எட்டு நாவல்கள்

வல்லினம் நாவல் சிறப்பிதழ்

வல்லினம் நவம்பர் 2020 இதழ் சமகாலநாவல்களின் மீதான விமர்சனப்பார்வையை முன்வைக்கும் மலராக வெளிவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளிவரும் படைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்ப்பதென்பது அக்காலகட்டத்தின் சில பொதுத்தன்மைகளை உருவகித்துக்கொள்ள உதவியானது. பேசுபொருள், வடிவம் ஆகியவற்றில் உருவாகிவந்துள்ள புதுப்போக்குகள் என்னென்ன என்பதை இந்த வகையான தொகுத்துப் பார்க்கும் ஆய்வுமுறை காட்டுகிறது.

உண்மையில் இவ்வாறு தொகுத்துப்பார்ப்பவர்களின் அளவுகோல்களும் இங்கே செல்வாக்கு செலுத்துகின்றன. அதற்குத்தான் வேறுபட்ட பார்வை கொண்ட விமர்சகர்களின் கட்டுரைகள் கேட்டு வெளியிடப்படுகின்றன. எனினும்கூட அவை அறுதியானவை அல்ல. அவை ஒரு விவாதத்தையே உருவாக்குகின்றன. அவ்விவாதம் வழியாக மெல்லமெல்ல ஒரு பொதுவான ஏற்பு உருவாகிறது. ரசனை சார்ந்த விமர்சனமே இலக்கியத்தில் தரப்பிரிவினையைச் செய்யமுடியும். ரசனைசார்ந்த விமர்சனம் அகவயமானது. அது உருவாக்கும் விவாதம் வழியாக திரண்டுவரும் பொதுவான கருத்தே புறவயமானது.

முத்துநாகு எழுதிய சுளுந்தீ நாவலைப் பற்றி சுனீல் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு புனைவுப்பாவனை உண்டு. சுளுந்தீ தன்னை ஒரு மாற்றுவரலாறாக, நாட்டாரியல் ஆவணமாக உருவகித்துக்கொண்டு பேசுகிறது. அவ்வகையில் முன்னோடியான படைப்பு கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம். அவ்வரிசையில் அதிகமாக இங்கே எழுதப்படவில்லை.

கிராமிய யதார்த்தவாதத்திற்கும் இதற்கும் வேறுபாடுண்டு. கிராமத்தை ஒரு முற்போக்கு யதார்த்தவாத நோக்கில் பார்த்து எழுதப்பட்ட நாவல்களில் முன்னோடியானது ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘சட்டிசுட்டது’. அதன்பின் ஹெப்ஸிபா ஜேசுதாசனின்  ‘புத்தம்வீடு‘ முதல் தோப்பில் முகமதுமீரானின் ‘ஒரு கடலோரக்கிராமத்தின் கதை’, ஜோ டி குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ வரை பல நாவல்கள் உள்ளன. அவற்றிலுள்ள வரலாறு ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாற்றின் நீட்சி. மாறாக கி.ராவில் தொடங்கும் நாட்டாரியல் யதார்த்தவாதம் இன்னொரு வரலாற்றைச் சொல்ல முற்படுகிறது. இணைவரலாறு, மாற்றுவரலாறு

பக்கம் பக்கமாக அறியப்படாத செய்திகளுடன் ஓர் ஆவணத்தொகையெனவே அமைக்கப்பட்டுள்ள முத்துநாகுவின் சுளுந்தீ அவ்வகையில் கி.ரா உருவாக்கிய அழகியலில் ஒரு முன்னோக்கிய நகர்வு. இச்செய்திகளில் பெரும்பாலானவை நாட்டாரியலில் இருந்து பெறப்பட்டவை. நாட்டாரியலில் செய்திகள் தொன்மத்துக்கும் நம்பிக்கைக்கும் தரவுகளுக்கும் நடுவே ஊசலாடுபவை. நாட்டுமருத்துவம், மந்திரவாதம், குலக்கதைகள், சிறுதெய்வக்கதைகள் என அவை விரிந்து கிடக்கின்றன. சுளுந்தீ அவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து ஓர் இணைவரலாற்றுப் படலமாக நெய்கிறது.

