காசு

அன்புள்ள ஜெ

சாரு நிவேதிதாவின் இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்கு அளிக்கிறேன். ஆ.இரா.வேங்கடாசலபதி என்ற அறிஞர் காசு என்ற சொல்லை தவறாக அர்த்தமளிக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறார். இந்தவகையான பிழைகள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த பிழைகளை சுட்டிக்காட்டினால் அது தவறா?

எழில்வேந்தன்

காசு- சாரு நிவேதிதா

அன்புள்ள எழில்

சாரு நிவேதிதா சுட்டிக்காட்டியிருக்கும் அப்பிழை முக்கியமானது. அது சொற்பிழை அல்ல, இலக்கணப்பிழையும் அல்ல, பொருட்கோள்பிழை. அது மொத்தப் பண்பாட்டையே பிழையாகப் புரிந்துகொள்வது. சாரு எப்போதுமே இவ்வகை பிழைகளை சரியாகவே சுட்டிக்காட்டுகிறார்

தமிழில் மிக அதிகமாக நிகழும் ‘அறிவுச்செயல்பாடு’ என்றால் அது சொல்லாய்வுதான். இந்தச் சொல் சரியா இல்லையா, இது இலக்கணப்படி இருக்கிறதா இல்லையா, இந்தச் சொல் தமிழா இல்லையா- திரும்பத் திரும்ப இதுதான். இது பல தமிழாசிரியர்களிடமிருந்து பரவிய ஓர் உளச்சிக்கல். இது எளியசூழலில் பேசுபவருக்கு அறிஞர் என்ற ஓர் அடையாளத்தை அளிக்கிறது. “ரொம்ப தமிழ் படிச்சவருங்க…ஒரு தப்புன்னா விடமாட்டாரு” என்பார்கள்

ஆனால் உண்மையிலேயே தமிழ்போல தொன்மையான ஒரு மொழியில் தேர்ச்சி கொண்டவர், அம்மொழியில் அன்றாடம் புழங்கி அதன் நாட்டார் வாய்மொழி மரபுகளை செவிகொள்ளும் வாழ்க்கையும் உடையவர், மிகப்பெரிய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அவர் தமிழ்ச் சொற்களின் வேர்கள், அந்த வேர்களின் மருவுதல்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய முடியும். அது பண்பாட்டு உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான அரிய வழிகளை திறக்கும்

இங்கே அந்த வகை ஆய்வை பெரும்பாலானவர்கள் செய்வதில்லை. எழுத்தாளர்களுக்கு சொல்வழியாக பண்பாட்டை அறியும் ஆர்வம் இருந்தாகவேண்டும். அது அவன் தான் கையாளும் சொற்களைப்பற்றிய தெளிவை அளிப்பது. தன்னுடைய பேசுபொருளான பண்பாட்டை ஆழ்ந்து அறிவதற்கான கருவியாக பயன்படுவது. எழுத்தாளன் மொழியில் செயல்படுபவன், அவனுக்கு வேறெந்த ஆய்வுக்கருவியை விடவும் மொழியே உகந்ததாக இருக்கும்.

இவ்வகை வேர்ச்சொல் ஆய்வுகள் இங்கே இன்னொரு தளத்தில் நிகழ்கின்றன. இரண்டு தேவைகளுக்காக. ஒன்று, தமிழே உலகின் முதல்மொழி என்று நிலைநாட்டும்பொருட்டு. இரண்டு, தமிழிலுள்ள எல்லா சொற்களுக்கும் தமிழில் வேர்ச்சொல் உள்ளது என்று நிறுவும்பொருட்டு

இது ஒருவகையான மொழியடிப்படைவாதம். கண்மூடித்தனம். இதற்கும் அறிவியக்கத்திற்கும் தொடர்பில்லை. அறிவியக்கம் எப்போதுமே புறவயமான தர்க்கம் கொண்டதாக இருக்கும். அந்த முறைமை தெளிவாகவே முன்வைக்கப்படும். மறுப்பை கருத்தில்கொண்டு அதனுடன் உரையாடச் சித்தமாக இருக்கும்.

