இன்று ஒரு இனிய தினம், இனி என்றும் நினைக்க நினைக்க உள்ளே தித்திப்பு திரளும் ஒரு நாள். ஆம் பண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா சென்று அவரது அடக்கஸ்த்தலத்தை தரிசிக்க நண்பர் உடன் சென்றிருந்தேன். இந்தத் தலத்தின் சந்தனக் கூடு விழா, தென்னார்க்காடு முழுக்க ஊரே கூடி கொண்டாடும் ஒன்று. முதன் முறையாக அங்கே சென்றேன்.
சிறிய மைதானம் ஒன்றின் மையத்தில், அழகிய பச்சை வண்ண கும்மட்டம். உள்ளே நூர் முகமது ஷா அவர்களின் சீடரின் அடக்க தலம். இவர் இறந்து போய், இவரது மனைவி உடன் கட்டை புக இருந்த நேரம், ஷா அவர்கள் அதை தடுத்து இவரை மீண்டும் உயிர்ப்பித்தார் என்பது கதை. மதம் மாறி சையத் எனும் பெயர் கொண்டு இறுதி வரை ஷா அவர்களின் சீடராக இருந்து மறைந்தவர்.
முஸ்லீம் பெண்களின் வரிசை சீடரை தொட்டு வணங்கி நகர்ந்து கொண்டிருந்தது. கும்மட்டத்தின் பக்கவாட்டில் பிரார்த்தனை சீட்டுக்கள் கட்டிய மாலைகள், பிரார்த்தனை அகல் விளக்குகள் . கும்மட்டம் எதிரே மஸ்ஜித். அருகே மன நலம் சிதைந்தவர்களுக்கான குடியிருப்பு. அனைத்தும் சுத்தமாக பராமரிக்க தொடர்ந்து பணி செய்யும் தன்னார்வலர்கள். அந்தித்தொழுகைக்கான பிரார்த்தனை எழுகையில், தர்க்காவுக்குள் சென்றேன்.
இருபுறமும் ஐமுகத்து சுடர் விளக்கு எரிய, மரகத பச்சை பட்டுப் போர்த்தி நூர் முகமது ஷா அடங்கி இருந்தார்.
மயிற்பீலி கொண்டு மும்முறை என் சிரசில் ஒற்றி, திருநீறு தந்தபின்பாய் ஒதுங்கி நின்றார். அங்கே நான் அடைந்தவை அந்தரங்கமானது. எவரும் தெரிந்து கொள்ள தேவையற்றது. அப்படி ஒன்றை நான் அங்கே அடைவேன் என அதற்க்கு முந்திய கணம் வரை கூட நான் நம்பியவன் அல்ல. அதற்கான எந்த தகுதியும் அற்றவன் ஆனாலும் எனக்கு அளிக்கப்பட்டது . எத்தகுதியும் அற்றவரும் அதை பெற முடியும் எனில் அதை தருபவன் எவனோ அவனே கருணையாளன். அங்கேயே அவர் முன்பாகவே திருநீறை ஐயா பதம் என இட்டுக் கொண்டேன்.
ஈராக்கில் ஜீலான் நகர் அருகே நீப் எனும் கிராமத்தில் பிறந்தவர் முகைதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள். நபிகள் நாயகம் அவர்களின் பதினோராம் தலைமுறை பேரன். இவருக்கு ஐந்து மனைவிகள் ஐம்பது குழந்தைகள் என்கிறது இவரது வாழ்க்கைக் குறிப்பு. இவர் தோற்றுவித்த தரிக்காவே காதிரியா தரீகா. தரீகா எனில் மார்க்கம்.
முகமதியம் எல்லா மதங்களையும் போல அடுக்குகள் அடங்கிய ஒன்றே. ஷரியத் சட்டங்களும் சடங்குகளும் ஆச்சாரங்களும் அடங்கிய தொகுப்பு. தரீகா மெய்மைக்கான மார்க்கம் அதன் சாதனா முறைகள் அடங்கிய தொகுப்பு. இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. ஆனால் தரீக்கா அதன்நிலைகள் ஷரியத்ஐ கடந்து செல்லும் குருமார்களை உருவாக்கியபடியே இருக்கிறது. இப்படி பல்வேறு குருமார்கள் தோன்றி வளர்த்த தரீக்காகள் உலக அளவில் முக்கிய தரீக்காக்கள் பதினைந்து வரை உண்டு. அதில் ஒரு தரீக்கா வே காதிரியா தரீக்கா.(அஜ்மீரின் தரீக்கா சிஸ்தியா தரீக்கா பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தியா வந்த அந்த தரீக்காவின் தோற்றுநர் காஜா முகைதீன் அவர்கள்). ஷாஜகான் காலத்தில் இந்தியாவுக்கு வந்த காதிரிய்யா தரீக்காவின் ஒரு குருதான் நாகூரின் ஷாகுல் அமீது பாதுஷா. அவரது சீடரே நூர் முகமது ஷா.
நிறைய சித்துக்கள் புரிந்திருக்கிறார். அந்தந்த மதத்திலேயே நீடிக்கும் பல சீடர்களை கொண்டிருக்கிறார். பண்ருட்டி வந்து தங்கியது முதல் 91 வயதில் அடக்கமாவது வரை வள்ளலார் தர்ம சபை போல அனுதினமும் அன்னதானம் செய்திருக்கிறார். இன்னும் பல. இரவு கவியும் வரை அவரது வளாகத்திலேயே அமர்ந்திருந்தேன். கிளம்பும்போது ஆசிரியர் ஜெயகாந்தன் நினைவு எழுந்தது, சுல்தான் அப்துல் காதர் என்ற ஊராரால் மஸ்தான் என அழைக்கப்பட்ட, (மஸ்த் எனில் பித்து மஸ்தான் எனில் பித்தன்) குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் சீடர் அல்லவோ jk. இந்த குணங்குடி மஸ்தான் சாகிபு இந்த காதிரியா தரீகா வழியில் வந்த சூஃபி ஞானிகளில் ஒருவர்தான். இவருக்கு குரு இந்த வழியில் வந்த ஷேக் அப்துல் காதிரி லெப்பை அவர்கள்.
இன்று இங்கே இருந்தேன் என்பது, அந்தரங்கமாக எனக்கொரு வாழ்நாள் அனுபவம் அது. இது எனக்கு அளிக்கப்பட்டமைக்கு நன்றி.
.இன்ஷா அல்லாஹ்.
கடலூர் சீனு