எழுத்தாளனும் வாசகனும்

மனு இறுதியாக…

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

நான் சென்னையில் வசிக்கும் இதழாளன். இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் தனிப்பட்ட அஞ்சல். இதற்கு முன் இருமுறை தொழில்முறை சார்ந்து தங்களிடம் மின்னஞ்சலில் சுருக்கமாக உரையாடியிருக்கிறேன். மாதொருபாகன் சர்ச்சையின்போது இந்தியா டுடே தமிழ் இதழுக்காக தங்களுடைய கட்டுரையை கேட்டுப் பெற்றது அவற்றில் ஒன்று. 250 சொற்கள் நீளத்தில் கட்டுரை வேண்டும் என்று கேட்டனுப்பியதற்கான  பதில் மின்னஞ்சலிலேயே கச்சிதமான வார்த்தைக் கணக்கில் தங்கள் பார்வையை அழுத்தமாக வெளிப்படுத்தும் கட்டுரையை அனுப்பியது நன்கு நினைவிருக்கிறது. உண்மையில் நான் அதை ஊகித்திருந்தேன்.

தாங்கள்  எம்ஜிஆர். சிவாஜி ஆகியோர் பற்றி எழுதியிருந்தவை சர்ச்சையானபோதுதான் தங்களுடைய பெயர் எனக்கு அறிமுகமானது. பிறகு ‘நான் கடவுள்’ படத்தின் வசனகர்த்தவாக. அப்போது அது தொடர்பாக உங்களுடைய பேட்டி ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருந்தது. அதுதான் உங்கள் சொற்களை நான் நேரடியாகப் படித்த முதல் நிகழ்வு.

2011 வாக்கில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குச் செல்லத் தொடங்கியபோது தங்களுடைய நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். 2012,13இல் உங்களால் பெரிதும் கவரப்பட்டேன். தனிப்பேச்சுகளில்கூட உளப்பூர்வமான மரியாதையுடன் தங்களை ஆசான் என்றுதான் குறிப்பிடுவேன். சென்னையில் ‘வெள்ளை யானை’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று ஒரு பிரதியை வாங்கி  தங்களிடம் கையெழுத்துப் பெற்றபோது பேருவகை அடைந்தேன். அந்த நாவலை வாங்கிய கையோடு படித்தேன் அதே காலகட்டத்தில் ‘ஏழாம் உலகம்; நாவலையும் படித்தேன்.

‘விஷ்ணுபுரம்’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ இரண்டையும் அண்ணா நூலகத்தில் கொஞ்சம், படித்து விட்டுவிட்டேன். பின் தொடரும் நிழலின் குரல் நூலை 2015இல் பனுவல் நூல் நிலையத்தில் வாங்கினேன் என்றாலும் அதைப் படித்து முடித்தது 2018இல் தான் (ஆம் வாசிப்பில் படி சோம்பேறி நான். உங்களுக்கு எழுத இத்தனை ஆண்டுகள் தயங்கியதற்கு அதுவே முதன்மைக் காரணம்). ஆனால் 2018இல் படிக்க எடுத்த ஒரு சில வாரங்களில் படித்துவிட்டேன். அந்த அளவு அந்த நாவல் என்னைக் கவர்ந்தது.

இது தவிர தங்கள் புனைவெழுத்தில் சில சிறுகதைகள், வெண்முரசு சில அத்தியாயங்கள் மட்டுமே படித்துள்ளேன். மறைந்த லோகிததாஸ் பற்றி எழுதிய நூலைப் படித்திருக்கிறேன். கணிசமான உரைகளைக் கேட்டிருக்கிறேன். ’எப்ப வருவாரோ; நிகழ்வில் வியாசர் , ஆதிசங்கரர் குறித்த தங்களின் உரைகள் என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தின.