முடிவுகளை முன்னரே எடுத்துக்கொண்டு அதைநோக்கி ஆய்வைச் செலுத்துவது அறிவியக்கத்துக்கு நேர் எதிரான செயல்பாடு. எந்த ஆய்வும் அறியும்பொருட்டே. ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளுக்குச் சான்றுதேடுவதன் பெயர் ஆய்வு அல்ல. மதநம்பிக்கை மொழிவெறி இனவெறி போன்ற அடிப்படைவாதங்களின் வழி அது.

அவர்கள் அகவயமான நம்பிக்கையையே தர்க்கமாக முன்வைப்பார்கள். எதிர்ப்பவர்களை எதிரிகள் என முத்திரைகுத்தி உள்நோக்கம் கண்டு வசைபாடுவார்கள்.மறுப்புகள் எழுந்தால் காழ்ப்புடன் பூசலிடமுற்படுவார்கள். முறைமை என எதையும் ஏற்கமாட்டார்கள். ஒருவர் தன் தரப்புக்கு ஒரு முறைமையை கைக்கொள்கிறார் என்று கொள்வோம். அதே முறைமையை அவரை மறுப்பவர் கைகொண்டால் சீறி எழுவதை நாம் காண்கிறோம்

தேவநேயப் பாவாணர்

தமிழில் இந்த வேர்ச்சொல் ஆய்வுமுறைமையின் இன்றைய போக்குகளை தொடங்கிவைத்தவர் தேவநேயப் பாவாணர்.  உலகின் மூத்தமொழி தமிழே என்றும், தமிழிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் தமிழ்மொழியில் வேர்கள் உள்ளன என்றும் வாதிட்டவர் அவர். அவரை ஒட்டியே இன்று ஒரு கூட்டம் அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறது

ஆனால் தேவநேயப்பாவாணர் மேல் எனக்கு பெருமதிப்பு உண்டு. அவருடைய காலத்தை நாம் பார்க்கவேண்டும். பத்தாம் நூற்றாண்டு முதல் தமிழில் வடமொழிக் கலப்பு மிகையாகத் தொடங்கி பதினாறாம் நூற்றாண்டில் உச்சத்திலிருந்தது. வைணவ உரைநூல்களின் வடமொழி மேவிய மணிப்பிரவாள நடை ஓர் எல்லை. மறுபக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அன்றாடப்பேச்சுநடையே சம்ஸ்கிருதச் சொற்கள் நிறைந்ததாக இருந்தது என்பதை ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு, அக்கால பைபிள் மொழியாக்கம் போன்றவை காட்டுகின்றன

தமிழின் தனியடையாளத்தை முற்றாக மறுக்கும் போக்கு நூறாண்டுகளுக்கு முன்பு அறிவுலகில் ஓங்கியிருந்தது. தமிழின் வேர்ச்சொல்மரபு முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டது. தமிழ் ஒரு துணைமொழி என்று சொல்பவர்கள் இருந்தன. தேவநேயப் பாவாணர் நிகழ்த்தியது அந்த ஆதிக்க அறியாமைக்கு எதிரான ஓர் அறிவுப்போர். அத்தகைய போர்நிலைகளில் எப்போதும் வெறி எனச் சொல்லத்தக்க மிகையீடுபாடே பயன்தருவது. அதுவே வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஆற்றலை அளிப்பது

அவ்வகையில் பாவாணரின் வேர்ச்சொல் அகரமுதலி ஒரு பெருஞ்சாதனை. அன்று வேர்ச்சொல் ஆய்வில் புறவயமான முறைமைகள் வகுக்கப்படவில்லை. பெரும்பாலும் அகவயமாகவே அவை நிகழ்ந்தன. ஒரு சொல்லை ஒருவகையில் இலக்கணம் வழுவாது பிரித்துக்கொள்ள முடிந்தாலே போதும் அதையே வேர்ச்சொல் கண்டுபிடிப்பாகச் சொல்லிவிடலாம். அதற்கு முந்தைய காலச் சான்றுகள் ஏதும் காட்டவேண்டியதில்லை. பாவாணர் அவ்வகையிலேயே ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்.

