இதிகாசங்களின் களம்

வணக்கம் ஜெ

படக்கதைகள், திரைப்படங்கள் பின்னர் சிறு சிறு கதைகள் என ராமாயணமும் மகாபாரதமும் அறிந்தேன். சமீபத்தில் பல நாட்டினவரும் ராமாயணத்தை அவர்களின் பாணி இசை நடனத்துடன் நிகழ்த்திகாட்டிய இந்த காணொளியை பார்க்க நேர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக தாய் நாட்டின் ராமாயண வடிவமாகிய ramakien பற்றி படித்ததில் இவ்வோவியங்கள் என்னை ஈர்த்தன. கிட்டத்தட்ட 2km வரை நீளும் சுவர்களில் வரைந்த mural ஓவியங்கள். வ்வாட் ஃபிரா கே (Temple of Emerald Buddha) என்றழைக்கப்படும் கோவிலின் உள் சுற்றுச்சுவர்களில் 1783ம் ஆண்டு வரையப்பட்டவை.

https://www.photodharma.net/Thailand/Wat-Phra-Kaew/Wat-Phra-Kaew.htm

அனுமன் வாயு மைந்தன் என குறிக்க அவன் உடல் முழுதும் காற்றின் சுழல்களாக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த அனுமன்களின் இவ்வோவியத்திற்கு இரண்டாம் இடம். மூத்தவன் தமிழகத்தில் செய்து இப்போது met museum இல் இருக்கும் இந்த அற்புத சிலை.

இதை ஒட்டி சிந்திக்கையில் ராமாயணத்தில் இருந்து நான் சிறுவயதில் பெற்றது ஒரு idealized king/man, மற்ற கதை மாந்தர்களும் அவ்வாறே idealized versions. அவர்களுடன் என்னை இணைத்துக்கொள்ள இயலவில்லை, தொலைவில் வைத்து வணங்கமட்டுமே முடிந்தது. இன்றளவும் என்னுள் அது அவ்வாறே நீடிக்கின்றது. ஜடாயுவும் அனுமனும் மட்டும் எப்படியோ என்னுள் வந்துவிட்டிருக்கிறார்கள்.

075 Phra Ram and Nang Sida in Hanumans Mouth, Wat Phra Kaew, Bangkok

முதலில் நாம் அறிவது இப்பிம்பங்களை மட்டுமே. காந்தியை மகாத்மா என போற்றவேண்டும் என்ற பிம்பத்தையே முதலில் அறிந்தேன். அப்பிம்பத்தைகொண்டே அறியமுயன்றதால் அவரை வெறுக்கவும் துவங்கினேன். தந்தையின் நோய்ப்படுக்கை அருகே இல்லாமல் புதுமனைவியிடம் சென்றவர், மகனின் நோய்படுக்கையிலும் அசைவம் தரமாட்டேன் என விடாப்பிடியாக இருந்தவர் மஹாத்மாவா. வெறுப்பை சுலபமாக வளர்க்க இவ்வம்பு பேச்சுகள் என்னை சுற்றி நிறைய இருந்தன. என் ஆசிரியர் ஒருவரே தொடர்ந்து காந்தியை மட்டமாக பேசி வந்தார், That old man slept with girls, என்பார். பின்னர் காந்தியின் எழுத்து வழியாகவே அவரை கண்டடைந்தேன். உங்களின் உரைகள் உதவியாக இருந்தன. அந்த halo அவரின் தலைக்கு வெளியேஅல்ல உள்ளே உள்ளது என அறிந்தேன். காந்தி என்ற மனிதரை அறிந்தேன்.

அதேபோல் மகாபாரதத்தின் மாந்தர்களுடன் என்னை சுலபமாக பொருத்தி அறிந்துகொள்ள முடிந்தது. குருபூர்ணிமா உரையாடலில் சொன்னதுபோல பூரிசிரவஸ் என்னை கவர்ந்த பாத்திரம், எளிதில் நான் அணுக முடிந்தது. அவனுடன் நான் ஒரு பெரும்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அர்ஜுனனுடன் காண்டீபத்திலும் கிராதத்திலும் அகத்திலும் புறத்திலும் பயணித்திருக்கிறேன், அப்பயணங்களின் தேடல்களின் உச்சமாக அவனுக்கு கீதை உரைக்கப்பட்டது. கண்ணனை குழந்தையாக, தமயனாக, களித்தோழனாக, அரசனாக, சூழ்மதியாளனாக, ஞானியாக அணுகி அறிகிறேன்.

பாரதத்தை முழுதாக வாசித்த என் பாட்டிக்கு பூரிசிரவஸ் நினைவிலிருப்பானா என தெரியவில்லை. ஆனால் வெண்முரசு வாசித்த எனக்கு அவன் அணுக்க தோழன். இந்த கட்டுடைப்பும் மீளுருவாக்கமும் நடந்திராவிட்டால் எனக்கும் அவன் ஒற்றை வரியில் வந்து சென்ற ஒருவனாக இருந்திருப்பான். ராமாயணமும் காந்தியும் போல பாரதத்தையும் வணங்கியிருப்பேன் அறிந்திருக்கமாட்டேன்.

