கணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒரு புரிதல் அனைவருக்குமே இருக்கலாம். நாம் அறிந்த ஒன்றில் கிடைக்கும் நெம்புகோலை வைத்துதான் அறியாத ஒன்றைத் துழாவ வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு தேசத்தில் நடக்கும் தாக்குதலைப் பற்றிக் கேள்விப்படுகையில் கூட ஒருவருக்கு அந்நாட்டைச் சேர்ந்த நண்பர்களின் உறவினர்களின் நினைவுகள் வருகிறது. அது அவர்கள் பிழைத்திருக்க என்ணியா தாக்குதலில் உள்ளாகியிருக்க எண்ணியா என்பது அவரவர் வழி.  ஆனால் அதன் மற்றொரு புறத்தை அறிய நமக்கு இருக்கும் தகவல்களைக் கொண்டே மனம் துழாவுகிறது. அந்தக் கணம் மனம் கொள்ளும் பாவனைகள் வியப்பானவை.

ஒன்றை தேடி அடையும் பொழுதில் அந்த இரு தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு என்பது இருப்பதில்லை. மலை உச்சியில் கல்லாய் சமைந்திருக்கும் ஒன்றை காண்பவனும்,  அந்த மலை உச்சியில் தானிருக்கும் இடத்திலிருந்து தன்னைக் காணவரும் அனைவரையும் காணும் அந்த சிற்பமும் மேலதிக வியப்பு ஏதும் கொள்வதில்லை. அந்த பயணமே அதை நோக்கித்தான். ஆனால் ஒரு மேஜையில் சுற்றிக் கொண்டிருக்கும் உலக உருண்டையின் மேல் விழுந்து விட்ட எறும்புக்கூட்டம் சிதறி ஓடுகையில் அது தன்னுடைய எந்த கூட்டாளியை எந்த தேசத்தில் எந்நிலையில் காணுமோ என்று ஆராய்வதில் ஒரு சுவாரசியம் உண்டு. அந்த ஒரு ஆர்வத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் உண்டாக்கிய வண்ணமே இருக்கின்றன.

கிரிக்கெட் சூதாட்டம் என்கிற ஒன்றை நினைத்தும் பார்த்திராத காலம் அது. என் நண்பனின் உறவினர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ச்சியாகப் பார்ப்பார். விடாது பார்ப்பவர். டெஸ்ட் கிரிக்கெட் மேட்ச்களைக் காண்பது ஒருவித சலிப்புதான். ஐந்துநாட்கள் விளையாடி டிரா என்று சொல்வதெல்லாம் பார்வையாளனுக்கு இழைக்கப்படும் அநீதியே என்பது எனது கருத்து. ஆனால் அவர் அட்டையும் தாளும் கொண்டு அமர்ந்து அதை சங்கேத எழுத்துக்களில் குறித்தும் வைத்திருப்பார்.  அதை வைத்து அவர் கணிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் பலித்ததும் இல்லை. ஆனாலும் அவர் குறித்த ஒன்று நினைவிருக்கிறது. ஒருமுறை பந்து வீச்சாளர் பந்து வீச முற்படும் போது ’இதை வலதுபுறம் அடிப்பான்; கவரில் இருக்கும் தடுப்பாளர் பாய்ந்து பிடித்து  அவுட் ஆவான்’ என்றார். அவ்வாறே நிகழ்ந்தது. அது ஆடுகளத்தில் கூட ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. வீரர்களே எதிர்பாராத ஒன்று. ஆனால் தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளியிலிருந்து பார்த்து வரும் அவருக்கு அந்தக் கணத்தில் அவருக்குள் தோன்றிய ஏதோ ஒன்று அதை சொல்லியது என்றார். அனால் அதற்குப் பின் அவர் சொன்ன எதுவும் பலித்ததும் இல்லை.  உலகெனும் மாபெரும் சூதாட்டத்தில்  ஒருமுறை நாம் ஆட்டத்தை உணர்ந்து விட்டோம் என்று கருதுகிறோம். ஆனால் அதன் அடுத்த திருப்பம் நம்மை இன்னும் அதிர்ச்சி கொள்ள வைக்கிறது. நல்வாய்ப்பாக மற்றொருமுறை அந்தக் கணத்தை அந்த நபர் முயற்சிக்கவும் இல்லை.