ஆனால் அரசியல், கருத்தியல்ரீதியாக கடந்த 5-6 ஆண்டுகளாக தங்களுடன் பெரிதும் முரண்படத் தொடங்கியிருந்தேன்.  பெரியார், திராவிட இயக்கம் பற்றிய தங்கள் கருத்துகளுடன் எனக்கு கடும் முரண்பாடு உண்டு    ஃபேஸ்புக்கில் தங்களை கடுமையாக விமர்சித்து எழுதிவந்தேன். சில முறை மிகவும் உணர்ச்சிவயப்பட்டு வசைச் சொற்களைக்கூட பயன்படுத்தியிருக்கிறேன். அதற்காக மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  இரோம் ஷர்மிளா, டி.எம்.கிருஷ்ணா, சர்க்கார் கதை சர்ச்சை  ஆகியவை குறித்து நீங்கள் எழுதியவற்றுக்காக மிகவும் கொந்தளிப்படைந்தேன்.

ஆனாலும் தங்கள் மீதான வியப்பு எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. தங்கள் பிளாகைப் படிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று பலமுறை தோன்றியும் செயல்படுத்த முடியாமல் போனது நான் செய்த நற்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் வெறுக்க நினைத்தாலும் நிராகரிக்க முடியாதவை உங்கள் எழுத்தும் கருத்துகளும்.

உங்களுடன் கடுமையாக முரண்பட்டிருந்த போதிலும் மாவு விற்பனையாளரால் நீங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உங்கள் பக்கம்தான் நின்றேன். அந்த விவகாரத்தில் முன்முடிவுகளுடன் உங்களை எதிர்த்தவர்கள் அல்லது கேலி செய்து கொக்கரித்தவர்களிடமிருந்து மனவிலக்கம் கொண்டேன்.

உங்கள் மீதான எதிர்மறைப் பார்வை எனக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நீங்கியது என்று சொல்ல வேண்டும். பொதுவாகவே இங்கு முற்போக்கு என்று அடையாளப்படுத்தப்படும் தரப்பு இந்து மதம் குறித்து எதையும் வாசிக்காமல் அது தொடர்பான விமர்சனக் கருத்துகளை மட்டுமே படித்துவிட்டு அந்த மதத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து வசைபாடுவது,  பார்ப்பனீயத்தை எதிர்க்கும் பெயரில் மணி ரத்னம், கமல் ஹாசன் தொடங்கி பலரை பார்ப்பனராகப் பிறந்தவர்கள் என்கிற ஒரே காரணத்துக்காகவே வசைபாடி ஒதுக்குவது ஆகியவற்றால் அத்தரப்பின் மீது எனக்கு மனவிலக்கம் ஏற்படத் தொடங்கிவிட்டது. (இந்தத் தவறுகளைச் செய்பவர்களிலும் உளபூர்வமாக அடித்தட்டு மக்களுக்காக, சமூக நீதிக்காக சமத்துவம் மிக்க உலகைப் படைப்பதற்காக உளப்பூர்வமாக உழைப்பவர்கள் மீதான மரியாதை அப்படியேதான் இருக்கிறது).

இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்  ஓலைச்சுவடி இதழால் எடுக்கப்பட்டு ஸ்ருதி டிவியில் வெளியான தங்களுடைய நீண்ட நேர்காணல் ஒன்றைக் கண்டேன். அதில் நீங்கள் இந்து மதம் இந்து மத எதிர்ப்பாளர்கள் பற்றிக் கூறியவை மட்டும் வெட்டப்பட்டு ஃபேஸ்புக்கில் பலரால் பகிரப்பட்டு வசைபாடலுக்குள்ளானது. . அதில் இந்துமதம் குறித்தும் கண்மூடித்தனமான இந்து மத எதிர்ப்பு குறித்தும் கண்மூடித்தனமான இந்துமத எதிர்ப்பு எப்படி உண்மையிலேயே நிராகரிக்கப்பட வேண்டிய இந்துத்துவத்துகு ஆள் சேர்ப்பதாக அமைகிறது என்பதை விளக்கியும் நீங்கள் கூறியிருந்தவை அனைத்தும் எனக்கு மிகச் சரியான முக்கியமான கருத்துகளாகப் பட்டன என்பதோடு அந்த நேரத்தில் எனக்கிருந்த தனித்துவிடப்பட்டதால் சோர்வடைந்த உளநிலைக்கு பெரும் ஆறுதல் அளிப்பதாகவும் அமைந்தன. அன்றிலிருந்துதான் நான் இந்திய சமூகத்துக்கு தங்களைப் போன்ற ஒருவரின் இன்றியமையாமையை உணர்ந்துகொண்டேன். தங்கள் மீதான விமர்சனங்கள் மாற்றுக் கருத்துகளை வைத்து தங்களை  எதிர்மறை சக்தியாக பார்ப்பது எவ்வளவு பிழைபட்டது என்பதும் முழுமையாகப் புரிந்தது.

