தண்ணீர் -மூன்று கவிதைகள்

vee

மலையாளக் கவிஞர்களில் படிமங்கள் வழியாக மட்டுமே பேசுபவர் வீரான்குட்டி. வழக்கமான அரசியல்களைப் பேசுவதில்லை. வழக்கமான உறவுக்கொந்தளிப்புகளைப் பேசுவதில்லை. தனிமையான மெல்லிய முணுமுணுப்பு போன்றவை அவருடைய கவிதைகள். ஆன்மிகமான கண்டடைதலை மிக எளிமையான புறநிகழ்வுகளில் நிகழ்த்துபவை

தண்ணீர்! தண்ணீர்!

சாவு
நெருங்கி வந்துவிட்ட ஒருவர்
தண்ணீர் தண்ணீர் என்று
தன் தாகத்தை
இறுதியாக வெளிப்படுத்தவில்லை

விட்டுப்போக
மிகத் துயரளிக்கும்
ஒன்றை
மெல்ல
வரிசையாக
நினைவுகூர்கிறார்

வெண்கொக்கின் படம்

மேகத்தில்
யானையின்
முயலின்
வடிவங்களை கற்பனைசெய்வேன்
சிலநேரங்களில் குருவியை

வீட்டுக்கு அருகிலுள்ள
வயல்வெளியின் அருகே
ஆழத்தை உற்றுநோக்கி
அமர்ந்திருக்கும் கொக்கின் படத்தை
பிடித்து வைத்திருந்தது குளம்

வேனிற்காலத்தில் குளம் வற்றியது
கொக்கை பிறகு அது பார்க்கவேயில்லை
அந்தப் படத்துக்கு என்ன ஆகியிருக்கும்?

இப்போது
சிலநேரங்களில்
மேகங்களில்
என்னால் பார்க்கமுடிகிறது
வெள்ளைக்கொக்கின் படம்

அழைப்பு

மலைக்குமெலிருந்து கடலோரத்துக்கு
மாலையிடப்பட்டு அழைத்துவரப்பட்டவள்
எத்தனைநாள் அங்கே வாழமுடியும்?

கடல்
அலைகளால்
சிறு குன்றுகள் சமைத்து
அவளுக்கு சிரிப்புமூட்டப்பார்க்கும்

மேகங்கள்
மலைகளாக உருமாறி
அவள்முன்
மிதந்துசெல்லும்

சூரியன் அவளுக்காக
மலைச்சரிவின் அதே வண்ணங்களால்
மணற்குன்றுகளை
ஒளிபெறச்செய்துகொண்டிருக்கும்

அப்போதும்
சமவெளிகள் திருப்பி அனுப்பும்
தன் அழைப்புகளுக்காக
அவள் செவிகூரலாம்

உறக்கத்தில் முலைகளைத் தடவி
இரு குன்றுகளுக்கு நடுவே
ஓடுவதாக கற்பனை செய்யலாம்

ஒருநாள்
திரும்பி ஓடி
அடிவாரத்தை அடைந்து அவள் நிற்பாள்

அப்போது
மகளை ஏற்றுக்கொள்ள
எங்கும் செல்லாமல்
அங்கேயே இருங்கள்
மலைகளே மலைகளே!

வீரான் குட்டி கவிதைகள்

வீரான் குட்டி கவிதைகள்

முந்தைய கட்டுரைநூற்பு -சிறுவெளிச்சம்
அடுத்த கட்டுரைஇதிகாசங்களின் களம்