ஆனால், எழுத்தாளர் என்பவர் வெறும் பார்வையாளர் மட்டும் அல்ல. அவர் உள்ளிருப்பவரும் அல்ல. அனைத்தும் கலந்து இருப்பவர். ஒருவருடன் உரையாடும்போதே அவரிடம் தான் உண்மையாகத்தான் உரையாடுகிறோமா அல்லது அவர் தன்னிடம் சொல்வது எந்தளவு உண்மை என்று மனம் கவனிக்கிறது.  எழுத்தாளர் அந்த மாபெரும் சூதாட்டத்தை தொடர்ந்து ஆடுபவர். அதற்காக சில கதாபாத்திரங்களை அவரே உருவாக்கி உலாவ விடவும் கூடும். ஒரு திரைப்படத்தில் அதன் இயக்குநரே நடிகராக இருந்து நடிக்கும் காட்சியின் போது தன் பாத்திரம் மட்டுமன்றி அடுத்தவரையும் கவனித்து ஒலி ஒளி உள்ளிட்ட அனைத்தும் கவனிப்பது போல தானும் இருந்து தள்ளியும் இருந்து அவர் ஆடுகிறார்.

இதோடு நான்கு உதாரணங்களை கொடுத்திருக்கிறேன். மேலும் கூட சில அளிக்கலாம். காரணம் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளுக்குள் செல்ல இவ்வாறு விளங்கிக் கொள்ளுதல் தேவையாக இருக்கிறது. சில இடங்களில் அவர் மாய யாதார்தத்தை ஒரு பின்புலமாக வைக்கிறார். ஆனால் யதார்த்தத்திலேயே வைக்கிறார். அதை அவரும் மறுக்கவும் இல்லை. மாயமும் யதார்த்தமும் சந்திப்பது அவரது புள்ளி. மார்க்கோஸை பில்கிளிண்டன் சந்தித்த நாளில் என்று சொல்லித்தான்  கதையை துவங்குகிறார். ஆனால்  மாய எதார்த்த கதை போல மானுடர்கள் வாலுடனோ அல்லது எட்டு தலைகளுடனோ வரவில்லை. பத்தடி உயர  பூச்சி என்று யாரும் காலத்தை பிளந்து வருவதில்லை.  காலமும் தூரமும் அவரது படைப்புகளுக்குள் வருகின்றன என்றாலும் அவை சாதாரண மனிதராக ஒரு பெயருடன் வருகின்றன. அவர் உருவாக்கிய ஒரு தனிப்பட்ட நடையாக அது உள்ளது.  அவரது அந்த தனிப்பட்ட கூறுமுறையே அவரை வாசிக்க தூண்டுகிறது

மதுரையில் டப்பிங் படம் பார்க்கப் போகும் ஒருவன் அங்கே வெளிநாட்டு யுவனை யுவதியை ( ஜாக்குலீன் ) சந்தித்து ஓரிரு நிமிடங்கள்  உரையாடுகிறான். அந்த ஜாக்குலீன் பாரீஸில் தன் பயண அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார் என்பதும்  அதில் அவர் தன்னை சந்தித்த தருணமும் உள்ளது என்பதையும் பிற்காலத்தில் தான் பாரீஸ் சென்ற தருணத்தில் அவன் வாசிக்கிறான். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகிறது;  ஆனால் அதற்குள் ஜாக்குலீன் கிளம்பிச் சென்றுவிடுகிறார்.  இடையே ஒரு சம்பவத்தை சொல்கிறார்.  அவர் பீஹார் போகும்போது அங்கு நிகழும் ஒரு கலவரத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் இறந்ததாக சொல்லப்பட அது தான் மதுரையில் கண்ட அந்த ஜாக்குலீனா என்று யோசிக்கிறார். அவர் ஜாக்குலீனிடம் கேட்க வந்ததே அந்த கேள்வியைத்தான். இந்த அபத்த விளையாட்டுதான் அவரது சூதாட்டக் களமாக இருக்கிறது. இதில் அறம், மனிதாபிமானம் கருணை ஆகியவற்றை தள்ளி வைத்துவிட்டு வெறும் ஆர்வத்துடன் மட்டுமே அதை அணுக முற்பட்டால் மனம் கொள்ளும் எண்ணங்கள் விந்தையானவை. அதற்கு இருப்பதும் வெறும் ஆர்வம்தானோ என்று எண்ண வைக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் இந்த மாயத்தையே தேடுபவராக இருக்கிறார்.

