தெய்வம்- கடிதம்

ஐயா (எ) 95 வயது குழந்தை!

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எனது வணக்கம்!

இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.

பலதடவை பல்வேறு விஷயங்கள் குறித்து கடிதம் எழுத நினைத்திருக்கிறேன். என்றபோதும் ஏதோவொரு தயக்கம், எழுதாமல் விட்டுவிடுவேன். இம்முறை அவ்வாறு கிடையாது. காரணம், கடிதத்தின் பொருள் அப்படி.

நான்காண்டுகளுக்கு முன்பு தங்களது ‘தெய்வமிருகம்’ கட்டுரை முதல்தடவை வாசித்ததாக நினைவு. ஏனோ நேற்றிரவு முதல் அக்கட்டுரை திரும்பத் திரும்ப நினைவுக்கு வர, காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அக்கட்டுரையை தேடியெடுத்து மீண்டும் வாசித்தேன்.

நான்காம் வகுப்பு படிக்கையில் தங்களுக்கு பாலவாதம் வந்தது, அதற்காக உங்கள் தந்தை மேற்கொண்ட சிகிச்சை நடவடிக்கைகள் யாவும் கண்முன் காட்சியாக விரிய அதிலிருந்து மீள நீண்டநேரம் ஆனது. கூடவே, என் தந்தை குறித்த நினைவுகளும் வரிசையாக எழுந்தது.

அதிலும் குறிப்பாக கடந்தாண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, என் தந்தையின் 95-வது பிறந்தநாளுக்குப் பரிசாக அவர் பற்றி எழுதி வெளியிட்ட ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ நூல் குறித்த நினைவும் (இந்நூலினை கடந்தாண்டே தங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். கிடைத்திருக்கும் என நம்புகிறேன்), அதை புத்தகம் என்றால் என்ன என்று கூட அறியாத எங்கள் கிராமத்தின் மூத்த விவசாயியான என் தந்தையின் கரங்களில் பிறந்தநாள் பரிசாகத் தந்ததும், அப்படியோர் பரிசை சற்றும் எதிர்பாராதவர் வியப்பின் உச்சத்துக்குப் போய் மகிழ்வை வெளிப்படுத்தத் தெரியாமல் தவித்ததையும், அதனை புரிந்துகொண்டவனாய் பேச்சை வேறுபக்கம் திருப்பிவிட்டு, அங்கிருந்து புறப்படும்போது நூலின் முன்னுரையில் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயா குறிப்பிட்டிருந்த,

‘திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் தென்புறத்துக் கிராமமான திருவடத்தனூர், வடிவரசால் தமிழிலக்கிய வரைபடத்தில், இந்நூல் காரணமாகக் குறிக்கப் பெறுகிறது…’

எனும் வரிகளை சொன்னதும் மகிழ்வோடு கேட்டுவிட்டு,

‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது..’ என்றவர் கண் கலங்கியபடி சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது.

ஏனோ இதை உடனே தங்களிடம் பகிரவேண்டும் போலிருந்தது.

மிக்க அன்புடன்,

வடிவரசு

தெய்வ மிருகம்

முந்தைய கட்டுரைமழைப்பாடல் உரை  தண்டபாணி துரைவேல்
அடுத்த கட்டுரைகுணங்குடியார்