அந்தியூர் மணி, மனு- கடிதங்கள்

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி

அன்புடையீர்! வணக்கம்!

மனுதர்மம் பற்றி மார்க்சீய கருத்துக்களுடன் ஒப்பிட்டு எழுதிய தங்கள் கட்டுரைக்கு அந்தியூர் மணி அவர்களின் பதில் மிக்க அரிய தரவுகளுடன் இருக்கிறது!  மனுதர்மம் ஆதரிப்பவர்கள் கூட, அது பற்றி சரியான தரவுகள் இல்லாமலேயே பேசுவதாகவே தோன்றுகிறது!   அந்தியூர் மணி அவர்கள் வைக்கும் வாதம்கூட அவர்கள் வைப்பதில்லை. அது தனிமனித உரிமைக்கானதல்ல. குழுக்களுக்கானது அந்த குழுக்களை கட்டுபடுத்த ஏற்பட்டது என்றெல்லாம் மிகஅருமையாக எழுதியிருக்கிறார்!  மனு பற்றி எனக்கு அவ்வளவு விபரங்கள் தெரியாதென்றாலும் அவரது வாதம் சரியென்றே தோன்றுகிறது!  உங்கள் கருத்துகளுக்கு சற்றே முரண் பட்டவர்களின் கருத்தோட்டத்தையும் தங்கள் வெளியில் பதிவிட அனுமதித்த  விதம் பாராட்டுக்குரியது!

அந்தியூர் மணி அவர்களின் கருத்தை நான் என் நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன்!

நன்றி! வணக்கம்!

தங்கள்,

இரா. இரவிச்சந்திரன்

சென்னை

***

அன்புள்ள ஜெ

அந்தியூர் மணியின் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. அவருடைய படம் இல்லையென்றால் நீங்களே மாற்றுப்பேரில் எழுதியது என்று சொல்லியிருப்பார்கள். அல்லது அவர் ஒரு பிராமணர் என்று சொல்லியிருப்பார்கள். அந்தக்கட்டுரையின் முக்கியத்துவம் இதுதான். மனுநீதி பற்றியெல்லாம் இங்கே ஒற்றைப்படையாக உருவாக்கப்படும் பொதுவான சித்திரங்கள் உண்மை அல்ல என்று அக்கட்டுரை காட்டுகிறது. அதை பிராமணர்கள் மட்டுமே தூக்கிப்பிடிக்கிறார்கள், அது பிராமண ஆதிக்கத்தை மட்டுமே பேசுகிறது என்பதெல்லாம் பொய். உண்மையில் அதன் ஆதரவுத்தளம் பலதரப்பட்டது. அதை அவ்வளவு எளிதாக புறந்தள்ளவோ ஒரே வீச்சில் இன்னாருடையது என்று சொல்லிவிடவோ முடியாது. அதை இந்தியா அன்றும் இன்றும் மாறுபட்ட கோணங்களில், மாறுபட்ட வடிவங்களில் எதிர்கொண்டபடியேதான் உள்ளது. அந்தியூர் மணி அதை சிறந்த மொழியில் எழுதியிருக்கிறார்

எம்.ஆர்.சந்திரசேகர்

***

அன்புள்ள ஜெ

அந்தியூர் மணியின் கட்டுரை மிகமுக்கியமான ஒன்று. வழக்கமாக மனுநீதியின்  ஆதரவாளர்கள் மனுநீதியை பற்றிய விமர்சனம் வரும்போது அதில் மனு பெண்களைப்பற்றி புகழ்ந்து சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டுவார்கள். அனைத்து மக்களின் நலங்களும் பேணப்படவேண்டும் என்று சொல்லியிருப்பதை எடுத்து காட்டுவார்கள். அதை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, அதை உதிரிவரிகளாகவே சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பாவை அரிதினும் அரிது

நீங்கள் முன்வைத்த ஒட்டுமொத்தப்பார்வைக்கு நேர் எதிரான ஒட்டுமொத்தப்பார்வையை முன்வைப்பதனால்தான் அந்தியூர் மணியின் கட்டுரை முக்கியமானது என்று நினைக்கிறேன். அவர் மனுநீதியின் எந்த ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்தவில்லை. அதெல்லாம் இன்று தேவை என்றும் சொல்லவில்லை. ஆனால் அதை இன்று நாம் அமர்ந்து பார்க்கும் பார்வையானது ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது, ஆகவே அது முழுமையானது அல்ல என்றுதான் சொல்கிறார்.

