மனு இறுதியாக…

மனு இன்று

என்னுடைய மனு பற்றிய கட்டுரை மனு இன்று ஏறத்தாழ நாலாயிரம் சொற்கள் கொண்டது. தனித்தனித் தலைப்புகளாக ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான பதிலைச் சொல்வது. இந்தத் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகமிகத் தெளிவானதும் முழுமையானதும் அதுவே.

ஆனால் அதற்கு எப்படி எதிர்வினைகள் இருக்கும் என்றும் எனக்குத்தெரியும். ஏனென்றால் இந்தவகையான உரையாடலில் இருபதாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கிறேன்.

சாதாரணமாகவே இங்கே இந்தவகை விவாதங்களில் ஒருவகை மிகையுணர்ச்சி எப்போதும் உண்டு. தங்களை புரட்சியாளர்களாக, நீதியுணர்வில் தகிக்கும் அக்கினிகளாக, வஞ்சிக்கப்பட்டவர்களாக, தர்மக்காவலர்களாக எல்லாம் பாவனைசெய்துகொண்டு கோபமும் கொந்தளிப்பும் அடைவார்கள் நம்மவர்கள். வெளியே இருந்து எவராவது வந்து முகநூல் வழியாக தமிழ்நாட்டைப் பார்த்தால் இங்கே அறச்செல்வர்களும் புரட்சியாளர்களும் மட்டுமே வாழ்ந்தார்கள் என்று நினைக்கக்கூடும்.

இந்த மனநிலைகளுக்குப் பின்னாலிருப்பது பெரும்பாலும் அற்பமான சாதி,மத, இனச் சார்புநிலைகள். அவற்றை அரசியல்நிலைபாடாகவும் முற்போக்காகவும் கற்பனைசெய்துகொண்டிருப்பார்கள். தங்கள் எதிர்த்தரப்பு முழு அயோக்கியர்களாகவும் விலைபோகும் கூலிகளாகவும் மட்டுமே இருக்கமுடியும் என நம்புவார்கள். அத்துடன் எந்த விவாதத்திலும் எதையும் பொருட்படுத்தும்படிச் சொல்லமுடியாதவர்கள் ‘சவுண்டு’ விட்டு தங்களை காட்டிக்கொள்வது இங்கே வழக்கம்

மிகப்பெரும்பாலான எதிர்வினைகள் கட்டுரையிலிருந்து ஒரு பத்தியை மட்டுமே எடுத்துக்கொண்டு அதன்மேல் ஆற்றப்படும் புரியாத மூர்க்கங்கள். அந்த பத்தியையேக்கூட புரிந்துகொள்ளாதவை. பெரும்பாலானவர்கள் அந்தக் கட்டுரையிலிருந்து ஸ்க்ரீன்ஷாட்களை மட்டுமே படித்திருக்கிறார்கள். இவர்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு. இவர்கள் அந்த சர்ச்சைகள் வழியாக ஒரு சில வாசகர்களை கட்டுரைநோக்கி செலுத்துகிறார்கள்.நீண்டகால அளவில் இந்தவகை ஒருவரிப்பூசல்கள் காணாமலாகும், முழுமையான கட்டுரைகள் நிலைகொள்ளும். என்னுடைய காந்தி பற்றிய கட்டுரைகளே உதாரணம். அவற்றுக்கு எதிரான புழுதி மறைந்துவிட்டது. எந்தவிவாதத்திலும் அக்கட்டுரைகள் ஆணித்தரமான விளக்கங்களுடன் சென்று நிலைகொள்கின்றன

முன்பெல்லாம் இந்த ஒருபத்தி விவாதக்காரர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள், காழ்ப்பு கொண்டவர்கள் என நினைத்திருந்தேன். பின்னர் அவர்களில் சிலரை அறிமுகம் செய்துகொண்டபோது தெரிந்துகொண்டேன், உண்மையிலேயே அவர்களின் அறிவின் புரிதலின் எல்லை அது. அவர்களால் ஒரு கட்டுரையை முழுக்க வாசிக்க முடியாது, முட்டிமுட்டி வாசித்தாலும் ஒன்றுமே புரியாது. அவர்களால் இயன்றது ஒரு பத்தியை வாசித்து எதையாவது சொல்வதுதான்.

