மதுரையில்…

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

இந்த ஆண்டு சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு விஷ்ணுபுரம் விருது சற்று உற்சாகம் குறைவாகவே கொண்டாடப்படமுடியும். கோவிட் தொற்று டிசம்பரிலும் தொடரும் என்றே தோன்றுகிறது. சுரேஷ் குமார இந்திரஜித் உடல்நிலைக்குறைவுகளும் கொண்டவர். ஆனால் விருதுவிழாவை தவிர பிற அனைத்தையும் சிறப்புற கொண்டாடுவது திட்டம்.

ஆகவே வழக்கம்போல ஆவணப்படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்தோம். ஞானக்கூத்தன், ராஜ் கௌதமன் ஆவணப்படங்களை எடுத்த கே.பி.வினோத் இதையும் எடுக்க ஒத்துக்கொண்டார். ஒளிப்பதிவாளர் ஆனந்த்.

ஏழாம் தேதி வினோதின் காரில் கிளம்பி மதுரை சென்றேன். ஆனந்த் உடன் வந்தார். மதியம் கிளம்பினோம். செல்லும் வழியில் நான்குநேரி பெருமாள் கோயிலுக்குச் செல்லலாம் என்று தோன்றியது. மதியம் மூன்றரை மணிக்கு நான்குநேரி சென்றோம். நான்கு மணிக்கே நடைதிறப்பு என்றனர்.

ஒரு டீ சாப்பிடலாம் என்று நடந்து நான்குநேரி பேருந்துநிலையம் அருகே சென்றபோது அங்கே நண்பரும் வாசகருமான இசக்கிராஜாவை பார்த்தோம். நெல்லைக்காரர். நிழலச்சு கருவிகள் பழுதுபார்க்கிறார். அதன்பொருட்டு நான்குநேரி வந்தவர் தற்செயலாக எங்களை பார்த்துவிட்டார்

நான்குபேருமாக சென்று நான்குநேரி கோயிலை பார்த்தோம். தென்னகத்தின் பெரிய பெருமாள்கோயில்களில் ஒன்று. நான்குநேரி ஜீயர் ஆட்சியில் உள்ள ஆலயம். மாமரம் இதன் ஆலயமரம். வானமாமலைப்பெருமாள், தோத்தாத்ரி என்று பெருமாளுக்குப் பெயர். பிரம்மாண்டமான ஆலயம் ஓய்ந்து காற்று சுழல , எதிரொலிகள் சூழ கிடந்தது. நாங்கள் உள்ளே இருக்கையிலேயே ஒரு மழை பெய்து ஓய்ந்தது.

நான்குநேரி உட்பட பெரும்பாலான ஆலயங்களில் இன்று சிற்பங்களை பார்க்கமுடியாது. சிற்பங்கள் உள்ள மண்டபங்களெல்லாமே கம்பிபோட்டு பூட்டப்பட்டுள்ளன. வருகையாளர்கள் சிற்பங்களை பாழ்படுத்துவதனால் இந்த ஏற்பாடு. அவர்களை தடுக்கவோ, காக்கவோ ஊழியர்கள் ஆலயங்களில் இல்லை. சிற்பங்களைப் பார்க்கவேண்டும் என்றால் முறையாக அனுமதிபெற்றுத்தான் செய்யவேண்டும்

கோயிலின் பேருரு, கல்பெருகிய குளிர்நிழல்காடு, ஒரு விடுதலையை எப்போதும் அளிக்கிறது. கைகூப்பி நின்றிருக்கும் நாயக்கர்களின் சிற்பங்கள். தெய்வ உருவங்கள். அவர்களின் காலமில்லாத பார்வை முன் நடக்க்கையில் நம்மை எப்போதும் அழுத்திக்கொண்டிருக்கும் இன்று என்பது பொருளற்றுப்போகிறது.

இரவு எட்டரை மணிக்கு மதுரைக்குச் சென்றோம். நண்பர் டாக்டர் ரவி அங்கே ஒரு தங்கும்விடுதி ஏற்பாடு செய்திருந்தார். ராயல் செர்வீஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ். அதன் உரிமையாளரை மறுநாள் அறிமுகம் செய்துகொண்டோம். என் வாசகர். போக்குவரத்துத்துறை தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றி வருவதாகச் சொன்னார்.

