காசு, ஆ.இரா.வேங்கடாசலபதி-கடிதங்கள்

காசு

அன்புள்ள ஜெ

இலக்கிய மம்மநாயனார் புராணம் பற்றிய கட்டுரையில் உங்கள் புரிதலில் உள்ள பிழையை விளக்கி பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார், உங்கள் கவனத்துக்காக

ஆர்.சிவக்குமார்

புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்

அன்புள்ள சிவக்குமார்

நான் சாரு நிவேதிதாவை நம்பியே அக்குறிப்பை எழுதினேன். என்னிடம் வேங்கடாசலபதி பதிப்பித்த நூல் இல்லை.அது கொஞ்சம் அவசர நம்பிக்கை என்று தெரிகிறது. எதற்கும் அ.இரா.வேங்கடாசலபதியிடம் ஒரு மன்னிப்பை கோரிவிடுகிறேன்.

பொதுவாக இந்தவகை வாசிப்பில் இருக்கவேண்டியது பண்பாட்டை நோக்கித் திரும்புவதுதான் என்பதே நான் எழுதிய கட்டுரையின் சாரம். பகடிகளை பதிப்பாளர்கள் விளக்கினால் அது பிழை என்பதுதான் நான் சொல்லவந்தது.

இப்போது கதையை எடுத்துப் பார்க்கையிலும் அது ஒரு பதிப்புப்பிழை என்ற எண்ணமே ஏற்படுகிறது.அது புதுமைப்பித்தன் அளித்த அடிக்குறிப்பாக இருக்க வாய்ப்பில்லை, அது அந்தப் பகடியை இல்லாமலாக்குகிறது என்றுதான் நினைக்கிறேன்.

அப்படி இல்லை புதுமைப்பித்தனே அளித்தது என்று உறுதியாகும் என்றால் இன்னொரு முறை மன்னிப்பு கோருகிறேன். அவர் பகடியை விளக்கமுற்படவில்லை என்று கொள்வேன். பழைய பதிப்புகளில் இருந்ததை திரும்ப அளித்திருந்தார் என்றாலும் அது பிழைதான்

ஜெ

***

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் இணையதளத்தில் (31/10/2020) தேதியிட்ட கடிதம் ஒன்றில் காசு என்ற சொல் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பதிவை மேற்கோள் காட்டி நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த நீண்ட பதிலை படித்தேன். புதுமைப்பித்தன் செய்த பகடியை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சலபதி ஒன்றும் ஏப்பைசாப்பை அல்ல.

தங்களுடைய அனைத்துப் படைப்புகளையும் வாசித்தவன் என்ற முறையிலும், சலபதியின் அனைத்து படைப்புகளையும் வாசித்தவன் என்ற வகையில் என்னால் உறுதியாக சொல்ல முடியும். உங்கள் புனைவு எவ்வளவு உயரமோ அதே அளவுக்கு ஆய்வு தளத்தில் உயரமானவர் சலபதி. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று சலபதியை எடைபோடுவது மடமை.

இலக்கிய மம்ம நாயனார் புராணத்தில் புதுமைப்பித்தன் அவ்வாறாக கூறுகிறார் என்றுதான் அதில் சலபதி குறிப்பிட்டுள்ளாரே தவிர, அவர் பொருள்விளக்கம் தரவில்லை. காசு என்ற சொல்லுக்கு பொருள் தெரியாமலா? இத்தனை ஆண்டுகாலம் ஆய்வுப்பரப்பில் தன்னை முழுகச் செய்துள்ளார் சலபதி.

எவரேனும் ஒருவர், உங்களுடைய ஒற்றை வரியை தட்டையாக புரிந்து கொண்டு, ஜெயமோகன் தமிழுக்கு என்ன எழுதி கிழித்து விட்டார் என்றால் அது எவ்வளவு தவறான புரிதலோ, அதே அளவுக்கு சலபதியை கூறுவதும் தகும். புதுமைப்பித்தன் என்றால் தொமுசி ரகுநாதன் பெயர் எந்த அளவுக்கு நினைவில் எழுகிறதோ, அதே அளவுக்கு சலபதியின் பெயரும் என் நினைவில் எழுகிறது. அத்தகைய பங்களிப்பாளரை ஒற்றைக் ‘காசால்’ அடிப்பது முறையா?

அந்த காலத்தில் காப்பி இல்லை, ஆஷ் துரை பற்றிய குறிப்புகள் என்று வரலாற்றின் ஒற்றைச் செய்திகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள வரலாற்றை ஆவணபூர்வமாக ஒரு படைப்பாக முன்னிறுத்துவது அவ்வளவு எளிதான பணி அல்ல. சற்றேறக்குறைய வெண்முரசு-வுக்கு ஒப்பான பணிதான் அதுவும்.