ஷோபா சக்தியின் இச்சா பற்றி லதா எழுதியிருக்கிறார். ஷோபாசக்தியின் இந்நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை. இது ஒரு வகை குரூரவரலாற்றுச் சித்தரிப்பு என்று லதா மதிப்பிடுகிறார். ஆனால் நவீனத்துவ நாவல்கள், மேலைநாட்டில் இன்று பொதுவாசிப்புக்கு உகந்ததாக உள்ள ஆக்கங்களில் இருக்கும் நன்கு வெட்டித்தொகுக்கப்பட்ட வடிவம் கொண்டது இது

சுனீல் கிருஷ்னனின் நீலகண்டம் நாவலைப்பற்றி அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். நாம் அன்பென நினைப்பது எப்போதுமெ மூன்று வகையானது. நம்மை நாம் நிகழ்த்திக்கொள்ளும் களமாக நாம் உருவாக்கிக்கொள்ளும் சில உறவுகளை, உணர்வுநிலைகளை அன்பு என எண்ணிக்கொள்கிறோம். குடும்பம், குழந்தைகள், உறவுகள் மீதான அன்பு அத்தகையதே. அந்த அன்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது எனும்போது ஒருவகை சமூகஏற்பு, ஒருவகை தன்னிறைவு ஆகியவற்றுக்ககாவே என்று நாமே அறிவோம்

அதற்கப்பால் இருவகை அன்புநிலைகள் உள்ளன. உயிரியல் சார்ந்த உணர்வு என எழும் அன்பு. பெண்ணுக்கு எக்குழந்தைமேலும் எழும் அன்பு ஓர் உதாரணம். சகமானுடனின் மேல் நமக்கு உருவாவது இன்னொரு உதாரணம். மூன்றாவது அன்பு ஓர் உயர்விழுமியமாக, ஓர் அறமாக நாம் உருவாக்கிக்கொள்ளும் அன்பு.நாம் எப்போதுமே முதல் இருவகை அன்பை மூன்றாம் வகை அன்பென ‘தூய்மைப்படுத்திக்கொள்ள’ ‘உன்னதப்படுத்திக்கொள்ள’ முயல்கிறோம். ஒரு சாதாரணமான காதலில்கூட அதை தெய்வீகக்காதலாக ஆக்கிக்கொள்கிறோம்

நீலகண்டம் இந்த அன்புகளுக்கு இடையேயான ஊசலாட்டங்களைச் சொல்லும் நாவல். ஏன் இதில் தொன்மமும் புராணமும் ஊடுருவுகின்றன என்றால் அவைதான் அன்பு என்னும் விழுமியத்தை ஆழுள்ளத்தில் நிலைநிறுத்துபவை. நடைமுறையில் அன்பு ஒவ்வொரு கணமும் தன்னலத்தால், சமூகத்தடைகளால், சூழ்நோக்குகளின் அழுத்தத்தல திரிபடைந்துகொண்டே இருக்கிறது. நீலகண்டம் அந்த இரு எல்லைகளை திறம்பட அருகருகே வைத்து ஒர் அகவிவாதத்தை வாசகனின் உள்ளத்தில் எழுப்பும் ஆக்கம்.

இமையத்தின் ‘வாழ்க வாழ்க’ நாவல் பற்றி சுரேஷ் பிரதீப் எழுதியிருக்கிறார். ஊர்வலங்களில் கோஷமிட கூட்டப்படும் கூட்டம் பற்றிய நாவல். கோஷமிட ஆள்கூட்டுவதைச் செய்தேயாகவேண்டிய கட்சிப்பொறுப்பில் இருப்பவர் என்பதனால் இமையம் மேலும் நுட்பமாகச் சொல்லமுடியும். இமையத்தின் அழகியல் யதார்த்தத்தை அவ்வண்ணமே ஆவணப்படுத்துவது. ஆகவே மிகையற்ற நேர்ச்சித்தரிப்பாக இந்நாவல் அமைந்திருக்கலாம்.