நண்பர், எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் வந்திருந்தார். நண்பர் சரவணக்குமார் திருச்சியிலிருந்து வந்திருந்தார். இயல்பாகவே ‘ஜமா’ சேர்ந்தது. எப்போதுமே பேச்சு என்பது ஒரு கொண்டாட்டம். அதிலும் இந்த கோவிட் காலகட்டத்தில் சேர்ந்து அமர்ந்துபேசுவதே அரிதாகிக்கொண்டிருக்கிறது

இரவு பதினொரு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். நடுவே பதினைந்துநாட்கள் முழுமூச்சாக எழுதிக்கொண்டிருந்தேன். இரண்டு திரைக்கதைகள். ஆகவே அந்தச் சந்திப்பு ஓர் விடுதலை என்று தோன்றியது. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் நான் என்னை நோக்கி பலகோணங்களில் வந்தடைகிறேன்

மறுநாள் காலையில் கே.பி.வினோதும் ஆனந்தும் சுரேஷ்குமார இந்திரஜித் வீட்டுக்குச் சென்றார்கள். நாங்கள் கூட்டமாகச் செல்வதை சுரேஷ்குமார இந்திரஜித் மிக அஞ்சினார். அவர்கள் இருவரும் வீட்டுக்கு வருவதையே திகிலுடன் பார்த்தார். ஆகவே நாங்கள் விடுதியிலேயே தங்கிவிட்டோம். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் காலை ஏழரை மணிக்கு பேருந்தில் கிளம்பிவிட்டிருந்தார்.

மதியம் வரை சுரேஷ்குமார இந்திரஜித்தை அவருடைய அலுவலகம் உட்பட வெவ்வேறு இடங்களில் படம்பிடித்துவிட்டு தயாரிப்புக் குழு திரும்பி வந்தது. சாப்பிடும் நேரத்தில் கிருஷ்ணன் வந்துசேர்ந்தார். சேர்ந்து சாப்பிடச்சென்றோம்

நான் இந்த கோவிட் தொற்று காலகட்டத்தில் சென்ற ஊர்களிலேயே நோய் சார்ந்த எந்த எச்சரிக்கையும் இல்லாத நகர் மதுரைதான். மக்கள் வெள்ளம். மக்கள் சுழிப்பு. மக்கள் கொந்தளிப்பு.

மொத்த மதுரையே போரில் இடிந்து பாழடைந்த நகர் போலிருக்கிறது. புழுதி, நெரிசல்,கூச்சல். எந்த கட்டுப்பாடும் இல்லாத போக்குவரத்து. எங்கு பார்த்தாலும் விருப்பம்போல நிறுத்தப்பட்ட வண்டிகள். எந்த மதிப்பும் இல்லாமல் எவரையும் எப்போதும் ஆபாசச்சொற்களால் வசைபாடும் வண்டியோட்டிகள்.வைகை என்ற மாபெரும் கூவம்

மதுரை நானறிந்து முப்பதாண்டுகளாக இதேபோலத்தான் இருக்கிறது. இம்முறை கொஞ்சம் மழைச்சாரலும் அவ்வப்போது குளிர்காற்றும் இருந்தது. மற்ற நாட்களில் வெயில் உலைத்தீ போலிருக்கும்.

கிருஷ்ணன் சைவ உணவுக்காரர். ஆனால் மதுரையின் ஒரே சிறப்பே அசைவ உணவுகள்தான். ஆகவே அசைவ உணவகத்தில் அவருக்கு சோறும் தயிரும் வாங்கிக்கொடுக்கலாம் என முடிவுசெய்து உணவகங்களுக்குச் சென்றோம். அம்மா மெஸ், குமார் மெஸ் என எல்லா உணவகங்களிலும் வழியவழிய கூட்டம். வெளியே எல்லாம் ஆட்கள் முண்டியடித்தனர்

ஒருவழியாக  அஞ்சப்பர் சென்றோம். அங்கே கொஞ்சம் முட்டிமோதியபோது இடம் கிடைத்தது. உணவு வழக்கம் போல மிகச்சுவையானது. மதுரைக்காரர்கள் வாழ்க்கையை நாக்கால் மட்டுமே உணர்பவர்கள், சமரசம் செய்துகொள்வதில்லை. பலர் அடிக்கடி ஓட்டலில் உண்பவர்கள். ஆகவே பொதுவாக மதுரை உணவுகள் வயிற்றை ஒன்றும் செய்வதில்லை.

