ஒரு கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

இப்பொழுதான் உங்கள் வலைத்தளத்தையும் அதில் நீங்கள் இத்தனை வருடங்களாக இடைவிடாது எழுதி வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருவதையும் அறிந்துகொண்டேன். பழைய கட்டுரைகளை படிக்க ஆரம்பித்துள்ளேன். உங்களது கட்டுரைகளின் மூலமாக மெதுவாக தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள விழையும் ஒரு தொடக்கநிலை வெகுஜன இளைஞன் நான். 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து நான் தமிழில் எழுதும் முதல் நீள்கடிதம். உங்களின் எழுத்து அனுபவம் என் வயதைவிட அதிகம் சார்.

கீழுள்ள மின்னஞ்சலை அனுப்பிய பிறகுதான் யோசித்தேன் நான் கேட்க வந்த விஷயத்தை குழப்பத்துடன் தப்பாக கேட்டு உங்களின் நேரத்தை வீணடித்தேன் என்று. ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் (இரவு 2 மணி இருக்கும்) அதை நான் தங்களுக்கு அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும். அந்த கேள்விக்கான விடையாக நானே உங்கள் ளத்தில் ஒரு கட்டுரையை https://www.jeyamohan.in/139867/ படிக்கும் போது கண்டுகொண்டேன்.

1980களின் இறுதியில் பிறந்து தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் ஆங்கிலக்கல்வியின் மூலமாக பள்ளி பயின்று இன்று ஆங்கிலம் பேசி பணியில் உள்ள அனைவரும் இந்தசிக்கலில் தான் மாட்டிக்கொண்டு இருக்கின்றோம். என்ன செய்வது, சமையல் குறிப்பு புத்தகங்களை மனப்பாடம் செய்து, அதன்பொருட்டு கேட்கப்படும் தேர்வு வினாக்களுக்கு சிறந்த முறையில் விடை எழுதி “சிறந்த சமையல்கலை வல்லுனர்களாக” அறியப்பட்ட கல்வி பின்புலம்.

நான் இப்பொழுது கண்டடைந்திருக்கும் ‘திறப்பை’ எப்படி பகிர்வது என்று தெரிய வில்லை. இருந்தாலும் பகிர்கிறேன்.

நாவல் கோட்பாடு (125 பக்கம்) + நவீனத் தமிழிலக்கிய வரலாறு அறிமுகம் (307 பக்கம்) மொத்தம் 432 பக்க வாசிப்பனுவதை முழுமையடையச்செய்யுமாறு  கீழ்கண்ட உங்களின் ஒரு வரி அமைந்தது. இப்பொழுதான் நீங்கள் கூறும் ‘இலக்கியம் ஒரு கலை’, ‘குறிப்புணர்த்தி பொருள் தருவது’, ‘தர்க்கத்தால் இலக்கியத்தை உணரமுடியாது, ஒரு நுண்ணுணர்வின் மூலமே அடைய முடியும்’ என்ற வரிகளில் பொதிந்துள்ள பொருளை நான் கிடைக்கப்பெற்றேன்.

ஐயங்கள் கேட்கிறவர்கள் இன்னும் சோர்வடையச் செய்கிறார்கள். நம் சூழலில் ஒரு கருத்தைப் புரிந்துகொள்ளச் செய்வது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் நிலைமை சலிப்படையச் செய்கிறது. முழுமையாகப் படிப்பதில்லை. முதல் பத்திமட்டும் படித்துவிட்டு கேட்கிறார்கள். முற்றப் படித்துவிட்டு முன்னரே எண்ணியதையே கேட்கிறார்கள் என்ற வரி முதல் முறையாக என்னை சிந்திக்க வைத்தது.

குறிப்பாக பாறைவெடிப்புக்குள் ஒரு சொட்டு நீர் புகவேண்டும் என்றால் இரவெல்லாம் அடைமழை பெய்யவேண்டும். அதைப்போலத்தான் தமிழ்ச்சூழல் என்ற வரி என்னை ஏதேதோ கற்பனை செய்யவைத்தது…சிந்திக்க வைத்தது…புரட்டிப்போட்டது. திடீரென்று ஏதோ ஒன்று உரைத்தது. உண்மையில்  நான் இவ்வரிகளில் கண்டடைந்ததை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. சொல்லின் மூலமாக பொருளை அடைவதில் உள்ள சிக்கலை உணர்தேன்.

நீங்கள் உங்கள் நூலில் உதாரணம் காட்டிய மனுஷ்யபுத்திரனின் ‘இன்று என் அறையில் நிறைவது, கடலைபுணரும் காற்றுணரும் தடையின்மைகள்” பற்றிய நீங்கள் எழுதிய விளக்கம்…அதைபோல் அமைந்தது தங்களின் வரிகள்.

இந்த தருணத்தில் நான் உணர்ந்தது – ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்கும், அறிந்து/உணர்ந்து கொள்வதற்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது என்பதை தான். உணர்த்தி காட்டியமைக்கு நன்றி நன்றி ..!!

தொடர்ந்து எழுதுங்கள்! நிச்சயம் ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,

விவேக்.

***

அன்புள்ள விவேக்

பலசமயம் ஓர் எழுத்தாளனுடைய வரிகளினூடாக நாம் கண்டடைவது நமது வரிகளைத்தான். அத்தனை வரிகளில் அவற்றை மட்டும் நாம் பிரித்தறிவது அவ்வாறுதான்

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசைத் தொடங்குபவருக்கு
அடுத்த கட்டுரைபுரியும்படி எழுதுவது- கடிதம்