இதே பீஹாரும் ஜாக்குலீனும் பிறிதொரு கதையில் தகவலாக வருகிறார்கள். அங்கு கதைசொல்லி உயர் ரக மதுவிடுதி ஒன்றில் நடந்து கொள்ளும் விதம் கவனிக்கத் தக்கது. அங்கிருக்கும் இரு வெளிநாட்டவரிடம் பேச்சு கொடுத்து தன் அறிவை காட்டிக் கொள்கிறான். அவர்கள் ஒரு புத்தகம் எழுதினால் அதில் வருமே என்று நினைக்கும் ஒரு விளையாட்டு. ஆனால் அந்த அந்த அபத்தக் காட்சியை வர்ணிப்பது அல்ல அவர் கதை. முன்பே சொன்னது போல அந்த சம்பவமும் புனைவாக இருக்கலாம். அவன் ஜாக்குலீனை சந்திக்காமலேயே இருந்திருக்கலாம். ஒரு குறுக்கெழுத்துப் போட்டியை மேலிருந்து கீழ் வலமிருந்து இடம் கீழிருந்து மேல் என்று ரொப்பிக்கொண்டே வருகையில் இடமிருந்து வலமாக ஒரு புதிய வார்த்தை வந்து நிற்பது போல இவர் கதைகளில் ஒரு வித்தை காண்பிக்கிறார்.