வாழ்த்துக் கோஷமிடுவது வரலாறெங்கும் இருந்து வரும் செயல்பாடு. சொல்லப்போனால் அவ்வண்ணம் கோஷமிடுபவர்களாகவே ‘மக்கள்’ என்னும் அடையாளம் திரட்டப்பட்டிருக்கிறது. மக்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதும் திரையரங்கில் அல்லது விளையாட்டரங்கில் பெருந்திரளாக மாறி கோஷமிடும்போதுதான். அந்தக் கோஷமே தேவையானபோது போர்க்கூச்சலாகவும் ஆகிறது. ஜனநாயகத்தில் மட்டுமல்ல பழங்குடி வாழ்வு முதலே அந்த கோஷம் இருந்துகொண்டிருக்கிறது. வெண்முரசில் இந்த வாழ்த்துக்கோஷமும் போர்க்கூச்சலும் உருவாகும் உளநிலை குறித்த விரிவான பலநிலை விவாதங்கள் உள்ளன.

கார்ல் மார்க்சின் தீம்புனல் பற்றி காளிப்பிரசாத் எழுதியிருக்கிறார். தீம்புனல் எண்பதுகளுக்குப் பிந்தைய தஞ்சைப்பகுதி வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாவல். நாமறிந்த தஞ்சை ஜானகிராமனின் உலகம். நூறாண்டுகள் தொன்மையானது. அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு முழுமையாகச் சிதறி, நிலம் ஒர் உடைமை என்பதிலிருந்து ஒரு செலாவணி என்ற இடத்தை அடைந்து, நிலத்தையொட்டிய வாழ்க்கைமுறை பொருளிழந்துபோன சூழலின் காட்சியை அளிக்கிறது தீம்புனல். அது உறவுகளில் அளிக்கும் மாறுபாடுகள் அல்லது திரிபுகளை தலைமுறைக்கதைகள் வழியாகச் சொல்கிறது

ஆனால் உருக்கமான நிகழ்வுகளோ பரபரப்பான நிகழ்வுகளோ இல்லாமல் இயல்புவாதத்திற்குரிய நிதானத்துடன் உதிரிச்சித்தரிப்புகள் வழியாகவே சொல்லிச் செல்கிறது. பண்டைய நிலப்பிரபுத்துவகால பாலுறவுகளில் இருக்கும் ஆக்ரமிப்புத்தன்மையில் இருந்து இன்றைய வாழ்வின் பாலுறவுகளில் இருக்கும் நுகர்வுத்தன்மை நோக்கிய நகர்வை காட்டும் நுண்சித்தரிப்புகள் இந்நாவலின் சிறந்த பகுதிகள்

சித்துராஜ் பொன்ராஜின் மரயானை நாவலைப் பற்றி அர்வின்குமார் எழுதியிருக்கிறார். இந்நாவலை இன்னும் நான் வாசிக்கவில்லை.முற்றிலும் சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் சிங்கையின் வெவ்வேறு காலகட்டங்களின் வாழ்வுமாற்றங்கள் உள்ளன என்று அர்வின்குமார் சொல்கிறார்

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அ.வெண்ணிலாவின் கங்காபுரம் நாவலைப் பற்றி எழுதியிருக்கிறார். வரலாறு தமிழில் இரு கோணங்களிலேயே எழுதப்பட்டுள்ளது. கல்கி-சாண்டில்யன் வகை எழுத்து வரலாற்றை முன்வைத்து சாகசக்கதைகளை புனைவது. அவற்றை ஆங்கிலத்தில் ரொமான்ஸ் என்கிறார்கள். தமிழில் சாகசப்புனைவு எனலாம். இன்னொரு வகை பிரபஞ்சனின் வானம்வசப்படும் வகையான வரலாற்றெழுத்து. எழுதப்பட்ட வரலாற்றிலிருந்து அதன் இடைவெளிகளை புனைவைக்கொண்டு நிரப்பி மேலே செல்வது. உண்மையில் வரலாற்றுநாவல் என்பது இதுதான்

