பேச்சும் பயிற்சியும்-கடிதங்கள்

பேச்சும் பயிற்சியும்

மேடைப்பேச்சின் நெறிகள்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

மேடைப் பேச்சு பற்றிய கட்டுரைகளையும், கேள்வி பதில்களையும் வாசித்து வருகிறேன்.

மேடைப் பேச்சு என்பது ஒரு நாடகம். முன்னரே தயாரிக்கப்பட்ட பேச்சு + அரங்கின் எதிர்வினைக்கு ஏற்ப நிகழ் நிலை மாற்றங்கள் = மேடைப் பேச்சு.

இதற்கென்று தனியான பயிற்சிகளும் உள்ளன. டோஸ்ட்மாஸ்டர்ஸ் (Toastmasters ) என்றொரு அமைப்பு இதற்கான பயிற்சியையும், வழிகாட்டுதல்களையும் உலக அளவில் அளித்துவருகிறது. குறிப்பாக, சிங்கப்பூரில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் என்றோரு அமைப்பு, டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பல பேச்சாளர் மன்றங்களை உருவாக்கி பல நூறு பேர்களைத் தயாரித்து வருகிறது. நிகழ் நிலை எதிர்வினைகள், பேச்சு முடிந்தபின் திருத்தங்கள், முன்னேற்ற வழிகள், குறித்த நேரத்திற்குள் பேசுவது என்று பல வகைகளிலும் பயிற்சி உண்டு.  இதனால் பயன்பெற்றவர்கள் பலர்.

மேடைப்பேச்சிற்கான பல உத்திகளின் வரிசையில், நீங்கள் குறிப்பிட்ட சிலதுடன் இன்னும் சில முக்கிய விவரங்களும் உண்டு.

1. பேசும் போது கைகளை டிரவுசருக்குள் விடாதிருத்தல். – விட்டால் நீங்கள் உண்மையைப் பேசவில்லை என்றோ, பதட்டத்தில் இருக்கிறீர்கள் என்றோ பொருள். பேசும் பொது நமது உடலை நாமே பிடித்துக் கொள்ளுதலும் இதில் அடக்கம்.

2. பேச்சில் ஒரு கருத்தை வலியுறுத்த,   கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு, உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும் படி பார்த்துக் கொள்வது. இது வெளிப்படைத் தன்மையையும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத நிலையையும் உளவியல் ரீதியாக வெளிப்படுத்தும் கலை. பிரதமர் மோதியின் உரைகளில் இதை அடிக்கடி காணலாம். ஒபாமாவும் இதைப் பின்பற்றுகிறார்.

3. பேசும்போது ரேடார் போன்று அரங்கின் ஒரு முனையில் இருந்து ( இடப்புறமிருந்து வலப்புறம் வரை) ஸ்கேன் செய்வது போல் பார்த்துப் பேச வேண்டும். அப்போதுதான் அரங்கில் அந்த வரிசைகளில் உள்ளவ்ர்களுக்கு அவர்களுடன் உரையாடுவது போல தோன்றும்.

4. அரங்கில் பரவலாக அமர்ந்துள்ள 3-4 நபர்களுடன் கண்-தொடர்பு கொள்ள வேண்டும். அந்தத் தொடர்பைத் தொடர வேண்டும். இது ஒரு நேரடியான தொடர்புக்கான வழி.

5. எதையும் மூன்று முறை சொல்ல வேண்டும். ஒரே கருத்தைச் சொல்லவில்லை. ஒரு கருத்து தொடர்புடைய செய்திகள் மூன்று வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் -Rule of Three – என்கிற கணக்கில் இது கேட்பவர்கலைச் சென்றடையும்.

6. பேசும் பொது காது, வாய் முதலியவற்றின் அருகில் கை செல்லாமல் இருக்க வேண்டும். கையால் வாயை மூடிப் பேசுவது பொய் சொல்வதற்கு ஒப்பாகும். இவை உடல் மொழிகளின் ஊடாக வாசகர்களைச் சென்றடையும்.

இப்படி இன்னும் பல நுணுக்கங்கள் உள்ளன. இணையத்தில் ஒபாமா, ஹில்லாரி, ரூடி கைலியானி முதலியோரின் உரைகளை ஆராயும் உடல் மொழி வல்லுனர்களின் பேச்சுக்கள் உள்ளன. உங்கள் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், மேற்சொன்னவை பொதுப்பேச்சாளர்களுக்கானவை. உங்கள் உரைகள் பொதுவான பேச்சு கேட்கும் நபர்களுக்கானவையன்று. வாசகர்களுக்கும், இலக்கிய வாசிப்பில் நாட்டமும் உழைப்பும் உள்ளவர்களுக்கானவை.