நள்ளிரவு சூரியன் கட்டாயத்தின் பேரில் ஒரு நாவல் உருவாகும் தருணத்தை குறிப்பிடுகிறது. அதை ஒருவித பகடி என்று சொல்லலாம். தன் முதல் தமிழ் நாவல் பெரும் வெற்றியடைந்து  லட்சக் கணக்கில் செல்வமும் கோடிக் கணக்கில் வாசகர்களும் பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளன்.  (பகடி இங்கிருந்தே துவங்குகறது எனக் கருதுகிறேன் ). தன் அடுத்த நாவலுக்கான கருவை தேடி அலையும் அந்த எழுத்தாளன் கதைக்கான முக்கிய தருணங்களை கண்டடைந்து கிளம்புகிறான். தன் பால்ய காலத்தின் இடங்களைப் பார்த்து சம்பவங்களைக் நினைவுபடுத்திக் கொள்கிறான். பதிப்பகக் கட்டாயத்தில் எழுதப்படும் கதைகள் உருவாகும் அபத்தமும், எழுத்தாளர் ஏன் எழுதவேண்டும் என்கிற அபத்தமும் கலந்து உருவாகும் ஒருவித பகடிக்கதை. நள்ளிரவுச் சூரியன் பலூனாகி பறக்கிறது.  மக்களின் சினிமா ஆர்வம் பற்றி ஒரு கதை. அது மற்றோரு பகடிக்கதை. அதில் வில்லன் ஒருவர் கோபமாக பல்லைக் கடித்து முகத்தைக் கோணி லாரி ஓட்டுகிறார். சில அரசியல் கதைகளும் உண்டு. அதை புதிய தேசங்களை மொழிகளை சிருஷ்டித்து அங்கு நடப்பதாகச் சொல்கிறார். ஒரு இனத்துக்குத்தான் இவ்வாறு நடக்கும் அல்லது  நாட்டுக்குத்தான் நடக்கும் என்று எதையும் சொல்லிவிட முடியாது. அது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என்பதால், கண்ணுக்கெதிரே இருக்கும் நேரடி உதாரணங்களைக் கூட தவிர்க்கிறார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லும் கதைகள் இருக்கின்றன. ஒன்றிரண்டு கதைகள் நேரடி அறிவுறுத்தலாக / பிரசாரமாக இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையினையும் இவரது தனித்துவமான  எழுத்து நடையில் வாசிக்கும் போது, அவை தரும் பார்வை வேறு ஒன்றாக உள்ளது. ஒருவரிடம் கடன் கேட்டு பெற்று வரும் ஒருவன் கொள்ளும் அலைக்கழிப்பு. வெளியேயுள்ள மனிதன் உள்ளே இல்லை என்கிற  ஒரு சுய பரிசோதனைக் கதை ஆகியவை. யாரும் அறியாமல் இருக்கும் மனிதர்களை அவரது கதைகளில் தொடர்ந்து அறிமுகப் படுத்துகிறார். அவர்களின் இருப்பு / இன்மை எதுவும் மற்றவருக்கு ஒரு பொருட்டில்லை என்று வாழும் மனிதர்களை சொல்லும் கதைகளாக துவங்கி இவரது தனித்துவமான நடைக்கு வருகின்றன. அறிக்கை கதை, சினிமா மோகம் எவ்வாறு ஒரு முக்கியமான அறிக்கையை பார்க்காமல் விட்டு வைக்கிறது என்று சொல்கிறது. அந்தக் கதை வெளியாகி இருபத்தந்து ஆண்டுகள் கடந்து இன்று அந்த அறிக்கையில் சொல்லியிருக்கும் படியான நேரடி பாதிப்பு என்று எதுவும் இல்லை. ஆனால் அதே சினிமா மோகமும் அதே போன்ற அறிக்கைகளும் இன்றும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.

(2)

புத்தருக்கு இளம் வயதில் தான் ஒரு ராட்சத சிலந்தி வலையில் நிற்காமல் ஏறி கொண்டிருப்பது போன்ற கனவு தொடர்ச்சியாக வரும் என்று  சொல்வார்கள். எக்கணமும் குறுக்கு நெடுக்குமாக வளர்ந்து கொண்டே செல்லும் அந்த வலைப்பின்னல். அதை அறுத்தெறிந்து செல்லும் மனம் ஞானியருக்கானது. அதில் கடந்து உழலும் மனம் சாதாரணனுக்கானது. அதை எதிர்கொள்ளத் தயங்கி வாழ்வை முடித்துக் கொள்பவர் கூட உண்டு. ஆனால் அதை வியந்து எழுதிவைப்பவர் அரிது. அதுவே எழுத்தாளனின் இடம்.   அது அளிக்கும் வியப்பு ஒன்று உண்டு. சில நேரங்களில் அது வேறுவகையில் ஆசுவாசம் கொள்கிறது. கற்பனை அளிக்கும் ஒருவித ஆசுவாசம். ஒரு பார் டான்ஸரைக் காப்பாற்ற முடியாதவன் வேறொரு இடத்தில் பரதநாட்டிய நடன மங்கைக்கு ஏற்படும் எதிர்பாரா இடரில், தன் இயல்புக்கு  மீறி, கால்கள் கண்ணாடித் துண்டுகளில் கிழிபட அவளை கரங்களில் ஏந்திக்கொண்டு ஒரு கதாநாயகன் போலச் செயல்பட்டுக் காப்பாற்றுகிறான். அதில் அவன் செயலை அந்தக் கண தீர்மானித்து செலுத்தும் ஒன்று அந்த பழைய சம்பவம் அவனைச் செலுத்தியதில் உண்டான உணர்வு என்று புரிந்து கொள்ள முடிகிறது.  கற்பனையில் கொள்ளும் ஒரு வித ஆசுவாசம் அல்லது அது செலுத்தும் ஒரு வித அதிகாரம். காரைக்கால் அம்மையார் கதையைக் கேட்டதும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் நடிகை.. வைஜெயந்தி மாலா தன் அப்பத்தாவை நினைவு படுத்த, அதன்  தொடர்ச்சியாக அவள் தன் மீது செலுத்திய அன்பு நினைவுக்கு வந்து அதனூடாக பிள்ளைகளின் மீது தான் கொண்ட பிடிவாதம் தளர்வது மற்றொன்று.

