வெண்முரசும் கனவும்

பெருமதிப்பிற்குரிய  ஆசிரியருக்கு,

வணக்கம் ,

வெண்முரசு உட்பட உங்கள்அனைத்து எழுத்துக்களையும் படித்த உங்கள்வாசகன், உங்களை என் வாழ்வின் முதன்மைஆசிரியராகவே கருதுகிறேன். நான் சி.ஜி.யுங்பற்றியும் அவரது கனவகள் பற்றியகருத்துக்களை குறித்தும் தங்களிடம்  கேட்கஎண்ணுகிறேன். சி.ஜி.யுங் குறித்து நீங்கள் ஓரூசில கட்டுரைகளில் குறிப்பிட்டிருகிறீர்கள்,  அவருடைய  Archetype, images போன்றவற்றை பற்றி நீங்கள் வெண்முரசு பற்றிய பல விளக்கங்களில் குறிப்பிட்டிருகிறீர்கள்.

அவர் கனவுகள் என்பவை  ஆழ்மனம்  மேல் மனதோடு  தொடர்பு  கொள்ளும் வழி (அவர் இதை ‘ஓர் அருவி மேல் கீழ் பகுதிகளை இணைப்பதை போல்’  என அழகிய உவமையால் விளக்குகிறார்) என்றும் கனவுகள் மற்றும் active imagination மூலம் Individuation அடையப்படும் என்கிறார். என் கனவுகளை கவனித்த வரையில் அவை எதையோ தொடர்புறுத்துவது போலவும் உளநிலையில் மாற்றங்களை உருவாக்குவது எனவும் எண்ணுகிறேன். உங்களுடைய இருண்டஞியாறு மற்றும் பல கட்டுரைகளில் இதை சொல்லியிருக்கிறீர்கள்.

வெண்முரசில் பல கதைமாந்தர்களின் கனவுகள் உள்ளன, துச்சாதனன் கொல்லப்படுவதற்கு  முதல் நாள் திரௌபதி குறித்து காணும் கனவு, கௌரவர்கள் அழிவின்  உளவியலையே எனக்கு தெளிவுபடுத்தியது. கனவுகளுக்கு பல பொதுவான குறியீடுகள் இருப்பினும் காண்பவருக்கு அவை என்னவாக  பொருள்படுகின்றன என்பதே  முக்கியம் என யுங் கூறுகிறார்.

நம் தேடலில் கனவுகளை நாம் எந்த அளவு துணை கொள்ளலாம்,  ஒவ்வொரு நாளும் வரும் கனவுகளை கவனித்து அவை குறித்து சிந்திப்பது எந்த அளவுக்கு நம் தேடலுக்கு அவசியம். அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் முக்கியமான நற்றுணையை  இழக்கிறோமா? நேரம் இருப்பின் தெளிவுபடுத்தவும்.

நன்றி

கருணாகரன்.

***

அன்புள்ள கருணாகரன்

கனவுகள் நாம் வாழும் யதார்த்தத்தின் நீட்சிகள் என்று கொள்வதுதான் முதல் பிழை. யதார்த்தத்தில் இருந்து அவை படிமங்களை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. அவை வேறொன்றை முடைகின்றன. இங்குள்ள எந்த யதார்த்தத்தைக்கொண்டும் அதைப் புரிந்துகொள்ள முடியாது. அவ்வாறு சில அடையாளங்களை உருவாக்கலாம், அவை அவற்றுக்கு அப்பால்தான் வேர்கொண்டிருக்கும்

ஜாக்ரத், ஸ்வப்னம் ,சுஷுப்தி, துரியம் என நமக்கு நிலைகள் நான்கு. Conscious, subconscious, Unconscious, Collective unconscious  ஆகிய சொற்களுக்கு நிகரானவையாக அவற்றைச் சொல்லலாம். மேலைச்சிந்தனைக்கு  நமக்கும் என்ன வேறுபாடு என்றால் அவர்கள் ஜாக்ரத்திலிருந்து ஸ்வப்னமும் அதிலிருந்து சுஷிப்தியும் அதிலிருந்து துரியமும் உருவாகியது என நம்புகிறார்கள்

அதாவது மேலே மழை பெய்வது Conscious. ஊற்றுதான்  subconscious. ஆழத்திலிருக்கும் நீர் Unconscious எங்கும் பரவிய நிலத்தடி நீர் Collective unconscious.

ஆனால் நமக்கு அனைத்துக்கும் ஆதாரமாக உள்ள கடல்தான் துரியம். அதிலிருந்தே சுஷுப்தி, அதிலிருந்து ஸ்வப்னம், அதிலிருந்தே ஜாக்ரத்.நேர் தலைகீழ்ப்பாதை.

நம் தியான முறையில் ஸ்வப்னம் என்பது திரும்பி வந்து ஜாக்ரத்தை, விழிப்புநிலையை அல்லது யதார்த்தத்தை உணர்வதற்கானது அல்ல. மேலும் ஆழ்ந்துசென்று அதற்கடுத்த சுஷுப்தியை உணர்வதற்கானது. அதை இங்கே கொண்டுவந்தால் அதற்கு எந்தப்பொருளும் இல்லை.

வெண்முரசில் கனவுகள் விழிப்புநிலையை விளக்கவோ, விழிப்புநிலைக்கு அர்த்தமளிக்கவோ பயன்படுத்தப்படவில்லை. கனவுகள் ஆழ்நிலைகளுக்கு ஆழ்நிலைகடந்த முழுநிலைகளுக்குச் செல்வதற்கான பாதைகளாகவே சொல்லப்பட்டுள்ளன. அதற்கப்பாலுள்ள பெருநிலையின் சாயல்களை தொட அவற்றை கையாள முயல்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைஅள்ளிப் பதுக்கும் பண்பாடு
அடுத்த கட்டுரைகொற்றவை- கடிதம்