தற்போது மனுஸ்ம்ருதி விவகாரத்தில் ஒரு சமநிலைக் குரல் எழாதா என்று பெரிதும் ஏங்கிக்கிடந்த என் மனதுக்கு தங்கள் நீண்ட வரலாற்றுப் பார்வையும் அற நோக்கும் நிரம்பிய கட்டுரை மிகப் பெரும் நிம்மதி அளித்தது. இந்தச் சூழலில் என்ன மாதிரியான வசைகள் காழ்ப்புகள் வீசப்படும் என்று தெரிந்தும் அந்தக் குரலை சமரசமின்றி ஒலித்ததற்காக தங்களுக்கு பெரும் நன்றிக்குரியவனாகிறேன். (தங்களிடம் உள்ள  துணிச்சலில் நூறில் ஒரு பங்குகூட என்னிடம் இல்லை. முத்திரை குத்தப்படுவதை அஞ்சி உங்கள் கட்டுரையை ஃபேஸ்புக்கில் கூடப் பகிரவில்லை).

அந்தக் கட்டுரையில் தொல்.திருமாவளவன் அவர்களின் விமர்சனக் குரலில் உள்ள நியாயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக நிறுவிய பிறகே நீங்கள் மனுஸ்ம்ருதிக்குள் சென்றீர்கள். குறிப்பாக சாதியுணர்வாளர்களை ‘மேல்சாதி கீழ்மக்கள்’ என்று சாடியிருந்ததைப் படித்தவுடன் உணர்வுவயப்பட்டு கைதட்டி ஆரவாரித்தேன். . சாதியுணர்வாளர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அறச்சீற்றத்தை அந்த ஒரு சொல்லில் மிகத் துல்லியமாக வெளிப்படுத்திவிட்டீர்கள்.

அதே நேரம் திருமாவளவன் மனு ஸ்ம்ருதியையே இந்து மதமாகப் புரிந்துகொண்டிருப்பது எவ்வளவு பிழையானது என்பதையும் விரிவாக விளக்கியுள்ளீர்கள். உண்மையில் இந்தச் சூழலில் ஒரு மனசாட்சியுள்ள தலித் அல்லாத இந்துவானவர் திருமாவளவனைப் போன்ற தலித் ஆளுமைகளிடம் பேச வேண்டிய குரல் அதுதான். அவர்களுடன் நாம் முரண்படலாம். ஆனால் அந்த முரண்களுக்காக நாம் அவர்களை ஒருக்காலும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. ஒருக்காலும் அவர்களை தாழ்த்தும் ஒரு சொல்லை உதிர்த்துவிடக் கூடாது. நீங்கள் இவை இரண்டையும் மிகக் கவனமாக தவிர்த்து திருமாவளவனின் குரலின் முக்கியத்துவத்தை அவர் மீதான மரியாதையை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டே அவருடைய கருத்தை விமர்சித்திருக்கிறீர்கள். இதற்கு முன்பும் பலமுறை திருமாவளவன் மீதான மரியாதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

உண்மையில் மனு ஸ்ம்ருதியை சமூக வரலாற்றுப் பார்வையுடன் அணுகி எழுதுவதற்கு  வேறு ஆட்களே இல்லை. இப்படி பேசக்கூடியவர்களும் எழுதக்கூடியவர்களும்கூட வசைக்கும் முத்திரைகுத்தலுக்கும் அஞ்சி இதைச் செய்யத் தயங்குவார்கள். ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்கள். அதற்கு சாதியத்தால் வெட்கித் தலைகுனியும் அதே வேளையில் சாதி ஒன்றுக்காகவே இந்து மதத்தை நிராகரிக்கத் துணியாத இந்துவாக உளமார்ந்த நன்றி.

அன்புடன்

ஜி.

