கமல், வெண்முரசு – ஒரு பதில்

வெண்முரசு,கமல் ஹாசன்

வெண்முரசு,கமல் ஹாசன்-கடிதங்கள்

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?

வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள்

கமல், மகாபாரதம்,மரபு

கமல், மகாபாரதம் பற்றி மேலும்

வெண்முரசும் மகாபாரதமும் கமல் ஹாசனும்

கமல்,வெண்முரசு- எதிர்வினைகள்

அன்புள்ள ஜெ

கமல் வெண்முரசைப்பற்றி சொன்ன பாராட்டுரைகளைப் பற்றிய ‘அலர்’களை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதைப்பற்றிய உங்கள் எதிர்வினை என்ன? அவர் வெண்முரசை ‘முழுக்க’ வாசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது, உங்கள் கருத்து என்ன?

எஸ்.ராஜ்குமார்

அன்புள்ள ராஜ்,

கமல்போன்ற ஒரு முதன்மை ஆளுமை சொல்லும் எச்சொல்லும் வெவ்வேறு கோணங்களில் எதிர்கொள்ளப்படும். காழ்ப்புகள் எழும். எதிர்ப்புகள் உருவாகும். ஏற்புக்கு நிகராகவே குழப்பங்களும் இருக்கும். அவையெல்லாமே அந்தக் கருத்தின் இயல்பான எதிர்வினைகள். அந்த எதிர்வினைகளையும் சேர்த்துத்தான் ஒரு நிகழ்வென நாம் கொள்ளவேண்டும்.

ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நாம் பேசும் பலவற்றை தொடர்ச்சியாகப் பேசிவந்திருக்கிறோம். அவற்றை தொடர்ந்து ஓரளவுக்கேனும் கவனிக்கும் ஒருவர்தான் நம் கருத்தை கவனிக்கிறார். அவருக்கு அது புதியதாக இருப்பதில்லை, ஆகவே திகைப்பூட்டுவதில்லை

ஆனால் கமல் பொதுச்சூழலில் நின்று பேசுகிறார். அவரை கவனிக்கும் பல லட்சம்பேரில் சிலஆயிரம்பேர் வெண்முரசை கேள்விப்பட்டிருக்கலாம். எஞ்சியோர் அப்பெயரையே அறிந்திராதவர்கள். பலர் மகாபாரதத்தையே தொலைத்தொடராக மட்டுமே அறிந்திருப்பவர்கள். அவர்களுக்கு அச்செய்தி வியப்பூட்டுகிறது, அக்கருத்து திகைப்பையும் குழப்பத்தையும் அளிக்கிறது. அவர்களின் எதிர்வினை அந்த வியப்பும் திகைப்பும் குழப்பமும் கலந்து வெளிவருவது

நீங்கள் கவனித்திருக்கலாம், வெண்முரசு பற்றி கமல்ஹாசன் கருத்து சொன்னபோது எதிர்வினையாற்றிய அந்த தமிழ் வணிக எழுத்தாளருக்கு ஏழாண்டுகளாக வெண்முரசு எழுதப்படும் தகவலே தெரியாது, விஷ்ணுபுரம் என்கிறார். அவருடைய அறிவுநிலை அது. அதுவே இங்குள்ள பொதுச்சூழல்.

உண்மையிலேயே இங்குள்ள எழுத்தாளர் பலர் வெண்முரசு எழுதப்படுவதையே அறிந்திராதவர்கள். அதை என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். வணிக எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இலக்கிய எழுத்தாளர்கள்கூட வெண்முரசு பற்றி தெரியாதவர்களாக இருக்கிறார்கள். என்னிடம் “அப்டியா மகாபாரதத்தையா எழுதுறீங்க?” என்று கேட்டு “…ஆமா, யாரோ சொன்னாங்க. ஞாபகம் வருது”என்று சமாளித்த இலக்கியவாதிகள் பத்துக்கும் மேல். அவர்களில் அறியப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் உண்டு, இளம்படைப்பாளிகளும் உண்டு.

ஆனால் கமல் தொடக்கம் முதலே இந்தப் பெரும்பணிக்கு உதவுபவராக இருந்திருக்கிறார். இதன் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருக்கிறார். இதை வாசகர்களிடம் கொண்டுசென்று சேர்க்க உதவியிருக்கிறார். அவர் இன்று ஒரு வணிக ’பிராண்ட்’. ஒரு பொருளுக்கு அவருடைய விளம்பரம் இன்று சிலகோடிரூபாய் மதிப்புள்ளது. அந்த ஊடகமதிப்பை அவர் வெண்முரசுக்கு அளிக்கிறார்.

