கல்மரப்பெருமாள்

வேல்நெடுங்கண்ணி

இனிய ஜெயம்

நேற்று மாலை நண்பருடன் கடலூர் துறைமுகத்தில் துவங்கி பரங்கிப்பேட்டை வரை நீளும் கடற்கரை ஒர சுனாமி சாலையில் ஒரு மழைப்பயணம்.  இந்த மழைக் காலம்  கடலூர் சுற்றி பெய்யும் மழை, கடலூரில் மட்டும் பொழிவதில்லை என்று எதோ ஒரு முடிவில் இருந்தது.

தீபாவளிக்கு முந்திய மாலை அரசு ஆரஞ் அலர்ட் அறிவித்த மழை அதிசயமாக கடலூரிலும் பெய்தது. தீபாவளிக்கு மறுநாளும் சாரல் தொடர, சாரல் மழையில் கடற்கரை ஓரம் ஒரு சிறிய உலா போவது என முடிவானது.

நண்பருக்கும் பூர்வீகம் கடலூர் துறைமுகம்தான், ஆனால் மிக சிறு வயதிலேயே அங்கிருந்து புலம் பெயர்ந்து விட்டார்.  அவருக்கும் ot இப்போ எப்படி இருக்கு என்று பார்க்க ஒரு விருப்பம்.ot எனில் old town .  பக்கிங்ஹாம் கால்வாய்களின் கிளை கால்வாய்கள் விழுப்புரம் வரை தொடர்வ. அவை இருந்த தடங்கள் மொத்தமும் மறைந்து போய்,எஞ்சும்  சிலவற்றில் ஒன்று இன்னும் கடலூரில் உள்ளது . அதன் மேல் இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் ஸ்டூவர்ட் பாலம் 1889 வருடத்தியது.

அதன் மேல் ஏறி இறங்கி இடதுபுறம் திரும்பி விரைந்தால் லாஞ்சடி பாலம். அருகே தமிழ்நாட்டில் பிரிட்டானியரின் முதல் கோட்டைகளில் ஒன்றாகிய செயின்ட் டேவிட் கோட்டை. ( ஆனந்தரங்க பிள்ளை  நாட்குறிப்பில் பரங்கிப் பேட்டையில் அராஜகம் செய்யும் மராட்டிய குதிரை கொள்ளையர்களை குறித்து இந்த கோட்டை வீரர்களுக்கு அவர் தகவல் தரும் சித்திரம் உண்டு) தற்போது eid parry நிறுவனத்தின் குடோன் அது. அருகே தமிழ் நாட்டின் முதல் முதலாக வந்த மிஷனரி பள்ளிகளில் ஒன்றான செயின்ட் டெவிட் பள்ளி.

லாஞ்சடி பாலத்தின் கீழே, தமிழ் நாட்டின் முதல் sbi வங்கியின் பிரும்மாண்ட பாழடைந்த கட்டிடம். 1806 இல் கல்கத்தா வங்கி என்ற பேரில் துவங்கிய sbi, பாரத் இம்பீரியல் வங்கி என்ற பெயர் மாற்றத்துடன் தமிழ்நிலத்தில் துவங்கிய கிளை. லாஞ்சடி பாலம் கடலூர் துறைமுக பகுதியை இடை வெட்டும்  உப்பனாறு கடந்து தைக்கால் தோணித்துறை துறைமுகம் கலங்கரை விளக்கு  பகுதியை இணைப்பது. இந்த உப்பனாரு வழியே, துறைமுக சரக்குகள், கிளை கால்வாய் வழியே சென்று புக்கிங்ஹாம் கால்வாயில் இணைந்து , படகு வழியாகவே  சென்னை ஆந்திரா வரை செல்லும்.

அந்தத் தடங்கள் கண்டபடி, சாரல் மழையில் கலங்கரை விளக்கு தாண்டி கடற்கரை ஒர கிராமங்களை இணைக்கும் சுனாமி சாலையில் மெல்ல விரைந்தோம். கடந்த ஆறு ஏழு வருடங்களாகவே தாழங்குடா எனும் மீனவ கிராமம் துவங்கி, பரங்கி பேட்டை வரை, சிறுவலை, பெருவலை சார்ந்தும் , ஃபைபர் படகு . கட்டுமரம் , லான்ஜ் இந்த மூன்று படகுகள் சார்ந்தும், கடலுள்  மீன்பிடி எல்லைகள் சார்ந்தும் அவ்வப்போது கிராமங்கள் இடையே தகராறு, வெட்டு குத்து, வலைகள் படகுகள் நாசம் என ஏதேதோ நடந்து வருகிறது.

