மலையாளத்தில் ‘தட்டுபொளிப்பன்’ என்று ஒரு சினிமாக்கலைச்சொல் உண்டு. ceiling fall அல்லது bringing the roof down என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொலவடையின் மொழியாக்கம். உச்ச ஓசையில் பேசி கூரையின் அடிப்பூச்சை உதிரச்செய்வது. இது ஆவேசமான வசனங்களுக்குரிய சொல்.
தமிழில் பராசக்தி படம் வருவது வரை தட்டுபொளி அவ்வளவு ஆழமாக இருக்கவில்லை. அதுவரை சினிமா பெரும்பாலும் பாட்டையே நம்பியிருந்தது. வசனத்துக்கு வந்தபோதுகூட அது ஒருவகையான பழைய தெருக்கூத்துத்தன்மை கொண்டிருந்தது. இன்று, முன்பு சந்திரலேகா போன்ற படங்களில் கி.ரா, கொத்தமங்கலம் சுப்பு போன்றவர்கள் எழுதிய வசனங்களை பார்க்கையில் அவை சுருக்கமாகவும் மெல்லிய நகைச்சுவையுடனும் இருப்பதையே காணமுடிகிறது.
வசனத்திற்காக புகழ்பெற்ற இளங்கோவனின் வரிகள்கூட இலக்கிய நெடி கொண்டிருந்தாலும் சுருக்கமானவைதான். முழக்கமிடும் வசனங்களை பராசக்திதான் அறிமுகம் செய்தது. அது ஒரு வசனயுகத்தை தொடங்கிவைத்தது. சிவாஜி கணேசன் அதன் முதன்மை முகம்.
தட்டுபொளி வசனங்களுக்கு நம் தெருக்கூத்துகளிலும் நாடகங்களிலும் இடமில்லையா? இல்லை. அவை நாடகமேடையிலிருந்து தமிழ்ச் சினிமாவுக்குள் வரவில்லை. அவை அரசியல் மேடைகளிலிருந்து நேரடியாக தமிழ்ச் சினிமாவுக்குள் வந்தவை.
இங்கே ஜனநாயகம் அறிமுகமானபோது கூடவே அறிமுகமான கலை மேடைப்பேச்சு. நம்மில் பலர் எண்ணுவது போல அது இங்கே முன்பே இருந்த ஒன்று அல்ல. அரசவையில் அலங்கார, முறைமைச்சொல் பேசும் மரபு நமக்கு இருந்தது. குடி அவை, குல அவைகளில் நெறிவிவாதம் செய்யும் பேச்சும் இருந்தது. ஆனால் திரளான மக்களை பார்த்து பேசுவதென்பது இருக்கவில்லை.
ஏனென்றால் இங்கே அப்படி ஒரு மக்கள் திரள் இருக்கவில்லை. மக்கள் என நாம் இன்று சொல்லும் திரள் என்பது நவீன ஜனநாயக யுகத்தின் உருவாக்கம். சாதிகள், குலங்கள், குடிகள் ஆகிய அடையாளங்களுக்கு அப்பால் மக்கள் தனிமனிதர்களாக தங்களை உணர்ந்து, அவ்வண்ணமே அனைவரும் ஒன்றாகத் திரண்டு ஓரிடத்தில் சேர்வது ஜனநாயகத்தின் ஆக்கம்.
அதற்குமுன் திருவிழாக்கள் இல்லையா என்று கேட்கலாம். திருவாரூர் தேர் போல இன்னமும் பழைய முறைமைகள் கடைப்பிடிக்கப்படும் விழாக்களுக்குச் சென்றால் காணலாம், அங்கே மக்கள் சாதிகளாகவும் ஊர்களாகவும் திரண்டு சிறுசிறு குழுக்களாகவே வந்து பங்கெடுக்கிறார்கள். கண்ணுக்கு முன் பெருந்திரள் நின்றிருக்கும். ஆனால் அவர்கள் பலநூறு குழுக்களின் திரளே ஒழிய தனிநபர்களின் திரள் அல்ல.