இதை நான் அவரிடம் கோரவில்லை. அவரே செய்வது இது. இது தன் கடமை என  நினைக்கிறார்.நான் அவரிடம் எதையுமே கோருவதில்லை. அவருடன் சினிமா பற்றிக்கூட உரையாடியதில்லை. இலக்கியம் பற்றி மட்டுமே பேசியிருக்கிறேன்.

அவர் தன் நண்பர்களாக தக்கவைத்துக்கொள்பவர்கள் அனைவருமே அவரிடம் எதையுமே கோராதவர்கள்தான். அவர்களில் பழங்கால இயக்குநர்கள் உண்டு. ஒரு படம் நடித்துத் தரும்படி அவர்கள் அவரிடம் கோருவதில்லை. கமல் எழுபதுகளில் மலையாளத்தில் நடித்தபோது அவருக்கு நண்பர்களாக இருந்த பல நடிகர்கள் இன்றும் நண்பர்கள், ஒருமையில் அழைப்பவர்கள். அவர்கள் எவரும் ஒரு வாய்ப்புக்காக அவரிடம் வந்து கோரவில்லை. அத்தகைய சூழலிலேயே உண்மையான நட்பு நிகழும். அவர் விரும்புவதும் அதையே.

கமல் எனக்கு இருபதாண்டுகளாகத் தெரிந்தவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலம் முதல்.கொற்றவையை வாசித்துவிட்டு பலமுறை விரிவாகப் பேசியிருக்கிறார். நான் சினிமாவில் நுழைந்தது அதற்குப்பின். அதற்கும்பின்புதான் அவரை நேரில் சந்தித்தேன்.

அவர் முதன்மையாக சினிமாக்காரர். நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர். ஒரு சினிமாக்காரருக்கு இருக்கவேண்டிய இலக்கிய ஆர்வமும் இசையார்வமும் தனக்கு வேண்டும் என நினைப்பவர். தன்னை இலக்கியவாதி என்று முன்வைப்பவர் அல்ல. இலக்கியவாதி என்னும் இடம் மீது அவருக்கு மோகம் உண்டு, அவர்கள் மேல் பெரும் பற்று உண்டு.அசோகமித்திரனை, நீல பத்மநாபனை, கி.ராஜநாராயணனை அவர் தேடிச்சென்று சந்திப்பது அதனால்தான்.

அவருடைய பார்வையில் இசைக்கலைஞர்கள்கூட இலக்கியம் வாசிக்கவேண்டும், வாசித்தால் இசைத்திறன் கூடும். ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவு நிபுணர்கள் கூட இலக்கியவாசிப்பால் திறன்மிக்கவர்கள் ஆகமுடியும் என்று சொல்வார். “வீட்டுக்கு வெள்ளையடிக்கிறவர்கூட இலக்கியம் படிச்சா இன்னும் நல்லா வெள்ளையடிக்க முடியுங்க” என்பார்

கமல் அவர்களுக்கெல்லாம் புத்தகங்களை பரிசளிப்பார். அவர்களுக்கு பிடிக்குமோ இல்லையோ இலக்கியத்தை அறிமுகம் செய்ய முயல்வார். சம்பந்தமில்லாத இடங்களிலெல்லாம் கமல் பரிசளித்த என் நூல்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

விஜய் டிவியில் வெண்முரசு பற்றி அவர் சொன்னதைப்பற்றிப் பேசுகிறார்கள். மக்கள்நீதி மையத்தின் மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்திக்கும் நாலைந்து கூட்டங்களில் வெண்முரசு பற்றிச் சொல்லியிருக்கிறார். அது எதற்காக? அவருடைய உள்ளத்தில் அது இருக்கிறது. அவர் அதில் மனக்கிளர்ச்சி கொண்டிருக்கிறார். அவருடைய இயல்பு அது. எல்லா அறிவியக்க சாதனைகளையும் அறிந்திருப்பார், பெருமிதத்துடன் பேசிக்கொண்டிருப்பார். அறிவுச்சூழலில் உள்ள காழ்ப்புகளின் சிறுமை அவரிடமில்லை, ஏனென்றால் அவரே ஒரு சாதனையாளர்

நான் அவரைச் சந்தித்த நாட்களில் அவர் பெரும் கிளர்ச்சியுட்டன் விலயன்னூர் ராமச்சந்திரனின் ஃபேண்டம் ஆஃப் பிரெயின்ஸ் பற்றி பேசிக்கொண்டிருந்ததை நினைவுகூர்கிறேன்.

