ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை

 

முற்போக்கு எழுத்தாளர் சங்கம்- கடிதங்கள்

அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு

இன்று ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கை எனக்கு வந்தது. அதில் சுந்தர ராமசாமியைப் பற்றி பிள்ளைகெடுத்தாள் விளை கதை சார்பாக அவர் கூறியவற்றை நான் மேற்கோள்காட்டியிருப்பது அவதூறு என்றும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியிருக்கிறார்கள்.

நான் அக்கட்டுரையில் என்ன சொல்லியிருக்கிறேனோ அதற்கு மிகத்தெளிவான சான்று இது. பெரிய இலக்கியநோக்கங்களுடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று எழுத்தாளர்களை எல்லைமீறி மிரட்டும் ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் முகமாக ஆதவன் தீட்சண்யா ஆகியிருக்கிறார். முச்சந்திமொழியில் எழுத்தாளர்களை வசைபாடுவது, இலக்கியத்தின் எந்த நுட்பங்களையும் புரிந்துகொள்ளாத மொண்ணை மூர்க்கம் ஆகியவற்றுடன் இவ்வாறு வழக்குதொடுத்து மிரட்டும் போக்கையில் இவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அறியப்பட்ட எழுத்தாளர்களிடம் தொடங்கும் இச்செயல்பாடு நாளை அத்தனை பேர்மேலும் திரும்பும். இதைச் செய்வதே எங்களை மிரட்டுவதன் வழியாக தொடக்க நிலை படைப்பாளிகளை மேலும் அச்சுறுத்தும் பொருட்டுதான்.

தமிழ் சிந்தனைச்சூழலையே சீரழிக்கிறது இந்த மாஃபியா கும்பல். கருத்துச்செயல்பாடு என்றால் என்னவென்றே அறியாத அறிவிலிகளின் கூடாரம் இது. சென்ற இருபத்தைந்தாண்டுகளில் இவர்கள் இலக்கியம் மீது தொடுத்த தாக்குதல்களின் தரம் என்ன என்று பார்த்தவர்கள் இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துகொள்வது மிக எளிது. கருத்து என்பது தாங்கள் பிறர்மேல் தொடுக்கும் கீழ்த்தரத் தாக்குதல். தங்கள் கீழ்மையைச் சுட்டிக்காட்டும் எதுவும் குற்றநடவடிக்கைகள், வழக்குகள் வழியாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை. இதுதான் இவர்களின் நிலைபாடு.

இந்த மாஃபியா கும்பலுக்கு நிதியும் கட்சிப்பின்னணியும் உண்டு. இன்று சொல்லும்படியான எந்த எழுத்தாளரும் இவர்களின் அணியில் இல்லை. இலக்கியச் செயல்பாடு என்பதே இல்லை. இலக்கியவாதிகளை மிரட்டுவது மட்டுமே இவர்களின் பங்களிப்பு. இவர்கள் இக்காலகட்டத்தில் ஆற்றிய ஒரே பங்களிப்பு இதுதான் என அத்தனை இலக்கிய வரலாற்றிலும் பதிவுசெய்யவேண்டும் என நினைக்கிறேன்.

தனிமனிதர்களாகிய எழுத்தாளர்கள் இந்த மாஃபியாக் கூட்டத்தின் கூட்டுமிரட்டலுக்கு அஞ்சி இவர்கள் பொதுவெளியில் உமிழும் வசைகளை சகித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மொண்ணையான தாக்குதல்கள் முன் அமைதி காக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் நகுலன் இறந்து சில அஞ்சலிக் கட்டுரைகள் வெளிவந்தபோது தன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த விசை இதழில் ‘செத்தவன் சடலத்தை வைத்துக்கொண்டு எத்தனை ஒப்பாரி பாடுகிறார்கள்’ என்று எழுதியவர் ஆதவன் தீட்சண்யா. சொல்லும்படியான ஒரு கதை, ஒருவரி எழுத ஆற்றலில்லாத முச்சந்திப்பேச்சாளர். அவர் தலைமையில் அதைவிட தகுதியற்றவர்கள் திரண்டு இந்த மிரட்டல் நிகழும்போது, தீண்டாமை வழக்கு உட்பட அத்தனை சட்டக்குறுக்குவழிகளையும் இவர்கள் நாடும்போது, இந்த குண்டர்முறையை அஞ்சி வாளாவிருப்பதே ஒரே வழியாக இலக்கியவாதிகளுக்கு இருக்கிறது.

ஆனால் இதை அஞ்சப்போவதில்லை, உரியமுறையில் எதிர்கொள்வோம். எனக்காக மட்டுமல்ல, இங்கே இலக்கியவாதிகளுக்கும் கருத்தும் விமர்சனமும் சொல்லும் உரிமை உண்டு என்பதற்காக.

முந்தைய கட்டுரைபேச்சும் பயிற்சியும்
அடுத்த கட்டுரைவெண்முரசு-பண்பாடு,தொன்மம்