் அஞ்சலிக்கட்டுரைகளின் நோக்கம் இதுவே.

பெரும்பாலானவர்கள் ஒரு துயரக்கொண்டாட்டமாகவே கடைப்பிடிக்கும் சாவுகளில் பெரும்பாலும் நான் அஞ்சலி செலுத்துவதில்லை. அஞ்சலி என எழுத தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை என்பதே காரணம். வெறுமே ஓரிரு வரிகள் எழுதுவதில் பொருளில்லை. அதை எழுத்தாளன் செய்யக்கூடாது, சம்பிரதாயங்களில் சலிப்பு இல்லையென்றால் காலப்போக்கில் எழுத்தாளனின் மொழி மழுங்கிவிடும்.

சாவின்போது வெறுமே புகழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்தாளனுக்கோ அறிவியக்கவாதிக்கோ உரிய அஞ்சலி அல்ல அது. அதை சுந்தர ராமசாமி பலமுறை எழுதியிருக்கிறார். அவரே அப்படித்தான் எழுதியிருக்கிறார். மிகையஞ்சலி என்னும் வழக்கமே இலக்கியச் சூழலில் இருந்ததில்லை. சமீபத்தில் நகுலனுக்கு அசோகமித்திரன் எழுதிய அஞ்சலி கட்டுரையை வாசித்தேன் – நகுலனின் எல்லா புனைவிலக்கியத் தோல்விகளையும், ஆளுமைச்சிக்கல்களையும் அதில் அசோகமித்திரன் சொல்கிறார். நகுலனுக்கு தன் முதல்நூலை சமர்ப்பணம் செய்தவர், கடைசிவரை அன்புடன் இருந்தவர், அசோகமித்திரன். நகுலனை இறுதிநாளில் பார்க்கவரவேண்டும் என விரும்பியவர், நான் அதற்கு ஏற்பாடு செய்தேன், அவரால் வரமுடியவில்லை.

ஆகவே நான் அஞ்சலிக்குறிப்பில் எப்போதுமே ஒருவரின் பங்களிப்பை திட்டவட்டமாக தொகுத்துச் சொல்லவே  முயல்வேன். பங்களிப்பை மட்டும். எல்லைகளையும் சுட்டிக்காட்டுவேன். எதிர்மறையாக எழுதவேண்டிய ஆளுமை என்றால் ஏதும் எழுதுவதில்லை. எனக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர்கள் என்றால்கூட பலரைப் பற்றி நான் எழுதாமல் கடந்தமைக்குக் காரணம் இதுவே.

*

க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு 1986 முதல் தெரியும். இன்று அவர் மறைந்துவிட்ட நிலையில் அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேச விரும்பவில்லை. அவர்மேல் எனக்கு மதிப்பில்லை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். குறைவான வாசிப்பும் அதைவிட குறைவான இலக்கிய- தத்துவ புரிதலும் கொண்டவர், ஆனால் மிகையான தோரணையுடன் தன்னை காட்டிக்கொண்டவர். சமகால தமிழ் இலக்கியவாதிகள் மேல் அவருக்கிருந்த இளக்காரமான பார்வை என்னால் ஏற்கத்தக்கதாக இருக்கவில்லை.

க்ரியா பதிப்பகத்தின் பங்களிப்பு, அவருடைய பணி குறித்து அஞ்சலிக்குறிப்புகள் வழியாக ஒரு மிகையான, பொய்யான பிம்பம் உருவாக்கப்படுகிறது. அதைப்பற்றி மட்டும் சொல்லவிரும்புகிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் மிகக்குறுகிய காலம் கசடதபற இதழுடன் தொடர்புகொண்டிருந்தார். மற்றபடி அவருக்கும் தமிழிலக்கியம் உருவாகி வளர்ந்த சிற்றிதழ்ச்சூழலுக்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை. இங்கே நிகழ்வன என்ன என்றே அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் வாழ்ந்தது உயர்குடிகளின் , தூதரகத்தொடர்புகளின் இன்னொரு உலகில்.

