வெண்முரசு இசைக்கொண்டாட்டம் -முன்னோட்டம்

அன்புள்ள ஜெ,

நலமறிய ஆவல்.

நண்பர் ராஜன் சோமசுந்தரத்தின் ‘வெண்முரசு இசைக் கொண்டாட்டம்’  காணொளி முன்னோட்டத்தை கடந்த இருதினங்களாக திரும்பத்திரும்ப பார்த்து, கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் மத்தியிலும், குழுமத்திலும் இந்தப் பதிவை பகிர்ந்துவருகிறேன்.

ராஜனின் சென்ற பிரமாண்ட இசைத்தொகுப்புகளான ‘சந்தம்’, ‘பாரதியின் ஊழிக்கூத்து’ மாபெரும் வெற்றி. இந்த முறை  உங்களின் தமிழ் இலக்கிய உலகின் சாதனை நாவல், ‘வெண்முரசு’ நாவல் தொடருக்கு இசை மரியாதை செலுத்துமிதமாக. பத்மஸ்ரீ கமல்ஹாசன் மற்றும் பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி பிரகாஷின் மந்திரக் குரல்கள் இந்த இசைத்தொகுப்பில். சிதார் இசைமேதை பண்டிட் ரவிசங்கரின் மாணவர் ரிஷப்  ரிகிராம் சர்மாவின்  சிதார் இசையும், சிம்பொனி இசையும் கலந்தென ராஜனின் இசைத்தொகுப்பில் முழுத்தொகுப்பும் இந்தவருடத்தின் மாபெரும் இசைக்கொண்டாட்டமாக எங்களுக்கு அமையுமென்பதில் சந்தேகமில்லை.

ஒரு நாவல், 26 புத்தகங்கள், 25000+ பக்கங்களென ‘வெண்முரசு’  நாவல் தொடரை எழுதிய ஒரு தனி மனிதரின் கடும் உழைப்புக்கு, திறமைக்கு, சாதனைக்கு இதேமாதிரி எத்தனை மரியாதை செய்தாலும் போறாதென்றே தோன்றுகிறது. இருந்தாலும் உங்கள் உலகவாசர்களின் இந்த கொண்டாட்டம் , மரியாதையெல்லாம் உங்கள் மேல் உள்ள அன்பின் ஒரு துளிதான் என்று நினைக்கிறேன்.

காணொளியில் நண்பர்கள் சூழ வெடிச்சிரிப்புடன் தாங்கள் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்க கொள்ளை அழகு. உலகநாயகன் இணைந்து பாட ஒப்புக்கொண்டதே தங்கள் மீது உள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் இருக்குமென்று கருதுகிறேன்.

இந்தக் கருவை உருவாக்கி திட்டம் வகுத்து கொடுத்த நண்பர் ஆஸ்டின் சௌந்தர் அவருக்கும் நன்றிகள் பல.

இசை முன்னோட்டமே பெரும் அதிர்வை உருவாக்கி வருகிறது. முழு இசைத்தொகுப்பை எப்போதும் பார்ப்போம் என்று மிக ஆவலாக உள்ளது.

என்றும் அன்புடன்,

முத்து காளிமுத்து

அன்புள்ள முத்து

நண்பர்கள் அவர்களுடைய சொந்தச் செலவில் [பெரும்பொருட்செலவு] இதை உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமான பாடகர்களும் அமெரிக்க இசைக்குழுவினரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

வெண்முரசு நாவல்தொடரின் முதல்சிறப்பு அதன் விரிவு.அது கவனத்தைக் கவர்வதும் அதனால்தான். அதன் தடையும் அந்த அளவுதான். பெரும்பாலானவர்கள் அதை தங்களால் வாசிக்கமுடியாது என்று நினைக்கக் கூடும். ஆகவே தயங்குவார்கள்

அவர்களை உள்ளே கொண்டுவந்து, வாசிக்கச் செய்வதென்பது ஒரு பெரும்பணிதான். ஆர்வத்தை உருவாக்கவேண்டும், ஐயங்களை அகற்றவேண்டும், ஊக்கமூட்டவேண்டும். இன்னொரு அலை வாசகர்கள் உள்ளே வருவதற்காகவே இந்தச் செயல்பாடுகள்

நண்பர்களுக்கு நன்றி

ஜெ

அன்புள்ள ஜெ

வெண்முரசு இசைக்கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யமுடியவில்லை. ஆனால் இலக்கியப்படைப்புக்கு இப்படி ஒரு இசைக்கௌரவம் நிகழ்வது தமிழில் இதுவே முதல்முறை. இதற்கு கமல் போன்ற விஐபிக்கள் எல்லாம் வந்து பங்கெடுப்பது மிகமிகச் சிறந்த விஷயம். அவருடைய ஆர்வமும் கலையிலக்கியங்கள் மீது அவருக்கிருக்கும் மதிப்பும் தெரியவருகிறது. வாசகனாக அவருக்கு என் நன்றிகள்

இவ்வகையான கொண்டாட்டங்கள் வழியாகவே வெண்முரசை மக்களிடையே நாம் கொண்டுசென்று சேர்க்கமுடியும். வெண்முரசு பற்றி இன்று உங்கள் தளம் மற்றும் துணைத்தளங்களிலேயே பேசப்படுகிறது. அவற்றைவிட வெண்முரசின் வரிகளை வாசகர்கள் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டே இருந்தது அந்நாவலை தொடர்ச்சியாக கவனத்தில் வைத்திருந்தது. பலரை வாசிக்கச் செய்தது. அது இன்னமும் தொடரவேண்டும். வாசகர்கள் தொடர்ச்சியாக அந்நாவலின் அரியவரிகளை பகிரவேண்டும்.

