சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – கடலூர் சீனு

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு
சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்

உலக அளவில் குட்டிக்கதைகளில்  இருந்து முகிழ்த்து கதைகள் என வளர்ந்து கிடைத்தது சிறுகதை எனும் செவ்வியல் வடிவம். அந்த வடிவத்தின் மீது அழகியல் போக்குகள் உள்ளிட்ட இலக்கியத்தின்இன்னபிற விஷயங்கள்

கூடி முயங்கி சிறுகதைகள்  இன்றளவும் மொழியின் இணையற்ற கலைவெளிப்பாட்டு வடிவமாகி நிற்கிறது.

மொழியில் படைப்புத் திறனின் கடைசி குழந்தை சிறுகதைதான் என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுவார்.   இந்தக் கடைசி குழந்தை எனும் இடத்தை எடுத்துக் கொள்ள எப்போதும் போட்டியில் குறுங்கதைகள் வந்து நிற்கும். குட்டிக் கதைகள் என்பதின் மறுஉருவாக்கம்.

சித்தரிப்புகள் இன்றி, எது சிறுகதை வளர்ந்து சென்று  தைக்கும் தருணமோ, அல்லது தருண மாற்றமோ அதை நேரடியாக தொட்டுத் திறக்கும் வடிவம் என குறுங்கதை வடிவத்தை (மிகப் பொதுவாக) வரையறை செய்யலாம்.  இந்த வடிவத்தை காப்கா தீவிரக் கலை நோக்கியும், ஜான் ஆப்டெக் கேளிக்கை கலை நோக்கியும் பிரயோகிக்க,ஆப்டெக் வழியில் தமிழில் சுஜாதா போன்றோரும் , காப்காவின் வழியில் தமிழில் கே என் செந்தில், இளங்கோ கிருஷ்ணன், போகன் போன்றோரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

குறுங்கதை என்று சொல்லும்போது அதன் வடிவம் எப்படி அதன் பலமோ, அது போலவே அதன் பலவீனமும் அதன் வடிவம்தான் என்று தோன்றுகிறது. இந்த வடிவ தேர்ச்சி சுஜாதா வழிக்கு மிக அணுக்கமானது. இந்த வடிவத்தின் மீதான தேர்ச்சி லா சா ரா வை என்னவாக மாற்றும்?  சுந்தர ராமசாமிக்கு பலமாக இருக்கும் இந்த வடிவம் ஜெயகாந்தனுக்கு பலவீனமாக மாறிவிடக் கூடும்.

சிறுகதை எனும் வகைமையில் கு அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, தி ஜானகிராமன்,  போல முன்னோடிகள் ஒவ்வொருவரும் பத்து நல்ல சிறுகதைகள் எழுதி இருக்கிறார்கள் என்பதை போல, குறுங்கதை வடிவம் என்பதை நிபந்தனையாக வைத்தால், எது மேற்சொன்ன படைப்பாளிகளை இலக்கிய முன்னோடிகள் என  கொண்டு சேர்த்ததோ அந்த அம்சம், அதே முழுமைப் பரிமாணத்துடன் இந்த குறுங்கதைகள் எனும் வடிவத்துக்குள் தொழில்படுமா?

இத்தகு கேள்விகளின் தொடர் வழியாக, இன்று தொடர்ந்து ஒவ்வொரு சிறுகதையாசிரியரும் எழுதும்  அவர்களின்  அழகியல் பார்வை கொண்ட தனித்துவமான குறுங்கதைகளின் நிறை வந்த பிறகு அவற்றை விமர்சன  மதிப்பிட்ட பிறகே இந்த குறுங்கதை வடிவங்களின் இலக்கிய இடம் துலங்கி வரும்.

இந்த வடிவமன்றி வேறு எவ்வகையிலும் இதைக் கூறி விட முடியாது எனும் வகையில் அமைந்த தனித்துவம் கொண்ட வெளிப்பாட்டு தருணம், படைப்பில்அந்த படைப்பாளியின்  பெர்சனாலிட்டி எதுவோ  அது அவ்வாறே வெளிப்படும் உடல். இப்போதைக்கு இந்த உருவ உள்ளடக்க வரையறையை தீவிர இலக்கியத்தளத்தின் குறுங்கதைகளுக்கு ஒரு குறைந்த பட்ச நிபந்தனையாக விதித்துக் கொண்டு இந்தக் கலை வடிவத்தை அணுகிப் பார்க்கலாம்.

