முகம்- கடிதம்

அன்றைய முகம்

அன்புள்ள ஜெ.,

‘அன்றைய முகம்’ கண்டூ..(டு வுக்கும் டூ வுக்கும் இடையில் ஒலிக்கும் இந்த டுவை எப்படி எழுதுவது?) சீனு வழக்கம் போல சிறப்பாகவே எழுதியிருந்தார். மென்சோகம்,மென்புகை,மென்போதை கலந்த ஒரு இனிய கானம். நடுவிலே மலையாள வேஷ்டியோடு, ‘தாமர பொய்கையில் வந்திறங்கிய ரூபவதியை’ பார்த்து ‘கஜல்’ பாணியில் கையை நீட்டிக்கொண்டு பாடும் மலையாள சகோ.ஜேசுதாஸ். அவருடைய ‘நிலை’யைப் பார்த்தவுடன் முதலில் தோன்றியது தன் மகன் விஜய் ஜேசுதாஸ் சினிமாவிற்கு வருவதை எதிர்க்கும் அவரின் தற்போதைய மனநிலை, அதை இந்தப் பாடலின் காட்சிகளில் இருந்து ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் பாடல் மட்டும் விஜய் ஜேசுதாஸ் கையில் மாட்டினால் ஜேசுதாசின் நிலைமையை நினைத்துக்கொண்டேன். பெர்முடாஸில், குடுமி முடிந்து கொள்ளாமல் வரும் புரோகிதர்களைப் போல மனதில் பதிய மறுத்தது தாசேட்டனின் முகம். அவரை நடிகராக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ‘நல்லாப் பண்ணினேன்னா அடுத்த படத்துல நீதான் ஹீரோ’ என்று டைரக்டர் சொல்லியிருப்பார் போல, ஜேசுதாஸிடம் அந்த முனைப்பு தெரிகிறது. தொடர்ந்து நடித்தாரா? தெரியவில்லை. ஒரு நல்ல நடிகர் கிடைத்திருப்பாரா? தெரியாது. பெரும் பாடகர் கிடைத்தது வரலாறு.

‘அரங்கேற்றம்’ ஷூட்டிங்கிலிருந்து நேரே வந்து கிருதா, மீசை மட்டும் வைத்துக்கொண்டு ஓரமாய் உட்காந்திருக்கும் கமலை யாரும் கண்டுகொள்ளலாம். நான் கண்டுபிடிப்பதற்குள் பாதி தீபாவளி முடிந்துவிட்டது. காரணம் மிக வேடிக்கையானது. நீங்கள் குறிப்பிட்டது போல ‘2.4’ ல் அதாவது 2.40 ல் பார்த்தபோது ‘Make Love Not War’ என்ற பதாகைதான் கண்ணில் பட்டது. நீங்கள் ஜேசுதாசுக்கு ‘நேர் பின்னால்’ என்றதால் ஒரு வழியாக ‘2.04’ க்கு வந்து பார்த்தால் சின்னி ஜெயந்தின் சித்தப்பாபோல ஒருவர் இருந்தார். படம் வந்தது 73ல். என்றால் 80 களின் தமிழ் முன்னணி நடிகர்களை மனதில் கொண்டுவந்து ‘மார்பிங்’ செய்து பார்த்தேன். சித்தப்பாவோடு யாரும் பொருந்தவில்லை. ஒரு வேளை மனோகர் கே.ஜெயனா, ரகுவரனா என்று பார்த்தால் வயது பொருந்தவில்லை. தீபாவளியன்று காலை முதல் கைபேசியையே பார்த்துக் கொண்டு மனைவியிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம். ‘கமலா? பாரத் கோபியா? வள்ளியூரானா?’ என்று சீனுவுக்குப் பிங்கினேன். ‘சார் சொன்ன டயத்துல ஒருத்தர்தான் இருப்பார்’ என்றார். ‘சேதுமாதவன் கதாநாயகனாக வாய்ப்பளித்தார்’ என்றவரி மனதில் ஒலிக்கவும், 73 க்குப் பிறகு வந்த சேதுமாதவனின் படங்களை ‘நெட்’டில் தேடி, கன்னியாகுமாரியைக் கண்டவுடனேதான் தெரிந்தது ‘நம்மவர்’ என்று. தேர்வுகளில் எளிமையான கேள்விகளை ‘இந்த லச்சணத்தில்’ எதிர்கொண்டிருந்தால் மட்டுமே ‘இந்த’ இடத்திற்கு வரமுடியும் என்பதும் புரிந்தது.

கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் ‘எத்தனையோ படம், சின்னச் சின்ன வேஷம். படம் வருமான்னு கூடத் தெரியாது. ஒரு படத்துல காக்கா ராதாகிருஷ்ணன் புரோகிதர். ஆத்துல குளிச்சிட்டிருப்பாரு. தண்ணிக்கடில நீந்திப் போயி, அவரு கோவணத்த உருவிட்டு வந்துருவேன். மூஞ்சி கூடத் தெரியாது’. எழுதி எழுதி மேற்செல்லும் விதி யாரை எங்கு வைத்து விளையாடும் என்று யாருக்குத் தெரியும். தனுஷ் நடிக்க ஆரம்பித்தபோது ‘நீ கமல் பொண்ணோட டூயட் பாடுவ, ரஜினி பொண்ண கல்யாணம் பண்ணுவ’ ன்னு யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்தானே. இந்தப் பாடலில் வெளிச்சம் கூட விழாத அரையிருட்டில் ‘இந்தாள் இருக்குற எடத்துல நான் இருந்திருந்தா’ என்று ‘நடிகர்’ ஜேசுதாஸைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் கமலிடம் ‘நீ ஹீரோவா நடிக்க, இந்தாள் ஒரு நூறு பாட்டாவது உனக்குப் பாடுவான்’ என்று யாராவது சொல்லியிருந்தாலும் அதேபோலச் சிரித்திருப்பார்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்     

முந்தைய கட்டுரைகொற்றவை- கடிதம்
அடுத்த கட்டுரைகுப்பத்துமொழி