அன்றுமாலை அழகர்கோயில் சென்றோம். மதுரைக்கு மிக அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மலையடிவாரம் இருப்பது மாபெரும் கொடை. அதை குப்பை இல்லாமல், நெரிசலில்லாமல் பேணினால் நகரிலிருந்து மாபெரும் விடுதலையாக இருக்கும். ஆனால் நான் செல்லும்போதெல்லாம் அடித்துப்புரண்டு திரும்பி ஓடிவரும் சூழலே இருந்திருக்கிறது

இம்முறை கோவிட் தயவில் கூட்டம் மிகக்குறைவு. ஆகவே குப்பைகளும் குறைவு.அழகர்கோயிலை நிதானமாகச் சுற்றிப்பார்க்க முடிந்தது. விரிந்துபரந்த கோயில் வளாகம். அழகர்கோயில் தமிழகத்தின் பேராலயங்களில் ஒன்று என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. கிருஷ்ணனே மலையடிவாரத்தில் ஒரு சின்ன கோயில் என்ற எண்ணத்தில் இருந்தார்

மாலிருஞ்சோலை என்று புகழ்பெற்ற அழகர்கோயில் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து காலம் முதலே இலக்கியக் குறிப்பு உள்ளது.  “செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றம்” சென்று சேரவேண்டும் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. ”நினைப்பு அரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் நின் அன்பருக்கும்” என பிள்ளைப்பெருமாள் அய்யங்காரின் அழகர் அந்தாதி சொல்லும் பெருமாள். தேவர்களுக்கு நினைத்தற்கு அரியவன் அன்பருக்கு எளியோனாக தோன்றும் இடம்.

பாண்டியர் காலம் தொட்டு திருமலைநாயக்கர் காலம் வரை தொடர்ச்சியாக திருப்பணிகள் செய்யப்பட்டுக்கொண்டே இருந்த ஆலயம் இது. திருமலைநாயக்கர் காலத்தில் இந்த ஆலயத்தின் நிலங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வெவ்வேறு சாதியினர் பங்குகொள்ளும்படி திருவிழா மண்டகப்படி முறைமை ஒருக்கப்பட்டது. குறிப்பாக மதுரையின் முதன்மைச்சாதியினரான மறவர், கள்ளர்,யாதவர் ஆகியோர் பங்கெடுக்கச் செய்யப்பட்டனர். அது மதுரையின் அதிகார அமைப்பையே தாங்கிநிறுத்தும் சமூக அடுக்காக உருவாகி வந்தது. அழகர் கள்ளர் வேடமிட்டு பச்சைபட்டு உடுத்தி எழுந்தருளும் கள்ளழகர் திருவிழாதான் மதுரையின் முதன்மையான கொண்டாட்டம்.

அழகர்கோயிலைப் பற்றி தொ.பரமசிவனின் முனைவர் பட்ட ஆய்வேடு ‘அழகர்கோயில்’ என்றபேரில் நூலாகியிருக்கிறது. அழகர்கோயிலின் தொன்மங்கள், அதை ஒட்டி உருவான சமூகக்கட்டமைப்பு ஆகியவற்றை சிறப்பாக அறிமுகம் செய்யும் நூல் இது

திருமலைநாயக்கருக்கு இங்கே ஒரு நகர் அமைத்து தலைநகரமாக ஆக்கும் எண்ணம் இருந்தது. ஏனென்றால் மதுரை நான்குபக்கமும் கோட்டைகட்டிப் பாதுகாக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது. அழகர்கோயில் மலைசூழ்ந்தது. திருமலைநாயக்கர் ஒரு பெரிய கோட்டையை இங்கே கட்டினார். கோபுரப்பணிகளும் தொடங்கின. ஆனால் தொடர்ச்சியான நீர்ப்பற்றாக்குறை இந்த இடம் உகந்தது அல்ல என்று அவருக்கு காட்டவே தலைநகர்த் திட்டம் கைவிடப்பட்டது.