ஏனென்றால் நம் கல்விமுறை அதைத்தான் கற்பிக்கிறது. ஒரு முழுநூலை அல்லது ஒரு கட்டுரையை படித்து முழுமையாகத் தொகுக்க நம் பள்ளிகளோ கல்லூரிகளோ சொல்லித்தருவதில்லை. ஆங்காங்கே அடிக்கோடிட்டு அவற்றை மட்டுமே மனப்பாடம் செய்து ஒப்பிக்கத்தான் சொல்லிக்கொடுக்கின்றன. அந்த கல்வியைக் கடந்து தனக்கான ஒரு வாசிப்புப் பயிற்சியை அடைவது எளிதல்ல. அதற்கு முயற்சி தேவை. அதைவிட அறிவுத்திறன் தேவை. அறிவுத்திறன் இன்மை என்பது உடற்குறைபோன்ற ஒன்று. அதன்பொருட்டு எவரையும் பழிக்கக்கூடாது.

வேண்டுமென்றே கட்டுரையை திரிப்பவர்கள் இன்னொரு வகை. அவர்கள் ஏதேனும் கட்சி, கொள்கையில் வேரூன்றியவர்கள். அவ்வண்ணம் திரிப்பதற்கு அவர்களின் தரப்புக்கு என்றே ஒருசில வழிமுறைகள் இருக்கும். ‘டெம்ப்ளேட்’ திரிப்புகள் அவை.அதற்கான வார்த்தைகள், நையாண்டிமுறைகள். செம்பு,முட்டுக்கொடுத்தல் போன்ற தேய்ந்து நைந்த வார்த்தைகள் இல்லாமல் இவர்களால் பேசவே முடியாது. அதற்கு உள்ளே சென்றுநோக்கினால் சாதிப்பற்று இனப்பற்று சுயநலம் என்று பல காரணங்கள் இருக்கும். உண்மையாகவே கொள்கைநம்பிக்கை கொண்டவர்களும் இருக்கலாம்.

அவர்களுக்கு அக்கொள்கையை ‘அப்படியே’ திருப்பிச் சொல்லும் ஆட்கள் மட்டுமே தேவை. மற்றதெல்லாம் பிழை, மோசடி. அதை தங்கள் எதிர்த்தரப்பாக கட்டமைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. அதற்கான எல்லா திரிபுகளையும் செய்வார்கள்.இல்லாத முரண்பாடுகளை தேடிக் கண்டடைவார்கள்.அதற்காக சந்தர்ப்பங்களை மாற்றுவார்கள், சொற்திரிபுகள் செய்வார்கள்.

மூன்றாம்வகை ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக முடிந்தவரை குழப்பிக்கொள்ளவே முயல்பவர்கள். அதற்கு அவர்கள் உள்ளொன்று வைத்து பேசுவது முதற்காரணமாக இருக்கலாம். தன்னை முற்போக்காகக் காட்டி உள்ளே தன்சாதியை போற்றும் ஒருவரின் குழப்பம் செயற்கையானது.அதை நாம் எதிர்கொள்ளவே முடியாது. அவர் சொல்வதல்ல அவர் உத்தேசிப்பது, அவர் தனக்கே தன்னை ஒளித்துவைத்திருக்கிறார்.

ஆனால் புரிந்துகொள்வதற்கான பயிற்சியே இல்லாமல், யோசிக்கவே முற்படாமல் குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. அவர்களுக்கு அக்குழப்புதல் ஒருவகை அறிவுச்செயல்பாடு என்ற நம்பிக்கையும் உண்டு. அவர்களிடம் சொல்லிச்சொல்லி ஒரு தெளிவை உருவாக்கலாம்.