சாருவின் தவறான புரிதலுக்கு, நீங்கள் இவ்வளவு நீண்ட நெடிய விளக்கம் அளித்திருக்க வேண்டியதில்லை.

க. அரவிந்த் குமார்

***

அன்புள்ள அர்விந்த்குமார்

ஓர் ஆய்வாளனுக்கு இப்படி ஒரு மதிப்புள்ள வாசகர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுத்திறனை, கொடையை குறைத்து மதிப்பிடுபவன் அல்ல.அவருடைய முக்கியமான ஆய்வுகள் அனைத்தையும் சுட்டி ஒவ்வொருமுறையும் எழுதியிருக்கிறேந் முப்பதாண்டுகளுக்கும் மேலாக.

ஆனால் இங்கே அவர் ஆய்வாளர் என்னும் எல்லையை கடந்துவிட்டார். அவருக்கு காசு என்பது மாசு என்று பொருள் என தெரியாது என்று நான் சொல்லவில்லை. அந்த இடத்தில் காசு என்னும் சொல்லை வைத்து புதுமைப்பித்தன் செய்யும் பகடியை அவர் காசுக்குச் சொற்பொருள் அளித்து விளக்குகிறார். விளக்கப்படும் பகடி செய்தியே ஒழிய பகடி அல்ல.

அதை உரையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். தொகுப்பாசிரியர்கள் செய்யவேண்டாமே என்றுதான் எழுதியிருக்கிறேன்

ஜெ

***

இனிய ஜெயம்

காசு பதிவு வாசித்தேன். இலக்கியக் கற்பு நெறி வழுவி விட்டீர்கள் . அந்த புதுமைப்பித்தன் தொகுதிக்கு வெங்கடாஜலபதி  அவர்கள் தொகுப்பு மற்றும்பதிப்பாசிரியர் மட்டுமே உரையாசிரியர் இல்லை. அவர் ‘கண்ட’ பதிப்பில் எவ்வாறு இருந்ததோ ‘அவ்வாறே’ பதிப்பித்திருக்கிறார்.

அவருக்கு பின்னர் அதே புதுமைப்பித்தன் சிறுகதைகளை மீண்டும் முழுமையாக தொகுத்த எம் . தேவ சகாய குமார் அவரும் தொகுப்பாசிரியர் மட்டுமே அன்றி உரையாசிரியர் அல்ல.

அவர் வெங்கடாஜலபதி புத்தகம் எதுவோ அதை ‘அப்படியே’ தொகுத்திருப்பார் என யூகிக்கிறேன். அதிலும் அதே அடிக்குறிப்பே காணக் கிடைக்கிறது. நியாயப்படி இந்த இருவருக்கும் முன்னால் எவர் பதிப்பித்தாரோ, அவருக்கு எவர் இந்த அடிக்குறிப்பை எழுதி தந்தாரோ அவரைத்தான்  நீங்கள் சாட வேண்டும்.

இனி வர போகும் ‘செம்பு’பதிப்பில்   இதே தொடர்ந்தால் அதை சாடலாம்.  எழுத்துப் பிழை மட்டும்அல்ல. பொருட்பிழையும் நீக்கப்பட்டது (அடிக்குறிப்பில் பாட பேதங்கள் இருப்பின் அதையும் குறிப்பிட்டு) என்பதே  செம்பதிப்பு தகுதி.

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு

ஒரு நூலை பதிப்பிப்பவர் அதற்கு முன்பிருந்தோர் ஆற்றிய பிழைகளை, தவறான செய்திகளை, தேவையற்றவற்றை களைந்து செம்பதிப்பை உருவாக்க கடமைப்பட்டவர்.

நான் எவரையும் சாடவில்லை. நான் வழிவழியாக வரும் உரைமரபை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன், எவராக இருந்தாலும்.யாராவது ஒருவர் ஒரு வரி எழுதிவிட்டால் அது கங்கைவெள்ளத்தில் அழியாது மிதந்துசெல்வதுதானே நம் மரபு?

அதை முகாந்திரமாக வைத்து இலக்கியத்துக்கு வாழ்விலிருந்து பொருள்கொள்வதைப் பற்றிப் பேசுகிறேன்.

ஜெ

***

வாஞ்சி, ஆஷ், வேங்கடாசலபதி
முந்தைய கட்டுரைஉ.வே.சா போற்றுதலுக்குரியவரா?-அரவிந்தன் கண்ணையன்
அடுத்த கட்டுரைசிந்தனையும் மொழியும்