இந்த இரண்டாம்வகை வரலாற்றுநாவலில் வெவ்வேறு நோக்குகள் உள்ளே வரும்போதுதான் அதன் இலக்கியத்தளம் முழுமைபெறுகிறது. சோழர்வரலாறு அன்றைய சாம்பவர்களின் பார்வையில் சொல்லப்படும்போது. தமிழ்ப்பண்ணிசையின் எழுச்சியை தாழ்த்தப்பட்டவராக மாறிவிட்டிருந்த நீலகண்டயாழ்ப்பாணரின் கோணத்தில் சொல்லும்போது. களப்பிரர்களின் வரலாற்றை களப்பிரர் பார்வையில் சொல்லும்போது

அத்தகைய வரலாற்றுப்புனைவுக்கான வாய்ப்புக்களில் முதன்மையானது பெண்களின் கோணம். முற்கால தமிழக வரலாற்றில் நாம் பேகன் கண்ணகி,நெடுஞ்செழியன் – கோப்பெருந்தேவி என சில அரசியரையே காண்கிறோம்.அவர்களும் இற்செறிப்பு கொண்ட குலமகள்கள் மட்டுமே. பழந்தமிழரின் பார்வை பெண்களுக்கு ஆட்சியிலோ குடியிலோ நிகர் உரிமை அளிப்பதாக இருக்கவில்லை

ஆட்சிவல்லமை கொண்ட அரசியரின் பெயர்கள் பிற்காலச்சோழர் வரலாற்றிலேயே காணக்கிடைக்கின்றன. அவர்களை முன்வைத்து எழுதப்படும் நாவல்கள் வரலாற்றை இன்னொரு கோணத்தில் புனையமுடியும். அந்த முயற்சியின் தொடக்கம் என்று கங்காபுரம் நாவலைச் சொல்லலாம். சோழர்வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்ட இந்நாவல் ராஜராஜன் உள்ளிட்ட பேரரசர்களின் தடுமாற்றத்தையும் நிலைகுலைவையும் சொல்லி லோகமாதேவி போன்ற அரசியரின் உறுதியையும் ஆட்சிவல்லமையையும் சித்தரிக்கிறது. இந்நாவலின் கதைத்தலைவி லோகமாதேவிதான்.

கடலூர் சீனு ,ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவலைப்பற்றி எழுதியிருக்கிறார்.  வரலாற்றை ஒரு கையாலும் தனிமனித உளப்பரிணாமங்களை இன்னொரு கையாலும் முடைபவனே மிகச்சிறந்த நாவலாசிரியன்.செயற்கையான உத்திகள் ஏதுமில்லாமல், இயல்பாக உருவாகிப் பெருகிச்செல்லும் மொழியால் அந்த பெருஞ்சித்திரத்தை நவீன் உருவாக்குகிறார்.

கதைமாந்தர்கள் முழுமையான நம்பகத்தன்மையுடன் உருவாகி வந்துள்ளன.நிகழ்வுகள் கண்முன் என நடைபெறுகின்றன. நுண்ணியசெய்திகள் இயல்பான ஒழுக்காக அமைந்து இந்த வாழ்வுச்சித்திரத்தை பின்னி விரிக்கின்றன. அடிப்படையில் இது மூன்றுதலைமுறை பெண்களின் கதை. அவர்களினூடாக ஓடும் ‘பேய்ச்சி’ என்னும் உளநிலையின் பரிணாமம். அது ஒரு தொன்மம் அல்ல, தற்காத்து தற்கொண்டார்பேணி ஆன்ற சொற்காத்து நிற்பதற்கான ஆற்றலை உருவாக்கிக்கொள்ள மரபிலிருந்து அவர்கள் கண்டடையும் ஊற்று

ஒரு மக்கள்திரள் புலம்பெயர்ந்து புதிய மண்ணில் நிலைகொள்வதைப் பற்றிய வரலாற்றுச் சித்திரம் என்று புறவயமான கட்டமைப்பைக் கொண்டு பேய்ச்சி நாவலை வகுத்துவிடலாம். ஆனால் அதை ஓர் ஆன்மிகமான பரிணாமம் ஆகவும் இயல்பாக உருவாக்கிவிட முடிகிறது ஆசிரியரால் என்பதனால்தான் இந்நாவலை முதன்மையானது என்கிறேன்.