க்ரியா சுந்தர ராமசாமியின் ஒத்துழைப்புடன், அவருடைய பெருங்கனவுகளுடன் தொடங்கப்பட்ட பதிப்பகம். அந்த கனவில் ஜெயலட்சுமி பங்குகொண்டார். ஆனால் ராமகிருஷ்ணனுக்கு அக்கனவில் நம்பிக்கை இல்லை. க்ரியா தமிழில் தொடக்க காலத்தில் சில இலக்கியநூல்களை வெளியிட்டது. அவை சுந்தர ராமசாமியின் தெரிவு. எஞ்சியோர் ராமகிருஷ்ணனின் கசடதபற நண்பர்கள்.

ஆனால் பின்னர் அக்காலத்தைய முக்கியமான படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவரையுமே க்ரியா புறக்கணித்தது- ராமகிருஷ்ணனுக்கு நன்கு அறிமுகமான அசோகமித்திரன் உட்பட. நர்மதா பதிப்பகம் இல்லை என்றால் அசோகமித்திரனின் பலநூல்கள் வெளிவந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. லா.ச.ராமாமிருதத்தின் நூல்களையும், மௌனி சிறுகதைகளையும் வெளியிட சுந்தர ராமசாமி விரும்பினார். ராமகிருஷ்ணனுக்கு ஆர்வமில்லை.நெடுங்காலம் அச்சில் இல்லாமல்ருந்த மௌனியின் சிறுகதைகளை சொந்தச்செலவில் பீக்காக் பதிப்பகம் வழியாக கி.ஆ.சச்சிதானந்தம் வெளியிட்டார்.

நூல்வெளியிட போராடிக்கொண்டிருந்த பிரமிள், அபி போன்ற எவருக்கும் க்ரியா வாய்ப்பளித்ததில்லை.அடுத்த தலைமுறையின் தமிழ்ப்படைப்பாளிகளான வண்ணதாசன், நாஞ்சில்நாடன், கந்தர்வன், ராஜ் கௌதமன்,சுரேஷ்குமார இந்திரஜித், தேவதேவன் என எவருடைய நூலையும் க்ரியா வெளியிடவில்லை. தேவதேவனுக்கு அவருடைய நண்பர் சொந்த்ச்செலவில் நூல்களை வெளியிட்டார்.

ராஜேந்திரசோழன், பூமணி ஆகிய இருவருக்கும் தலா ஒரு தொகுதியை மட்டும் க்ரியா வெளியிட்டது. திலீப்குமார் க்ரியாவின் ஊழியர், ஆகவே அவர் நூல் வெளியிடப்பட்டது. ஆனால் க்ரியாவிலேயே பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்றபோதும்கூட கோபிகிருஷ்ணனின் நூலை அவரே சொந்தச்செலவில்தான் வெளியிட்டார்.

தமிழ் ஹிந்து நாளிதழில் க்ரியா ராமகிருஷ்ணனுக்கான அஞ்சலியில் ஒரு வெளிநாட்டு ஆசாமி ‘ஏராளமான இளம்படைப்பாளிகளை அறிமுகம் செய்தவர்’ என்று எழுதியிருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய அந்த ‘ஏராளமான இளம் எழுத்தாளர்கள்’ யார்? க்ரியா ராமகிருஷ்ணன் இமையம் எழுதிய மூன்று நாவல்களை வெளியிட்டார், அவ்வளவுதான். வேறு எவரையுமே அவர் வெளியிடவில்லை. இமையம் அவ்வளவு ஏராளமான உடல்கொண்டவரும் அல்ல.

அடுத்த காலகட்டத்தில் எழுந்துவந்த கோணங்கி, நான். எஸ்.ராமகிருஷ்ணன், சோ.தர்மன், சாரு நிவேதிதா, பிரேம்-ரமேஷ், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், தேவிபாரதி,பாவண்ணன், சுப்ரபாரதி மணியன்,பா.வெங்கடேசன், இரா.முருகன் என எவருடைய நூலையும் க்ரியா வெளியிடவில்லை. நாங்கள் அவரை பொருட்டாக நினைக்கவுமில்லை. என்னிடம் அவர் “உங்க கதைகளைக் கொண்டாங்க” என்று ஒருமுறை கேட்டார். அந்தத் தோரணையால் எரிச்சலடைந்து, “உங்க ரசனை மேலே எனக்கு நம்பிக்கை இல்லை” என்று நான் பதில் சொன்னேன். க்ரியா தொடங்கப்பட்டபின் நிகழ்ந்த மூன்று தலைமுறை இலக்கிய வளர்ச்சியில் க்ரியாவின் பங்கு என ஏதுமில்லை.