வெண்முரசை அவர் அறிமுகம் செய்வதற்குக் காரணம் இலக்கியம் மீதான அந்த ஈடுபாடும் மதிப்பும்தான். அந்த ஈடுபாடும் மதிப்பும் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவரிடம் மாறாமல் இருக்கிறது. அதன் பயனைப் பெற்ற மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

வெண்முரசை அவர் முழுக்க படிக்கவில்லை. அவருடைய நேரம் அவருக்கானது அல்ல. ஆனால் படிக்கக்கூடும். வெண்முரசின் பல பகுதிகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். நீலம் பற்றி பேசியிருக்கிறார். ஆனால் அவையெல்லாம்கூட சினிமாக்காரரின் பார்வை. எந்த நூலை வாசித்தாலும் சினிமாவுடன் இணைக்கும் அவருடைய பரவசத்தை நான் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன்.

கமல் அளவுக்கு, மணிரத்னம் அளவுக்கு, வசந்தபாலன் அளவுக்கு வெண்முரசில் ஈடுபாடு காட்டிய மூத்த இலக்கியவாதிகள் எவருமில்லை.அவர்கள் வெண்முரசுக்கு அளிக்கும் ஆதரவு அவர்களின் இலக்கிய ஆர்வம், பண்பாட்டு ஆர்வத்தால். அவர்கள் இலக்கியச்சூழலின் சிறிய காழ்ப்புகளுக்கு அப்பால் நின்றிருப்பவர்கள் என்பதனால். அவர்களின் வெற்றிதோல்விக்கள், ஆளுமைவெளிப்பாடுகளுக்கு இலக்கிய முகம் தேவையில்லை.

மலையாள நவீன இலக்கியம் வாசித்து, தமிழில் ஜெயகாந்தனையும் ஜானகிராமனையும் பற்றி மட்டுமே அறிந்திருந்த ஒரு காலகட்டம் எனக்கிருந்தது. அன்று நவீன இலக்கியம் இருநூறு பிரதி அச்சிடும் சிற்றிதழ்களில் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்தது.எந்த கல்லூரியிலும் நவீன இலக்கியத்தின் பிதாமகர்களின் பெயர்கள்கூட உச்சரிக்கப்பட்டதில்லை

அன்று ஒரு வார இதழ்ப்பேட்டியில் ’அவள் அப்படித்தான்’ படம் பற்றி பேசிய கமல் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் இருவரையும் குறிப்பிட்டுப் பேசினார். இரு பெயர்களையும் நான் அப்போதுதான் கவனித்தேன். அதற்குமுன்னரே குமுதத்தில் அசோகமித்திரனின் பல கதைகளை வாசித்திருந்தேன். ஆனால் இலக்கிய ஆசிரியராக அப்பெயர் மனதில் பதியவில்லை. பின்னர் அசோகமித்திரன் கதைகளை வாசிக்கையில் பலவற்றை நான் குமுதத்தில் வாசித்திருந்ததை நினைவுகூர்ந்தேன். என் நவீன இலக்கிய அறிமுகமே கமல் வழியாக நிகழ்ந்தது என்றுகூடச் சொல்லலாம்.

கமல் சொன்னதனால்தான் வெண்முரசு பொதுவெளியில் கவனிக்கப்பட்டது. தமிழ்ச்சூழலில் ஒரு நூலை வாங்கவைப்பதும் வாசிக்கவைப்பதும் எளிதல்ல. பாறையைப் பற்றவைப்பது போன்றது அது. ஆனால் பண்பாட்டுச்சூழலில் செயல்படுபவர்கள் உண்மையான அக்கறையுடன், தீவிரத்துடன் அதற்கு முயன்றபடியேதான் இருப்பார்கள். நாற்பதாண்டுகளுக்கு முன் அசோகமித்திரனை அறிமுகம் செய்த அதே நம்பிக்கையுடன் கமல் இப்போது வெண்முரசு பற்றி பேசுகிறார்

ஜெ

முந்தைய கட்டுரைஇதழியல்,இலக்கியம்,வம்புகள்
அடுத்த கட்டுரைகாந்தி- கடிதம்