எழுத்தாளர்கள் மீதான காழ்ப்பு- கடிதங்கள்

அரசியலும் எழுத்தாளனும்

அன்புள்ள ஜெ

நான் இணையத்தில் உலவும்போது பார்க்கும் ஒரு விஷயம் ஏன் எழுத்தாளர்கள் மேல் இந்த காழ்ப்பு என்பதுதான். ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி எழுத்தாளர்களை தாக்கவேண்டும், கொல்லவேண்டும் என்ற குரல் இங்கே இருந்துகொண்டே இருக்கிறது. மிகத்தீவிரமாக இந்தக் காழ்ப்பு திமுக, இந்துத்துவா இரு தரப்பிலிருந்தும்தான் எழுந்துகொண்டிருக்கிறது.

இன்னமும் சுஜாதா, ஜெயகாந்தன், சுரா, பாலகுமாரன், ஜெயமோகன், சாநி, ஞானினு உருளும் தமிழ் சந்து இலக்கிய முட்டாள்கள் இனியாவது புரிஞ்சிக்கோங்கயா. தமிழ் இலக்கிய உலக கோமாளிகளை மிதிக்காம விட்டதன் விளைவாக எப்பவும் இப்படி பார்ப்பன போக்கோடு பேசிட்டு சுத்துறானுக.

இது ஒரு டிவிட். இதிலிருக்கும் இதே வரியை இதே காழ்ப்புடன் எழுதும் பலபேர் இருக்கிறார்கள். அடிமட்ட திமுக, இந்துத்துவர்கள் முதல் மேலே உள்ள பொறுப்பானவர்கள் வரை. அரவிந்தன் நீலகண்டனின் அதே காழ்ப்பை அப்படியே நாம் கல்வெட்டு என்றபேரில் எழுதும் எழுத்தாளரிடமும் காணலாம்

எனக்கு இந்தக் காழ்ப்பு புரியவில்லை. ஆனால் தமிழ் இந்துவில் எழுதியவரும் இந்த காழ்ப்பின் இன்னொரு முகத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று புரிந்தது. நீங்கள் எழுதிய குறிப்பில் எழுத்தாளர்கள் ஏதோ ஒருவகை ஒவ்வாமையால்தான் எழுதுகிறார்கள் என்ற வரி தெளிவை அளித்தது

பிரேம்குமார் ஜி

அன்புள்ள ஜெ

எழுத்தாளர்கள் மீதான காழ்ப்பு பற்றி படித்தேன். நாஞ்சில்நாடனை பற்றிய ஒரு காழ்ப்புக்கட்டுரையை வெளியிடும் தமிழ் ஹிந்து அவரைப்பற்றியோ அவருடைய நாவல்களைப் பற்றியோ செய்தி வெளியிட்டதில்லை. அவர்களுக்கு நாஞ்சில்நாடன் மீதான காழ்ப்புதான் செய்தியாக தெரிகிறது. இவர்களின் அணுகுமுறை ஏன் இப்படி இருக்கிறது என்றால் இதற்குத்தான் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். நாஞ்சில்நாடன் வாசகர் சொற்பபேர்தான். திமுக ஆதரவாளர்கள் பல ஆயிரம். ஆகவே நாஞ்சில்நாடனை அவர்கள் முன் போட்டு தாக்குவது நல்ல வணிக உத்தி

ஜெயக்குமார் அரவிந்தன்

அன்புள்ள ஜெ

தமிழில் எழுத்தாளர்கள் மேல் கவனமே இல்லாமல் இருந்தது. கவனம் வந்ததுமே பலமடங்கு வன்மம் உருவாகிவிட்டது. இதுவே தமிழ் எழுத்தாளன் சரியான பாதையில் செல்கிறான் என்பதற்கான ஆதாரம். எந்த எழுத்தாளன் இந்த அற்பர்களின் கூட்டான காழ்ப்புக்கு ஆளாகிறானோ அவன்தான் எழுத்தாளன். இவர்களால் போற்றப்படுபவன் எழுத்தாளனே அல்ல

மகேஷ் அருண்

முந்தைய கட்டுரைகல்மரப்பெருமாள்
அடுத்த கட்டுரைசொல்லும் எழுத்தும்