சமகால புனைவிலக்கியத்தின் மிகப்பெரிய குறைபாடாக நான் காண்பது அதன் அன்றாட உலகியல் சார்ந்த குறுகலைத்தான். அன்றாடம் கண்முன் காணும் புறவுலக நிகழ்வுகளையே பெரும்பாலானவர்கள் எழுதுகிறார்கள். ஆழ்ந்துசென்று அகத்தை காணவோ மேலெழுந்துசென்று ஒட்டுமொத்தமான வரலாற்றுநோக்கை அடையவோ முயல்வதில்லை. ஆழ்ந்துசெல்ல நுண்நோக்கும் விரிந்துசெல்ல ஆராய்ச்சியும் தேவை. அவை காணக்கிடைக்கவில்லை.

மேலோட்டமான ஒரு வாசகர்வட்டமும் அவர்கள் தெருவில்பார்ப்பவற்றையே புனைவிலும் பார்க்கையில் ஒரு வகை கிளர்ச்சியை அடைந்து இவ்வகை எழுத்தை பாராட்டுகிறது. இதுவே இன்றைய இலக்கியத்தின் தேக்கநிலையை உருவாக்கும் அடிப்படைக் காரணி. இலக்கியத்தின் அடிப்படையான இலக்கே பிறஎவ்வகையிலும் பார்க்கமுடியாத ஒன்றை அது சுட்டிக்காட்டவேண்டும் என்பதுதான். பிறிதொன்றிலாத தன்மையே கலையின் முதற்சிறப்பு. ஆழமும் முழுமைநோக்கும் இல்லாதபோது இலக்கியம் தோல்வியடைகிறது

அந்த எல்லையை மீறிச்சென்று நிகழ்ந்த படைப்பு பேய்ச்சி. இன்னமும்கூட இந்நாவல் தமிழகத்தில் முழுமையாக வாசிக்கப்படவில்லை.அதற்கான வாசகர்களைக் கண்டடையும்போது தமிழில் ஒரு சாதனை என்றே கொள்ளப்படும்.


வல்லினம் இணைய இதழ் வெளியிட்டிருக்கும் எட்டு நாவல்கள் பற்றிய விமர்சனக்குறிப்புகள்.

நாவலின் முதன்மை பாத்திரங்கள் என அரண்மனை நாவிதன் எனும் நிலையிலிருந்து மாபண்டுவனாக நிலைபெறும் இராமப் பண்டுவன் மற்றும் அவனுடைய மகனான செங்குளத்து மாடனையும் சொல்லலாம். நாவல் இன்று கொடைக்கானல் என்றறியப்படும் ‘பன்றி மலையை’ உள்ளடக்கிய கன்னிவாடியைக் களமாகக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லை சுற்றிய குன்னுவரயான்கோட்டை போன்ற இடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருச்சி, மதுரை, செஞ்சி, ராமேஸ்வரம் என தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நாவல் விரிந்து செல்கிறது.

சுனீல் கிருஷ்ணன் விமர்சனம்

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

—————————————————————————————————-

பெற்றோர், சமூகம், கல்வி, அறிவு என தன்னைச் சூழ்ந்துள்ள எதுவுமே தனக்குப் பாதுகாப்பு தரப்போவதில்லை என்பதை கள்ளமற்றவளாக வளரும் ஒரு சிறுமி அறியும் தருணம் அவளுக்கு இந்த வாழ்க்கை என்னவாக அர்த்தப்படும்? அதுவரை அவளுக்குச் சொல்லப்பட்ட விழுமியங்களும் மானுட உச்சங்களும் என்ன பதிலை அவளுக்குக் கொடுக்கும்? பதில்களற்ற திக்குகளில் அர்த்தமற்ற கேள்விகளைச் சுமந்து திரியும் ஆலா மரணத்துடன் ஆடும் பகடையாட்டமே ‘இச்சா’.

