மனு இறுதியாக…
அன்பு நிறைந்த ஆசிரியருக்கு,
வணக்கம். இது உங்களுக்கு நான் எழுதும் முதல் மடல்.
நான் உங்கள் நீண்ட கால வாசகன். முதல் நிலையில் இருக்கும், வாழ்வியல் அனுபவங்களை நூல்கள் வாயிலாக வாசித்து மகிழும் வாசகன்.
என்றும் உங்கள் கட்டுரைகள் மிகத் தெளிவான வெளிச்சத்தை எனக்கு வழங்கியுள்ளன. மனு இன்று மற்றும் மனு இறுதியாக – ஆகிய இரண்டு கட்டுரைகளும் ஆகச் சிறந்த தெளிவை வழங்கியுள்ளன. என்னுடைய மனமுவந்த நன்றியை ஏற்க வேண்டுகிறேன்.
அன்புடன்
செ.சண்முகசுந்தரம்
***
அன்புள்ள சண்முகசுந்தரம்
நன்றி
இருதரப்பையும் சீர்நோக்கும் கட்டுரைகளுக்கு இங்கே வாசகர் சிலரே
உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
ஜெ
***
அன்புள்ள ஜெ, அவர்களுக்கு வணக்கம்.
‘மனு இன்று’ பதிவு தொடங்கி, அதன் மீதான கடித உரையாடல்கள் வரை படித்தேன். தவறாக புரிந்துகொண்டவர்களுக்காக இறுதியாக நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கப்புறமும் இந்தக் கடிதம் எழுதப்படலாமா என்கிற ஐயப்பாட்டுடனேயே எழுதுகிறேன்.
தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, விசிக வன்னியரசுவைவிட நீங்கள் அவரின் ஆதரவாளர் என்பது உங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் என்பதால், மனுவின் மீதான திருமாவளவனின் தீவிரமான கருத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் ஒன்றும் வியப்போ அதிர்ச்சியோ இல்லை.
என் கேள்வி, சொல்லப்படும் கருத்து எவ்வளவு நியாயமாக இருந்தாலும், சொல்பவரின் நோக்கம் வஞ்சகமாக இருந்தால், அதனை எப்படி எடுத்துக்கொள்வது என்பதுதான். மனுவை தடை செய்ய வேண்டும் என குன்றக்குடி அடிகளாரோ, பொள்ளாச்சி மகாலிங்கமோ, அ.ச.ஞானசம்மந்தமோ கூறியிருந்தால், அவர்களின் நோக்கம் -ந்து மதத்தை இன்னும் நவீனப்படுத்தி, காலத்திற்குகந்தவாறு கட்டமைத்தல் என்பதாகவே இருந்திருக்கும்.
ஆனால், இந்து கோயில்களின் சிற்பங்களில் ஆபாசத்தை மட்டுமே பார்த்தவர் – வலது பக்கம் கிறிஸ்துவ குருமார்களையும், இடது பக்கம் இஸ்லாமிய தீவிர செயற்பாட்டாளர்களையும் வைத்துக்கொண்டு, ‘சனாதன தர்மத்தை இந்த மண்ணிலிருந்து வேரோடு பூண்டறுப்போம்’ என்று முழங்கியவர் – காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயத்தையும், திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்தையும் இடித்து விட்டு, புத்த விகாரங்கள் கட்டுவோம் என்றவர் – ஒப்புக்கூட இந்து பண்டிகைளுக்கு வாழ்த்துச் சொல்லாதவர் – சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்து சமயத்தை ‘மட்டுமே’ திட்டித்தீர்ப்பவர், மனு ஸ்மிரிதியை தடை செய்யவேண்டும் என்று சொன்னால், (அது நியாயமாகவே இருந்தாலும்) சொல்பவரின் நேர்மையை சந்தேகிக்கக் கூடாதா?
அல்லது எப்பொருள் யார்யார் வாய் கேட்டாலும் அப்பொருளில், மெய்ப்பொருள் மட்டுமே காண வேண்டுமா?
அன்புடன், எம்.எஸ்.ராஜேந்திரன்.
திருவண்ணாமலை.
***
அன்புள்ள ராஜேந்திரன்,
சரி, அவர் இந்துமதத்தின் எதிரியாக நின்று சொல்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவ்வாறு எதிரியாக அவர் செல்வதற்குத் தேவையான அனைத்தையும் இங்குள்ளோர் சிலர் செய்கிறார்கள் என்பது உண்மை அல்லவா? அவர்களை முதலில் கண்டிக்காமல் அவருடைய எதிர்ப்பை குறைசொல்லும் உரிமை நமக்கு உண்டா?
எதிரியாக நின்று அவர் குற்றம்சாட்டினாலும்கூட அக்குற்றச்சாட்டுக்கு அறச்சார்புடன், நடுநிலையுடன் நின்று பதில்சொல்லவேண்டுமா அல்லது திரித்துச் சொல்லி வெறுப்பைக் கக்கவேண்டுமா?
ஜெ
***
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
மனு மீதான விவாதங்களை முகநூல் வழியாகவும் தளத்தின் வாயிலாகவும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். அதனூடாக எழும் கேள்விகளையும் பதில்களையும் கூட.
இன்று மழைப்பாடல் வாசித்துக் கொண்டிருந்தேன். பீஷ்மருடன் திருதராஷ்டிரன் மற்போர் புரியும் காட்சி. அதில் விதுரருக்கும் பாலஹாஸ்வருக்கும் நடுவே வரும் உரையாடலில்,
பலாஹாஸ்வர் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “சூதரே, மண்ணிலுள்ள எல்லா நீதிகளும் மிருகங்களிடமிருந்தே வந்துள்ளன. வலிமை, குலவளர்ச்சி இரண்டை மட்டுமே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் மானுடநீதி என்பது அதிலிருந்து முன்னகர்ந்து உருவானதல்லவா? ஸ்மிருதிகளில் எது கடைசியானதோ அதுவே ஆதாரமாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுருதிகளின் நோக்கத்துக்கு மாறாகவோ இறைவனின் கருணைக்கு மாறாகவோ ஸ்மிருதிகள் அமையும் காலம் வருமென்றால் அவற்றை உடனடியாக எரித்துவிடவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.”
வெண்முரசு -ன் இந்த உரையாடலின் விளக்கவுரையாகக் கூட மனு குறித்த கட்டுரையை வாசிக்கலாம்.
நன்றி
பலராம கிருஷ்ணன்
***
அன்புள்ள பலராம கிருஷ்ணன்
வெண்முரசில் மனுநெறி- அதற்கு முந்தைய ஸ்மிருதிநெறிகளிலிருந்து அது உருவான முறை அனைத்தைப்பற்றிய விரிவான நோக்கு உள்ளது
மூலமகாபாரதத்தில் குந்திதேவி தன் கணவனாகிய பாண்டு நியோகமுறைப்படி குழந்தைபெறும்படிச் சொல்லும்போது மறுத்துப்பேசும் இடம் நெறிநூல்கள் மாறிவந்ததைச் சொல்லும் முக்கியமான பகுதி.
ஜெ
***