அழகர்கோயிலுக்கு பலமுறை வந்திருக்கிறேன். இந்தமுறைதான் மழையீரமும் குளிருமாக மலைக்கு மேல் வந்த உணர்வு இருந்தது. மழைக்குளிர் மலைப்பசுமையை ஒருவகையான நீலநிறம் கொள்ளச் செய்கிறது. காற்றின் ஓசை குளிரை உடலுக்குள்ளும் உணர்த்துகிறது

மேலே பழமுதிர்ச்சோலை உள்ளது. ஆனால் சமகாலத் தொன்மங்கள் சொல்வதுபோல அது தொன்மையான ஆலயம் அல்ல. அங்கே இருந்த முருகன் ஆலயம் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் சற்றுபெரிதாக கட்டப்பட்டது. இன்றிருப்பது புதிய ஆலயம்.

ஆறுபடைவீடு என்ற கருத்தே பதினெட்டாம்நூற்றாண்டில் உருவானது என்றும், முருகனிடம் இட்டுச்செல்லுதல் என்னும் பொருள் படும் முருகாற்றுப்படை என்ற நூலின் பெயரை பிழையாக புரிந்துகொண்டிரு உருவாக்கப்பட்டது என்றும், திருச்செந்தூர் [திருச்சீரலைவாய்] மற்றும் திரு ஆவினன்குடி [பழனி அடிவராம்]ஆகிய இரு முருகன் கோயில்களே உண்மையில் தொன்மையானவை என தொ.பரமசிவம் அவருடைய நூலில் விரிவாக விளக்குகிறார்

மேலே ராக்காயி அம்மன் ஆலயம் சென்றோம். அங்கே நூபுரகங்கை என்னும் ஊற்று உண்டு. அங்கிருந்து நாளும் நீர்கொண்டுவந்து அழகர்கோயிலில் நரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனால் நீர் மிகக்குறைவு, பக்தர் எண்ணிக்கை மிக அதிகம். ஆகவே மோட்டாரால் இறைத்து பகிர்ந்து அளிக்கிறார்கள். படிகளை பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம்

மதுரையில் நண்பரும் கம்யூனிஸ்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனிடம் பேசினேன். கோவிட் தொற்று முடிந்து ஓய்வில் இருக்கிறார். நலம்பெற்று வருகிறார். கோவிட் தொற்று நுரையீரலை அடைவதற்குமுன்னரே, ஆரம்பநாட்களிலேயே மருத்துவமனைக்குச் செல்வது அதை எளிதாக குணப்படுத்துகிறது என்று சொன்னார். உற்சாகமாக இருந்தார். மதுரையைப்பற்றிய எந்தப்பேச்சிலும் காவல்கோட்டம் இயல்பாக வந்தமைகிறது. மதுரையைப்பற்றி இன்னொரு நாவலை தொடங்கியாவது வைக்கலாம் என்று அவரிடம் சொன்னேன்.

டாக்டர் ரவி

மதுரை நண்பர் இளங்கோவன் முத்தையா மற்றும் முகம்மது நூஹ் ஆகியோர் அறைக்கு வந்திருந்தனர். இளங்கோவன் முத்தையா ‘விம்லா’ என்ற முதல் கதையை எழுதி எழுத்தாளராக அறிமுகமாகியிருக்கிறார். நூர்முகம்மது மதுரையின் முதல் வண்ணநகல் கூடத்தின் உரிமையாளர். இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம்

மறுநாள் காலை நாலரை மணிக்கே எழுப்பப்பட்டேன். குளித்துவிட்டு மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் செல்லலாம் என்று திட்டம். ஒவ்வொருவராக குளித்துவர ஆறுமணி ஆகிவிட்டது. அன்று திங்கள் என்பதனால் பெரிய கூட்டம் இல்லை. ஆனால் நேராக மீனாட்சி சன்னிதிக்கு முன் நின்றிருந்த வரிசையில் சென்று சேர்ந்துவிட்டோம். நடைசாத்தி ஏதோ பூஜை. அரைமணிநேரம் ஆகும் என்றனர். பொற்றாமரை குளத்தை பார்த்தபடி நின்றிருந்தோம்

ஆனால் அரைமணிநேரம் கடந்தபின் மேலும் தாமதம். யாரோ  ‘விஐபி’ வந்துவிட்டாராம். அவர் தரிசனம் முடித்து கிளம்புவதுவரை காத்திருக்கவேண்டும். சரி, தரிசனம் வேண்டாம் என்று திரும்பி வந்துவிட்டோம். சுற்றிக்கொண்டு சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குச் சென்றோம்.