ஸ்ரீராம்

அன்புள்ள ஸ்ரீராம்

நான் கீழைநாட்டு சிற்பங்களில் எல்லாம் மகாபாரதமும் ராமாயணமும் அவர்களின் பெருமைமிக்கச் சின்னங்களாக முன்வைக்கப்பட்டிருப்பதை தொடர்ச்சியாக காண்கிறேன். அவை அவர்களின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கின. ராமாயணமும் மகாபாரதமும் இல்லாமல் இந்தோனேசியப் பண்பாடு இல்லை. தாய்லாந்துப் பண்பாடு இல்லை. கம்போடியப் பண்பாடு இல்லை.

ஆனால் அப்பண்பாடுகளை அவர்களின் நிலங்களிலிருந்து அகற்றும்பொருட்டு தொடர்ச்சியான பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. பெரும்பாலும் பொய்ப்பிரச்சாரங்கள். அவர்களின் இழிவுகளுக்கெல்லாம் அவையே காரணம் என்பதுபோல. அவை அங்கே வந்தடைந்தவை, அவர்களுக்கு அன்னியமானவை என்று சொல்லப்பட்டன.

ஆனால் அவை நீங்கிய இடங்களில் அம்மக்களுக்குத் தொடர்பே இல்லாத இஸ்லாம் மதமும் கிறிஸ்தவமும் கொண்டுவந்து நிறுவப்பட்டன. முன்பு அங்கிருந்த இதிகாசங்களுக்கு எதிராக பேசிய நவீன ‘பகுத்தறிவு’ அறிவுஜீவிகள் அதை ஆதரித்தனர் அல்லது அமைதியாயினர். அந்த மதங்கள் வேரூன்றிய பின் அவர்கள் முற்றிலும் விலக்கப்பட்டனர்

சென்ற ஐம்பதாண்டுகளாக இந்நாடுகளில் பௌத்தத்தை ’வில்லன்’ ஆக மாற்ற, அதை அகற்ற மிகப்பெரிய அளவில் முயற்சிகள் செய்யப்படுகின்றன. பணம் பெய்யப்படுகிறது. இலங்கை, மலேசியாவில் எல்லாம் சைவம் என்பது ஒரு தனிமதம் என்பதை பிரச்சாரம் செய்து அதை இதிகாச, புராணப்பின்னணியில் இருந்து பிரித்து அதன் பண்பாட்டு- குறியீட்டு அடையாளத்தை அழிக்க மிகப்பிரம்மாண்டமான முயற்சிகள் செய்யப்படுகின்றன

அப்பட்டமாகவே தெரிவது , இவையனைத்துக்கும் பின்னணியில் இருப்பவை சர்வதேச மதமாற்ற நிறுவனங்கள். இவற்றைச் சொல்பவர்களுக்கு பணத்துக்கு ஊடக ஆதரவுக்கு பஞ்சமே இல்லை. இவற்றை எதிர்ப்பவர்கள்தான் தரையில் நிற்கவேண்டியிருக்கிறது.

என்ன ஆச்சரியமென்றால் இவற்றைச் சொன்னதுமே தொடர்பே அற்ற, நம்பமுடியாத இடங்களில் இருந்தெல்லாம் தாக்குதல் வருகிறது. உதாரணமாக, கீழைநாட்டுப் பண்பாட்டின் அடித்தளமாக ராமாயணம் திகழ்வதை நாம் சொன்னால் ஒரு மரபான ராமாயண அறிஞர் கிளம்பிவந்து நம்மை வசைபாடி, நாம் சொல்வதில் சில பிழைகள் சொல்வார். அவர் ஏன் அதைச் சொல்கிறார் என்று கூர்ந்து பின்னால் சென்றுபார்த்தால் அவரும் அந்த மாபெரும் வலையில் அறிந்தோ அறியாமலோ உறுப்பினர்தான் என்பதை காண்போம்

வரலாற்றில் இதற்கிணையான கருத்தியல் வலை இதற்கு முன்னால் பின்னப்பட்டதில்லை. ஒருபக்கம் முற்போக்கினர், இன்னொரு பக்கம் ஆசாரவாதிகள் இருவரும் சேர்ந்தே ஒன்றைச் செய்கிறார்கள். இன்று சைவத்தை அழிக்க எவரெல்லாம் பேசுகிறார்கள்? ஒருபக்கம் பகுத்தறிவுநாத்திகர். மறுபக்கம் அதிதீவிர சைவம் பேசும் ஆசாரவாதிகள் நெற்றியில் விபூதியுடன் வந்து சைவத்தின் தொன்ம அடிப்படையை அழிக்க முயல்கிறார்கள்

நீங்கள் அனுப்பிய இந்த படங்கள் ஏக்கத்தை அளிக்கின்றன. அழிக்கப்பட்டு மறைந்த பண்பாட்டின் சிதறுகள் இவை

ஜெ

முந்தைய கட்டுரைதண்ணீர் -மூன்று கவிதைகள்
அடுத்த கட்டுரைதீவிரவாதம், இலட்சியவாதம்- கடிதங்கள்