சிறுகுமிழியின் ஒளி

வெண்முரசின் நாவல் நிரையில் நான் எழுத எண்ணும்போதே தயங்கி சொல்பின்னெடுத்த நாவல் இதுதான், கிருஷ்ணனின் மறைவுவரை செல்லும் கல்பொருசிறுநுரை. இந்த இருபத்தைந்தாயிரம் பக்கங்களில் திரட்டி எடுக்கப்பட்ட பேராளுமை. அவன் சொல்லே, இந்நாவலின் சுடர்.

ஆனால் அவனுடைய குலச்சரிவை, குடியழிவை, நகர்மறைவை, அவன் அகல்வை புராணங்கள் சொல்லத்தான் செய்கின்றன. அது ஊழ் என்பதனால், பிரம்மவடிவானவனும் அதற்கு கட்டுப்பட்டவனே என்பதனால்.

மகாபாரதம் சொல்லும் நெறிகளில் முதன்மையானது என்னவென்றால் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒரு  துலாத்தட்டில் உள்ளன என்பதே. ஒன்று பிறிதொன்றை நிலைநிறுத்துகிறது, ஒன்றின் நிலையழிவு பிறிதொன்றை நிலையழியச் செய்கிறது.

மகாபாரதப் பெரும்போரில் மாபெரும் குடியழிவை உருவாக்கியவன் அதற்கான விலையை தான் கொடுப்பதன் சித்திரம் இது. கொடுக்கவேண்டுமென அவன் அறிந்திருந்தான், அவனே அதை தரிசனம் என முன்வைத்தவன். ஆகவே அவன் அதை அளித்தான்.

அவன் கண்முன் மறைந்தன எல்லாம். அவன் துயருற்றிருப்பானா? துயர் அவனுக்கு உண்டா? இருந்திருக்கலாம், பெருந்தந்தையர் துயர்கொண்டவர்கள். ஆனால் அவன் அதற்கும் அப்பால். துளிகளை, அலையை கடலை மட்டுமல்ல புவியை ஒரு துளியெனக் காணும் தொலைவு திகழும் பார்வை கொண்டவன். அவனுக்கு கல்பொருசிறுநுரைக் குமிழிதான் அவனேகூட.

எழுத எண்ணியபோது வந்தமைந்த கல்பொருசிறுநுரை என்னும் சொல் என்னை ஊக்கியது. அச்சொல்லைப் பற்றிக்கொண்டே இதை எழுதிமுடித்தேன். இதன் முழுமை நிகழ்ந்தபோது வெண்முரசிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டேன்.

திருவண்ணாமலையில் ஒரு பிச்சைக்காரனாக அமர்ந்து இன்னொரு பிச்சைக்காரராக யோகி ராம்சுரத்குமாரைக் கண்டிருக்கிறேன். பின்னர் அவருடன் உரையாடியிருக்கிறேன். அவர் ஒரு தொன்மம் என மறைந்தபின் நினைவுகூர்கையில் மேலும் அணுகியிருக்கிறேன்.

யோகிக்கு இந்நூல் காணிக்கை

ஜெ

வழிப்போக்கர்கள்

யோகியும் மூடனும்

முந்தைய கட்டுரைஎழுத்தாளனின் பார்வை
அடுத்த கட்டுரைபுதிய கவிஞர்கள்-கடிதம்