அது இயல்பு. சென்ற யுகம் நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையிலானது. குலங்கள், குடிகள், ஊர்களென பிரிந்திருந்த பழங்குடி மக்களை அது மேல்கீழ் அடுக்காக திரட்டி இறுக்கி நிறுத்தி அந்தச் சமூக அமைப்பை உருவாக்கிக்கொண்டது. அதன்மேல் ஆலயங்கள், விழாக்கள், படைகள், அரசுகள் உருவாகி நீடித்தன.
ஜனநாயகம் மக்களை தனிமனிதர்களாக உணரச் செய்தது. அந்த தனிமனிதனை நோக்கி அது பேசியது. அவர்களை தொழிலாளர், விவசாயி, மாணவர் என்னும் புதிய அடையாளங்களின் அடிப்படையில் தொகுத்தது. கொள்கைகளின் கனவுகளின் அடிப்படையில் திரட்டியது. அவர்களிடம் பேச அது கண்டடைந்த முதற்பெரும் ஊடகம் மேடைப்பேச்சு.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேடைப்பேச்சுக் கலை எப்படி இங்கே வந்து நிலைகொண்டது என்பதை தன்வரலாறுகளினூடாக அறியலாம். தமிழில் தி.செ.சௌ.ராஜன் [நினைவலைகள்], க.சந்தானம் [ எனது வாழ்க்கை], நாமக்கல் கவிஞர் [என் கதை], கோவை அய்யாமுத்து [எனது நினைவுகள்], திருவிக [வாழ்க்கைக் குறிப்புகள்] போன்றவை குறிப்பிடத்தக்கவை. கேளப்பன், கே.பி.கேசவமேனன், இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, ஏ.கே.கோபாலன், செறுகாடு போன்றவர்களின் தன்வரலாறுகளைச் சொல்லலாம்.
மேடைப்பேச்சு இங்கே மூன்று ஊற்றுமுகங்களைக் கொண்டிருந்தது. இங்கே அதற்கு முன்பே இருந்துவந்த கதாகாலக்ஷேப முறை இங்கிருந்த பொதுப்பேச்சில் ஆழமாக ஊடுருவியிருந்தது. நீதிமன்ற வழக்காடுதல் பின்னர் மேடைப்பேச்சாக மாறியது. கல்வித்துறையில் பேராசிரியர்களின் வகுப்புகள் மேடைப்பேச்சுக்கு பயிற்சிகளாக அமைந்தன. பிந்தைய இரண்டிலும் தகுதியான ஆங்கிலேயர் இருந்தனர். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியர் பயிற்சிபெற்றனர். தேவாலயத்தில் பாதிரியாரின் சொற்பொழிவுகள் இங்கே முன்னுதாரணமாக அமைந்தன என்றாலும் பெரிதாக அவை இந்துக்களை சென்றடையவில்லை.
தொடக்க காலங்களில் மேடைப்பேச்சாளர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்கள் அல்லது ஆசிரியர்களாகவே இருந்தனர். அவர்களே மெல்ல அரசியல்களத்துக்கு வந்தனர். தொடக்ககால அரசியல்கூட்டங்களெல்லாம் கூட பிரிட்டிஷ் முறைப்படி தலைவர் தேர்வு [அத்யக்ஷர் அல்லது அக்ராசனர் தேர்வு], முன்மொழிதல் [பிரேரணை], வழிமொழிதல் போன்றவற்றுடன் நடைபெற்றன. நீதிமன்றம் போலவே உபச்சாரச் சொற்கள் நிறைந்திருந்தன.
அன்று மேடையில் பேசுபவர்கள் மிக மிக மதிப்புக்குரியவர்களாக இருந்தனர். அவர்கள் இரண்டு பெரும்பிரிவுகளாக மாறினர். ஒருசாரார் மரபுசார்ந்த கருத்துக்களை மேடையில் பேசலாயினர். மதம், மரபிலக்கியம் ஆகியவற்றைப் பேசுபவர்களுக்கு மிகப்பெரும் மதிப்பு இருந்தது.
தமிழ்ச்சூழலில் சைவப்பேச்சாளர்கள் மிகப்பெரிய அலை என எழுந்தனர். அவர்களில் மறைமலை அடிகள் போன்றவர்கள் உச்ச ஆளுமைகளென பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்தனர். அவர்களின் தொடர்ச்சி இன்றுவரை தமிழ்ச்சூழலில் நீடிக்கிறது.
