சொல்லும் எழுத்தும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

உலகில் இருக்கக்கூடிய மிகப் பழமையான சிந்தனைகளுள் எழுத்தை மறுப்பதுவும் ஒன்று.அத்தகைய பழைய வழிமுறையைச் சார்ந்த நபர்களான செவ்விந்தியர்களின் சிந்தனை பற்றிய உங்களுடைய பார்வை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்தக் கடிதம்.

எழுத்தை மறுப்பதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம்.

“ஒருவனுடைய இருப்பை நேரடியாக உணராமல்,அவன் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஏற்படுத்தும் ஒட்டுமொத்தமான பொருளையும்,அவன் சொல்லாமல் விட்டதன் உட்பொருளையும், அவன் சொல்லும்போது அவனேயறியாமல் அவன் உடல் உணர்த்தும் உடல் மொழியையும் உடனிருந்து புரிந்துகொள்ளாமல், எங்கோ என்றோ எதற்காகவோ எந்நோக்கத்திற்காகவோ எச்சுழலில் எழுதினான் எனத்தெரியாமல் எழுதப்படுவது எழுத்து. எப்படி அதை நம்புவது?.”என்பது.

இதை யோசிக்கும்போது ஆராயத்தக்க கருத்து என்றே தோன்றுகின்றது.எழுத்தின் பாடபேதம் இங்கு அனைவரும் அறிந்ததே.எழுதியவனின் நோக்கத்திற்கு எதிராகக்கூட எழுதப்பட்டதை புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது என்பதையும் அறிவோம்.ஆகவே எழுத்தின் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை கொஞ்சமாக இருக்கிறது.

அதேசமயம் இந்தச் சிந்தனையைக் கொண்ட செவ்விந்தியர்கள் அவர்களின் இச்சிந்தனையின் பயன்விளைவான நேரில் சந்தித்த மனிதர்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டார்களா என்றால் இல்லையென்று வரலாறு சாட்சியம் கூறுகிறது.தங்கள் நாட்டுக்கு வந்த வெள்ளையர்களை அவர்களின் இருப்பை வைத்து துல்லியமாக கணக்கிட்டிருந்தால் அவர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கவே மாட்டார்கள். ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதும் உடைப்பதுமாக எழுத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்டு  வெள்ளையர்கள் அவர்களிடம் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல.வெள்ளையரைப் புரிந்து கொள்ள அவர்களுடைய சிந்தனையால் முடியவில்லை.ஆகவே இந்தச் சிந்தனை தோல்வியைத் தழுவக்கூடியது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சரியான பயன்விளைவைக் கொடுக்காததாக வரலாற்றில் இந்தச் சிந்தனை தோன்றினாலும் இந்தியாவிலும் நம்முடைய கீழை ஆன்மீகத்திலும் குருவின் உடனிருந்து கற்றலை ஒப்புக்கொள்ளக்கூடிய சிந்தனை இச்சிந்தனையுடன் இணைந்து செல்கிறது . குருவுடன் இருக்கும்போது எழுத்தின் பாடபேதமின்றி மயக்கமின்றி சொல்லால் கூற இயலாதவற்றைக்கூட இங்கு குரு சீடனுக்குக் கடத்த முடியும் என்பது இங்கு பல்வேறு ஞானியரின் சீடர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனால் செவ்விந்தியர்களின் இச்சிந்தனை உச்சவடிவில் பயன்படக்கூடிய இடம் ‌ இது என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை என்றே தோன்றுகிறது.

எனவே தோற்றுப்போனதாக கருதப்பட்டாலும் செயல்பாட்டில் இல்லாததாகத் தோன்றினாலும் ஒரு இடத்தில் மட்டும் செல்லுபடியாகக்கூடிய இந்தச் சிந்தனையைப் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?.

கூடவே நீங்கள்எழுத்தில் கற்றது அதிகமா அல்லது குருவின் அருகிலிருத்தலால் உணர்ந்தது அதிகமா என்பதை வைத்து இந்தச் சிந்தனையின் இடமென்ன என்பதைக் கூறமுடியுமா?.

இப்படிக்கு

அந்தியூர் மணி.

***

அன்புள்ள அந்தியூர் மணி

ஒரு பத்தாண்டுகளுக்கு முன் கி.ராஜநாராயணனை அவர் இல்லத்தில் சந்தித்தபோது சொன்னார், “வாய்மொழியிலே இருக்கிறதுதான் நிக்கும். மிச்சமெல்லாம் போயிடும்”

“ஏன் கம்பராமாயணம் நிக்கலையா?” என்றேன்

“ஏன் சீவகசிந்தாமணி நிக்கலை?” என்று திருப்பி கேட்டார் “புக்செல்பிலே இருக்கு, அவ்ளவுதான்.”

