மௌன நகைச்சுவை

இனிய ஜெயம்

என்  பால்யத்தில் கார்டூனில் யாரோ யாரையோ போட்டு அடிப்பதுதான் நகைச்சுவையாக அறிமுகம் ஆனது, (இப்போதும் தமிழ் டப்பிங் கார்டூனில் யாராவது யாரையோ போட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்).  மொத்த தமிழ் நிலமே கவுண்ட மணி வசம் உதை வாங்கும் செந்தில் நகைச்சுவைக்கு அடிமையாக இருந்தது. பின்னர் வடிவேலு வந்து அடி வாங்கினார்.

இந்த வரிசையில் ஒருவராகத்தான் சார்லி சாப்ளினும் எனக்கு அறிமுகம் ஆனார். காலங்கள் கடக்க மற்ற நகைச்சுவைகள் மங்கி, ( இந்த எழவுல என்ன இருக்குன்னு அன்னிக்கு அப்டி சிரிப்பு வந்துது தெர்லயே) சார்லி சாப்ளின் மட்டும் மேலும் மேலும் துலங்கி வந்தார். சர்க்கஸ் திரைப்படத்தில் இறுதியில் வெற்று மைதானத்தில் சாப்ளின் தனியே நின்றிருக்கும் காட்சி, மொத்த படத்தின் பின்புலம் வழியே, இப்போதும் பார்த்தாலும் உணர்வெழுச்சி கொண்ட வெறுமையில் தள்ளி, தொண்டை வரள செய்வது.

மிகப் பின்னால் ருஷ்யா ஜெர்மன் என மௌன சினிமா யுகத்தின் சாதனை படங்கள் எல்லாம் பார்த்த பின்னரும் சார்லி மனதின் வரிசையில் முன்னணியில்தான் இருந்தார்.  சாப்ளின் துவங்கிய இந்த மௌன யுகத்தின் நகைச்சுவை வீச்சை, (குறிப்பாக அதன் ஸ்டண்ட்கள்)பஸ்டர்  கீட்டன் இன்னமும் ஆழமும் அகலமும் நுட்பமும் கொண்டதாக மாற்றினார்.

இந்தப் படங்களின் மௌனம் அளித்த சர்வதேச தன்மையை, பின்னர் படங்கள் பேசத் துவங்கியதும் மெல்ல மெல்ல இழந்து பிராந்திய தன்மை கொண்ட நகைச்சுவை படங்களின் வரிசை உருவானது. இதே துவக்கம் தொலைக்காட்சிப் புரட்சியின் போதும் நிகழ்ந்தது. தொலைக்காட்சியை நிறைக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சர்வதேச தன்மை கொண்ட நகைச்சுவைகள் மீண்டும் துளிர்த்தது. (அதில் டாம் அண்ட் ஜெரி இப்போதும் ஹிட்) எண்பதுகளின் தொடரில், கருப்பு வெள்ளை தொலைக்காட்சி வந்தது. கொடைக்கானல் ஒளிபரப்பு வழியே, இரண்டாம் சானல் என்ற ஒன்று அலை அலையாக தெரியும், அப்படித் தெரிய மொட்டை மாடியில் ஒரு குழுவே, ஆண்டனாவை கல்வாரி மலையில் ஏசு சுமக்கும் சிலுவை போல சுமந்து, அலைவரிசை கிடைக்கும் இடத்தை தேடிக்கொண்டிருக்கும். அப்போது didi முடிவற்ற அபத்தம் எனும் ஜெர்மானிய மௌன நகைச்சுவை தொடர் சனிக் கிழமை காலை ஒளிபரப்பாகும். அதை தேடி தேடி பார்ப்போம். வளர வளர நகைச்சுவைகள் அதன் வகைப்பாடுகள் நிறைய இருப்பினும், மௌனமாக நிகழும் இந்த நகைச்சுவை மேல் இருந்த மோகம் அவ்வாறே நீடித்தது.

கமலின் பேசும் படம் இதே மௌன நகைச்சுவை வழியே முயன்று பார்த்த ஒரு சர்வதேச முயற்சி.  தமிழில் பொதுச் சூழலில்  இத்தகு நகைச்சுவைகளை ரசிக்கும் நிலை அன்றும் இன்றும் குறைவுதான் என்று நினைக்கிறேன். சொன்னதையே திரும்ப சொல்லி, அப்படி சொல்லும்போது ரொய்ய்ய்ங் என்று பின்னால் ஓசை எழ வேண்டும். அப்போதுதான் இங்கே அதை சிரிப்பு வர வைக்கும் காட்சி என்று நம்புவார்கள். மூன்றாம் முறை இக் காட்சிக்கு சிரிப்பார்கள். கமலின் பல நகைச்சுவை படங்கள், அரங்கை விட தொலைகாட்சியில் ஹிட் ஆக (அடடே இது நகைச்சுவை படமா) இந்த பின்புலமே காரணம்.

இந்த மௌன. நகைச்சுவை வரிசையில் தமிழ் நிலத்தில் மிஸ்டர் பீன் ஹிட். அட்கின்சன் தன்னை மித மிஞ்சிய ‘கோயான்’ ஆக முன்வைத்தது அதற்க்கு காரணமாக இருக்கலாம். இது போன்றவற்றுக்கு வெளியே, மித மிஞ்சிய கோயான்தனங்கள் இன்றி, வலிய உருவாக்கிய முரட்டுத் தருணங்கள் இன்றி, மெல்லிய அபத்தங்கள் வழியே, படைப்பூக்கம் கொண்ட சித்தரிப்புகள் வழியே வெடிச் சிரிப்பாக அன்றி, மனம் இலகு பெறும் புன்னகையை வரவழைக்க செய்யும், நகைச்சுவை துணுக்குகள் காணக் கிடைப்பது அரிதே.

அப்படி ஒரு புன்னகைக்க வைக்கும் மௌன குறும் சித்தரிப்புகள் (இரண்டு நிமிடம்)  அடங்கிய சானல் இது. ஒபேரா,செவ்விந்திய குடிகள் , மத்திய கால போர் சூழல், என வித விதமான களங்கள்.பத்துக்கு  ஆறு பழுதில்லை வகை. அவ்வப்போது ஏதேனும் பார்க்கலாம். சாம்பிளுக்கு ஒரு வரிசை. உங்கள்

பார்வைக்கு. :)

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைநீலம் யோகம்
அடுத்த கட்டுரைஇலக்கியம் செல்லும் வழி-கடிதம்