ஆனால் அவருடைய ஆய்வுகளில் பெரும்பகுதி தமிழை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க வழிசெய்வது. தமிழ்ப்பண்பாட்டுக்கும் மொழிக்கும் இடையே உள்ள நுட்பமான ஊடாட்டத்தை காட்டுவது. எந்த புனைவெழுத்தாளனுக்கும் மின்னல் என திறக்கும் பார்வைகளை அளிப்பது. ஆகவே அது ஒரு செவ்வியல்முயற்சி. தமிழே உலகமுதல்மொழி, பழந்தமிழில் மொழிக்கலப்பே இல்லை என்பதுபோன்ற அவருடைய நிலைபாடுகளை ஒருவகை மதநிலைபாடுகளாகவே கொள்கிறேன்.அவற்றை நான் ஏற்பதில்லை.

இந்தவகையான மொழியடிப்படைவாதத்திற்குள் இன்று செல்வதென்பது ஒரு சிமிழுக்குள் அடைபடுவது. அதன்பின் முகநூல் வம்பு போன்ற ஒரு பூசல்களம் அமைகிறது. அங்கே வாழ்நாளெல்லாம் கிடந்து உழலலாம். எழுத்தாளன் அவ்வாறு செய்வான் என்றால் அது அவனுடைய அழிவு

ஆனால் திறந்த உள்ளத்துடன், புறவயமான முறைமைகளுடன், முந்தையகால நூல்களையும் வாய்மொழியையும் கருத்தில்கொண்டு ஓர் எழுத்தாளன் சொல்வேர்களை ஆய்வுசெய்வான் என்றால் அவன் பண்பாட்டு ஆய்வாளனாகவே ஆவான். அவனுக்கு கதைகளும் தரிசனங்களும் கிடைத்தபடியே இருக்கும். நானே அப்படி பல கதைகளை எழுதியிருக்கிறேன். உதாரணம், ஆமை.கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

ஆ.இரா.வேங்கடாசலபதி

காசு என்ற சொல் எப்படி மரபில் பொருள் கொள்ளப்பட்டது? வையாபுரிப்பிள்ளை தன் பேரகராதியில் சொற்பொருள் அளிக்கும்போது ஒரு முறைமையைக் கையாள்கிறார். முதலில் வருவதே தொன்மையான பொருள், பின்னர் வருவது காலத்தால் பிந்தைய பொருள். காசு என்ற சொல்லுக்கு குற்றம் என்றே அவர் பொருள் அளிக்கிறார்.

“காசறு விரையே” என்று சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியை அழைக்கிறான். குற்றமில்லாத நறுமணமே என்று பொருள்.அந்த வரியை வையாபுரிப்பிள்ளை சுட்டிக்காட்டுகிறார். [விரை என்றால் testicles என்று பொருள்கொள்ளும் அறிஞர்களும் இருக்கலாம். காசு இல்லாத விரை! கட்டி தொங்கவிடப்படாதது]

பழந்தமிழிலக்கியங்களில் காசு என்பது குற்றம், குறை என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. குறையுடைய மனிதனை,கோழையை, காசு என்று சொல்வதும் நூல்களில் காணக்கிடைக்கிறது

காசு என்பதற்கு வையாபுரிப்பிள்ளை அளிக்கும் அடுத்த பொருள் ‘காய்ச்சு’ என்பதன் மரூஉ. காய்ச்சு என்பது காசு என்று ஆகி இலக்கியப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. காய்ச்சப்பட்ட பொருள் காசு. பொன்னை  ‘காசுக்கட்டி’ என்று சொல்லியிருக்கிறார்கள். காய்ச்சப்பட்ட கட்டி என்ற பொருளில்.

மூன்றாவதாக வையாபுரிப்பிள்ளை காசு என்ற சொல்லுக்கு ‘பொன்’ என்று பொருள் அளிக்கிறார். அதன் பின்னரே காசு என்பது நாணயம் என்ற பொருளைப் பெறுகிறது. பொன்னும் நாணயமும் ஒரு பொருள்கொண்ட இரு சொற்களாகவே புழங்கியிருக்கின்றன. ‘நெஞ்சே உனையோர் காசா மதியேன்’ என்ற தாயுமனாவர் பாடலை  வையாபுரிப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார்.