இந்த தரப்புகள் இங்கே ஒரு புகைமூட்டத்தை உருவாக்குவார்கள். எவர் என்ன சொன்னாலும் அதன்மேல் இந்த புகைத்திரை படியும். எனக்கு அது என்றுமுள்ள சிக்கல். ஆகவே அப்புகைமூட்டம் கொஞ்சம் அடங்கியபின் நான் என் கட்டுரையையே மீண்டும் சுருக்கமாக சொல்லி, அத்துடன் விவாதத்தை முடித்துக்கொள்வது வழக்கம்.

*

அதன்படி என் மனு இன்று கட்டுரையில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று மீண்டும் சொல்கிறேன்

முதலில் என்னென்ன சொல்லவில்லை என்று. ஏனென்றால் நான் என்ன சொல்லியிருக்கிறேனோ அதற்கு நேர்மாறாக பொருள்கொண்டு என்னை வசைபாடி இந்துத்துவர்களும் திராவிடத்துவர்களும் மார்க்ஸியர்களும் எழுதியிருக்கிறார்கள்.

1. மனுநெறி இன்று தேவை என்றோ, இன்று அதற்கு ஏதேனும் மதிப்புள்ளது என்றோ, இன்று அதை எவ்வகையிலாவது நியாயப்படுத்தலாம் என்றோ நான் சொல்லவில்லை. நேர்மாறாக அது இன்று தேவையில்லை, இன்று அதற்கு எந்த மதிப்பும் இல்லை, இன்று அதை நியாயப்படுத்துபவர்கள் பழைமைவாதிகள் என்றே சொல்கிறேன்

2.மனுநீதியை இன்று எதிர்ப்பது தவறு என்றோ, தேவையில்லை என்றோ சொல்லவில்லை. நேர்மாறாக, அந்த எதிர்ப்பிற்கான தேவை இச்சூழலில் இருக்கிறது என்றும், அதை உருவாக்குபவர்கள் இன்றும் மனுநீதியை முன்வைத்து சாதிமேட்டிமைத்தனம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை பொதுவெளியில் பேசிக்கொண்டிருப்பவர்களே என்று சொல்கிறேன். ஆகவே திருமாவளவனின் போராட்டம் தேவையானது என்றே சொல்கிறேன்

3. மனுநீதி பெண்களை இழிவாகப் பார்க்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நேர்மாறாக  அது பெண்களை இழிவாகவே பார்க்கிறது என்றே சொல்கிறேன். பெண்களை உடைமை என்று பார்க்கும் பார்வை அது. அந்தப்பார்வை இன்றைய உலகுக்கு ஒவ்வாதது, நிராகரிக்கப்படவேண்டியது என விளக்குகிறேன்

4. மனு பெண்களை போற்றுவதை கருத்தில்கொண்டு அவர் பெண்களை பழிப்பதை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று நான் சொல்லவில்லை. நேர்மாறாக பெண்களை அடிமைப்படுத்தவேண்டும் என்று மனுநீதி சொல்வதை இன்று நாம் சுட்டிக்காட்டும்போது பெண்களை அது போற்றுகிறதே என்று சுட்டிக்காட்டி அதன் ஆதரவாளர்கள் மறுக்கமுடியாது என்று சொல்கிறேன். மனு சொல்லும் அந்த இரு பார்வைகளும் ஒரே உடைமைப் பார்வையின் இரண்டு முகங்களே என்று சொல்கிறேன்

