அன்பின் ஜெ,
தேன்மொழி தாஸின் கீழ்க்காணும் கவிதையை நண்பர் அமிர்தம் சூர்யா சென்ற வாரம் அறியத் தந்தார்.
மெய்வாசகம்
காண்பதில் என்ன இருக்கிறதோ காணாததில் அதன் உயிர் இருக்கிறது
உயிர் எங்கே இருக்கிறதோ அதன் உன்மத்தம் வேராக இருக்கிறது
எங்கே வேர் இருக்கிறதோ அதன் உச்சியில் ஒரு சுயம் இருக்கிறது
எங்கே சுயம் இருக்கிறதோ அது பெருகத் தவிக்கிறது
எது பெருகத் தவிக்கிறதோ அது இடங்களைத் தேடுகிறது
எது இடங்களைத் தேடுமோ அது வெல்கிறது
எது வெல்லுமோ அது தோற்றுவிக்கிறது
எது தோற்றுவிக்குமோ அது அதிகாரம் செலுத்துகிறது
எது அதிகாரம் செலுத்துகிறதோ அது அதிக மடமைகளைச் சூழவைக்கிறது
எங்கே மடமைகள் சூழ்கிறதோ அங்கே சமத்துவம் சீர்குலைகிறது
எங்கே சமத்துவம் சீர்குலையுமோ அங்கே
அங்கே அநீதி எழும்புகிறது
எங்கே அநீதி எழும்புகிறதோ அங்கே ஒடுக்குதல் உருவாக்கப்படுகிறது
எது ஒடுங்குகிறதோ அது அறிவை விட்டுவிடுகிறது
எது அறிவைக் கைவிடுகிறதோ அது மனோபலத்தை இழக்கிறது
எது மனோபலத்தை இழக்குமோ அது தன்னைத் தொலைக்கிறது
தன்னைத் தொலைப்பது அடிமையாகிறது
எது அடிமையாக்கியதோ அதுவே ஆள்கிறது
எது ஆள்கிறதோ அது பணியவைக்கிறது
எதற்குப் பணிகிறீர்களோ அதற்கு நிமிர்வீர்கள்
எதற்கு நிமிர்ந்தீர்களோ அதை வணங்குவீர்கள்
எதை வணங்குகிறீர்களோ அதை சந்தேகிப்பீர்கள்
எதைச் சந்தேகிக்கிறீர்களோ அதை ஆராய்வீர்கள்
எதை ஆராய்கிறீர்களோ அதில் குழம்புவீர்கள்
எதில் குழம்புகிறீர்களோ அதில் கரைவீர்கள்
எதில் கரைகிறீர்களோ அதில் தெளிவீர்கள்
எதில் தெளிகிறீர்களோ அதில் காதல் கொள்வீர்கள்
எதில் காதல் கொண்டீரோ அதில் ஞானம் பெறுவீர்கள்
எதில் ஞானம் அடைவீர்களோ அதை ஒளியாக்குவீர்கள்
எதை ஒளியாக்கினீர்களோ அங்கே இருப்பீர்கள்
எங்கே இருக்கிறீர்களோ அங்கே இதற்கு முன்பும் இருந்தீர்கள்
***
படித்து முடித்ததும் மிகுந்த பரவசமும், ஆனந்தமும் அடைந்தேன் ஜெ. எப்படி இத்தனை நாள் தேன்மொழி தாஸைத் தவறவிட்டேன் என்று விசனப்பட்டேன். எனக்குப் பிடித்தமான, என் ”உள்”-ளிற்கு நெருக்கமான இன்னொரு எழுத்தாளரைக் கண்டு கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்தக் கவிதையின் ஒளியையும், அந்தாதியையும் இன்னும் ரஸித்துக் கொண்டிருக்கிறேன்.