எழுத்தாளர்கள் தன்னை அணுகி கைப்பிரதியை அளித்து நிற்கவேண்டும் என ராமகிருஷ்ணன் நினைத்தார்.அந்தப்பிரதியை அவர் தனக்கிருக்கும் மொழிக்கொள்கைக்கு உகக்க தானாகவே செப்பனிடுவார். ‘மேலிருந்து’ ஆலோசனை சொல்லி வற்புறுத்துவார். புனைவெழுத்து என்பது ‘சீர்நடையில்’ அமைவது அல்ல. அது செய்திக்கட்டுரையோ, ஆய்வேடோ அல்ல. புனைவெழுத்துக்கு ஓர் மொழிக்கொள்கை இருக்குமென்றால் அதை அந்த புனைவெழுத்தாளனே உருவாக்கவேண்டும். புனைவெழுத்தில் மீறல்களும் பிழைகளும்கூட புனைவின் வெளிப்பாடுகளே. அவர் இயந்திரத்தனமான ஓரு பிரதிசெப்பனிடுதலை வலியுறுத்திய, இலக்கியரசனையற்ற மனிதர்.

க்ரியா ஒரு பதிப்பகமாக நிலைநின்றது முழுக்கமுழுக்க அன்னிய நிதிக்கொடைகளினால். அவருடைய திறனே புத்தகப்பதிப்பித்தலில் இத்தனை நிதிகளைப் பெற வாய்ப்புள்ளது என்று கண்டுகொண்டதுதான். வெளிநாட்டு பல்கலை நிதிகள், அறக்கட்டளை நிதிகள், தூதரக நிதிகள். அவர் பெற்ற நிதியில் கால்வாசியை தமிழிலக்கியத்துக்கு நேர்மையாகச் செலவிட்டிருந்தால் மிகப்பெரிய விஷயங்களைச் செய்திருக்கலாம்.

நான் உட்பட சிற்றிதழாளர்கள் மாதவருமானத்தில் மிச்சம் பிடித்து சிற்றிதழ் நடத்தி பொருளிழப்பை சந்தித்த காலகட்டத்தில் சென்னையில் நிதிக்கொடைகளைப் பெற்றுக்கொண்டு நூல்வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். இமையம் போன்றவர்களின் நூல்களை அவர் வெளியிட்டதேகூட பின்னாளில் நிதிக்கொடையாளர்களின் கவனம் தலித்தியம் போன்றவற்றுக்கு ஆதரவாக திரும்பியபோதுதான். ஆனால் தமிழில் தலித் எழுத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்து நடத்தியவர்கள் அ.மார்க்ஸ், ரவிக்குமார், தமிழவன், ராஜ்கௌதமன் போன்றவர்களே

மிகப்பெரிய நிதிக்கொடைகளை பெற்றுக்கொண்டு வெளியிடப்பட்டவை க்ரியாவின் கணிசமான நூல்கள் [அச்செய்தியை அந்நூல்களில் வெளியிடவேண்டும் என்பது நிதிக்கொடைகளின் நிபந்தனை என்பதனால் அதில் ரகசியமேதுமில்லை] ஆனால் அந்நிதிகளை பெற்றுக்கொண்ட ராமகிருஷ்ணன் அவற்றை பிறபதிப்பாளர்கள் வைத்த விலையைவிட ஒருமடங்கு அதிகவிலை வைத்தே வெளியிட்டார். மிகமிகக் குறைவான பிரதிகளே அச்சிட்டார்.அன்றெல்லாம் எந்தக்கடையிலும் அந்நூல்கள் விற்கப்படுவதுமில்லை.பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகளுக்குக் கூட அந்நூல்கள் கொண்டுவரப்படுவதில்லை.அவை தமிழில் வாசிக்கப்படவேண்டும் என்றுகூட அவர் எண்ணியதில்லை.