காசு நடுவே துளையுள்ள நாணயங்களாக இருந்துள்ளது. அதை ஓர் உவமையாக இறையனார் அகப்பொருள் சுட்டுகிறது. ‘நாண்வழி காசுபோல’ என்று. காசு ஒரே சரடால் கோக்கப்பட்டதுபோல. நாணயங்களை அவ்வண்னம் இடுப்பில் கட்டிக்கொள்ளும் வழக்கம் இருந்தது—நானே துளையுள்ள பழைய திருவிதாங்கூர் நாணயங்களை பார்த்திருக்கிறேன்

அந்த வழக்கம் மெல்ல நகையாக மாறியது. அதுவே காசுமாலை, அண்மைக்காலம் வரை காசுமாலை வடிவம் இருந்தது.ஒருவகை சரப்பொளி மாலை அது. அதை ‘பட்டுடை சூழ்ந்த காசு’ என்று சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது என்கிறார் வையாபுரிப்பிள்ளை.

ஆண்டாள் திருப்பாவையில்

‘காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

என்ற வரி வருகிறது. இங்கே காசும்பிறப்பும் என்ன என்று மனம்போனபோக்கில் உரைகளும் விளக்கங்களும் எழுதியிருக்கிறார்கள்.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் இச்சொற்கள் சுட்டும் வாழ்க்கைமுறை பதினைந்தாம் நூற்றாண்டோடு தமிழ் மையநிலப்பகுதியில் மறைந்துவிட்டது. இருநூறாண்டுக்கால தெலுங்கு- மராட்டியர் ஆட்சி அங்கிருந்த வாழ்க்கைமுறையில் பெரிய மாறுதல்களை உருவாக்கிவிட்டது. ஆகவே வாழ்க்கையிலிருந்து சொற்பொருள் கொள்ள முடியவில்லை

குமரிமாவட்டம் வெளிப்பாதிப்பில்லாமல் நீடித்த தமிழ்ப்பகுதி. தொல்தமிழின் வடிவமான மலையாளமும் திகழ்ந்தது. ஆகவே பழந்தமிழிலக்கியம் சார்ந்த பெரும்பாலான வினாக்களுக்கு இங்குள்ள வாழ்க்கைமுறை, கோயில்சடங்குகளில் விடைகிடைக்கும்.

இங்கே காப்புகட்டுதல் என்ற வழக்கம் உண்டு. ரட்சை கட்டுதல் என்பார்கள். பனையோலையில் காப்புமந்திரம் எழுதி அதை குழந்தையின் இடுப்பில் பிறந்த 28 ஆம் நாள் கட்டுதல் என்னும் சடங்கு. அதுதான் ஜன்மரக்ஷை அல்லது பிறப்புக் காப்பு. அதை ‘இருவத்தெட்டுகெட்டுதல்’ என்பார்கள். ‘அடிச்சு அவனுக்க இருவத்தெட்ட அறுப்பேன்’ என்ற வஞ்சினமெல்லாம் இப்போதும் காதில் விழுகிறது. ஏனென்றால் இருபத்தெட்டு கெட்டு என்பது சாவில்தான் அவிழ்க்கப்படும்.

பிறப்புக்காப்பு பின்னர் பொன்னில் மாலையாக செய்து அணிவிக்கப்படும். அதை அவிழ்க்கமாட்டார்கள். பிறப்புகெட்டு என்றும் பிறப்புமாலை என்றும் சொல்வார்கள். பெண்களுக்கு அது ஒரு கட்டாயச் சடங்காக இருந்தது. அரைநாண் என்று தமிழிலும் அரஞாணம் என மலையாளத்திலும் சொல்லப்படுகிறது.