சென்ற சனி மாலை (31.10.2020), மும்பை இலக்கியக் கூடம் ஏற்பாடு செய்திருந்த இணைய வழி நிகழ்வில், “சமகாலக் கவிதைகள்” என்னும் தலைப்பில், ஒன்றிரண்டு தொகுப்புகளே வந்திருக்கின்ற, சமகாலத்தின் முக்கியமான, பல்வேறு வகைமைகளில், மலர்தலின் துவக்கத்தில் இருக்கின்ற எட்டு கவிஞர்களைப் பற்றி, அவர்களின் கவிதைகள் எடுத்துக்காட்டுகளோடு அறிமுகம் செய்தார் அமிர்தம் சூர்யா.
- பூவிதழ் உமேஷ்: “வட்டத்திலிருந்து சதுரமாகவெளிவருதல்” கவிதையினுள் தொல்காப்பியர்.
- தேன்மொழி தாஸ்: கருத்தியல் அந்தாதியில் அமைந்த“மெய் வாசகம்” கவிதை. புள்ளியிலிருந்து, “நான்” ஆகித்தொடங்கி, பயணங்களும், பல ஜென்மங்களும், தேடல்களுமாய் அலைந்து திரிந்து, கடைசியில் வந்தடையும் கூடும், அந்த துவக்க ஒளிப் புள்ளிதான் என்றது கவிதை. எனக்கு மிகவும் நெருக்கமான கவிதை. முக்கியமாய் அந்தக் கடைசி வரி – “இதற்கு முன்பும் அங்குதான் இருந்தீர்கள்” சிலிர்க்க வைத்தது.
- மௌனன்யாத்ரிகா: கவிதைகாட்டும் வாழ்வியலும் நிலப்பரப்பும். “வேட்டுவம்”. “காதல் கிழத்திகளின் கைமணம்” என் நாசியை வந்தடைந்தது.
- ஸ்டாலின் சரவணன்: “ரொட்டியை விளைவிப்பவன்” – கிராமத்தில் விவசாயம் விட்டு நகரத்தில்புரோட்டாமாஸ்டராக வேலைக்குச் சேரும் ஒரு விவசாயியின் வாழ்வுச் சித்திரம். நியான் விளக்கின் மேலிருந்து கிராமத்திற்கு சேதி சொல்லப்போகும் பறவை. அங்கு தலைவி பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்கிறாள். வெடித்துக் கிடக்கும் நிலம் மேலும் மேலும் கதறத் தொடங்குகிறது.
- கார்த்திக் திலகன்: சிறுமிகளுக்கு நிகழும்பாலியல்கொடுமை சொல்லும் மர உருவகக் கவிதை.
- தாமரை பாரதி: நம் அனைவரின் வீடுகளிலிருக்கும் “கண்ணாடி”க் கவிதை. கண்ணாடி சுட்டுவது வேறு. கண்ணாடியின் குணங்களாக அவர் வெளிப்படுத்துவதுவீட்டுப்பெண்களின் குணாதிசயங்களாயிருந்தாலும், கவனத்தில் கொள்ளுங்கள், அவர்கள் கண்ணாடிகள், அவர்களில் பிரதிபலிப்பது நீங்கள்தான் என்று சொன்னது.
- றாம் சந்தோஷ்: “சொல்வெளித் தவளைக”ளின் ”மெய்ப்பொருள் விளக்க”த்தில் ராமானந்த சித்தனின் வரிகள் பெரும் புன்னகையை உருவாக்கின.
- சுசிலா மூர்த்தி: “ஒரு முறையேனும் வருகுதியோ” – என் மனதுக்குப் பிடித்த மற்றொரு அருமையான கவிதை.
அமிர்தம் சூர்யாவின் உரை மிக நன்றாயிருந்தது ஜெ.
வெங்கடேஷ் சீனிவாசகம்
தீவிரம் வேடிக்கை வேறுபாடு- லக்ஷ்மி மணிவண்ணன்
எனக்கு, என் தேடலின் மொழியை, என் உள் பயணத்தை பிரதிபலித்த, அடையாளப்படுத்திய ஓர் எழுத்தை, தேன்மொழியை கண்டுகொண்ட சந்தோஷம் கொஞ்சம் கூடுதலாகவே.
வெங்கி