தீவிரவாதம், இலட்சியவாதம்- கடிதங்கள்

தீவிரவாதமும் இலட்சியவாதமும்

அன்பின் ஜெ,

‘லட்சியவாதமும் தீவிரவாதமும்’ கட்டுரை வாசித்தேன்.
கட்டுரையில் தான் முரண்படும் விஷயங்களை சரவணராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கட்டுரையில் இரண்டு முக்கியமான விஷயங்களை நான் கவனிக்கிறேன்.

1. இன்றைய, நவீன கல்வி கற்ற இளைஞர்களின் அடையாளச்சிக்கல் பிரசினைகள். இன்று நடக்கும் (‘நடத்தப்படும்’) பல போராட்டங்களின் ஊற்றுக்கண்ணாகவே பார்க்கவேண்டியது இந்த அடையாளச்சிக்கல் பிரசினை என்று நம்புகிறேன். நவீனகல்வி கற்ற இளைஞர்கள் தான் கற்பனை செய்து வைத்திருந்த அல்லது தான் எந்த வேலைக்கு தகுதியானவன் என்று நம்புகிறானோ அத்தகு வேலையில் அமர்ந்துவிட்டானென்றால் ஓரளவு அவனுக்கு திருப்தி வந்துவிடுகிறது. ஆனால் அப்படி அமையவில்லையென்றால் அது அவனது வாழ்க்கையை/அன்றாடத்தை சிடுக்காக்கி விடுகிறது. தன் அடையாளத்தை தன்னை விட பெரிய விஷயங்களில் தேடத்துவங்குகிறான். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களை தன் அடையாளமாக நம்புவதிலிருந்து, சினிமாவில் நுழைய முயல்வது, போராட்டங்களில் பங்கேற்பது என்று பலவிதங்களில் தன்னை சாதாரணர்களிலிருந்து வித்தியாசப்படுத்திக்கொள்ளத் தொடங்குகிறார்கள். தர்க்கபுத்தி கூர்மையாக இருக்கும் இன்றைய இளைஞனுக்கு இத்தகையச் சிக்கல்கள் ஏற்படுவது (ஒருவகையில்) இயல்பே. தன்னறம் புத்தக்த்தின் முன்னுரையில் நீங்கள் இதைத் தொட்டிருந்தீர்கள் – “இதற்கு முந்தைய தலைமுறை இளைஞர்களிடம் இத்தகையச் சிக்கல்கள் இருந்திருக்கும் வாய்ப்பு குறைவு; போலவே அடுத்த தலைமுறையில் இவ்வளவு அழுத்தங்களும் இருக்காது, ஆனால் இந்த தலைமுறை இளைஞர்கள் இதைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்று முன்னுரையில் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இந்த அடையாளத்தைத் தேடும் முயற்சிகள் நேர்மறையான விளைவுகளை ஏற்பத்துவது பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. ஏதோ ஒருவகையில் தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்வதற்காக மரபை, மதத்தை, இன்னும் தங்களுக்கு வழிவழியாக வந்து சேர்ந்த பலவற்றை மூர்க்கமாக நிராகரித்து, அவற்றை ‘இறங்கி’ அடிக்கும் முயற்சியாகவே உள்ளது. இதனால், தனிவாழ்க்கையில் அந்தந்த பருவத்தில் அமையவேண்டிய முக்கியமான விஷயங்கள் (பெரும்பாலும் வேலை, திருமணம், குடும்பம், குழந்தை), ஒன்று தாமதப்படுகின்றன அல்லது விட்டுப்போய் விடுகின்றன; தங்கள் முயற்சிகளின் வியர்த்தம் அதன்பின் அவர்களுக்கு உறைத்தாலும் அவர்களால் தங்களைப் பின்னுக்கிழுத்துக்கொள்ள முடிவதில்லை. விளைவு, வாழ்க்கை ஒரு downward spiral-ஆக சுழன்று விடுகிறது. “தான் தன் இளமையின் வேகத்தில் தவறான திசையில் சென்றுவிட்டோம். தான் வெகுதூரம் சென்றிருந்தாலும் அதிலிருந்து விலகி வெளிவருவதே தனக்கான மீட்பு” என்பதை உணர்ந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்கு தன் அகங்காரம் இடமளிப்பதில்லை. அதன்பின் அன்றாடத்தில் ஒரு தத்தளிப்பு, சிடுசிடுப்பு, எதிலும் விட்டேற்றித்தனம்/விரக்தி வந்து விடுகிறது. இதிலிருந்து தானாக வெளிவரும் இளைஞர்களின் விகிதம் குறைவாகவே இருக்கும் என்பது என் அனுமானம்.