இன்ஸ்டகிராம் போன்றவற்றில் வெண்முரசின் படங்களும் வரிகளும் தொடர்ச்சியாகப் பகிரப்படவேண்டும். அதுதான் இளம்வாசகர்களின் இடம். இந்த இசைக்கோர்வை நல்ல டிவியில் வெளியாகவேண்டும்.

ஜி. ரகுநாத் தண்டபாணி

அன்புள்ள ரகு

என்னைப்பொறுத்தவரை நான் இவை எவற்றையும் செய்யப்போவதில்லை. இந்த இசைக்கோவை என்பது வாசகர்களின் முயற்சி. நடக்கட்டும், அவ்வளவுதான்.

ஜெ

அன்புள்ள ஜெ

வெண்முரசு இசைக்கொண்டாட்டம் ஒரு முக்கியமான முயற்சி. வெண்முரசு வழக்கமான நவீனஇலக்கியம் இல்லை. இந்த மாடர்ன் இலக்கியங்களில் பண்பாடு வரலாறு பற்றிய எந்த தொடர்பும் இருப்பதில்லை. அவை எழுதுபவர்களின் ஓர் அந்தரங்க உலகில் நிகழ்கின்றன. அவற்றுக்கு ஒரு பண்பாட்டு மதிப்பு உண்டு என்பதிலே சந்தேகமில்லை. ஆனால் அவை வேறொரு உலகம்

வெண்முரசு நம்முடைய பண்பாடுமீதான மிகப்பெரிய விமர்சனம். பண்பாட்டை ஒட்டுமொத்தமாக நவீனநோக்கில் மறுபடியும் புனைந்திருக்கிறது அது. இன்னொரு முழுமையான பார்வையை அளிக்கிறது. அதை அறிந்து அதனுடன் உரையாடும் வாசகர்கள் மிகப்பெரிய ஒரு பார்வையை அடையமுடியும். அது இன்று தமிழில் நடந்திருக்கிற மிகப்பெரிய முயற்சி

அதைப்பற்றி இன்று தமிழ்ச்சூழல் அமைதியாக இருக்கிறது. இலக்கியவாதிகள் தவிர்த்துப்போய்விடலாம் என நினைக்கிறார்கள். ஊடகங்கள் பொருட்படுத்தாமலிருக்கின்றன, அவற்றுக்கு இதெல்லாம் தெரியாது. இச்சூழலில் அதன் வாசகர்களே அதை முன்னெடுப்பது என்பது மிகப்பெரிய ஒரு நிகழ்வு. எதிர்காலத்தில் வாசகர்களே கொண்டாடி முன்னெடுத்த ஓர் இலக்கியநிகழ்வு , வேறு எவருமே கண்டுகொள்ளவில்லை என்று இது பதிவாகவேண்டும். இலக்கியத்துக்கு அதைப்போல கௌரவம் ஏதும் கிடையாது.

ஒரு படைப்பு வாசகனுடன் மிகப்பெரிய உரையாடல் ஒன்றை நடத்தவேண்டும். அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கைப்பார்வையையே மாற்றிவிடவேண்டும். அதை அவன் ஏற்கலாம் நிராகரிக்கலாம். ஆனால் அவன் அதன் வழியாக வளரவேண்டும். வெண்முரசு அத்தகைய மாபெரும் படைப்பு. அதற்கு அடுத்த தலைமுறை இளம்வாசகர்களை கொண்டுவர இந்த இசைக்கோவை உதவவேண்டும்

இது சிறந்த டிவியில் வெளிவரவேண்டும்

ஜி.கிருஷ்ணகுமார்

அன்புள்ள கிருஷ்ணகுமார்,

இதை டிவியில் வெளியிட மீண்டும் செலவு. இதை அவர்கள் தாங்களாகவே வெளியிடவேண்டும், அதற்கு சூழலில் வாய்ப்புகள் குறைவு

இணையம்வழியாகவே சென்றுசேரவேண்டும். இதைப் பார்ப்பவர்கள் டிவிட், முகநூல்,வாட்ஸப், இன்ஸ்டகிராமில் முடிந்தவரை பகிர்ந்தாலே போதுமானது.

ஜெ

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் பார்வையில்
அடுத்த கட்டுரைமனு- கடிதங்கள்-2