கொங்கு நாட்டு மகளிர்

தமிழகத்தின் பெருவரலாற்றில் பெரும்பாலும் பெண்கள் இடம்பெறுவதில்லை. சங்ககாலத்தில் புகழ்பெற்ற அரசியர் இல்லை, அரசமகளிரின் பெயர்களே கிடைக்கின்றன. சோழர்கால வரலாற்றில்தான் அரசகுடிப் பெண்களின் பெயர்களும் ஆட்சித்திறனும் கொடையும் இடம்பெறுகின்றன. ஆயினும் நேரடியாக பெண்கள் ஆட்சிசெய்ய தமிழ்மரபு ஒப்புக்கொண்டதில்லை.

பொதுவாக உடன்கட்டை ஏறும்வழக்கம் இருந்தால் அங்கே பெண் அரசாள்வது ஏற்கப்படவில்லை என்றே பொருள். தமிழ்மன்னர்குடிகளிடம் உடன்கட்டை வழக்கம் இருந்தது. ‘கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்பதே நெறியாக கொள்ளப்பட்டது. கடைசியாக பதினேழாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் கிழவன் சேதுபதி வரலாறு வரை நாம் உடன்கட்டை ஏறும் சடங்கை காண்கிறோம்.

கைம்மைநோன்பு தமிழகத்தின் ஆசாரங்களில் முதன்மையானது. தமிழ்ச் சமூகவரலாற்றை எடுத்துப் பார்த்தால் நிலவுடைமை, நாடாள்தல் ஆகிய அதிகாரங்கள் கொண்ட குடிகள் பெண்களை கடுமையான இற்செறிப்புக்குள் வைப்பவையாகவும், மறுமணத்தை தடைசெய்தவையாகவும், கைம்மைநோன்பு உடன்கட்டை போன்றவற்றை வலியுறுத்துவனவாகவுமே இருந்துள்ளன.

ஆனால் வரலாற்றுக்காலத்திற்கு முன்னரே சதகர்ணிகளின் அரசி நாகனிகாவின் ஆட்சி வடக்கே இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன.சாளுக்கிய அரசி உதயமதி முதல் ராஷ்ரகூட பேரரசி ருத்ராம்பாள் வரை புகழ்மிக்க அரசியர் என இருபது பெயர்களையாவது வரலாற்றிலிருந்து பட்டியலிடமுடிகிறது.

தமிழகத்தில் பெண் இருந்து அரசாண்டது நாயக்கர்களின் ஆட்சி அமைந்த பின்னர்தான். ராணி மங்கம்மாள் [ஆட்சிக்காலம் 1689– 1704] அவ்வகையில் தமிழ் வரலாற்றின் ஓர் ஒளிமிக்க ஆளுமை என்றால் ராணி மீனாட்சி ஒரு துன்ப நினைவு. வரலாறெங்கிலும் அரசர்கள் இவ்விரு எல்லைகளிலும்தான் நினைவில் நீடிக்கிறார்கள். [ஆனால் நாயக்கர் குலத்திலும் சதி ஆசாரம் இருந்தது. மங்கம்மாளின் மகனின் மனைவி உடன்கட்டை ஏறினார்].

சிறுவரலாறு எனப்படும் வட்டார வரலாற்றில்- அல்லது நாட்டார் வரலாற்றில்தான் பெண்களின் கதைகள் ஏராளமாக உள்ளன. கல்வியாளர்களாக, பேரன்னையராக. தன் மைந்தரையும் குலத்தையும் காத்தவர்களாக அவர்கள் வாய்மொழி வரலாற்றிலும் ஓரிரு புலவர்பாடல்களிலும் நினைவில் நீடித்தனர். அவர்கள் பெருவரலாற்றில் அரிதாகவே குறிப்பிடப்பட்டார்கள்.

கொங்குநாட்டின் வரலாற்றில் அறியப்பட்ட பெண்களைப் பற்றிய சிறிய நூல் புலவர் செ.இராசு எழுதிய கொங்குநாட்டு மகளிர். பெரும்பாலும் வாய்மொழிக்கதைகளை ஒட்டியும் வெவ்வேறு பாடல்களில் குறிப்பிடப்படும் செய்திகளை ஒட்டியும் சுருக்கமாக இந்தக் குறிப்புகளை இராசு எழுதியிருக்கிறார்.