தொடர்ச்சியாக மனம் ஒன்றை நினைத்து பிணைத்துக் கொள்வதையும் அது நிகழ் காலத்தில் உண்டாக்கிய மாற்றங்களை சித்தரிக்கிறார். ஆனால்  உள்ளே சென்று விளக்காமல் சம்பவங்களை மட்டும் சொல்லியவாறு வாசகர்களை இழுக்கும் நடை அவருடையது. ஆசிரியர் உரைக்கும் நீதி அல்லது கதையை எடுத்துச் சொல்லும் அசரீரிக் கூற்று பெரும்பாலும் இராது. ஆகவே எந்த ஒரு கதையிலும்,  கதைக்கு உள்ளிருக்கும் வாசகன்தான் அதை தொடுத்துக் கொள்ள  முடியும். ஒரு வித நினைவலைகளின் பின்னல். அடுத்த கதையே ஒரு திருடன் தன் ராஜவாழ்க்கையை கனவு காண்பதில் நிகழ்கிறது.  கதையின் முடிச்சு என்று இல்லாமல் ஒவ்வொரு வரிகளிலும் இவ்வாறூ சொல்லிச் செல்லும் நடையாகவும் இருக்கிறது.. ஒரு கர்ப்பிணிப் பெண் காலை அகட்டி நடக்கிறாள். அவளது சிசு தலைகீழாய் சுருண்டிருக்குமோ என அதை பார்ப்பவன் எண்ணுகிறான். அதுபோல ஒருவரியில்  பெரும் சிரிப்பையோ ஊசலாட்டத்தை, குழப்பத்தையோ சொல்லுகிற வரிகள் உண்டு. இந்த உத்தியை அனைத்திற்கும் பயன் படுத்துகிறார். குறிப்பிடத்தக்க இரு கதைகளாக மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன் கதையையும் நடன மங்கை கதையையும் சொல்லலாம். ஒன்று வெடிச்சிரிப்பாகவும் மற்றொன்று மனத்தை கனமாக்குவதாகவும் உள்ளன. அதேநேரம் எக்கணமும் அடுத்த வரியில் கதைசொல்லி வந்து இவையனைத்தும் நான் சும்மா சொன்ன புனைவே என்று சொல்லும் அடுத்த வரியை கண்டாலும் அங்கு வியப்பதற்கில்லை

இது போன்ற கதைகளுக்கு மிக அண்மையாக இருப்பவை பெரும்பாலும் வணிக எழுத்துக்கள் தான். அல்லது சில அறிவியல் புனைவுகளும். விக்ரமாதித்தன் ஆயிரத்தோரு இரவு கதைகள் போன்றவையும் கூட. அவை தனக்குள் வாசகனுக்குத் தேவையான அதிரடி திருப்பங்கள் கொண்டிருக்கும் ஒருவித நேரடிக் கதைகள். சுரேஷ்குமார இந்திரஜித் தன் தொப்பின் பல கதைகளில் ஏதாவது ஒன்றில் மார்க்கோஸ், போர்ஹே, சுஜாதா ஆகியோரை கொண்டுவருகிறார். அவர்கள் கதை போன்று தோன்றும் சிலவற்றை எழுதியும் தருகிறார். ஆனால் அவருடன் நாமும் அந்த ஆட்டத்தில் இருக்கிறோம் என்கிற பிரக் வாசகருக்குத் தேவை. சீட்டாட்டத்தில் முன்பு   இருப்பவர் நமக்கு தேவையான சீட்டைப் போடுவதாக தோன்றும். அதற்கு நிகரானது இது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை வாசிக்கும் போது நினைவுக்கு வந்த ’ ட்விஸ்ட்’  கதைகளை  கடக்க வேண்டியிருந்தது.

