தல்ஸ்தோய் மலர்

தமிழினி இணைய இதழ் தல்ஸ்தோய் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. தமிழில் இக்காலகட்டத்தில் தல்ஸ்தோய் பற்றிய ஓர் உரையாடல் தொடங்குவது மிகவும் முக்கியமான ஒன்று. தல்ஸ்தோய் உத்திச்சோதனைகள், வடிவத்திருகல்கள் இல்லாத படைப்பாளி. அப்பட்டமான நேரடியான புனைவுமுறை கொண்டவர். ஆனால் வாசிப்பவன் உள்நுழையும்தோறும் விரிந்து வாழ்வென்றே ஆகும் புனைவுலகு அவருடையது. ஆகவேதான் நாம் சிக்கலான, சிடுக்கான படைப்புகளினூடாக ஒரு நெடும்பயணத்தை முடித்தபின்னர் மீண்டும் அவருக்கு திரும்புகிறோம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் எளியவாசகர்கள் அக்காலகட்டத்திற்குரிய சில வடிவச்சோதனைகளை இலக்கியத்தின் முன்னகர்வு என எண்ணிக்கொள்கிறார்கள். இலக்கியமென்பது புதிரவிழ்ப்பு மட்டுமே என நம்பும் அழகுணர்வோ அகக்கனிவோ அற்ற அறிவுஜீவிகளும் எப்போதுமுண்டு. அவர்கள் நமக்களிக்கும் சோர்விலிருந்து மீள்வதற்கு நாம் நீராடவேண்டிய பேராறு தல்ஸ்தோயின் புனைவுலகு. நூறாண்டுகளாக அது அவ்வண்ணமே நிலைகொள்கிறது. இன்றைய தமிழ்ச்சூழலுக்கு தல்ஸ்தோய் மீண்டும் தேவையாவது அதனால்தான்

இன்றைய மோஸ்தர்களை தேடிச்செல்லாமல், என்றுமுள ஒன்றை நோக்கி திரும்பியமைக்கு தமிழினிக்கு நன்றி சொல்லவேண்டும். மிகமிக கவனமாகவும் உழைப்புடனும் தொகுக்கப்பட்டுள்ளது தமிழினியின் தல்ஸ்தோய் சிறப்பிதழ். ஊடுகுறிப்புகள், இணைப்புகள் ஆகியவற்றுடன் ஒரு முடிவிலா வாசிப்பை அளிக்கிறது. கட்டுரைகளில் தல்ஸ்தோய் மீதான சமகால ஐயங்களும் மறுப்புகளும்கூட பதிவாகியிருக்கின்றன. ஆசிரியர்குழு பாராட்டுக்குரியது

ஜெ

தமிழினியின் இருபத்து ஐந்தாவது மின்னிதழை சிறப்பிதழாக வெளியிடும் திட்டமிருந்தது. யாரைச் சிறப்பிப்பது என்பதில் மாற்றுக்கருத்தே எழவில்லை. இலத்தீன் அமெரிக்க எழுத்துகளும் வடமேற்கு ஆப்பிரிக்க எழுத்துகளும் கோலோச்சிக்கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்ச்சூழலில் ‘required reading’ குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டிருக்கிறது என்பதாலும் தஸ்தாயேவ்ஸ்கி அளவுக்குக்கூட தல்ஸ்தோய் மீது கவனம் குவியவில்லை என்பதாலும் அந்த இலக்கிய மாமேதைக்கு என்னால் இயன்ற காணிக்கையாக இவ்விதழ் வெளியாகிறது. இதழ் வெளியாகும் இன்றைய தினம் தல்ஸ்தோயின் நூற்றிப் பத்தாவது நினைவுநாளுடன் ஒத்திசைந்திருப்பது தற்செயலானதே.

தமிழினி தல்ஸ்தோய் சிறப்பிதழ்- ஆசிரியர் குறிப்பு

தமிழினி நவம்பர் இதழ் தல்ஸ்தோய் சிறப்பிதழில் நான் எழுதிய ’தல்ஸ்தோய் மனிதநேயரா?’ என்ற நீண்ட கட்டுரையும், பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் பகுதியாக வெளிவந்த மனிதர்களும் புனிதர்களும் என்ற நாடகமும் பிரசுரிக்கப்பட்டுள்ளன

தல்ஸ்தோய் மனிதநேயரா?
புனிதர்களும் மனிதர்களும்
முந்தைய கட்டுரைபண்பாடு- கேரளம்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமாமலர்-நடைபிணம்