பெருந்துறை மடத்துப்பாளையம் செல்லிமகன் நாச்சிமுத்தன் என்பவன் பெருந்துறை சீனாபுரம் வழியில் ஒரு விநாயகர் கோயில் கட்டி அது ‘மேதிகுலத்துக்கும் காடன்குலத்துக்கும் உரியது’ என்று கல்வெட்டு பொறித்துவிட்டான். பழனிக்கவுண்டர் என்பவர் அவன் காடைக்கூட்டத்தவன் அல்ல என்று சொல்லி அந்த கோயிலை இடித்துவிட்டார்.

அந்த வழக்கு பூந்துறைநாட்டின் இரண்டாவது தலைநகரான வெள்ளோட்டைச் சேர்ந்த காலிங்கராயன் வழியில்வந்த பழனிவேலப்ப கவுண்டரின் மகள் தெய்வானையின் முன் வந்தது. தெய்வானை நெறிநூல்களில் ஆழ்ந்த கல்வி கொண்டவர் என புகழ்பெற்றிருந்தார்.அவர் வழக்கை விசாரித்து நாச்சிமுத்தன் பிழையாகச் செய்தி பொறித்தமைக்கு அபராதம் செலுத்தவேண்டும் என்றும் கோயிலை இடித்த பழனிக்கவுண்டர் வெற்றிக்காணிக்கை செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இது அங்கே கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியைச் சொல்லியபடி தொடங்கும் இந்நூல் கொங்குபகுதியின் பெண்களின் கல்வியறிவு, செய்யுள்புனையும் திறன், மரபிலக்கியப் பயிற்சி, நெறிநூல்தேர்ச்சி ஆகியவற்றுக்கான சான்றுகளை அளித்தபடியே செல்கிறது.

கொங்குநாட்டில் புலமைமிக்க பெண்களை ஔவையார் என்று சொல்லும் வழக்கம் இருந்தது. கொங்குநாட்டு ஔவையார்களைப் பற்றியே ஒரு கட்டுரையை ராசு எழுதியிருக்கிறார். கணக்கு அதிகாரியாக பணியாற்றிய பூங்கோதை, கண்ணொளி கதிரொளி போன்ற பக்தி இலக்கியங்களை பாடிய சின்னம்மையார் என்று கல்வித்திறன் மிக்க பெண்களின் வரலாறுகள் பல இந்நூலில் உள்ளன

கொங்குநாட்டில் பட்டக்காரர்கள் என்னும் சிற்றரசர்கள் பட்டமேற்கையில் அரியணையில் இணையாக அரசியை அமரச்செய்து நடுவே வாளை வைத்து பட்டமேற்கும் வழக்கமிருந்தது. “பாங்குள்ள ஆறுகால் பீடத்தில் அமர்ந்து பட்டத்து வாளாயுதம் பதிசதிகள் இருவருக்கும் மத்தியிலே நிறுத்தி” என்று சடைப்பெருமாள் என்னும் புலவரால் பாடப்பட்ட நாட்டார்பாடல் சொல்கிறது.

கொங்குநாட்டில் சம்ஸ்கிருதத் தேர்ச்சி ஒரு தகுதியாக கருதப்பட்டிருக்கிறது. பெண்களும் வடமொழிக் கல்வி அடைந்திருந்தனர். நசியன்னூர்- சித்தோடு சாலையிலுள்ள கங்காபுரம் ஊரைச்சேர்ந்த பழனியம்மாளின் சம்ஸ்கிருதத் தேர்ச்சியை விளக்கும் ஒரு நாட்டார்கதை இதிலுள்ளது. தன்னை ஷோட்சாவதானி என்று சொல்லிக்கொண்ட ஒருவரை பழனியம்மாள் மடக்குகிறார். சம்ஸ்கிருத சொற்களுக்கு தமிழ் உச்சரிப்பு கம்பன் காலம் முதல் உள்ளது. அதன்படி ஷோட என்ற உச்சரிப்பு தமிழில் சோட என்று வரும். சோட என்றால் இரட்டை. அஜம் அசம் ஆகும். அசம் என்றால் ஆடு. எனவே ஷோடசாவதானம் என்பது சோடி ஆடுகளை திருடுவது என்று பொருள் என்கிறார் பழனியம்மாள்.

கொங்குகுலத்துக் கண்ணகி என்று புகழ்பெற்ற வெள்ளையம்மாளின் கதையை கண்ணாடிப்பெருமாள் என்ற கவிஞர் நாட்டார்காவியமாக பாடியிருக்கிறார். தாராபுரம் புதுப்பாளையம் எம்.துரைசாமி இதை அச்சிட்டு வெளியிட்டார். இவ்வண்ணம் பத்துக்கும் மேற்பட்ட வாய்மொழிக் காவியங்கள் கொங்குநாட்டிலுள்ளன என்பதை இந்நூல் காட்டுகிறது.