கடல் சீற்றம். எவரும் கடலுக்குள் செல்லவில்லை. பண்டிகை முடிவுநாள். வெட்டி தகராறு கோஷ்டிகள் ஆங்காங்கே சரக்கு பாட்டில் கஞ்சா சகிதம்  கண்ணில் பட்டன. கரையோர கிராமங்களில் தென்படும் வெட்டிவேர் விவசாயம் பூச்சி விழுந்து கடந்த இரு வருடமும் கடும் நஷ்டம். பரங்கிப்பேட்டை வரை கண்ணில் தென்படும் மணல்தேரிகள்  ஐந்தில் ஒரு பாகமாக குறைந்து விட்டன.

உறுமும் கடலோசையை கேட்டபடியே சாரல் மழையில் ஒரு கிராமத்தில் ஒதுங்கினோம். சிதம்பரம் கடலூர் சாலையில் செம்மாங்குப்பம் எனும் நிறுத்த்தில் இறங்கினால் உள்ளே ஐந்து கிலோ மீட்டரில் இந்த கிராமம் வரலாம். கிராமத்தின் பெயர் சித்திரப்பேட்டை.  கடலோர கிராமம். அங்கே ஆலமர பின்னணியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஒரு பெரியவளாகத்தில் ஒரு கோவில்.

அருகே தாமரைகள் கொடிகள் மண்டிய குளம். அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு கோவில் சென்று பார்த்தோம். கீர்த்திமுக தோரணத்தின் இருபுறமும் சக்கரமும் சங்கும். கீர்த்திமுகம் மேலே நாமம். மையத்தில் ஆறடி உயரத்தில் குத்துக் கல். அதுதான் மூர்த்தி. அதுதான் கோவில். பல்லாயிரம் வருட பண்பாடு இந்த குத்துக்கல் வழிபாடு. சில இடங்களில் சிகப்புஉடை சுற்றி, குங்குமத்தில் குளித்த குத்துக்கல் கண்டிருக்கிறேன். வைணவ அடையாளம் பெற்ற முதல் குத்துக் கல்லை இப்போதுதான் காண்கிறேன்.

அக் கோவிலின் உள்ளூர் பூசாரி வந்தார். (அநேகமாக வன்னியர்) அவர் சொன்னது மற்றொரு ஆச்சர்யம். அது குத்துக் கல் அல்ல, கல்மரம்.  திருவக்கரை வரை நீளும் புவியியல் அதிசயங்களில் ஒன்று. பல லட்சம் வயது கொண்டது. கல்மரத்தில் இருந்த நாமம் போன்ற தடம் வழியே இம்மரம்  பெருமாள் ஆகி விட்டது. மொபைலை இயக்கி கல்மரம் எப்படி உருவாகிறது, அதன் வயது என்ன என நண்பருக்கு காட்டினேன்.திகைத்து வாய் பிளந்துவிட்டார்.

சற்று நேரம் கோவில் வளாக ஆலமரத்தின் கீழ் திண்டில் அமர்ந்து குளத்தில் மழை தளதளப்பதை பார்த்திருந்தது விட்டு கிளம்பினோம். அடுத்த கிராமம் திருச்சோபுரம். அது குறித்து உங்களுக்கு முன்பே கடிதம் எழுதி இருக்கிறேன். வேல்நெடுங்கண்ணி. அங்கே சென்று கிராமம் வழியே சிதம்பரம் கடலூர் மெயின் ரோட்டுக்கு வந்து கடலூர் திரும்பினோம். வழியெங்கும் நின்ற நெடுங்கல் பெருமாளே நினைவில் நிறைந்தார். அம்மோனைட் எனும் ஃபாசில் களில் விஷ்ணு ரூபத்தைக் கண்டு வணங்கும் சாளக்கிராம வழிபாடு போல், கல் மரத்தில் விஷ்ணுவைக் கண்டு இங்கே ஒரு வழிபாடு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த கல்மரக் கடவுளே இங்கே நின்ற நெடுமால். இவர் பெருமாளா என்று பூரி ஜெகந்நாதரை முதன் முதலாக கண்ட போது அடைந்த அதிர்ச்சிக்கு இணையானது, இன்று இந்தப் பெருமாளைக் கண்டு அடைந்த அதிர்ச்சி.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகனசியாம யோகம்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர்கள் மீதான காழ்ப்பு- கடிதங்கள்