அரைநாண் வடு பெண்களின் ஒரு ரகசியஅழகு என்று கவிதைகள் சொல்கின்றன. “அம்பலத்தாழத்தே பூங்குளத்தில் அரஞாண் பாடோளம் வெள்ளமுண்டோ?” என்று வயலார் ராமவர்மா எழுதிய பாடலில் வருகிறது. [படம் அங்கத்தட்டு. தங்கப்பவன் கிண்ணம் தாலமாடி என்ற பாடல்.] கோயிலுக்கு அருகே உள்ள பூங்குளத்தில் அரைநாண் வடு வரை நீருக்கு ஆழமுண்டா என்று கேட்கும் விஜயஸ்ரீக்கு அரைநாண் மிகநீளமாக தேவைப்பட்டிருக்கும்.

காசு என்பது பெண்ணுக்கு அவள் வயதுக்கு வரும்போது அல்லது திருமணத்தின்போது அணிவிக்கப்படுவது. காசுமாலைதான் அது. ஏழைகள் என்றால் ஒரே ஒரு காசுகூட அணிவிப்பார்கள். காசுகெட்டு என்பார்கள். அதாவது காசும்பிறப்பும் என்றால் பெண்கள் அணியும் இரண்டு அடிப்படையான நகைகள்.

“லேய், அவளுக்க இருவத்தெட்டு கண்டவனாக்கும் நான் என்றால் இருபொருள். அவள் சின்னக்குழந்தையாக இருக்கும்போதே கண்டவன். அவளை நிர்வாணமாக கண்டவன்,  உள்ளுறைப்பொருள் கலவிகொண்டவன். ‘அவளுக்க காசும்பிறப்பும் கண்டிட்டுண்டு’ என்றால் கழுத்தில் அணியும் காசும் இடுப்பிலணியும் பிறப்பும் கண்டவன், சர்வாங்க தரிசனம் நிகழ்ந்துவிட்டது. ‘உனக்க அம்மைக்க இருவத்தெட்டு அவுத்தவனாக்கும்லே நான்” என்றால் வசை, அடி உறுதி.

‘காசில்கொற்றத்து ராமன் கதை’ என கம்பன் சொல்வது மாசற்ற ஆட்சிகொண்ட ராமனின் கதை என்னும் பொருளில். கம்பன் காசு என்பதை குற்றம் என்ற பொருளில் பயன்படுத்துகிறான். அதை பணம் என வேண்டுமென்றே பொருள்கொண்டு புதுமைப்பித்தன் பகடி செய்கிறார். காசே இல்லாத ஆட்சிகொண்ட ராமனின் கதை என்று திரிக்கிறார். இந்த திரிப்புதான் பகடி

ஆ.இரா.வேங்கடாசலபதி காசு என்றால் பணம் என்று பொருள் அளிக்கையில் கம்பன் எழுதியதையே கையில் பணமில்லாத ஆட்சி என்று [மோடியின் ஆட்சிபோல] பொருள்கொள்கிறார். அதைவிட புதுமைப்பித்தனின் பகடியை புரிந்துகொள்ளாமல் நாசம் செய்கிறார். பகடியைப் புரிந்துகொள்பவனும் ரசிக்கமுடியாமலாக்குகிறார்

இது பழைய தமிழாசிரியர்களின் பாணி.  ‘எட்டேகால் லட்சணமே’ என்ற ஔவையார் பாடலை வகுப்பில் விளக்கவந்த எங்கள் தமிழாசிரியர் ‘எமனேறும் பரியே’ என்ற வரியை அரைமணிநேரம் விரித்துரைத்தார். எமன் ஏறுவது எருமை. பரி என்றால் குதிரை. எமன் குதிரைமேல் ஏறுவதில்லை. அப்படியென்றால் பரி என்று ஏன் சொல்கிறார் கவிஞர்? ஏனென்றால் எருமையை குதிரை என்று சொல்லி கேலி செய்கிறார். குதிரை விரைந்து ஓடும். எருமை அங்கேயே நிற்கும். எருமையை குதிரை என்று சொன்னது நல்ல நகைச்சுவை…” இப்படி.

நமக்கு இந்த உரையாசிரியர்களிடமிருந்து மீட்பே இல்லை. உரை கிடப்பது வெளியே மக்கள்நாவில்.

ஜெ

ஆனந்தரங்கம் பிள்ளை 

தினப்படி சேதிக்குறிப்பு

முந்தைய கட்டுரைமனு- கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைபெருவெள்ளத்தின் பாதை