மேற்சொன்ன நெறிகளை நீங்கள் பின்பற்றத் துவங்கினால் உங்கள் கருத்துக்களில் உள்ள செறிவுக்கான உங்கள் வலு குறையும். எனவே உங்கள் வாசகர்களுக்கான நீங்களாக உங்களால் பேச முடியாது. ஆக, உங்கள் இயல்புப்படிப் பேசுவதே உங்களுக்கு, இந்த வயதில், இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு, சாத்தியமானது.

நன்றி.
ஆமருவி தேவநாதன்.
www.amaruvi.in

பேச்சும் பயிற்சியும்

அன்புள்ள ஆசிரியர்க்கு,

உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

ஆம். நீங்கள் சொல்வது உண்மை. அந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை.நாம் ஒரு துறையில் ஆளுமையாக நிலைபெற்ற பின் உரையாடுவதற்கும் அதற்கு முன் உரையாடுவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. எங்கே எப்போது எந்த மக்கள் திரளுடன் உரையாடுகிறோம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். உரையாடல்களுக்குத் தேவையான பயிற்சிகளும் பெற்றிருக்க வேண்டும்.

நல்ல மொழித்திறன் மிக முக்கியமாக ஆங்கிலத்திறன், பேச்சுத்திறன் மற்றும் உரையாடல்திறன் இல்லாததால் ‘திறமையிருந்தும் என்ன பிரயோசனம்’, ‘வரயத்தெரியாதவன்னாலும் இங்கிலீஷு பேசுற லயோலா காலேஜ் பையன் நம்மளெயெல்லாம் அசால்ட் பண்ணிட்டு போய்டுவான்’ போன்ற அங்கலாய்ப்புகள் எங்கள் கவின் கலைக் கல்லூரி மாணவர்களிடம் உண்டு. இங்கே தமிழ் வழிக் கல்வி கற்ற கணிசமான கிராமப்புற மாணவர்கள் படிக்கிறார்கள். இயல்பிலேயே மொழித்திறன் குறைபாடுள்ளவர்கள் மற்றும் பாடப் புத்தகங்களிலும் படிப்பிலும் ஆர்வமற்று கவின்கலைகளில் மட்டுமே ஆர்வமுள்ளவர்கள் என்று பலதரப்பட்ட மாணவர்கள் உண்டு.

என்ன பிரச்சினையென்றால் அவர்களின் இக்குறைபாடுகளைக் களையும் எந்த  முயற்சியும் பாடத்திட்டங்களில் இல்லை. தனிப்பட்ட முறையில் சில ஆசிரியர்களோ முன்னாள் மாணவர்களோ யாராவது அதை அவர்களிடம் விளக்கிப் புரியவைத்து அதை அவர்களும் களைய முயற்சித்தல் மிக அரிதாகவே நடைபெறும். பெரும்பாலும் பணியாற்ற ஆரம்பிக்கும் போது களத்தில் இத்திறமைகளின் இன்றியமையாமையை உணர்ந்து பிறகு தன்னை மாற்றிக் கொள்பவர்களே அதிகம். அதற்குள் பல அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.

அப்போது கூட தன்னை திருத்திக் கொள்ளாதவர்கள் கூனிக் குறுகி இட்ட பணியைச் செய்யும் அடியாளாகவே நீடிப்பதைப் பார்க்கலாம். ஒரு பக்கத்தில் தான் கலைஞன் என்ற நினைப்பு இன்னொரு பக்கத்தில் தன் மொழி பற்றிய நம்பிக்கையின்மை. இப்பிரச்சினை இங்கு எல்லா கல்லூரிகளிலும் உண்டென்றாலும் செய்முறை கற்றலை அடிப்படையாகக் கொண்ட எங்களுக்குத் தான் இது அதிகம்.

வாசிப்புப் பழக்கம் இருந்தால் எழுத்து மொழி கைகூடலாம். ஆனால் அதைக் கோர்வையாக பேச்சில் கொண்டு வந்து மற்றவர்கள் புரியும் வண்ணம் விளக்குவதற்கு நீங்கள் கூறுவது போல் பயிற்சி முக்கியம். இதை நான் ஓரளவிற்கு உணர்ந்திருந்தாலும் இடையில் காந்தியின் பேச்சுடனும் உங்களது பேச்சுடனும் இணைத்துக் குழப்பிக் கொண்டேன். உங்களது விளக்கம் என்னை மேலும் தெளிவுபடுத்தியது.

பேரன்புடன்,
ஜெயராம்

முந்தைய கட்டுரைஅவதூதர்கள்
அடுத்த கட்டுரைமதுரையில்…