வானமாமலையின் மழை

நான் ஆலயம் செல்ல ஆர்வமுள்ளவன். பக்தனல்ல என்றாலும் வழிபாடும் செய்வேன். ஆனால் அர்ச்சனைகள் பூஜைகள் என ஏதும் செய்வதில்லை. என் உறுதியான கொள்கை எந்த ஆலயமென்றாலும் நீண்டவரிசைகளில் நின்று வழிபடுவதில்லை என்பது. திருப்பதிக்கே இரண்டு முறைசென்றேன். வரிசையில் நிற்க மனமில்லாமல் சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

அதிகபட்சம் ஐந்து நிமிடம் வரிசையில் நிற்கலாம், மற்றபடி வரிசையில் நிற்பது ஆலயத்துக்குச் சென்று நாம் அடையும் அனைத்து அனுபவங்களுக்கும் எதிரானது. ஆலயம் என்ற கருத்துக்கே எதிரானது என்பது என் எண்ணம். ஆலயம் அளிப்பது ஒருவகையான தனிமையை, நாளுலகை விட்டு விலகி காலமின்மையை உணரும் அனுபவத்தை. வரிசை என்பது உலகியல் சார்ந்தது. மனிதர்கள் மனிதர்களை முந்துவது, மனிதர்கள் மனிதர்களை காத்திருப்பது. வரிசைகள் தான் எங்கும். இந்த உலகியல் என்பதே மாபெரும் வரிசைதான். அந்த வரிசையை ஆலயத்திலும் சென்று நடிப்பதைப்போல அபத்தம் வேறில்லை.

ஆலயம் என்பது கருவறைத்தெய்வம் மட்டும் அல்ல. ஆலயமெங்கும் தெய்வங்கள்தான் ஆலயமே தெய்வ வடிவம்தான். முட்டிமோதி அங்கே நின்று வணங்குவதில் நான் இழப்பவைதான் மிகுதி. நினைத்ததைப்போல சுந்தரேஸ்வரர் சன்னிதி  ஒய்ந்து விரிந்து கிடந்தது. அகோரவீரபத்ரனுக்கு ஓர் அர்ச்சகர் முழுக்காட்டு செய்துகொண்டிருந்தார். கல்யாணசுந்தரருக்கு குறும்புப்புன்னகையுடன் அழகர் அபிராமியை கைப்பிடித்து அளித்துக்கொண்டிருந்தார். சுற்றிவந்து தொழுது வெளியே வந்தபோது நிறைவுற்றிருந்தேன்

ஆலயம் எனக்கு போதும் ஆகவே கட்டாயம் இருந்தாலொழிய கட்டணம் கொடுத்து தனிவரிசையில் செல்வதில்லை. பொதுவாக ஆலயங்களுக்கு நன்கொடை அளிப்பதே இல்லை. இதுவரை  உண்டியலில் ஒரு பைசாகூட போட்டதில்லை. ஆனால் அர்ச்சகர் தட்டில் குறைந்தது நூறுரூபாய் போடுவேன். சிறு ஆலயம் என்றால், நானன்றி வேறு எவரும் இல்லை என்றால், ஐநூறு ரூபாய். இது ஆணவத்தால் அல்ல. இதை பலமுறை எழுதியிருக்கிறேன்.