அவரது முந்தையை கதைகளின் தொடர்ச்சியாக அல்லது அவற்றின் மாறுபட்ட கோணமாக சில கதைகள் உள்ளன.  லலிதா கைம்பெண்ணாவது ஒன்று அவளது மறுமணம் நிகழ்வது மற்றொன்று. முடி மழிக்கப்பட்ட காபரே டான்சர் வேறொரு கதையில் பணக்கரப் பெண்மனியாக வருகிறார். இவர் பண உதவி செய்ய வந்த முன்னாள் கவர்ச்சி நடிகையை பாராமல் போவது ஒரு கதை பார்த்து உதவுவது மற்றொன்று. இதில் மிகவும் ரசிக்க வைப்பது அந்தக் கதாபாத்திரத்தின் மகள் ( நிகழ்காலமும் இறந்தகாலமும்) தன் தாயின் வாழ்க்கையை மாற்றி எழுதியதற்காக சண்டைக்கு வருவது. ’உண்மை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றாகத் தெரியும்’ என்று ஒரு கதையில் வாகன ஓட்டி சொல்கிறார். ஒரு சுயபரிசோதனை போல அதை தன் எழுத்துக்கள் மீதே பரீட்சை செய்து பார்க்கிறார்.

இடப்பக்க மூக்குத்தி, விரித்த கூந்தல், பெயரற்ற நாய்க்குட்டி, உறையிட்ட கத்தி, புத்தக அடுக்கின் மீது விழுந்து கிடக்கும் உள்ளாடை என சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை வாசித்தபின்னர்  அவர்  கதைளிலிருந்தும் எழுந்து வரும் காட்சிகள்  நினைவில் நிற்கின்றன. ஒவ்வொன்றையும் கடக்கையில் அது சார்ந்த நினைவுகளை மனம் கொண்டு வந்து நிறுத்துகிறது. தான் அறிந்த அனைத்தும் நிதர்சனத்துடன் சூதாடி, கலைத்துப் போடுகிறது. ஒரு சிறுகதையில் மது அருந்திவிட்டு பணத்தின் மீது சிறுநீர் கழிக்கும் ஒருவனை சித்தரிக்கிறார். பணம் என்பது வெறும் தாள்தான் என்று சொல்லி இரண்டு ரூபாய் நோட்டின்  மீது சிறுநீர் கழிக்கும் அவனுக்கு ஏன் பத்து ரூபாயை விட்டுவிட்டு ரெண்டு ரூபாய் மேல சிறுநீர் பாய்ச்சி, தன் சிந்தனையின் கற்பை நிரூபிக்கிறோம் என்று அந்தக் கணம் தோன்றுகிறது.  அப்பொழுது  ஒரு கணத்தில் ஒரு தெளிவை அடைகிறான்.  ’இங்கு எல்லாமே கோணல் மாணலாதான் இருக்கு’ என்றபடியே ஒரு சிறுகல்லை தூக்கி தூரத்தில் இருக்கும் மரத்தின் மீது அடிக்க, அது ஆச்சரியமாக குறிதவறாமல் அடித்துவிடுகிறது. அடித்த கல் நேராக படுவதும்,  சொன்ன பந்தில் சின்ன விதத்தில் விக்கெட் விழுவதும் வாழ்வெனும் மாபெரும் சூதாட்டக் களத்தின் அபூர்வ தருணங்கள்.  அந்த அபூர்வ கணத்தை நோக்கிய தடம் இந்தக் கதைகள்

– காளிப்பிரசாத்

சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்

சுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்

சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்

கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்

முந்தைய கட்டுரைமீண்டெழுவன
அடுத்த கட்டுரைநூற்பு -சிறுவெளிச்சம்