அவதூதர்கள்

பெருமதிப்பிற்கும் அன்பிற்கும்  உரிய ஜெ அவர்களுக்கு,

நான் தங்களின் தீவிர வாசகன். சமீபத்தில் க.நா.சு வின் “அவதூதர்” நாவலை வாசித்தேன். அந்நாவலை பற்றி விமர்சனம் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதில் வரும் அவதூதர் சாத்தனுர் என்னும் ஊரில் நிர்வாணமாகவே அலைகிறார். இஸ்லாமியர்  வீட்டிற்கும் செல்கிறார். அஃக்ராகாரத்திற்கும் அவ்வாறாய் செல்கிறார். அவர்  சொல்படிதான்  ஊரே கேட்கிறது.

1950 களில்  கூட நிர்வாணசாமியார் தமிழ்  நாட்டில் சாதாரணமாக திரிந்தவர் போன்று கதையில் வருகிறது. இதில் புனைவு எந்த அளவு நிஜம் எது என எனக்கு தெரியவில்லை. உண்மையில் அப்படி இருந்திருந்தால் இந்த விஷயங்கள் எப்படி திடீர் என இல்லாமல் ஆகின போன்ற கேள்விகள் எனக்கு. தயவு செய்து தெளிவு படுத்தவும். கேள்வி பாமரத்தனமாக இருந்தால் மன்னிக்கவும்.

என்றும் பணிவுடன்,
கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

க.நா.சுவின் அவதூதர் நாவலுக்கு இணையான, இணைத்துவாசிக்கவேண்டிய நாவல் அசோகமித்திரனின் மானசரோவர். இரு சித்தர்களும் ஒருவரின் இரு வடிவங்கள்தான் என்ற கருத்து சில சென்னை இலக்கியப்பெரிசுகளுக்கு உண்டு. இந்த களத்தைச் சேர்ந்த இன்னொரு குறுநாவல் ஜெயகாந்தனின் விழுதுகள். ஓங்கூர்சாமி ஓர் இலக்கியப்பெருநிகழ்வு

இவர்கள் ‘இன்று’ இருக்கிறார்களா? என்றும் இருப்பார்கள். எங்கும் இருக்க வாய்ப்பும் உண்டு. அவதூதவாழ்க்கை வாழ்ந்த சிலரை நானே சந்தித்திருக்கிறேன். யோகி ராம்சுரத்குமார், ஓச்சிற உப்பா இருவரும் உலகறிந்தவர்கள். வெளியே புகழ்பெறாத இருவரும் உண்டு.

அவர்களை அறிவதற்கு ஒரு பார்வை வேண்டும். க.நா.சுவின் அவதூதரும் மற்றவர்களின் கண்களுக்கு ஒருவகை பைத்தியம்தான். உலகுகடந்த நோக்கு கொண்டவர்களை சற்றேனும் உலகைக்கடப்பவர்களே அறியமுடியும். அந்த அவதூதர்களைக்கூட வேலை,தொழில்,குடும்பம், காதல்,கடன் என்று அன்றாட உலகியல்நன்மைக்காக நாடிச்செல்பவர்கள் உண்டு. அவர்கள் வெறும்கிறுக்கர்களுக்கும் அவதூதர்களுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். அவர்களால் அவ்வப்போது வெறுங்கிறுக்கர்கள் அவதூதர்களாக ஆவதுமுண்டு

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சமூக நெறிகளுக்கு அப்பால் நின்றவர்கள். குளிக்காதவர்கள், வாழ்க்கைமுழுக்க ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள், ஆடையில்லாமல் அலைந்த பெண் அவதூதர்களே உண்டு. இன்றும் உண்டு. அவர்களை சமூகம் ஒன்றும் செய்யமுடியாது

தேடுபவர்களுக்கு கிடைக்கும் மருந்துகள் அவர்கள்

ஜெ

காட்டிருளின் சொல்

யோகியும் மூடனும்

யோகி சந்திப்பு -கடிதங்கள்

முந்தைய கட்டுரைஎடையின்மையின் பெரும்பசி
அடுத்த கட்டுரைபேச்சும் பயிற்சியும்-கடிதங்கள்