 லதா  விமர்சனம்

இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை


சுனில் கிருஷ்ணன

நீலகண்டம் யதார்த்தத்தில் மட்டுமன்றி மரபில் குழந்தையின்மை என்பதற்கான தீர்வு, அதன் தேவை என்ன என்பதை ஆராயவும் செய்கிறது. யதார்த்தையும் தொன்மத்தையும் இணைக்கும் கதை சொல்லல் முறை இக்களத்தின் பல்வேறு சிக்கல்களை பல பரிமாணங்களில் அணுகி ஆராய வாய்ப்பளிக்கிறது.

அனோஜன் பாலகிருஷ்ணன் விமர்சனம்

நீலகண்டம் : பிரியத்தின் திரிபு


இமையத்தின் ‘வாழ்க வாழ்க’ என்ற நெடுங்கதை மாறாட்டம் கதையைப் போல ஒரு சமகால அரசியல் சூழலைப் பேச முனைகிறது. இக்கதை அதனை எவ்வளவு வெற்றிகரமாக செய்திருக்கிறது என்பதைப் பேச வேண்டியிருக்கிறது. நூலில் இப்புனைவு குறுநாவல் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் எடுத்துக் கொண்டிருக்கும் ஒற்றை பரிணாமம் கொண்ட பேசுபொருள் அதை ‘தொண்டர்களின்’ கோணத்தில் இருந்தே சொல்லிச்செல்லும் தன்மை போன்றவற்றைக் கொண்டு இப்புனைவை ஒரு நெடுங்கதையாக வாசிக்கலாம் என எண்ணுகிறேன்

சுரேஷ் பிரதீப் விமர்சனம்

வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை


இன்று தமிழகத்தின் அந்த நெற்களஞ்சியம் மெல்ல மெல்ல தன் அந்தஸ்தை இழந்து வருகிறது. ‘நடந்தாய் வாழி காவேரி’ என காவிரி பாய்ந்து செழிப்பாக்கிய நெற்களஞ்சியத்தின் ஒவ்வொரு துளி உமியிலும் இன்று அரசியல் ஏற்றப்பட்டு விட்டது.  அது செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் புள்ளி விவரங்களோடு அலசப் படுகிறது. இதனாலேயே இது குறித்துப் பேச ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு கருத்து உருவாகியுள்ளது.

காளிப்பிரசாத் விமர்சனம்

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்


சித்துராஜ் பொன்ராஜ்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி

அர்வின்குமார் விமர்சனம்

மரயானை: எஞ்சும் படிமம்


வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தை எடுத்துக் கொண்டு அதனைப் புனைய நினைத்ததே மிகப் பெரிய சவாலான காரியம் தான். அதற்காக authentic தகவல்களைச் சேர்த்து, வாசகனை வாசிப்பின்னூடாக அந்த காலத்தில் கொண்டு நிறுத்துவதே வரலாற்று நாவல்களின் முதன்மையான சவால். கங்காபுரம் அதனைத் திறம்படக் கையாண்டிருக்கிறது.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் விமர்சனம்

கங்காபுரம்: வரலாற்றின் கலை


1981- 1999- 2019 என அடுத்தடுத்த இருபது ஆண்டு இடைவெளிகளில் வரும், தைப்பூசத்தில் நிகழும் சில சம்பவங்களில் மையம் கொள்கிறது நாவல். அதிகபட்சம் ஏழு நாள். நாவல் பேசும் சம்பவங்கள் இதற்குள் மட்டுமே நிகழ்கிறது. இதற்குள் அந்த ஆயேர் தோட்டத்தை கவியும் ஒரு நூற்றாண்டு மலேயா அரசியல், சமூக, கலாச்சார மாற்றங்களின் குறுக்கு வெட்டுச் சித்திரம் வெகு செறிவாக, கலாபூர்வமாக சொல்லப்பட்டு விடுகிறது.

கடலூர் சீனு விமர்சனம்

அன்னை ஆடும் கூத்து

முந்தைய கட்டுரைசெயல்வழி ஞானம் – காந்திகிராம் நிகழ்வு
அடுத்த கட்டுரைகமல்,வெண்முரசு- எதிர்வினைகள்