அந்த வகையில், இந்த கரோனா சூழலின் இருளுக்கு எதிரான ஒளியாக புனைவுகள் பொங்கிய தருணத்தில், குறுங்கதைகள் எனும் வடிவத்தை தேர்ந்து எழுதத் துவங்கினார் சுரேஷ்குமார் இந்திரஜித். கிட்ட தட்ட எழுபது கதைகள் என நினைக்கிறேன். பின்னணிப் பாடகர் எனும் தலைப்பில் நூல் வடிவம் கண்ட அந்த குறுங்கதைகளின் தொகுதியில் முதல் ஐம்பது கதை உயிர்மை தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

இந்திரஜித் தேர்ந்துகொண்ட மினிமலிஸ்ட் அழகியலுக்கு மிக அணுக்கமான வடிவம். அவரது தனித்துவமான  க்ஷணம் தோறும் மாறும் நிலைகளை அதன் தருணங்களை அந்த மையத்திலேயே சென்று தொட ஏற்ற வடிவம்.  தனிமை, அபகரிப்பு, மடம் போன்ற மிக மிக சாதாரண எந்த தனித்துவமும் அற்ற குட்டிக் கதைகள் சில இந்த வரிசையில் இருப்பினும்,  பின்னணிப் பாடகர், காற்றினிலே வரும் கீதம், ஜன்னல், வசந்தா, படியேறி வரும் சத்தம் போல எது சுரேஷ் குமாரஇந்திரஜித்தோ அது அவ்வாறே வந்த கதைகள்தான் பெரும்பாலும். அந்த வகையில் பின்னணிப் பாடகர் குறுங்கதைகள் தொகுதி முக்கியமானது.

என்னளவில் மூன்று கதைகள் மிகவும் முக்கியத்துவம் கொண்ட கதை, ஒன்று அவர்கள் சினிமாவுக்குப் போகிறார்கள் எனும் கதை. இரண்டு இளவரசி கண்ட வாள் போர். இந்த இரண்டு குறுங்கதைகளும் ஆண் பெண் இடையேயான உளவியல் ஆட்டத்தின் ஆழம் தொட்ட கதைகள். மூன்றாவது கதை நினைவுக் கிடங்கு. முற்றிலும் தனித்துவம் கொண்ட வாசிப்பு அனுபவம் நல்கும் கதை.  எழுபது வயது முதியவரின் நினைவில் ஆழத்திலிருந்து எழும் அவர் நிகழ்த்திய கீழ்மைகளின் குமிழிகள். அவர் நிகழ்த்திய கீழ்மை எது என்று கதைக்குள் சொல்லப்படுவதில்லை. வாசகன் இதுவோ அதுவோ என வித வித கீழ்மைகளை கதையின் குறிப்புகள் கொண்டு யூகிக்கிறான். ஒரு மர்மத் தருணத்தில் அவனது அக ஆழத்திலிருந்து கீழ்மைகளின் தொடர்வரிசை பெருகிப் பெருகி வருவதை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்து ஸ்தம்பிக்கிறான். இந்தக் குறுங்கதை எனும் வடிவம் வழியாக மட்டுமே, எது சுரேஷ் குமார இந்திரஜித் எனும் கதையாளுமையோ அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த கலை வெற்றி இந்த குறுங்கதை.

பல்வேறு களங்களில் நின்று  மனித மன விசித்திர தருணத்தை தீண்டிப் பார்க்கும் முக்கியமான  குறுங்கதைகள்.

https://thahirs.com/author/sureshkumaraindrajith/page/3/

கடலூர் சீனு

சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்

சுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்

முந்தைய கட்டுரைவெ. சாமிநாத சர்மாவின் பர்மா
அடுத்த கட்டுரைஅழகியநம்பியின் நகரில்