உண்மையில் அவை நிதிக்கொடை நிறுவனங்களின் பார்வைக்காக மட்டுமே அச்சிடப்பட்ட ‘மாதிரிகள்’ மட்டுமே. அவற்றின் அச்சுத்தரம், நேர்த்தி எல்லாமே நிதியளிப்பவர்களை மகிழ்விக்கும் சர்வதேசத்தரத்துக்காக உருவாக்கப்பட்டவை மட்டுமே. இங்கே என்.ஜி.ஓக்கள் அலுவலகங்களை அற்புதமாக அமைத்துக்கொள்வதுபோல. அவர் மிகத்தரமாக நூல்களை வெளியிட்டார் என்கிறார்கள் .அந்த தரம் இருநூறு பிரதிகளுக்குள் பெரும்பொருட்செலவில் அவர் அடைந்தது. அதுதான்அவருக்கு நிதிக்கொடைகளைப் பெற்றுத்தந்தது.

அவர் ஒவ்வொரு நூல்களுக்கும் பல ஆண்டுகள் ‘செப்பனிடும்’ வேலையை செய்தார். இதையும் இன்று அவருடைய பெருமையாகச் சொல்கிறார்கள். அந்த செப்பனிடும் வேலை என்பது அதற்குரிய கட்டணமும் ஊதியமும் பெற்றுக்கொண்டு செய்வது என்பதை பாராட்டுபவர்கள் எண்ணுவதில்லை. பொதுவாக நிதிக்கொடை பெறும் அமைப்புகள் எல்லாமே அப்படி நீண்ட கால அளவில், தொடர்ச்சியான வேலையையும் கணக்கு காட்டுவது வழக்கம்.அதாவது தமிழ் என்கிற ‘பிற்பட்ட’ மொழியில் ஆங்கிலநூல்களை மொழியாக்கம் செய்ய அவ்வளவு உழைப்பு தேவையாகிறது என்று நிதிதருபவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

க்ரியா வெளியிட்ட அந்த அகராதியில் 10 சதவீதம் சொற்கள்கூட அவர்கள் திரட்டியவை அல்ல.அது நிதிக்கொடை பெற்று வெளியிடப்பட்ட நூல்.ஒரு பைசா நிதிபெறாமல் கரிசல்காட்டு சொல்லகராதியை கி.ராஜநாராயணனும், நடுநாட்டுச் சொல்லகராதியை கண்மணி குணசேகரனும் தயாரித்தனர். கொங்குவட்டாரச் சொல்லகராதி பெருமாள்முருகனாலும், நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கு அகராதி அ.கா.பெருமாளாலும், தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி சுபாஷ் சந்திரபோஸாலும் தயாரிக்கப்பட்டுள்ளது. செட்டிநாட்டு வட்டராவழக்குச் சொல்லகராதி பழனியப்பா சுப்ரமணியனால் தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த வகையான உழைப்புகளையே ஒரு சூழல் கொண்டாடவேண்டும்.

பெரும் அர்ப்பணிப்புடன் நடைபெற்று, இன்று மெல்ல அங்கீகாரம்பெறத்தொடங்கியிருக்கும் சிற்றிதழ்சார் இலக்கிய இயக்கத்தின் எதிர்நிலை என்றே ராமகிருஷ்ணனை மதிப்பிடுவேன். அதைக்கொண்டு பொருளீட்டியவர் மட்டுமே. அவரை இவ்வியக்கத்தின் அடையாளமாக முன்னிறுத்துவது பெரும்பிழை. தமிழ் இலக்கிய இயக்கத்துடன் சம்பந்தம் அற்ற ‘முகவர்களால்’ செய்யப்படும் மோசடி.

இத்தருணத்தில் இன்னொருவரை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவரைப்பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். அன்னம் பதிப்பகம் நடத்திய மீரா. மீ.ராஜேந்திரன் இயற்பெயர். சிவகங்கைக்காரர். கவிஞர் என புகழ் பெற்றவர், கல்லூரி ஆசிரியர். வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்தவர். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தவர், பின்னர் அர்ப்பணிப்புள்ள மார்க்ஸியர். இலக்கியத்தை தன் அரசியல் – பண்பாட்டு நம்பிக்கைகளின் செயற்களமாக கண்டவர்.

