இலக்கியம் செல்லும் வழி-கடிதம்

அரசியலும் எழுத்தாளனும்

அன்புள்ள ஜெ..

டிவி ராசி பலனில் இலக்கிய நூல்களை படிப்பது நல்ல பிரயாச்சித்தம் என்கிறார்கள்.தினமலர் நாளிதழில் இலக்கியவாதிகளை வைத்து புதிர் நடத்துகிறார்கள்.இலக்கிய நூல்கள் என தம்மை அறிவித்துக்கொள்ளும் இதழ்களைப்பாரத்தால் நேரடி அரசியல் , சினிமா என டீக்கடை அரட்டை போல இருக்கிறது. கொஞ்சூண்டு இலக்கியமும் இருக்கிறது

வெகுஜன ஊடகங்களில் இலக்கியவாதிகளுக்கு இடம் கிடைக்கிறது.இலக்கிய இதழ்களில் இணைய எழுத்தாளர்களுக்கு இடம் கிடைக்கிறது.இலக்கிய ஊடகங்களுக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் இடையேயான இடைவெளி மறைந்து இரண்டும் ஒரே மாதிரி ஆவதை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

அன்புடன்,

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

தமிழ்ச்சூழலில் பேரிதழ்களில் இலக்கியத்தின் ஒரு சிறுசெய்திகூட வெளிவராத ஒரு காலகட்டம் இருந்தது. பேரிதழ்கள் தங்களுக்கான எழுத்தாளர்களை உருவாக்கிக்கொண்டன. அவர்கள் நட்சத்திரங்களாக திகழ்ந்தனர்.

இலக்கியவாதிகள் சிலர் பேரிதழ்களில் அவர்களின் எழுத்தாளர்களில் ஒருவர்களாக சேன்று எழுதினர். லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்கள் பேரிதழ்களில் நிறைய எழுதினர். ஆனால் அவர்களுக்கான வாசகர்கள் அங்கே பெரும்பாலும் உருவாகவில்லை.எழுபதுகளில் அவர்களும் ஒதுங்கிக்கொண்டனர். சிற்றிதழ்கள் மட்டுமே இலக்கியத்தை முன்வைக்கலாயின

எழுபதுகளில் புதுமைப்பித்தன் பெயரே தமிழ்ச்சூழலில் மறக்கப்பட்டிருந்தது. பாவைச்சந்திரன் குங்குமத்தில் புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் கதையை மறுபிரசுரம் செய்தபோது “இவர்பெயர் புதுமைப்பித்தன். பழையகாலத்துச் சிறுகதையாசிரியர்” என்று அறிமுகம் செய்யவேண்டியிருந்தது.

எண்பதுகளின் இறுதியில்தான் இலக்கியம் மீண்டும் பொதுவெளிக்கு வந்தது. தினமணி ஆசிரியராக வந்த ஐராவதம் மகாதேவன் தமிழ்மணியை ஓர் இலக்கியப்பகுதியாக மாற்றினார். அது ஒரு தொடக்கம்.

இந்தியா டுடே தமிழில் வெளிவந்தது. மாலன், வாசந்தி ஆகியோர் இந்தியா டுடேயின் பக்கங்களில் இலக்கியத்தை கொண்டுசென்றனர். இந்தியா டுடே இலக்கியமலர்கள் வெளியிட்டது

தொடர்ந்து சுபமங்களா வெளிவந்து சில ஆண்டுகள் முழுக்கமுழுக்க இலக்கியப்பத்திரிகையாக நிலைகொண்டது. இலக்கிய ஆசிரியர்களின் பேட்டிகளும் படைப்புக்களும் வெளியாயின.

விளைவாகவே குமுதம் அதன் சிறப்பிதழ்களில் இலக்கியச்செய்திகளையும் இலக்கியவாதிகளின் பேட்டிகளையும் வெளியிட்டது. மணா போன்ற இதழாளர்கள் அதற்காக முயற்சி செய்தனர்

இந்த விழிப்புணர்வே காலச்சுவடு உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள் தொடங்கி வெற்றிபெற வழிவகுத்தது. நவீனத்தமிழிலக்கியம் பரவலாக அறிமுகமானது, சிற்றிதழ்வட்டத்தைவிட்டு வெளிவந்தது இவ்வாறுதான்

1992ல் அசோகமித்திரனுக்கு ஓர் அறுபதாண்டுமலரை நான் நண்பர் சுப்ரபாரதி மணியனுடன் இணைந்து வெளியிட்டபோது அசோகமித்திரனே அறியப்படாத பெயர்தான். சிற்றிதழ்ச்சூழலிலேயே மறைந்துவிட்ட ஆளுமைதான்.அந்த மலர் வெளியிடப்பட்ட நோக்கமே அவரை மீண்டும் முன்வைப்பதுதான்

இலக்கியத்துக்கு இப்படி ஒரு களம் உருவானபோதுதான் குமுதம் தீராநதியை, விகடன் தடம் இதழை தொடங்கியது. தமிழ்ஹிந்து வெளியாகி இலக்கியப்பங்களை பிரசுரிக்கலாயிற்று,

இவ்வாறு இலக்கிய இதழ்கள் உருவானபின் ஒன்று நிகழ்ந்தது. சிற்றிதழ்ச்சூழலில் இருந்து  ‘இலக்கியமறிந்தவர்கள்’ என சிலர் அங்கே வேலைக்குச் சென்றனர். அவர்களுக்கு இலக்கியம் தெரிந்ததைவிட இலக்கிய அரசியலே தெரிந்திருந்தது. இங்கிருந்த காழ்ப்புக்களை முழுக்க அங்கே கொண்டுசென்றனர். ’

இந்த ‘இலக்கியவாதிகள் ‘ தங்களுக்கு வரலாற்றுக் கடமை உண்டு என்பதை மறந்தனர்.ஒரு மிகப்பெரிய இலக்கியப் பரிணாமத்தின் விளைவுகள் தாங்கள் என்பதை புரிந்துகொள்ளவில்லை. அந்த பரிணாமத்தை உருவாக்கியவர்களை பொருட்படுத்தவில்லை

இவர்கள் அவ்விதழ்களில் தங்களுக்கு கிடைத்த இடத்தால் ‘ஆக்கவும் அழிக்கவும் ஆற்றல்கொண்டவர்கள்’’ என்று தங்களை எண்ணிக்கொண்டனர். ஆகவே தகுதியற்றவர்களை தங்களால் தூக்கமுடியும் தகுதியானவர்களை மறைக்கவும் முடியும் என்று கற்பனைசெய்துகொண்டனர். அதன்விளைவுகளையே நாம் இன்று காண்கிறோம்

எண்பதுகளில் தொடங்கிய இலக்கிய அலையை பொதுத்தளத்தில் திரிபடையச்செய்து அழித்தவர்கள் இவர்கள். அதை வரலாறு பதிவுசெய்யவேண்டும்

இன்று இணைய ஊடகம் இல்லையேல் இவர்கள் இலக்கியத்தை முற்றழித்திருப்பார்கள். இலக்கியம் இன்று இணைய இதழ்களால் வாழ்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைமௌன நகைச்சுவை
அடுத்த கட்டுரைதியானம்