அசோகமித்திரன் பார்வையில்-கடிதம்

அசோகமித்திரன் பார்வையில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம் அறிய ஆவல். நான் இலட்சத்தில் ஒருவனா, ஆயிரத்தில் ஒருவனா என்றெல்லாம் தெரியாது. ஆனால், நீங்கள் சொல்லும் இலக்கிய விமர்சனம் வாசிக்கும் ஐயாயிரத்தில் ஒருவன். புனைவுகளை வாசிக்கும் அதே ஆர்வத்தோடு, குனிந்த தலை நிமிராமல், இலக்கிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் வாசிப்பேன்.

உங்களின் ‘அசோகமித்திரன் பார்வையில்’ பதிவை வாசித்ததும், நான் , வாசித்த, அசோகமித்தரனின் புத்தக மதிப்புரைகள், பல பத்திரிகைகளில் வந்த அவரது நேர்முகங்கள் அடங்கிய புத்தகம் , ‘காலப்பதிவு’ நினைவில் வந்தது. அதில், தங்களைப் பற்றி நிறைய குறிப்புகள் இருந்தது நினைவில் வர, அதை இன்று மீண்டும் எடுத்துப் பார்த்தேன். டிசம்பர் 1999 தேதியிட்ட முன்னுரையில் அசோகமித்திரன் “நூலின் இறுதியில் இருக்கும் பொருளகராதி கூடுமானவரையில் அனைத்துத் தகவல்களையும் கொண்டிருக்கவேண்டும் என்றுதான் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருப்பார்.

ஆதலால், ஜெயமோகன், பக்கம், 28, 42, 77, 93 , 164 என்று சென்று இலகுவாகப் பார்க்க முடிந்தது. அந்த நூலில் இருந்து பக்க விபரங்களுடன் , உங்களின் வருங்காலத்தை கணித்த அவரது பார்வை இங்கே. நான் சிறிதும் மாற்றாமல் அப்படியே தருகிறேன். ஏதேனும் பிழையிருந்தால் , அது என் தட்டச்சுப் பிழை என எடுத்துக்கொள்ளவும்.

 நேர்காணல் : வண்ணக்கதிர், 19.5.1996 (பக்கம் 28)

வண்ணக்கதிர் : தமிழில் நாவல்களே வரவில்லை என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறார்.?

அசோகமித்திரன் : அவர் மகத்தான நாவல்கள் வரவில்லை என்று கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். சிறுகதைகள், சிறுநாவல்கள், பிரிவில் சில மிக நல்ல படைப்புகள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. பிறரின் அபிப்ராயங்கள் பற்றி அபிப்பிராயங்கள் கூறுவது பொதுவாகச் சரியாக அமைவதில்லை. இன்று தமிழிலிருந்து பல நாவல்கள் இதர இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்படுகின்றன. தமிழ் நாவலின் நிலையறிய இவை உதவக்கூடும். உலக அரங்கில் எனக்குத் தெரிந்து ஒரு தமிழ் நாவலும் கவனம் பெறவில்லை. சோவியத் யூனியன் இருந்தவரை பல தமிழ் நாவல்கள் ரஷ்ய மொழியில் வெளியாகின ரஷ்ய இலக்கிய விமர்சகர்களிடையே அவற்றைப் பற்றி விசாரிக்க முடிந்தால் நமக்கு உதவியாயிருக்கும். மகத்தான நாவல்கள் என்றில்லாவிட்டாலும் சிறிய தளத்தில் திருப்தியளிக்கக் கூடிய பல நாவல்கள் தமிழில் வந்திருக்கின்றன. தொலைந்து போனவர்கள் (கந்தசாமி), “மிதவை” ( நாஞ்சில் நாடன்), “வாழ்ந்தவர் கெட்டால்’ (க.நா.சு) இவற்றில் சில.

பேட்டி, யாழினி, 1999 (பக்கம் 42)

சிலோன் விஜயேந்திரன் : இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் சிறுகதை, நாவல், கவிதை வடிவங்கள் மூலம் தங்களை ஈர்த்தவர்கள் பற்றி ?

அசோகமித்திரன் : சா. கந்தசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன் எனப் பலர் உள்ளனர். வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், ஆர். ராசகோபால், வைத்தியநாதன், ஜெயபாஸ்கரன் போன்று பலர் எனக்குப் பிடித்தமான கவிஞர்கள்.