5. மனு எழுதியது இன்று மதிப்புள்ளது என்கிறேனா? இல்லை நேர்மாறாக  அது ஒரு  ஸ்மிருதி. ஸ்மிருதிகள் என்பபவை காலந்தோறும் மாறும் நெறிநூல்கள். மனுநீதி அவற்றில் ஒன்று. அதற்கு முன்னரும் பின்னரும் ஸ்மிருதிகள் இருந்துள்ளன. மனுநீதியின் சாதியடுக்குமுறை, குலக்கட்டுப்பாட்டுப்பார்வை, ஆணாதிக்கநோக்கு போன்ற மிகப்பெரும்பகுதி இன்று இந்துக்களால் மறுக்கப்பட்டுவிட்டது.ஆகவே மனு சொல்வது எவ்வகையிலும் இன்று கருத்தில்கொள்ளப்படவேண்டியது அல்ல என்று சொல்கிறேன்.

6. திருமாவளவன் மனுநீதி பெண்களை இழிவுசெய்கிறது என்று சொல்வதை நான் மறுக்கிறேனா? இல்லை நேர்மாறாக, மனுநீதி அவ்வாறு இழிவுசெய்கிறது என்றே சொல்கிறேன்.அவருக்கு அதை எதிர்க்க உரிமை உண்டு என்கிறேன்

7. அதேசமயம் திருமாவளவன் இந்துமதம் பெண்களை இழிவுசெய்கிறது என்று சொல்வதை ஏற்கிறேனா? இல்லை. நேர்மாறாக மனுநீதி இந்துமதத்தின் முதல்நூல் அல்ல, அதன்குரல் இந்துமதத்தின் குரல் அல்ல, அது ஒருபோதும் அப்படி இருந்ததும் இல்லை என்கிறேன்.அந்த அடிப்படையிலேயே மனுநெறியின் கூற்று இந்துமதத்தின் கூற்று என்று திருமாவளவன் சொல்வதை மட்டும்  ஏற்கமுடியாது என்கிறேன்

8.மனுநீதி பிராமணர்களால் முன்வைக்கப்பட்டது என்கிறேனா? இல்லை. நேர்மாறாக அது இங்கே இருந்த பழங்குடிகள் உட்பட அத்தனை சமூகங்களிலும் கடைப்பிடிக்கப்பட்ட நெறிகளின் தொகுப்பு என்கிறேன். ஆகவே அத்தனைபேரும் அதற்கு பொறுப்பு என்கிறேன். மனு அந்நெறிகளை உருவாக்கவில்லை, அவர் தொகுத்து அளிக்கிறார் என்கிறேன். ஆகவே இந்தியாவின் எல்லா சமூகங்களும் ஏதோ ஒருவகையில் அதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்கிறேன்.

*

நான் சொன்னவை என்னென்ன? மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன்

1.எந்தச் சமூகத்திலும் நெறிகள் என்பவை மேலிருந்து கீழே அளிக்கப்படும் ஆணைகள் அல்ல. மக்களிடம் ஆசாரங்களாகவும் நெறிகளாகவும் புழங்கும் கொள்கைகளை தொகுத்தே நெறிநூல்கள் உருவாக்கப்படுகின்றன.

2. பழங்குடி வாழ்விலிருந்து நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உருவாக்கவே நெறிநூல்கள் உருவாயின. அவற்றுக்கு வரலாற்றில் அப்படி ஒரு பங்களிப்பு உண்டு.நிலப்பிரபுத்துவகால வாழ்க்கை பழங்குடிவாழ்க்கையை விட ஒழுங்கும் வளர்ச்சியும் கொண்டது. நிலப்பிரபுத்துவ காலகட்டம் உருவாக்கிய சமூக ஒழுங்கும் பொருளியல் அடித்தளமுமே நாம் இன்று வாழும் வாழ்க்கைக்கு அடிப்படை. ஆனால் நாம் இன்று இருப்பது அடுத்த காலகாடத்தில். இன்று அந்நெறிகள் பொருத்தமானவை அல்ல.