பச்சைமண் பாத்திரத்தி பாவையே நீர் எடுத்தால்
பானை கரையாதோ பைங்கிளியே சொல்லுமம்மா.
குதிரை உருவாரம் குலுக்குமோ நீர் தெளித்தால்
வறண்டமரம் துளிர்விடுமோ மாதரசி உன் நீரால்?

என்பதுபோன்ற நேரடியான, இலக்கணமற்ற, வாய்மொழிச் செய்யுளாக அமைந்துள்ளது இக்காவியம்.

கொங்குப் பெண்கள் திருச்செங்கோடு உட்பட ஆலயங்களுக்குச் செய்த திருப்பணிகள் கல்வெட்டுச்சான்றுகளாக உள்ளன. இவர்கள் பெரும்பாலானவர்கள் ஆலயங்களில் தேவரடியாராகப் பணியாற்றியவர்கள். ஆனால் நமக்கு வெள்ளையர் எழுதிய வரலாறு காட்டுவதுபோல ஒடுக்கப்பட்ட குடியிலிருந்து வலுக்கட்டாயமாக தாசியாக்கப்பட்டவர்கள் அல்ல. பெரும்பாலும் அன்றைய ஆட்சிகுலமான கவுண்டர்களின் பெரிய குடிகளிலிருந்தே தேவரடியார்களாக ஆகியிருக்கிறார்கள். பெரும்பொருட்செலவில் திருப்பணிகளைச் செய்து தங்கள் பெயரை பெருமிதத்துடன் பொறித்திருக்கிறார்கள்

அன்றைய சமூக அமைப்பில் அவர்களுக்கிருந்த இடம் என்பது இன்றைய ஐரோப்பிய நோக்கில் மதிப்பிடத்தக்கது அல்ல. திருமுடித்தாசி சேனாபதி வேலாள் திருமுடிக்கவுண்டர் குடியில் பிறந்தவர். சேனாபதி பட்டம் கொண்ட குடும்பம் அது.குருவம்மை மாணிக்கி, குயிலி போன்று பல தேவரடியார் பெயர்கள் உள்ளன.பெரியாள் என்னும் தேவரடியார் வீரபாகு குலம் என அழைக்கப்படும் செங்குந்தர் குலத்தில் முதன்மையான குடும்பத்தில் பிறந்தவர். முத்திகாப்பட்டி முத்தியாலம்மன் போகலரெட்டியார் குலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் அரசியருக்குரிய வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். நாம் புரிந்துவைத்திருக்கும் எளிய வரலாற்று உருவகங்களை இந்த இணைவரலாறு உடைத்துச் செல்கிறது

தமிழ்வரலாற்றெழுத்தின் எதிர்காலத்து திறப்புகள் முழுக்க சிறுவரலாற்றில் இருந்தே எழமுடியும். இதுவரையிலான வரலாற்றின் இயக்கம் பற்றி நாம் கொண்டிருக்கும் எல்லா முன்முடிவுகளையும் அவை உடைத்து மாற்றிக் கட்டக்கூடும். தமிழக வரலாற்றில் அரசர்களின் இடம் எல்லைக்குட்பட்டதே என்று இவை காட்டுகின்றன. குலங்களும் குடிகளுமே இங்கே நிலத்தையும், அதிகாரத்தையும் வைத்திருந்தன. அவை அரசர்களை கட்டுப்படுத்தின. அக்குலங்களும் குடிகளும் தங்களுக்குரிய நெறிகளையும் ஆசாரங்களையும் கொண்டிருந்தன. அவர்களே அடித்தள வரலாற்றை அமைத்தனர்.

தமிழகத்தின் நுண்வரலாற்றெழுத்துக்கு எந்த அளவுக்கு வாய்ப்புகள் உள்ளனவோ அதைவிட மிகமிகக்குறைவாகவே ஆய்வுகள் நிகழ்கின்றன. ஆய்வில்லாத வெற்றுக்கூச்சல்களும் வெறும்பேச்சுகளும் மிகுதியாக உள்ளன. இச்சூழலில் செ.இராசுவின் இந்நூல் முக்கியமான ஒரு வழிகாட்டி.

நிழல்வெட்டுகள்

முந்தைய கட்டுரைபொய்த்தேவு- கண்டடைதல்
அடுத்த கட்டுரைகருமுகில் திரள்தல்