அழகர்கோயில்

தமிழக ஆலயங்களில் நாம் கொடுக்கும் காணிக்கை அறநிலையத்துறையால் ஊழலில் வீணடிக்கப்படுகிறது. ஆலயச்சொத்துக்கள் சூறையாடப்படுவதை ஆதரிக்கும் அரசு ஆலயவருமானத்தை பொதுச்செலவுகளுக்கு எடுத்துக்கொள்கிறது. ஆலயங்கள் பராமரிப்பின்றி அழிகின்றன. ஆலயத்தின் முதன்மை அலுவலர்களான அர்ச்சகர்கள்தான் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும்மிகக்குறைவாக ஊதியம் பெறுபவர்கள். உலக அளவிலேயே இந்து மதத்தின் மதகுருக்களான அர்ச்சகர்கள்தான் மிகமிகக்குறைவான வருமானம் கொண்டவர்கள்.

ஆனால் ஐநூறுரூபாய் கட்டணம் கட்டி கும்பிடச்செல்பவர்கள் அவருடைய தட்டில் பத்து ரூபாய் போடுவதை காண்கிறேன். ஒவ்வொரு முறை அர்ச்சகர் தட்டில் நாணயங்கள் போடப்படும் ஒலியை கேட்கையிலும் ஓர் இந்து என்ற வகையில் அந்த அற்பத்தனம் என்னைக் கூசவைக்கிறது. அந்த நாணயங்களை ஒருகணமும் கவனிக்காமல் பூசைசெய்யும் அர்ச்சகர்களையே நான் இதுவரை கண்டிருக்கிறேன். ஐநூறுரூபாய் போடும் எனக்கு மேலதிகமாக எதையும் எவரும் அளித்ததில்லை. அந்த பெருந்தன்மையும் தன்னிமிர்வும் அவர்களிடம் இருக்கும் வரை மட்டுமே இந்துமதம் வாழும்.

மதுரை ஆலயத்திற்குள் ஆலயப்பிரசாதம் என்று கடைபோட்டு விற்கிறார்கள். சர்க்கரைப் பொங்கல் வாங்கினேன். கெட்டுப்போயிருந்தது. நெய் இல்லாமல் மோசமான அரிசியில் செய்யப்பட்டது. கஞ்சிபோல கொழகொழவென்றிருந்தது. அங்கே விற்கப்படும் எல்லா பொருட்களும் பழையவை, கெட்டுப்போனவை. பயணிகளோ குழந்தைகளோ உண்டால் நோயில் சிக்கி அல்லல்படவேண்டியதுதான். அவை ஆலயத்தில் தயாரிக்கப்படுபவை அல்ல என நினைக்கிறேன். வெளியே செய்து கொண்டுவந்து விற்கிறார்கள். ஒரு பெரிய தொழில் அது. அதற்கும் ஆலய அர்ச்சகர்களுக்கும் சம்பந்தமில்லை. குத்தகைக்கு விட்டிருப்பார்கள் போல.

எந்த கீழ்மையான உணவையும் பிரசாதம் என்றால் விற்றுவிடலாம், ஆனால் அதற்குமுன் பெயருக்காவது அதை இறைவனுக்கும் நைவேத்தியம் செய்திருப்பார்கள். தன்னிடம் வாங்கி உண்பவர்களுக்கும் வழிபடும் தெய்வத்திற்கும் இப்படி ஒரு கீழ்மையைச் செய்து அப்படி என்னதான் சம்பாதித்துவிடுவார்கள் என்று தெரியவில்லை.

மதுரை புதுமண்டபம் தமிழகத்தின் தலையாய கலைக்கூடங்களில் ஒன்று. அது நெடுங்காலமாக ஆக்ரமிக்கப்பட்டு கடைகளாக மாற்றப்பட்டிருந்தது. அதை மீட்பதற்கான எந்த முயற்சியையும் நீதிமன்றங்கள் தடைவிதித்துக்கொண்டிருந்தன. அங்கே எழுந்த தீ அதை ஓரளவு மீட்கச்செய்தது. ஆனால் இன்றும் உள்ளே பழைய கடைகளின் இடிபாடுகளும் எச்சங்களுமாக துருப்பிடித்த பூட்டால் பூட்டப்பட்டு பாழடைந்து கிடக்கிறது. நீதிமன்றங்கள் வழியாக அதை மீட்கும் முயற்சிக்கு தடைகள் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