அன்புள்ள ஜி,

எனக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் அடிக்கடி வருவதுண்டு. உங்கள்மேல் மதிப்பு இருந்தது, இந்தக்கருத்தைக் கண்டேன் மதிப்பை இழந்தேன் – இவ்வாறு. நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் மதிப்பை அடைந்தேன் என்றும் அவர்களில் மிகச்சிலர் எழுதுவதுண்டு.

ஓர் எழுத்தாளனுடன் நீங்கள் இருப்பது ஓர் உரையாடலில். ஏற்பும் மறுப்பும் அதிலிருக்கும். இரண்டுமே அறிவார்ந்தவை, நுண்ணுணர்வு சார்ந்தவை. நீங்கள் ஏற்கும் ஒரு கருத்தை எழுத்தாளர் ஏற்கவில்லை என்றால் எப்படி அவன்மீதான மதிப்பை ரத்துசெய்வீர்கள்? அப்படி அவன் உங்களிடம் எந்த ஒப்பந்தத்தையாவது செய்திருக்கிறானா என்ன? எழுத்தாளன் அப்படி எந்த வாசகனிடமாவது ஒப்பந்தமிடமுடியுமா?

எழுத்தாளன் வாசகனின் வாசிப்புசார்ந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டவனா என்ன? இதழாளன் என்றால் நீங்களும் ஒருவகையில் எழுத்தாளர். நீங்கள் அப்படிக் கட்டுப்படுவீர்களா? இல்லை, நீங்கள் முன்பு சொன்ன அத்தனை கருத்துக்களுக்கும் இப்போது கட்டுண்டவரா? இனிமேல் நீங்கள் செல்லும் அத்தனை பயணங்களையும் இதுவரை சொன்னவை கட்டுப்படுத்துமா? இனி உங்களுக்குக் கருத்துத் தேடலோ, கண்டடைதலோ இல்லையா?

எழுத்தாளன் சிந்தனையாளனாகச் செயல்படுபவன் அல்ல. சிந்தனைகளை எழுதினாலும் அவன் எழுத்தாளனே. எழுத்தாளனின் பணி உள்ளுணர்வு சார்ந்து செயல்படுவது. உள்ளுணர்வு முன்னூகிக்க முடியாதது. அவனிடம் மாறாமலிருப்பது அவனுடைய தேடல் மட்டுமே.

சிந்தனையாளர்கள் ஒரு தரப்பை உறுதியாக மாறாமல் கட்டி எழுப்புவதுபோல எழுத்தாளர்கள் செய்வதில்லை. ஏனென்றால் எழுத்தாளனின் முதன்மை ஆயுதம் தர்க்கம் அல்ல. தர்க்கம் புறவயமானது. உள்ளுணர்வு அகவயமானது

ஆகவே எழுத்தாளர்கள் எவராயினும் முரண்பாடுகள், உணர்வுச்சமநிலையின்மைகள் இருக்கும். குழப்பங்களும் தயக்கங்களும் இருக்கும். ஆகவே முரண்பட்ட நிலைகளும் இருக்கும்

ஆனால் சிந்தனையாளர்கள் அவர்களின் சீரான ஒற்றைப்படை போக்கு காரணமாக தவறவிடுவனவற்றைச் சுட்டிக்காட்ட எழுத்தாளர்களால் முடியும். அதுவே சிந்தனையில் அவர்களின் இடம். அத்துடன் அவர்களின் சிந்தனைகள் அவர்களின் படைப்புக்களால் அழுத்தம்பெறுகின்றன. எழுத்தாளர்களின் சிந்தனைகள் அவர்க்ளின் படைப்புக்களின் இன்னொரு வடிவம் மட்டுமே.

எழுத்தாளனை ஒரு வாசகன் அணுகும் முறைக்கும் தலைவனை ஒரு தொண்டன் அணுகும் முறைக்கும் உள்ள வேறுபாடுதான் இது. எழுத்தாளனை வாசகன் தன்னுடைய மறுதரப்பாகவே எண்ணவேண்டும். தன் அனுபவங்களை தொட்டு விரியச்செய்பவன். தன் சிந்தனையை சீண்டி முன்னகரச் செய்பவன். தன்னுடன் உரையாடலில் இருப்பவன்.

நேர் மாறாக தலைவனை தொண்டன் வழிகாட்டியாக, தனக்கும் சேர்த்து எல்லாவற்றிலும் முடிவெடுப்பவனாக நினைக்கிறான். ஆகவே தலைவனை நம்புகிறான். தலைவன் தவறான முடிவெடுக்கும்போது சோர்ந்துபோகிறான். ஓர் எல்லையில் விலகிக் கொள்கிறான். ஆகவேதான் தலைவான ஏற்றுக்கொண்டவனை தொண்டன் சிலசமயம் வசைபாடுகிறான், வெறுக்கிறான், புண்பட்டுவிலகிச் செல்கிறான்

எழுத்தாளனுடனான உறவில் அந்தவகையான உணர்வுகளுக்கே இடமில்லை. இந்தக்கருத்து ஏற்பில்லை, இந்த படைப்பு எனக்கு சிறப்பாகப் படவில்லை என்பதற்கு அப்பால் அதில் நிலைபாடுகள் இல்லை. எழுத்தாளனுடன் முரண்படலாம். அம்முரண்பாட்டை அவனுக்கு தெரிவிக்கலாம், தெரிவிக்காமல் நாமே பேசி வளர்த்தும்கொள்ளலாம். அதெல்லாமே எழுத்து- வாசிப்பு என்னும் இயக்கத்தின் பகுதிகள்தான். அவ்வாறுதான் நாம் அனைவருமே வளர்கிறோம்

சுந்தர ராமசாமியிடம் எனக்கு கடுமையான முரண்பாடுகள் இருந்தன. ஞானியிடம் இன்னும் கடுமையான முரண்பாடுகள் இருந்தன. ஆற்றூரிடம் முரண்பாடே இல்லை.நித்யா சொன்ன பலவற்றை நான் அன்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் விவாதித்திருக்கிறேன். முரண்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் மீதான மதிப்பை இழந்திருக்கிறேனா? இல்லை.

ஆனால் என் முதிர்ச்சியின்மையால் அன்று நான் எல்லைமீறியதுண்டு. கடுஞ்சொற்கள் பேசியதுண்டு. கடுமையாக எழுதிவிட்டதும் உண்டு. இன்றைக்கு யோசிக்கும்போது சுந்தர ராமசாமியுடனான உறவில் நான் உகந்தமுறையில் நடந்துகொள்ளவில்லை என்று உணர்கிறேன். அந்தக் குற்றவுணர்ச்சி நீடிக்கிறது. என் அப்பா, சுந்தர ராமசாமி இருவருக்கும் நான் நியாயம் செய்யவில்லை.

எழுத்தாளர்களை அல்ல எவரையுமே மாற்றுக் கருத்துக்களின் பொருட்டு விலக்குவதும் மதிப்பை ரத்துசெய்வதும் முதிர்ச்சியின்மை.அதன்பொருட்டு கடுஞ்சொல் உரைப்பது நம் தரப்பின்மேல் நமக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. மதிப்பிற்குரியவரின் மாற்றுக்கருத்து வேறு. இயல்பிலேயே நம் மதிப்பிற்கு உரியவர்கள் அல்லாதவர்களின் தரப்பு வேறு. நான் இந்த வேறுபாட்டை எப்போதுமே அடிக்கோடிட்டுச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

நாம் மதிப்பவர் தன்னுடைய சில கொடைகளுக்காகவே அம்மதிப்பை அடைகிறார், அவர் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் அந்த கொடைகள் இல்லாமலாவதில்லை. நம் அகம் தொட்ட ஆசிரியன் எந்நிலையிலும் நம்முடைய ஒரு பகுதிதான். இளமையில் நாம் சாப்பிட்ட தாய்ப்பாலை இன்று மறுத்துவிடமுடியுமா என்ன? நம்மை ஆட்கொள்ளும் எழுத்தாளன் நம் அகமாக மாறிவிடுகிறான். அவனுடன் நாம் கொள்ளும் உரையாடல் நாமே நம்முடன் உரையாடுவதுதான்

அவ்வப்போது நாமே நம்மை நிராகரித்துக்கொள்ளவும் செய்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைகுணங்குடியார்
அடுத்த கட்டுரைநிறைவில்…