3. எந்த நெறிநூலும் எப்போதைக்கும் உரியது அல்ல. மாறாநெறிநூல் என ஏதுமில்லை. எந்த மதமானாலும். மனு மட்டுமல்ல எந்த தொல்கால நெறிநூலும், தொல்கால ஆசாரநூலும் இன்றைக்கு செல்லுபடியாகக்கூடியது அல்ல.

4. பெண்களை உடைமை என பார்க்கும் பார்வை இரண்டு முகம் கொண்டது. ஒன்று உடைமை என்றால் அது மதிப்புமிக்கது என்று சொல்லப்படும். ஆனால் கூடவே அந்த உடைமை கைவிட்டுச் சென்றுவிடும் என்ற அச்சமும் இருக்கும். அதுதான் பெண்களைப்பற்றிய மனுநீதியின் பார்வை

5. மனுநீதி பெண்கள் சஞ்சலபுத்திகொண்டவர்கள், ஆண்களை கவரும் இயல்பு கொண்டவர்கள், ஆகவே ஆண்களால் காக்கப்படவேண்டியவர்கள் என்கிறது. அதேசமயம் பெண்கள் மதிப்புமிக்கவர்கள், பேணப்படவேண்டியவர்கள் என்றும் சொல்கிறது. இது மேலே சொல்லும் உடைமைப்பார்வையின் விளைவாக உருவாகும் இருநிலை

6. மனு மட்டுமே அப்பார்வையை கொண்டிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவககாலத்து நெறிநூல்கள் அனைத்திலும் அந்தப்பார்வையே உள்ளது. உலகம் முழுக்க அப்படித்தான். அது ஒரு காலகட்டத்தின் பார்வை. அப்படித்தான் மானுடகுலம் வரலாற்றில் பரிணாமம் அடைந்து வந்துள்ளது

7. இந்துமதம் மூன்று அடுக்கு கொண்டது. சுருதிகள் என்னும் மூலநூல்கள் தத்துவத்தையும் ஞானத்தையும் பேசுபவை. ஸ்மிருதிகள் நெறிகளைப் பேசுபவை. புராணங்கள் உதாரணக்கதைகளைப் பேசுபவை. இந்துமதம் என்பது சுருதிகளையே அடித்தளமாகக் கொண்டது. ஸ்மிருதிகள் மாற்றப்படுகின்றன. புராணங்கள் மறுஆக்கம் செய்யப்படுகின்றன. அவை நிலையானவை அல்ல. மாறாத ஆணைகளோ நம்பிக்கைகளோ அல்ல.

8.இந்துமதத்தின் சாராம்சமான சுருதிகளே இங்கே ஸ்மிருதிகள் எனப்படும் நெறிகளுக்கும் ஆதாரமானவை. சுருதிகளின் அடிப்படையில் ஸ்மிருதிகள் மாற்றப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வாறுதான் மனுஸ்மிருதி வழக்கொழிந்தது. சுருதிநூல்கள் மானுடபேதம் பார்க்கவில்லை. ஞானத்தை மானுடர்களுக்குப் பொதுவாகவே முன்வைத்தன.

*

இதுதான் நான் சொன்னது. இக்கருத்துக்கள் நான் இன்று சொல்பவை அல்ல, முப்பதாண்டுகளாக வெவ்வேறு தருணங்களில் இதையே சொல்லியிருக்கிறேன்.

மிகப்பெரும்பாலான எதிர்ப்புகள் நான் சொன்னவற்றுக்கு நேர்எதிராக அர்த்தம் கொண்டு மொட்டையாகக் கொந்தளிப்பவை. அவற்றால் குழம்பியவர் சிலர் இருக்கலாம் அவர்கள் மூலக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசியுங்கள்

மனு- கடிதங்கள்-4

மனு- கடிதங்கள்-3

மனு- கடிதங்கள்-2

மனு- கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைஒருமலர் வசந்தம்
அடுத்த கட்டுரைவெண்முரசு- செயல்,புகழ்