நூற்பு -சிறுவெளிச்சம்

அன்பு நிறைந்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,

ஒரு நல்ல செய்தி…

உள்ளுணர்வின் சொல்லுக்கு செவிமடுத்து தீவிரமாக செயல் நோக்கி பயணிக்கும்போது அது தரும் பாதை மிக கடினமனதாக இருக்கிறது. காரணம் நமக்கான பாதையை அது புதிதாக உருவாக்குகிறது. ஒவ்வொரு சவால்களையும் கடந்த பிறகு அடையும் மன நிறைவு பிரம்மாண்டமானது. அப்படியான  மன நிறைவின் சிறு வெளிச்சமாக கருதும் இச்செய்தியை உங்களிடத்தில் பகிர்வதில் பெரும்  மகிழ்வு.

முனைவர் திரு மனோஜ் குமார் தாஸ், இந்திய தகவல் தொழில்நுட்பக்கழகம் – குவாலியர்; முனைவர் திரு. ம.ச. பாலாஜி, நாட்டிங்ஹம் பல்கலைக்கழகம், நிங்போ – சீன வளாகம்; முனைவர் திரு. சந்தனா ஹெவேகே, ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – ஆஸ்திரேலியா; முனைவர் திரு. லிம்  வெங் மார்க், ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மலேசிய வளாகம்; ஆகிய பேராசிரியர்கள் இணைந்து தொகுக்கும்  புத்தகமான  “Social and Sustainability Marketing: A Casebook for Reaching Your Socially Responsible Consumers through Marketing Science” என்ற புத்தகத்திற்கான ஒரு பகுதியாக இடம் பெறும் நூற்பு பற்றிய கேஸ் ஸ்டடியினை, க்ரியா பல்கலைக்கழகத்தில் சந்தையியல் இணை பேராசிரியராக பணிபுரியும் திரு.சத்யநாராயணன் அவர்களின் பெரும் முயற்சியால் சமர்பிக்கப்பட்டு  அக்டோபர் 2ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்றவாரம்  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் கல்லூரி மாணவர்கள் படிக்கும் பாடப்புத்தகத்தில் நூற்பு பற்றியும் நூற்பின் பயணம் பற்றியும் இடம்பெறப்போகிறது. மாணவர்கள் கற்க்கும் கல்வியின் ஒரு அங்கமாக நூற்பும் பரிணமிக்கப்போகிறது என்பது இப்பயணத்திற்கான நோக்கத்தின் சிறு பகுதியை அடைந்ததுபோலவே இருக்கிறது.

நூற்பின் ஐந்தாம் ஆண்டின் தொடக்கம் பெரும் கனவுகளோடும் மனநிறைவுடனும் தொடங்கியுள்ளது. உண்மையிலேயே இது நூற்பின் பயணத்தில் ஒரு மைல்கல்தான். நூற்பு ஆரம்பிக்கும்போது குக்கூ காட்டுப்பள்ளியில் பிரார்த்தனை கூடத்தில் சிவராஜ் அண்ணன் சொன்ன “இன்னும் நாலு ஐந்து வருடம் கழித்து நூற்பு பற்றி ஆய்வு செய்வாங்க, நிறைய மாணவர்கள் நூற்பிற்கு வந்து அனுபவம் பெற்று போவாங்க, வேறொன்றாக மாறி நிற்கும்” என்று சொன்னது மெது மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறது.

ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு நீங்கள் வந்ததும்  அங்கு இருந்த நூற்பு அலுவலகத்தில் தீபம் ஏற்றி ஆசீர்வாதம் செய்ததும்,  உங்களுடைய அம்மா இராட்டை சுற்றியதை பற்றி சொன்ன அனுபவத்தையும் உங்களுடை சொல்லையும் அதில் ஆழ்ப்பொதிந்துள்ள நம்பிக்கையினையும் இத்தருணத்தில் இறுக பற்றிக்கொள்கிறேன்.

கடந்து வந்த தருணங்களும் அது தந்த வேதனைகளையும் நினைத்துப்பார்க்கிறேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் சொல்லும் “தொடர்ந்து நமக்கு விருப்பமான ஒன்றை நேர்த்தியாக செய்து கொண்டே இருப்பதுதான் ஒரே தீர்வு” என்பதை பரிபூரணமாக உணர்கிறேன். இந்த மனநிலையில் நிறைய எழுதலாம் என்றாலும் இயலவில்லை.

என் வாழ்வின் எல்லா வகையிலும் உடனிற்கும் எல்லோரையும் பாதம் பணிந்த நன்றியை வைக்கிறேன்.

எல்லோர்க்கும் எல்லா செயலும் கூடட்டும்…

வாழ்வின் என்றென்றைக்குமான நன்றிகளுடன்,

சிவகுருநாதன்.சி
fb: nurpuhandlooms
முந்தைய கட்டுரைகணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைதண்ணீர் -மூன்று கவிதைகள்