இன்னொரு பிரிவினர் புதியசிந்தனைகளை முன்வைத்தவர்கள். ஜனநாயகத்தின் அடிப்படைகளான தனிமனிதன் என்னும் கருத்துரு அவர்களால் முன்வைக்கப்பட்டது. தனிமனித உரிமை, மனித சமத்துவம், பொதுநீதி, மக்களுக்கு அரசில் பங்கு ஆகியவை அவர்களால் முன்வைக்கப்பட்டன.
மக்களை நோக்கி அத்தனை அறிஞர்கள் நேரடியாகப் பேசிய ஒரு காலகட்டம் வரலாற்றில் எங்குமே இருந்ததில்லை. மேடைப்பேச்சு ஒரு பேரியக்கமாக எழுந்தது. மக்கள் பேச்சுக்களை கேட்க ஆயிரக்கணக்கில் கூடினர். அவர்களை இன்புறுத்தும் கலையாகவும் கற்பிக்கும் ஊடகமாகவும் மேடைப்பேச்சு மாறியது.
ஜனநாயக விழுமியங்கள் அரசியல் கிளர்ச்சியை உருவாக்கின. அரசியல் கிளர்ச்சி மேடைப்பேச்சை மேலும் வளர்த்தது. மக்களை நோக்கி நிதானமான, பயின்ற மொழியில் பேசுபவர்களை விட மக்களை கிளர்ந்தெழச்செய்யும் பேச்சுக்களை பேசுபவர்கள் மிகுந்தனர். கோவை அய்யாமுத்துவின் வாழ்க்கை வரலாற்றில் அவர் எப்படி ஒரு கிளர்ச்சிப்பேச்சாளராக இருந்தார் என்பதைக் காண்கிறோம்.
அந்த கிளருணர்வு மேடைப்பேச்சு ஐம்பதுகளில் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் கொந்தளிப்பின்போது உச்சத்தை அடைந்தது. ஏனென்றால் நாற்பதுகளில், சுதந்திரப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில், அடித்தள மக்கள் அரசியலுக்கு வந்தனர். சுதந்திரத்திற்குப் பின்பு அவர்கள் மேலும் மேலும் கிளர்ந்து உரிமைகளுக்காக குரலெழுப்பினர். மதம், மொழி சார்ந்த பூசல்களும் பகைமைகளும் வலுவாயின.
காந்திய யுகத்தின் முடிவுக்குப்பின் நேர்நிலை அரசியல், நம்பிக்கை அரசியல் வலுவிழந்தது. எதிரியைச் சுட்டிக்காட்டி மக்களை கொந்தளிக்கவைக்கும் அரசியல் உருவாகி வலுவடைந்தது. மக்களை திரட்ட உணர்ச்சிகளை தூண்டும் பேச்சு தேவைப்பட்டது. மேடைப்பேச்சு உணர்ச்சி நாடகமாக, மொழிவிளையாட்டாக மாறியது.
அந்த மேடைப்பேச்சு பின்னாளைய நாடகங்களுக்குள் நுழைந்தது. பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா, எஸ்.டி.சுந்தரத்தின் கவியின் கனவு அதில் வரும் மேடைப்பேச்சுக்களுக்காகவே புகழ்பெற்றவை.
அந்த மேடைப்பேச்சு, நாடகம் வழியாக, சினிமாவுக்கு வந்ததுதான் பராசக்தியின் வசனவெடிப்பெருக்கு. சிவாஜி நீதிமன்றத்தில் நின்று பேசுவது மேடைப்பேச்சுதான். நீதிமன்றத்திலிருந்து பேச்சு மேடைக்கு வந்து திரும்ப நீதிமன்றத்துக்கே சென்றது. பிரிட்டிஷாரின் எந்த நீதிமன்றத்திலும் நீதிமன்ற நடைமுறை பயின்று முறைப்படி அங்கீகாரம் பெறாத எவரும் பேசுவதற்கு அனுமதி இருக்கவில்லை. இன்றும் அதுவே நீதிமன்ற நெறிமுறை.