சிவகங்கையில் தன் பூர்விக இல்லத்தில் சொந்தநிலத்தை விற்று சேர்த்த செல்வத்தில் அவர் தொடங்கிய அன்னம் பதிப்பகமே எண்பதுகளில் நவீனத்தமிழிலக்கியத்தின் விளைநிலம். கி.ராஜநாராயணன் வண்ணதாசன், வண்ணநிலவன், கந்தர்வன், நாஞ்சில்நாடன், பூமணி, என நாம் இன்றுகொண்டாடும் அத்தனை படைப்பாளிகளையும் வெளியிட்டு உலகறியச்செய்தவர் மீரா. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன், பவா செல்லத்துரை, சோ.தர்மன்,நான் உட்பட என் தலைமுறையின் அத்தனைபடைப்பாளிகளும் எங்கள் கைப்பிரதிகளுடன் அவரையே நாடிச் சென்றோம்.எங்கள் முதல்நூல்களை அவரே வெளியிட்டார்.

அன்றைய சிற்றிதழ்சார்ந்த பிரசுரங்களுக்கு க்ரியா பதிப்பகத்தின் பொங்கும் நிதிவளம் இருக்கவில்லை. பெரும்பாலான சிற்றிதழ்சார்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் இருநூறு பிரதிகள்கூட விற்பதில்லை.அவற்றிலிருந்து லாபம் என பெரிதாக எதையுமே எதிர்பார்க்கமுடியாது. பெரும்பாலும் ஆசிரியர்களே வெளியிட்டனர். அன்னம் மீரா எழுத்தாளர்களிடமிருந்து பணம்பெறாமல் வெளியிட்டார். அவர் பெற்ற லாபத்தைவிட பெரிதாக, சொந்தக்காசிலிருந்து, பதிப்புரிமையும் கொடுத்தார்

அன்னம் அச்சகம் வீட்டிலேயே இருந்தது. ஊழியர்கள் ஓர் இலட்சியத்துக்காகவே அதில் பணியாற்றினர். மெய்ப்பு நோக்குவதெல்லாம் ஒருவகை உழைப்புக்கொடையாகவே. அதற்கெல்லாம் அச்சகம் செலவிடமுடியாது. ஆசிரியரே மெய்ப்பு நோக்கவேண்டும். மீராவே இரவு பகலாக அமர்ந்து மெய்ப்பு பார்ப்பார். [அன்றெல்லாம் அச்சகத்திலேயே மெய்ப்பு பார்க்கவேண்டும். மெய்ப்பு திருத்தி அச்சிட்டதும் கட்டை அச்சின் எழுத்துப்பலகையை கலைத்துவிடுவார்கள்] நான் எப்போதெல்லாம் சென்றேனோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு நூலை தூக்கி என் கையில் தந்துவிடுவார். நான் தனுஷ்கோடி ராமசாமி, இரா முருகன் உட்பட பலர் நூல்களை மெய்ப்பு பார்த்துக்கொடுத்திருக்கிறேன்

ஆனாலும் ஒப்புநோக்க மிக அரிதான பிழைகளுடன், மிகச்சிறந்த கட்டமைப்புடன், மிகக்குறைவான விலையில் அழகுற வெளியிடப்பட்டன அகரம் நூல்கள்.அதுதான் உண்மையான பிரசுரகர்த்தரின் சாதனை என்பது. என் ‘திசைகளின் நடுவே’ சிறுகதை தொகுதியை இரவெல்லாம் மெய்ப்பு நோக்கியபின் காலையில் வீங்கிய கண்களுடன் கல்லூரிக்கு செல்லும் மீராவை நினைவுறுகிறேன். என் முதல் சிறுகதை தொகுதியை அன்னம் வெளியிட்டது அன்று பெரிய ஒரு தொடக்கம்.

நான் அன்று அறியப்படாத எழுத்தாளன். அன்று எல்லா சிற்றிதழ் எழுத்தாளர்களும் அறியப்படாதவர்களே. விற்பனைக்காக அல்ல, ஒரு பண்பாட்டுச்செயல்பாட்டாகவே நூல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் என் தொகுதி ஓராண்டுக்குள் 1200 பிரதிகள் விற்றது. மீரா எனக்கு 3000 ரூபாய் பதிப்புரிமைத்தொகை தந்தார். நான் அதை மறுத்தேன். ஆனால் எனக்கு மகன் பிறந்தபோது மீண்டும் வற்புறுத்தி பெற்றுக்கொள்ளச் செய்தார்.

அவர் வெளியிட்ட பலநூல்கள் தேங்கிக்கிடப்பதை கண்டிருக்கிறேன். கட்டுக்கட்டாக அவை சேமிப்பறையை நிறைத்து புழுதிபடிந்து கிடக்கும். அன்றெல்லாம் குறைவான பிரதிகள் அச்சிடமுடியாது. 1200 பிரதி அச்சிட்டால்தான் விலைகுறைவாக வைத்து லாபம் சம்பாதிக்கமுடியும். ஆனால் விற்காவிட்டால் நஷ்டம்தான்.

ஓர் எழுத்தாளரின் நாவல் 120 பிரதிகள் விற்றபின் மிச்சம் அப்படியே கிடந்தது. நான் மீராவிடம் கேட்டேன், “குறைவா அச்சிட்டிருக்கலாமே” என்று. “ஒரு எழுத்தாளரை நம்பி 1200 பிரதி அச்சிடணும். அதான் அவருக்கு நாம செய்ற கௌரவம். கம்மியா அச்சிட்டா விலை கூடும். ஜனங்க வாங்க முடியாது.புக் போடுறது ஜனங்க படிக்கணும்னுதானே?”

மீராவின் விழுமியங்களே உயர்தரப் பதிப்பாளனுக்குரியவை. அவருடைய புத்தகக் கடையில் கடன்வைத்து புத்தகம் வாங்கலாம், காசிருந்தால் கொடுக்கலாம். இளம்படைப்பாளிகளுக்குச் சும்மாவே கொடுப்பார். “எழுதுறதுக்கு முன்ன வாசிச்சுப்பாருங்க” என்று சொல்வார். கி.ராஜநாராயணனின் நாட்டார் பாலியல் கதைகளின் இரண்டு தொகுதிகளை எடுத்து என் கையில் தந்து “படிச்சுப்பாருங்க. நீங்க சு.ராவோட ஆள். எழுத்தை மாரலா இறுக்கிப்பிடிச்சிருக்கீங்க. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். அதுக்கு இது உதவும்” என்றார். உண்மையிலேயே அது எனக்கு ஒரு பெரிய விடுதலையாக அமைந்தது.

1982 ல் பாரதி நூற்றாண்டுவிழா வந்தபோது அதையொட்டி அன்னம் 100 கவிதைத்தொகுதிகளை வெளியிட முற்பட்டது. “அன்னம் நவகவிதை வரிசை” என்று அதற்குப்பெயர். அத்தனையும் புதியகவிஞர்களின் நூல்கள். இன்று கவிஞர்களாக அறியப்படும் அனைவரின் கவிதைகளும் முதல்முறையாக தொகுப்பாக அப்படித்தான் வெளியாயின. விக்ரமாதித்யன், கலாப்ரியா, வண்ணதாசன், வண்ணநிலவன் என எத்தனை பெயர்கள். அந்த தொகுதிகள்தான் எழுத்து தொடங்கிய புதுக்கவிதை மரபை ஆழமாக நிலைநிறுத்தின, அவை ஓர் இயக்கமாக புதுக்கவிதையை மாற்றின. மெய்யான இலக்கியச்சாதனை என்றால், இலக்கியப் பங்களிப்பு என்றால் அதுதான்.

மீரா இளம்படைப்பாளிகளின் நூல்களை தேடித்தேடிப் பதிப்பித்தார். ஒரு நல்ல கதையை வாசித்தால்கூட உடனே கடிதமெழுதி பாராட்டுவார்.  “தொகுப்பா போடலாம் தம்பி” என அவரே கேட்பார். அன்றிருந்த எந்த வணிக இலக்கிய நட்சத்திரத்தையும் அவர் பொருட்டாக எண்ணியதில்லை. இளம்படைப்பாளிகளின் தொகுதிகளை மிகச்சிறப்பான அச்சில் கொண்டுவருவார். அவரே உரியவர்களிடம் முன்னுரைகளை வாங்கி வெளியிடுவார்.இலக்கியவாதிகளுடன் மிக அணுக்கமாக இருப்பார், அவர்களில் ஒருவராக. கோணங்கி அவருடைய மகன்போல. அவன் அவரை கேலிசெய்வதை கண்டால் நெஞ்சு வலிக்கும்படி சிரிப்பு வரும். எழுத்தாளர்களின் எல்லா கோணல்களையும் பூசல்களையும் தந்தையருக்குரிய பரிவுடன் அணுகியவர் மீரா.