இதயம் பேசுகிறது, 5.1.1997 (பக்கம்77)

மணிவண்ணன் : இன்றைய எழுத்துலகில் ஒரு தொய்வு நிலை உள்ளதாகவும் எதிர் காலத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தனக்கு நம்பிக்கையேயில்லை யென்றும் திரு சி.சு. செல்லப்பா சொல்லியிருக்கிறாரே?

அசோகமித்திரன் : அப்படியா? அதில் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். கருத்துக்களில் ஜனநாயகம் என்று ஒன்று இருக்கு. ஆனால், எனக்கு நிறைய நம்பிக்கையிருக்கு. நல்ல படைப்புகள் நிறையவே வருகின்றன. புதிய எழுத்தாளர்கள் நல்லாவே எழுதறாங்க. ஜெயமோகன் என்கிறவர் நல்ல படைப்பாளி. நாஞ்சில் நாடன், சுப்பிரபாரதிமணி, மா.வே.சிவகுமார், விமலாதித்த மாமல்லன், தமயந்தி, சிவகாமி, திலகவதி, வாஸந்தி போல நிறைய பேர் நல்லாவே எழுதிட்டு வர்ராங்க. எனவே எனக்கு நிறைய நம்பிக்கையிருக்கு.

தமிழ் அரசி, 18.9.1994-ல் வந்த சித்ரா நரசிம்மன், அசோகமித்திரனை சந்தித்து எழுதிய கட்டுரையில் (பக்கம் 93) இப்படி ஒரு குறிப்பு உள்ளது. சமீபத்தில் ஜெயமோகன் தொகுத்த “அசோகமித்திரன் விமர்சன மலர்” – ‘கனவு’ வெளீயிடாக வந்துள்ளது.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஜெ

இன்று அசோக மித்ரன் உங்களை பற்றி எழுதிய கட்டுரை தமிழ் இந்தியா today வில் வந்தது, குறுநாவல் மற்றும் சிறுகதை தொகுப்பிற்காக, அது உயிர்மை வெளியிட்ட நூல் என்று ஞாபகம், இந்த கட்டுரையை வெளிவந்த சமயத்தில் நூறு முறையாவது படித்திருப்பேன், ஆனால் வாக்கியங்கள் இப்போது படிக்க நிறைய மாறி இருக்கின்றன என்று சந்தேகம், உள்ளே இருந்த விஷயங்கள் அதுதான், ஜெயகாந்தனோடு ஒப்பீடு, தென் அமெரிக்க கதைகள், விவேகானந்தரை சாதாரணமாக நிராகரிக்கிறார் என்பது என, ஆனால் வாக்கியங்கள் மிக அருமையான இருந்தன, இது போல இல்லை, தமிழில் இவ்வளவு விதமாக எழுதும் இன்னொருவர் இல்லை என்று முடித்திருப்பார் என்று ஞாபகம்,

Sir, இது போல சுஜாதா உங்களை பற்றி எழுதிய ( ஆரம்பகால சிறுகதை தொகுப்பு ) எல்லாம் வாசித்திருக்கிறேன், அதில் பல்லக்கு சிறுகதைக்கு உரிய கச்சிதமான வடிவம் கொண்டது அல்லது சிறந்த சிறுகதை என்று சொல்லியிருப்பார் உங்கள் முன்னுரையை கிண்டல் அடித்திருப்பார் !

வெங்கட் சாமிநாதன் உங்கள் ஆரம்பகால சிறுகதை தொகுப்பு, மற்றும் நவீன இலக்கிய அறிமுகம் நூல் பற்றி எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன், அதில் சாதாரணமாக எழுதும் ஒருவரை நீங்கள் உயர்த்தி பிடிப்பது ஆச்சிரியம் என்ற விதத்தில் சொல்லியிருப்பார், அவர் அசோகமித்திரனை நினைத்து அதை சொல்லி இருப்பார் என்று நினைத்து கொண்டேன், உங்கள் ஆசியர் சுந்தர ராமசாமி பற்றி நீங்கள் எழுதியது(மதிப்பீடு -நவீன தமிழிலக்கிய நூலில் ) கராறானது என்று சொல்லியிருந்தார்\

ராதாகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவெண்முரசு-பண்பாடு,தொன்மம்
அடுத்த கட்டுரைதவளை,நாகம்,பூனை- கடிதங்கள்