காந்திக்கான வழிகாட்டிகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தங்களின் ‘தகடூர் புத்தகப் பேரவையின்’ காந்தியிடம் செல்ல வழிகாட்டியவர்கள் சிறப்புரையை  நேரலையில் கண்டேன். மேலும் தங்களின் காந்தி பற்றிய கடிதங்களும் (உங்களின் வலைதளத்தில்), தங்களின் ‘உரையாடும் காந்தி’  புத்தகமும் வாசிக்கும் பொழுது, நம் பாடப்  புத்தகத்திற்கு அப்பால் உள்ள ஒரு காந்தியினை புரிந்து கொள்ள உதவி புரிகிறது.

காந்தியத்தின் தேவை முன் எப்பொழுதையும் விட இன்று மிகவும் தேவைப்படுகிறது. காந்தியை சொல்லால் முழுவதுமாக விவரிக்க முடியாது என்றே தோன்றுகிறது. எவ்வளவு விவரித்தாலும் காந்தியத்தை  செயலால் மட்டுமே முழுமைப் பெற வைக்க முடியும். தன் வாழ்நாள் முழுவதும்,  ‘இலட்சிய செயலாற்றிக்கொண்டே’ இருந்தவர்கள் வரலாற்றில் மிகவும் குறைவு. செயலே சொல்லாகவும், சொல்லே செயலாகவும் தன் வாழ்க்கையை  அர்ப்பணித்தார் காந்தி.

உண்மையில் காந்தியை எதிர்த்தலும் ஒரு வகையான காந்தியமே. அவரின் ஏதோ ஒரு கூற்று நம்மை நிலைகொள்ள செய்யாமல் ஆழ் மனதில் உறுத்திக்  கொண்டே இருக்கிறது என்றால் , அதனை சரி செய்ய நாம் அந்த கூற்றுக்கு ஒரு எதிர்வினையை செய்து பார்ப்போம். அது அவர் கூறியதற்கு மாற்று கருத்தாக இருந்தாலும் அச்செயலும் காந்தியத்தினால் முளைத்த விதையே. அவற்றில் நாம் வெற்றி கண்டாலும் தோல்வி கண்டாலும் அதன் வேர் காந்தியத்தில் உள்ளது. செயலாற்றிக்கொண்டே இருப்பதன் முக்கியதுவத்தை அது உணர்த்துகிறது.

தாங்கள் ஒரு வாசகர் கேள்விக்கு (இவ்வளவு அரசியல் திரிப்புகள் உங்கள் சொல்லின் மேல் சொல்லப்பபட்டாலும் , நீங்கள் ஏன் சலிக்காமல் திரும்ப திரும்ப உரையாடிக்கொண்டே இருக்குறீர்கள்? என்ற வகையான கேள்விக்கு), ‘உரையாடிக்கொண்டே இருப்பது என் கடமை, அதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர் மனதில் உள்ளது. வாசகனுக்காக நான் உரையாடவில்லை, எனக்காக உரையாடுகிறேன்’   என்ற வகையில் பதில் கூறினீர்கள். அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காந்தியின் கூற்றே.

அன்புடன் ,

பிரவின்,

தர்மபுரி

அன்புள்ள ஜெ

காந்தியிடம் இட்டுச்சென்றவர்கள் என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரையை கவனித்தேன். எந்த தயாரிப்பும் இல்லாமல் தொடங்கி நீட்சி பெற்ற உரை தன்னியல்பாகவே ஓர் அழகிய வடிவத்தை அடைந்துவிட்டது. காந்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஒருவர் சிந்தனையாளர், ஒருவர் நாவலாசிரியர், ஒருவர் சினிமாக்காரர். மூன்றுபேருக்குமே பொதுவான அம்சம் அவர்கள் கலகக்காரர்கள் அராஜகவாதிகள் என்பது

காந்தியை ஒரு தேசநிர்மாணகராகப் பார்ப்பது தவறான பார்வை. காந்தி தேசத்தை உருவாக்கவில்லை. ஆதிக்கத்திலிருந்து விடுதலையை அடைவதற்கான வழியைக் காட்டினார். அவர் எதிர்த்த ஆதிக்கங்களில் ஒன்றுமட்டும்தான் வெள்ளைய ஆதிக்கம். நுகர்வின் ஆதிக்கம் சாதிய ஆதிக்கம் ஆணாதிக்கம் மதநம்பிக்கையின் ஆதிக்கம் அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கான வழி காந்தியால் காட்டப்பட்டது. அரசின் ஆதிக்கமில்லாத ஒரு கிராமசுயராஜ்யம் என்ற கனவும் அவரால் முன்வைக்கப்பட்டது. அவர் நேஷன் பில்டர் அல்ல அவர் நேஷன் கான்ஸப்டுக்கு எதிரானவர். அவர் பேரில் இந்த தேசம் கட்டப்பட்டது அவ்வளவுதான்

காந்தியை ஓர் அராஜகவாதியாக அணுகுவதே சரியான அணுகுமுறை. தமிழிலும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் காந்தி பேசப்பட்டார். ஆனால் அவர்களெல்லாம் சொல்லாத ஒன்றைச் சொல்ல உங்களால் முடிந்தது உங்கள் பார்வை முற்றாக வேறொரு கோணத்தில் இருந்து தொடங்கியது என்பதனால்தான்

எம்.சந்திரசேகர்

முந்தைய கட்டுரைவெண்முரசு-நீர்ப்பெருந்தழல்
அடுத்த கட்டுரைகதைகளும் கனவும்- கடிதங்கள்