முரளி,

 

நீங்கள் சொல்வது ஓரளவுதான் உண்மை. ஒரு படைப்பாளியை நாம் சிலசமயம் கடந்துசெல்கிறோம். சிறுவயதில் நாம் வாசித்த ஒரு ஆக்கம் பின்னர் நம்மை அவ்வாறு கவராமல் ஆகிறது. ஒரு பெரும் படைப்பாளியை நாம் ஆழமாகப் பயிலும்போது பிற படைப்பாளிகள் சிறுத்து கீழே செல்கிறார்கள். இருபத்தைந்ந்து வருடம் முன்பு இரவுபகலாக தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி நாவல்களைப் படித்தபோது நான் அதுவரை படித்த பலர் கீழே சென்றார்கள். சிகரத்தை நோக்கி ஏறும்போது பிற மலைகள் கீழிறங்குவதுபோல.

 

அதன் பின் இந்த வருடங்களில் நான் வாசிக்க நேர்ந்த நவீனகால எழுத்தாளர்கள் எவருமே அவ்விருவருக்கும் நிகரானவர்கள் அல்ல என்ற எண்ணம் இருந்தது. அது இன்றுவரை உலகில் சிறந்த வாசகர்கள் கொனுள்ள கருத்தும்கூட. அவர்களுடன் ஒப்பிட்டு தாமஸ் மன் முக்கால்வாசி, ஐசக் பாஷவிஸ் சிங்கர் அரைவாசி, நிகாஸ் கஸன்ட் ஸகிஸ் அரைவாசி கர்ஸியா மார்க்யூஸ் கால்வாசி,  லோஸா அரைக்கால் வாசி என்றொரு கணிப்பு என்னுள் ஓடும். ஆனால் பின்னர் நவீன இலக்கியங்களையும் பண்டைப்பேரிலக்கியங்களையும் ஒரே இடத்தில் வைத்து மதிப்பிட ஆரம்பித்து இன்று கம்ப ராமாயணம் வாசிக்கும்போது தல்ஸ்தோய் கீழே செல்கிறார்.

 

ஆனால் இதெல்லாம் உண்மையில் படைப்புகளை ஒட்டி உருவாகும் விவாதக்களம் சம்பந்தமான விஷயங்கள். அந்த விவாதக்களனில் நாம் ஒரு எழுத்தாளரை ஒரு இடத்தில் பதித்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அக்காரணத்தால் அந்த எழுத்தாளரை நாம் தாண்டிவிடுவதில்லை. நான் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி நாவல்களைப் படித்ததனால் உலகில் உள்ள பிற எல்லா எழுத்தாளர்களை விடவும் நான் மேலானவன் , அவர்களை அலட்சியம் செய்ய எனக்கு உரிமை உண்டு என்று சொன்னேன் என்றால் அது எத்தனை மடமை.

 

மேலும் கூர்ந்து வாசித்தால் நான் தாமஸ்மன்னையே உண்மையில் இன்னும் கடந்துவந்திருக்கவில்லை என்று உணர முடியும் . பதினெடு வருட இடைவெளிக்குப் பின்புடன் புரூக்ஸ்வாசித்தபோது அதை உணர்ந்தேன். நல்ல வாசகன் ஒருபோதும் இலக்கியப்படைப்பாளிகளை அலட்சியமாக விமரிசிக்க மாட்டான். அவர்களில் ஒரு பகுதியை தன் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொண்டு முன்னே செல்லும் பயணியாகவே தன்னை உணர்வான்

ஜெ       

888

அன்புள்ள ஜெ

 

ஜெயகாந்தன் அறத்தின்குரல் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். ஜெயகாந்தனை தமிழின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராக எண்ணுகிறீர்களா? அவரை விட லா..ரா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் மேலானவர்கள் அல்லவா?

 

செல்வம்

 

அன்புள்ள செல்வம்

 

இலக்கியத்தை ஒரு போட்டிப்பந்தயமாகப் பார்க்காதீர்கள். அப்படிப்பார்க்கும் மனநிலை ஒரு வயதில் உருவாகும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இலக்கியம் என்பது ஒரு மாபெரும் சொற்களன். [டிஸ்கோர்ஸ்] பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு பெரும் பரப்பு. அவற்றின் விவாதம் மூலமாகத்தான் நம் சமூகம் சிந்திக்கிறது. அதன் பகுதியான நம் சிந்தனை உருக்கொள்கிறது. அதில் எல்லா குரல்களுக்கும் அவற்றுக்கான இடம் உண்டு. சில குரல்கள் அழுத்தமானவை ,நீடிப்பவை. ஜெயகாந்தன் அவற்றில் ஒன்று 

 

நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் உள்ள் எழுத்தாளர்களில் அசோகமித்திரனுக்கும் லா..ராவுக்கும் இடையே என்ன பொதுக்கூறு உள்ளது? ஒருவர் சொற்களை எண்ணி எண்ணி எழுதுகிறார். ஒருவர் சொற்களை அள்ளிவீசி நடனமிடுகிறார். இருவேறு அழகியல்; இருவேறு உலகநோக்கு. இல்லையா?

 

ஜெகெயும் அவர்களுக்கும் இடையேகூட அத்தனை வேறுபாடு உள்ளது. அவர் சொல்லவந்ததை ஓங்கிச் சொல்லும் கதைசொல்லி. அறவிவாதம் நிகழ்த்துபவர். சொல்லப்படாத தளத்தை நோக்கி பூடகமாக நகரமாட்டார் அவர். எல்லாமே அப்பட்டமாக அவரே கூவிச்சொல்லியிருப்பார். ஆனால் அவர் உருவாக்கும் அறநெருக்கடிகளை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவரது கதைகளிலும் அசோகமித்திரன் அல்லது லசரா கதைகள் அளவுக்கே உள்ளே செல்லும் முடிவிலாப் பாதை இருப்பதை காணலாம். ஜெகெ சொல்லவருவதென்ன என்று பார்க்காதீர்கள். சொல்லிய விஷயங்களின் பல கோணங்களைப் பாருங்கள்

 

ஜெகெயை நாம் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. இன்னும் சரியாக விவாதிக்கவும் இல்லை