என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

”கம்பராமாயணம் தெருக்கூத்தா நாடகமா மேடைப்பேச்சாத்தான் நின்னிட்டிருக்கு. செவிவழியா மட்டும்தான் நெஞ்சுக்குள்ள போகமுடியும். எழுதலாம். எழுதுறது பேச்சா ஆகணும். பேசுறதுதான் சொல். எழுதுறது ஏடுமட்டும்தான்”

அப்போது அது கொஞ்சம் சீண்டுவதாக இருந்தது. ஆனால் பின்னர் அதை நான் யோசித்துக்கொண்டே இருந்தேன். நான் கற்றவற்றில் நூல்கள் அளித்தவை மிகுதியா நேரில்கற்றவை மிகுதியா?

நான் கற்றநூல்கள் சில ஆயிரமாவது இருக்கும். ஆனால் நான் சந்தித்த ஆசிரியர்களுடன் பேசியவைதான் என் நினைவில் நிற்கின்றன. நான் நூல்களில் வாசித்தவை சுருங்கிச் சுருங்கி சிறிய விதைகள் போல ஆகின்றன. அவற்றை நான் மீண்டும் முளைக்கவைக்க வேண்டியிருக்கிறது. நான் நேரில் கேட்டவை என்னுள் விதைகளாக வந்தடைந்து முளைத்துக்கொண்டே இருக்கின்றன. கால்நூற்றாண்டு கடந்தும் நித்யசைதன்ய யதி சொன்ன சொற்களை நினைவிலிருந்து எடுத்து பெருக்கிக் கொண்டே இருக்கிறேன்

எழுத்துமொழி என்பது ஆவணப்பதிவு. அது உருவாக்குவது மாறாத அர்த்த்ததை. அதை வளரும் அர்த்தமாக ஆக்கவே அதை இலக்கியமாக ஆக்குகிறோம். ஆகவேதான் சிந்தனைநூல்களை விட கற்பனைநூல்கள் அணுக்கமாக உள்ளன. நம்மில் அவையே வளர்கின்றன

ஆனால் ஆசிரியன் சொல் அனைத்தையும் விட வளர்கிறது. அதனுடன் அந்த ஆசிரியனின் குரல், முகம், உணர்ச்சிகள் கலக்கின்றன. அந்த தருணமும் அந்த உரையாடலும் அந்த உத்வேகமும் இணைகிறது. அவருடைய ஆளுமையாகவே அச்சொல் ஆகிவிடுகிறது.

எழுத்துமொழி அனைத்தையும் நிலைப்படுத்துவது. எல்லா எழுத்தும் கல்வெட்டே. அது தேவை. தலைமுறைநினைவுக்கு, மாறும் நினைவுகள்மேல் நிலைத்தன்மை கொள்வதற்கு. நிலைத்தன்மை தேவையான அரசு, நிர்வாகம், சட்டம், நெறிகள், கொள்கைகள், தத்துவங்கள் அனைத்துக்கும் எழுத்துமொழியே ஆதாரமாக இருக்கமுடியும்

இலக்கியம் எழுத்தில் இருக்கும் பேச்சுமொழி. ஆசிரியன் அங்கே வாசகனுடன் உரையாடுகிறான். ஆகவேதான் நமக்கு இலக்கியத்தில் ஆசிரியனின் முகம் தேவைப்படுகிறது. முகம் இல்லாவிட்டால் கம்பன் வள்ளுவன் இளங்கோ அனைவரையும் வரைந்துகொள்கிறோம். அது ஒருவகை பேச்சுதான்

இன்று மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திக்காமல் கற்கும் இணையவழிக் கல்வியிலேயே இச்சிக்கலை காண ஆரம்பித்துவிட்டோம். கண்ணெதிரே ஆசிரியர் என ஓர் ஆளுமை இல்லையேல் அச்சொற்கள் பொருள்கொள்வதில்லை. மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்கிறார்கள். பொருட்டில்லை என நம்பிக்கொள்கிறார்கள். ஆனால் நாம் ஆரம்ப்பள்ளி ஆசிரியர்களைக்கூட நினைவில் வைத்திருக்கிறோம்.

ஞானம் நேரடியாக மட்டுமே பகிரப்பட முடியும். நான் பலமுறை எழுதியதுபோல அது முலைப்பால். பசியறிந்து கனிந்து ஊட்டப்படுவது.  புட்டிப்பால் போல உலரச்செய்து சேமிக்கப்படுவது அல்ல. உபநிடதம் என்றால் அருகமர்தல். அருகமராமல் கற்கமுடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்கள் மீதான காழ்ப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீலம் யோகம்