அவர் சொன்னதை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்

அ.மனுநீதி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் மேலிருந்து தொகுத்து ஆணையிடும் ஒரு சட்டத்தொகுப்பு அல்ல. அப்படி அது எப்போதுமே இருந்ததில்லை. அது ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு குலக்குழுவுக்கும் நெறிகளை பரிந்துரைசெய்யும் ஒரு தொன்மையான நெறிநூல், அவ்வளவுதான்

ஆ. மனுநீதி சமூகத்தை பகுக்கவில்லை. அடுக்கவுமில்லை. அது ஏற்கனவே இருந்த பகுப்பு, அடுக்குமுறை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றுக்கிடையேயான உறவுகளை வகுத்தளிக்கிறது. ஆகவே இந்தியாவில் உருவாகி நிலைநின்ற சாதிய அடுக்குமுறைக்கு மனுநீதியே காரணம் என்பது சரியானது அல்ல. மனுநீதி இல்லாத இடங்களிலும் அந்த அடுக்குமுறைதான் இருந்தது

இ.மார்க்ஸியர்கள் சொல்வதுபோல மேலே மேலே அடுக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாக இந்தியா இருந்ததில்லை. அந்தப்பார்வையே தவறானது. ஐரோப்பா அப்ப்டி இருந்திருக்கலம. இந்தியாவில் பக்கவாட்டில் அடுக்கப்பட்ட, நெகிழ்வான தொழிற்குழுக்கள்தான் இருந்தன. அவை இணைந்தும் பிரிந்தும் செயல்பட்டன. ஒருவர்மேல் ஒருவர் என்று இங்கே உள்ள அமைப்பு இருக்கவில்லை

ஈ.மனுநீதியை குற்றம்சாட்டி இங்கே 97 சதவீதம்பேரும் அடிமைகளாக இருந்தார்கள் என்று சொல்வது அபத்தம். நடைமுறையில் எல்லா தொழிற்குழுக்களுக்கும் சாதிகளுக்கும் அவர்களுக்கான அதிகாரமும் சுதந்திரமும் இருந்தது. இதைமேலைநாட்டு அடிமைமுறையுடன் ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு தொழிற்குழுவும் எதிர்ப்பு தெரிவித்து விலகிச்சென்ற வரலாறுகளெல்லாம் பதிவாகி நமக்கு கிடைக்கின்றன

ஈ. மனு ஒரு காலகட்டத்தின் நீதி. இன்றைய நீதி அதை கடந்துவிட்டது. இன்னமும் அதைச் சுட்டிக்காட்டி அதனால் ஒடுக்கப்பட்டவர்களாக தங்களை முன்வைத்து முறையிடுவதென்பது இன்றைய ஆதிக்கத்துக்கான வழியாகவே கடைப்பிடிக்கப்படுகிறது

உ. மனுநீதி இன்று வேண்டும் என்பவர்கள் மனு அளிக்கும் முன்னுரிமைகளை மட்டுமே கோருகிறார்கள். மனு விதிக்கும் கடமைகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். மூன்றுவேளை அக்னிகார்யம் செய்யாதவன் பிராமணனாகிய நான் உயர்ந்தவன் என்று சொன்னால் அது மனுவின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றம்

ஆணித்தரமாக தன் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்துக்களுக்கு இனி ஒரு முக்கியத்துவம் உண்டு என நினைக்கிறேன்

ஆர்.ஸ்ரீனிவாஸ்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு- சுருக்கமான மதிப்பீடுகள்
அடுத்த கட்டுரைஅழகிய நம்பி- கடிதங்கள்