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மதுரை என பல ஊர்களில் புத்தகக்கண்காட்சிகளை நடத்தினார் மீரா. அதில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் நூல்களை விற்றார். விற்கப்படாத நூல்கள் ஒருரூபாய் விலைக்கெல்லாம் கிடைக்கும். தபாலில் புத்தகங்களை அனுப்பி வைப்பார். பெற்றுக்கொண்டு பணம் அனுப்பலாம். என் நண்பர் ஒருவர் மீராவின் பதிப்பகத்தில் ஒரு புத்தகம் வாங்கினார். அதில் ஒரு ஃபாரம் இல்லை. அவர் கடிதம் எழுதினார், ஆனால் நூலை திருப்பி அனுப்பவில்லை. இன்னொரு புத்தகமும், அன்பளிப்பாக ஒரு கவிதைநூலும் தபாலில் வந்து சேர்ந்தது.

மிகக்குறைவான பொருட்செலவில் பல உத்திகள் வழியாக அழகிய அட்டைகளை புத்தகங்களுக்கு போட்டார் மீரா. ஸ்க்ரீன்பிரிண்ட் அட்டைகள் அவரால் அறிமுகம் செய்யப்பட்டவை. புகைப்பட நிபுணர் [டு லெட் புகழ்] செழியன் அன்று அவருக்கு அட்டைவடிவமைப்பில் உதவிசெய்திருந்தார். சுந்தர பாண்டியன் என்பவரின் உதவியும் இருந்தது.

என் திசைகளின் நடுவே அட்டையே அன்று ஒரு சோதனை முயற்சி. மினிஆப்செட் படத்தை சற்று ‘பிழையாக’ ஓட்டி மங்கலான நவீன ஓவியம்போன்ற உருவம் உருவாக்கப்பட்டது. க்ரியாவின் நூல்கள் அல்ல, அன்னம் பதிப்பகத்தின் நூல்களே நேர்த்தியான அச்சுக்காக விருதுகள் பெற்றன—வண்ணதாசனின்  ‘சமவெளி’ அவ்வகையில் அன்று ஒரு பதிப்பகச் சாதனையாக கருதப்பட்டது.

மதுரையிலும் சென்னையிலும் அன்னத்திற்கு புத்தகவிற்பனை நிலையங்கள் இருந்தன. உண்மையில் அவை இலக்கியச் சத்திரங்கள். நகரத்திற்கு வரும் இலக்கியவாதிகள் இரவு அங்கேதான் தங்குவார்கள். மதுரையில் மேலமாசி வீதியில் இருந்த அன்னம் அலுவலகத்தில் லோகு என்ற ஓவியர்தான் பொறுப்பாளர், விற்பனையாளர். அங்கே எப்போதும் கோணங்கியின் ஜட்டிகள் காய்ந்துகொண்டிருக்கும் என்று ஒரு பகடி உண்டு.

அத்தனை எழுத்தாளர்களும் இலவசமாக வந்து தங்குவார்கள். நாட்கணக்கில் தங்கி எழுதுவார்கள். அங்கே அமர்ந்து முழுத்தொகுப்பையும் எழுதியவர்கள்கூட உண்டு. மீரா பெயர்சொல்லி கடனில் மெஸ்ஸில் சாப்பிடுவார்கள். வெறுந்தரையில் புல்பாய்களை விரித்து படுத்து விடிய விடிய இலக்கியம் பேசுவார்கள். நானும் தங்கியிருக்கிறேன், வெறிகொண்டு இலக்கியம் பேசியிருக்கிறேன். சுரேஷ்குமார இந்திரஜித் ,ந.ஜயபாஸ்கரன், சமயவேல், அ.ராமசாமி போன்றவர்களை அங்கேதான் சந்தித்தேன்.