நாங்கள் ரமணா விடுதியில் காலையுணவு உண்டோம். மதுரையிலிருந்த மூன்றுநாளும் காலை அங்கேதான். அருமையான உணவு, எண்ணை உட்பட எதுவுமே கலப்படம் இல்லை.அவர்களின் பண்ணையில் இருந்து கொண்டு வந்து விற்கப்படும் நெய் சிறப்பானது என்றார் சரவணக்குமார்

மதியம் கோவையிலிருந்து பாலுவும் திருப்பூரில் இருந்து கதிரும் வந்தனர். சுரேஷ்குமார இந்திரஜித்தை அழைத்துச்சென்று ஒரு நட்சத்திரவிடுதியில் வைத்து நீண்ட உரையாடலைப் பதிவுசெய்தபின் படக்குழு திரும்பி வந்தது. கூடவே சுரேஷ்குமார இந்திரஜித்த்தும் வந்தார். ஒருமணிநேரம் மிகக்கவனமாக எவரையும் தொடாமல் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி மகள்களிடம் பேட்டி எடுத்துவிட்டார்கள்.

மாலையில் இளங்கோவன் முத்தையா வந்தார். இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம், பழைய சிற்றிதழ் உலகத்து வேடிக்கைகள். இரவு பன்னிரண்டு மணி ஆகியது தூங்குவதற்கு.

மறுநாள் காலையில் திருமலைநாயக்கர் மகால் சென்றோம். கோவிட் காரணமாக பூட்டியிருந்தது. கிருஷ்ணன் பத்துத்தூண் பார்த்ததில்லை என்றார். வெயிலில் நடந்து பத்துத்தூண் சந்துக்குச் சென்றோம். ரோமில் இதேபோல சில தூண்கள் நின்றிருக்கின்றன. இந்த தூண்களை விட சிறியவை. ஆனால் அதைச்சூழ்ந்து பெரிய மைதானம். புல்வெளி. அமர்ந்து பார்க்க நாற்காலிகள்.

இங்கே தூணைச் சேர்த்தே வீடுகளும் கடைகளும் கட்டியிருக்கிறார்கள். தூணின் பேருருவம் காரணமாக மட்டும்தான் அது இன்னமும் இடிக்கப்படாமல் எஞ்சுகிறது. இந்தியா அதன் கலைச்செல்வங்களை, வரலாற்றுச்சின்னங்களை சூறையாடுவதற்கு மதுரை புதுமண்டபம், பத்துத்தூண், மொட்டைக்கோபுரம் ஆகியவை இருக்கும் நிலையே சான்று. இதற்கு நிகரான ஓர் அராஜக நிலைமை இந்தியாவில் எங்குமே இல்லை.

கூடலழகர் ஆலயத்திற்கு முன்னர் ஒருமுறை சென்றிருந்தேன். ஆனால் நினைவில் தெளிவாக இல்லை. எண்தள  விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார். மதுரையின் பெரிய ஆலயங்களில் ஒன்று இது. சிலப்பதிகாரத்திலேயே இதைப்பற்றிய குறிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள சக்கரத்தாழ்வார் பெரிய அழகான சிலை. சௌந்தரவல்லி தாயாரின் சன்னிதி கரியபளிங்குக் கல்லால் ஆன அழகான கட்டுமானம். மதியம் வெயில் எரித்துக்கொண்டிருக்க குளிர்ந்த கற்களால் ஆன ஆலயத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். அது ஒருவகையில் வரலாற்றில் புதைவது. தலைக்குமேல் மதுரையின் ஓயாத இரைச்சல்.

மதியம் உணவுண்டுவிட்டு கிளம்பினோம். இம்முறை அம்மா மெஸ். வழக்கம்போல எல்லாமே சுவையானவை. மதுரையிலிருந்து கொண்டுசெல்ல இரண்டே நல்ல விஷயங்கள்தான். அமிழ அமிழத்திறக்கும் அதன் தொன்மை. அதன் சுவையான அசைவ உணவுகள்.

மதுரைப்பயணம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நோக்கங்களுடன் இருந்திருக்கிறது. இம்முறை ஆலயங்கள் மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித்.

சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்

சுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்

சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்

கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்

முந்தைய கட்டுரைபேச்சும் பயிற்சியும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு-நீர்ப்பெருந்தழல்