2. மற்றுமொரு முக்கியமான விஷயம் இத்தகைய அமைப்புகள்/போராட்டங்களில் பங்கெடுக்கும் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரிப்பது. நீங்கள் கூறியிருந்தபடி பெண்களின் வாழ்க்கை ஆணின் வாழ்க்கையைவிட இன்னும் சிறிய வட்டம் எனும் பட்சத்தில் இந்த சிக்கல்கள் அவர்களுக்கு இன்னமும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பே மிகுதி. உண்மையில் இதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் அதிகமானவை என்றே நினைக்கிறேன். சிறிது கவனித்தால், பெண்களின் திருமணம் தள்ளிச்செல்லுதல் முதல் இத்தகைய மனோநிலையின் அறிகுறிகளை நாம்மால் எளிதில் காண முடிகிறது. ஆனால் இதற்கான தீர்வுகள் என்ன என்பதை தனிமனிதர்களாகத் தங்களை சுயபரிசோதனை செய்தே கண்டடையவேண்டியிருக்கும்; அவை நிச்சயம் வசதியான பதில்களாக இருக்கப்போவதில்லை, சங்கடப்படுத்தும், தங்களை மறுபரீசிலனை செய்ய வைக்கும் பதில்களாகவே அமையும் வாய்ப்பே மிகுதி. ஆனாலும் அது ஒன்றே வழி என்றே படுகிறது.

கட்டுரைக்கு நன்றி,

அன்புடன்
வெங்கட்ரமணன்

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையை புரிந்துகொள்ள ஒரு முக்கியமான முன்கருத்து தேவை. இப்போது sustainable economy பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குச் சமானமாக sustainable revolution என்பதைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்.

நான் இன்றைய உலகில் நிகழும் பெரும்பாலான எதிர்ப்பு இயக்கங்களைப் பார்க்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அவற்றின் பிரச்சினையே அவற்றை நீண்டகாலம் நீடிக்கச்செய்ய முடிவதில்லை என்பதுதான். வால்ஸ்ட்ரீட் புரட்சி முதல் டெல்லி ஜாமியா மிலியா புரட்சி வரை இதுதான். அவற்றை நீடிக்க வைக்க முடியாது. அதற்குள் கருத்துமுரண்பாடுகள் வருகின்றன. உள்மோதல்கள் வருகின்றன. அரசு காத்திருக்கிறது. பலவீனம் தோன்றியதுமே திருப்பி அடிக்கிறது

ஏன் நீடிக்கமுடியவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கான எதிர்ப்பு, ஒட்டுமொத்த எதிர்ப்பு என்று இவை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான். எதிர்ப்புநிலை ஆழமான நம்பிக்கைநிலைக்கு நேர் எதிரானது. இதுவே புரட்சிகர இயக்கங்களுக்கும் பொருந்தும் அவை நம்பிக்கையின்மையின் அடிப்படையில்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆகவே புரட்சிகர இயக்கங்களுக்குள் ஆணவமும் உள்மோதலும் இருந்துகொண்டே இருக்கிறது

இங்கே உள்ள புரட்சிகர இயக்கங்கள் இன்னமும்கூட ஆயுதம்தாங்கியவை அல்ல. யோசித்துப்பாருங்கள், ஆயுதமேந்திய குழுக்களில் இருந்து ஒருவர் வெளியேவந்து இப்படி ஒரு விமர்சனக்கட்டுரையை துணிவாக எழுதிவிடமுடியுமா?

எம்.ஜெயராஜ்

முந்தைய கட்டுரைஇதிகாசங்களின் களம்
அடுத்த கட்டுரைகாலம் செல்வம்- பேட்டி