மீரா தன் அறுபத்து நான்காம் வயதிலேயே நோயுற்று மறைந்தார். நரம்புத்தளர்ச்சி. அதற்கு கல்லூரி ஆசிரியர்பணி, பதிப்பகப் பணி என அவர் மேற்கொண்ட இரண்டு அடுக்கு வேலையும் ஒரு காரணம். அத்துடன் அவருடைய பதிப்பகமும் பொருளியல் இழப்பையே சந்தித்தது. அவருடைய முன்னோர்கள் பர்மாவில் வணிகம் செய்தவர்கள். தன் பங்கு சொத்தை முழுக்க மீரா பதிப்பகத் தொழிலில் இழந்தார். ஆனால் அவர் மகன் கதிர் தொடங்கிய  ‘அகரம்’ பதிப்பகம்தான் 1997ல் விஷ்ணுபுரம் நாவலை வெளியிட்டது.

அப்படித்தான் நவீனத்தமிழிலக்கியம் வளர்ந்தது. அந்த இலக்கிய இயக்கத்தின் உயிர்த்துடிப்பு அதுதானே ஒழிய க்ரியா ராமகிருஷ்ணன் போன்ற உயர்மட்ட பாவனையாளர்களின் நுனிநாக்கு ஆங்கிலமோ அன்னியநிதியோ அல்ல.அவர்களுக்கு இவ்வியக்கத்தில் எந்த இடமும் இல்லை. இன்று சிலர் கூலிமரியாதைக்காக, ஜாதிப்பற்றுக்காக, துட்டிவீட்டு ஒப்பேற்றுப் பேச்சுக்காக க்ரியா ராமகிருஷ்ணன் போன்றார்களை இலக்கியத்தின் மேல் ஏற்றி வைப்பது வரலாற்றுக்கு எதிரானது, இலக்கியத்திற்காகப் பெரும்பங்களிப்பாற்றி பொருளிழந்து மௌனமாக மறைந்தவர்கள் மேல் காறி உமிழ்வது போன்றது.

தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டாகவேண்டிய பதிப்பாளர்கள்,  மெய்யான சாதனையாளர்கள் சிலர் உண்டு. சக்தி வை கோவிந்தன் அவர்களில் முதன்மையானவர். வாசகர்வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி இன்னொரு ஆளுமை. அக்காலகட்டத்தில் நர்மதா ராமலிங்கம், கலைஞன் மாசிலாமணி போன்றவர்களும் தமிழுக்கு நல்ல நூல்களை அளித்தவர்கள். அந்த வரிசையில் வருபவர் மீரா. அவர்களுக்கெல்லாம் மீதாக அத்தகுதி அற்ற ஒருவரை ஏற்றிவைக்கும் பிழையை சிற்றிதழாளர்களாவது செய்யக்கூடாது.

காலாகாலமாக இது நடந்துகொண்டிருக்கிறது, ஊடகத்தொடர்பிருந்தால் ஒருவர் தகுதியற்ற இடத்தில் ஏறிஅமர்ந்துவிடமுடிகிறது. இங்கே மிக அதிகமாக திருடப்படுபவை வரலாற்றுப் பீடங்கள்தான். க்ரியா ராமகிருஷ்ணனை அங்கே தூக்கிவைக்க இனி பலபத்தாண்டுகள் தொடர்முயற்சி எடுக்கப்படும் என நினைக்கிறேன். அங்கெல்லாம் சிற்றிதழாளனின் குரல் ஒலித்து அதை மறுத்துக்கொண்டே இருக்கவேண்டும்

மீரா என் திசைகளின் நடுவே நூலை வெளியிட்டு முப்பதாண்டுகள் ஆகப்போகின்றன. 2002ல் அவர் மறைந்து பதினெட்டு ஆண்டுகள். வெவ்வேறுவகையில்  நான் அவரை நினைவுகூர்ந்தபடியே இருக்கிறேன். என் பேச்சில் அவருடைய பகடிகள் வந்துகொண்டே இருக்குமென நண்பர்கள் அறிவார்கள். ஓர் இலக்கியவாதியாக என்னை தொட்டு எடுத்துக்கொண்ட அந்த மாபெரும் பதிப்பாளரை  இன்றும் நெகிழ்வுடன், நிறைவுடன் நினைவுகூர்கிறேன். வணங்குகிறேன்.

கெரகம்!
க்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்
செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி
தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்
அட்டைப்படங்களின் வரலாறு
திருவண்ணாமலை
முந்தைய கட்டுரைஇடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை- இரம்யா
அடுத்த கட்டுரைதாபமும் பித்தும்