ஆனால் பராசக்தி அதை பொருட்டாகவே கருதவில்லை. அதை எழுதியவர்களுக்கு அது தெரிந்திருக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு. மக்களும் நீதிமன்றத்தில் குற்றவாளியோ சாட்சியோ பேசமுடியாது என்னும் உண்மையை அறிந்திருக்கவில்லை என்பதை அதன்பின் சென்ற எழுபதாண்டுகளில் தமிழில் வந்த சினிமாக்கள் காட்டுகின்றன. அவர்கள் விரும்பிய நீதிமன்றத்தை பராசக்தி காட்டியது.
தட்டுபொளி தமிழ் சினிமாவில் எப்போதும் இருந்தது, இன்று சற்றே குறைந்திருக்கிறது. சிவாஜிக்குப்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், அஜித், விஜய் எல்லாருமே அதை நிகழ்த்தியிருக்கிறார்கள். விசு வேறொருவகையில் உருவாக்கியிருக்கிறார்.
தட்டுபொளியை நாம் சினிமா என்று பார்த்தால்தான் சிக்கல். அதை சினிமாவுக்குள் ஒரு மேடைப்பேச்சு, ஒரு நாடகம் என்று பார்த்தால் ரசிக்கக்கூடியதுதான். நம் சினிமா என்பது தூயசினிமா என்ற வடிவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு பெரிய ஆறுபோல எல்லா ஓடைகளையும் இழுத்து இணைத்துக்கொண்டு பெருகிச்செல்கிறது அது. அதில் நாடகம், தெருக்கூத்து, சர்க்கஸ், இசை, இலக்கியம் எல்லாமே கலந்துள்ளன.
மலையாளத் தட்டுபொளி சினிமாக்கள் இன்றும் பெரும் ரசிகர்பட்டாளத்தைக் கொண்டவை. மலையாள அரசியல்மேடைப்பேச்சின் மிகைநாடக வடிவங்கள் அவை. நேரடியாகவே அவை அரசியல்பேசுகின்றன. பலசமயம் கொஞ்சம் பெயர்மாற்றி உண்மையான மனிதர்களையே கதாபாத்திரங்களாகக் காட்டுகின்றன. மம்மூட்டி, சுரேஷ்கோபி இருவருமே அத்தகைய கதாபாத்திரங்கள் வழியாக வென்றவர்கள்.
ஆனால் அதிலும் உச்சம் மோகன்லால். மற்ற இருவராலும் ஆவேசம், கோபம் கசப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த முடிந்ததே ஒழிய நையாண்டியும் ஏளனமும் ஊடே கலக்கவிட முடியவில்லை. மோகன்லால் மிகைநாடக காட்சியில்கூட அவருக்கான நம்பகமான உணர்வுநிலைகளை வெளிப்படுத்துகிறார்.
ஜோஷி இயக்கிய படத்திலுள்ளது இக்காட்சி. இதில் அமைச்சராக நடித்திருப்பவர் எம்.எஃப்.வர்கீஸ் என்னும் நாடகநடிகர். ஆழ்ந்தகுரல் கொண்டவர். கிட்டத்தட்ட மோகன்லாலுக்கு இணையான காட்சிப்பங்களிப்பு அவருக்கும் அளிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது – தமிழில் நடிகர்கள் அதை இன்று ஏற்கமாட்டார்கள், அவர்களின் ரசிகர்களும் ஏற்பதில்லை. கேரள அரசியல்வாதி கே.எம்.மாணியின் சாயல்கொண்ட கதாபாத்திரம் அது.
இந்த தட்டுபொளி வசனத்தில் உள்ள ஒரு சிறப்பம்சம் தன்பெயரை தானே சொல்வது. எம்.டி.வாசுதேவன் நாயரின் பாணி அது. தட்டுபொளி வசனங்களை அவர் எழுதியதில்லை – ஆனால் கூர்மையான உணர்ச்சிகொண்ட வசனங்களை எழுதியிருக்கிறார். அதன்பின் ரஞ்சித் அந்த பாணி வசனத்தை முன்னெடுத்து வளர்த்தார். அதன் உச்சம் ரஞ்சி பணிக்கரில் வெளிப்படுகிறது. இது மிகைநாடகம் மிகைச்சொற்பெருக்கு ஆகியவற்றால் ஒரு தெருநாடகத்தின் தீவிரம் கொண்டிருக்கிறது. கொஞ்சம் மனம் விலகினால் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது.