வெண்முரசு-நீர்ப்பெருந்தழல்

அன்புநிறை ஜெ,

இன்று ஒரு பயணக்குழுமத்தில் தேவப்பிரயாகையின் இந்த பொற்கணத்தின் புகைப்படத்தை (இணைத்திருக்கிறேன்) ஒன்றைக் காண நேர்ந்தது.

“சீதை எனப்பெயர் கொண்ட குளிரன்னை இங்கே துருவனுக்குக் கீழே மண்ணில் இறங்கினாள். வெண்பனிப் பெருவெளியாக ஆயிரம் மலைகளை மூடி விரிந்து கிடந்த அன்னையின் ஒளியைக் கண்டு சூரியன் விண்ணகத்தில் திகைத்து நின்றான். ” (பிரயாகை-4)

அப்படி அவன் திகைத்து நின்ற தருணம் போலும் இது.

இந்த அத்தியாயத்தை கங்கையின் வினைவழிச்சுழலில் தன்னைத் தொலையாதிருக்க வழி கோருவதை கணக்கற்ற முறை வாசித்திருப்பேன். அதையே எனக்கு அருளப்பட்ட கேள்வியாகவும் பதிலாகவும் அகம் உணர்ந்திருக்கிறேன்.

“எந்தையே நான் நதி, பெண், அன்னை. ஒருகணமும் ஒரு நிலையிலும் நிலைகொள்ள என்னால் இயலாது. என் திசைகளை நான் தேர்வதில்லை. நான் செல்லும் இடமே என் வடிவும் வழியுமாகிறது. என்னை நோக்கி வரும் எதையும் இருகரம் விரித்து எதிர்கொண்டு அணைத்து அள்ளிக்கொள்வேன். என் கைகள் தொடும் தொலைவில் வரும் அத்தனை வேர்களுக்கும் வாய்களுக்கும் அமுதாவேன். எங்கும் எதிலும் பேதமென ஏதுமில்லை எனக்கு. இங்கிருந்து இறங்கும் நான் என்னாவேன் என்று அறியேன். என் வினைவழிச் சுழலில் எங்கு இருப்பேன் என்றறியேன். என்னை இழந்துகொண்டே செல்லும் அப்பெரும்பயணத்தின் இறுதியில் எப்படி நான் இங்கு மீள்வேன்?”

ஒவ்வொரு முறையும் இவ்வத்தியாயத்தின் ஒவ்வொரு வரியும் புதிதென ஒளி கொள்ளும். இன்று காட்சியென இது முழுதுள்ளத்தை ஆட்கொண்டது.

‘பெருநிலை’ என்ற மிகப் பொருத்தமான பெயர் கொண்ட இப்பகுதியை எழுதும்போது மனதளவில் எங்கு வாழ்ந்தீர்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

வணக்கங்களுடன்,

சுபா

அன்புள்ள ஜெ

இன்று நண்பர்களுடன் யெதிபொத்லா பேரருவிக்குச் சென்றேன். அருவி ஆர்ப்பரித்துக்கொட்டிக்கொண்டிருக்கிறது. அருகே நெருங்கமுடியாது. ஒரு பெரிய தழல் போல. அணுகினால் எரித்துச் சாம்பலாக்கிவிடும் என்று தோன்றியது. வெண்புகை எழுந்துகொண்டே இருந்தது

திடீரென்றுதான் வெண்முரசு ஞாபகம் வந்தது. வெண்முரசில் இந்த அருவி வருகிறது. இந்தியாவின் பல பேரருவிகள் வெண்முரசில் வருகின்றன. யெதிபொத்லா எங்கே வருகிறது? உடனே செல்போனில் தேடினேன். தென்னகச்சித்திரம் வண்ணக்கடலில்தான் வருகிறது. தேடிப்போய் கண்டுபிடித்துவிட்டேன். [மொத்த வெண்முரசும் கையிலேயே இருப்பது எவ்வளவு பெரிய கொடை]

இளநாகன் கிருஷ்ணை வழியாகச் செல்லும்போது இந்த அருவியை கடந்துசெல்கிறான். பெரிய வர்ணனை ஏதுமில்லாமல் அவன் சென்றபாதை சொல்லப்பட்டுவிட்டது. ஆனாலும் இதுவும் வெண்முரசில் உள்ளது என்பது மிகப்பெரிய மனஎழுச்சியை உருவாக்கியது. அற்புதமான ஓவியம் வழியாக அதை கண்முன் காட்டியிருந்தார் ஷண்முகவேல்

சிவராம்

முந்தைய கட்டுரைமதுரையில்…
அடுத்த கட்டுரைகாந்திக்கான வழிகாட்டிகள்- கடிதங்கள்