பேச்சும் பயிற்சியும்

வாழ்தலின் பரிசு

அன்புள்ள ஆசிரியர்க்கு,

நான் விஷ்ணுபுரம் வாசித்து (முதல் வாசிப்பு) முடித்து விட்டேன். அதன் வாசிப்பனுபவத்தை தான் முதலில் அனுப்ப எண்ணினாலும் காந்தியைப் பற்றிய உங்கள் உரையைக் கேட்க முடிந்ததால் ஏற்பட்ட உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அதைப் பற்றி ஒரு வரியாவது எழுதி அனுப்பலாம் என்று இப்போது எழுதுகிறேன்.

உங்களையும் உங்கள் காந்தி பற்றிய எழுத்துகளையும் வாசிக்க ஆரம்பித்த பின்னர் எந்த செயலைச் செய்தாலும் அதை காந்தி எப்படி அணுகியிருப்பார் அல்லது நீங்கள் எப்படி அணுகியிருப்பீர்கள் என்று  ஒரு தடவையாவது நினைக்காமல் என்னால் இருக்க முடிவதில்லை.

நான்   இணையவழி ஓவிய வகுப்பு எடுக்க விரும்புவதால் அதற்கு முன்னோடியாக  public speaking  பற்றிய ஒரு இணைய வழி பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளேன். அதில் நம் உடல்மொழி, பேசும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை எவை என்பதைப் பற்றியெல்லாம் கற்பிக்கிறார்கள். ஆனால் அதைக் கற்பிப்பவர் போன வாரம் ஒரு முறை ‘நாம் எதைப் பேசுகிறோம் என்பதை விட அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியமானது’ என்று ஆய்வு மேற்கோள்களைக் காட்டிக் கூறினார். அது எனக்கு குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் காந்தி மிக மெல்லிய குரலில் படோடோபம் இல்லாமல் தான் பேசுவார் என்று நீங்கள் எழுதியதை வாசித்திருக்கிறேன். காந்தி தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறோம் என்பதை விட எதைப் பேசுகிறோம் அதற்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறோம் என்பதில் தான் முழு சிரத்தையும் செலுத்தியிருந்திருப்பார்.

உங்கள் பேச்சைக் கேட்ட போதும் அதுவே தோன்றியது. காந்தியைப் பற்றிய உங்கள் பேச்சு மற்றும் நீங்கள் பேசிய விதமே ஒரு பெரும் கனவுடன் இங்குள்ள எதையும் பொருட்படுத்தாமல் ஒரு எதிர்காலத்தைப் பார்த்து பேசியது போல் இருந்தது.

எதைப் பேசுகிறோமோ அதில் முழு அர்பணிப்பும் சிரத்தையும் மிக முக்கியமாக உண்மையும் இருந்தால் நாம் பேசுவது மற்றவர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரும் என்று நினைத்துக் கொண்டேன்.

உங்கள் உரைக்கு நன்றி!

பணிவன்புடன்,
ஜெயராம்

அன்புள்ள ஜெயராம்

இது தொடர்பாடலின் யுகம். மேடையுரை, காணொளி உரை, கருத்தரங்க உரை, கூட்டுச்சந்திப்பு உரை என உரைக்கான தேவைகள் இன்று கூடிக்கொண்டே செல்கிறன. ஆகவே உரையை ஒரு அன்றாடத்தேவையாக, ஒரு தொழிற்தகுதியாக நாம் வளர்த்துக்கொண்டாகவேண்டிய நிலையில் இருக்கிறோம்

எந்தக் கலையும், எந்த திறனும் அதற்கான பயிற்சியால் மேம்படுவதுதான். பயிற்சி என்பது என்ன? ஒரு செயலை புறவயமாகப் பார்ப்பது,பலமுறைச் செய்தி அதை இயல்பான பழக்கமாக ஆக்கிக்கொள்வது இரண்டும்தான் பயிற்சி எனப்படுகிறது.

எச்செயலையும் புறவயமாகப் பார்ப்பது மிக இன்றியமையாத ஒன்று. நாம் ஒரு மேடையில் பேசுகிறோம். கேட்பவருக்கு அது எப்படி இருந்தது என அறிந்துகொள்வது அது. நாம் பேசியது சரியாக ஒலித்ததா,நாம் பேசிய கருத்து சென்றடைந்ததா என்று பார்ப்பது. அரங்கின் அனைத்து இடங்களிலும் அமர்ந்திருந்தவர்களுக்கு அது சரியாகச் சென்று சேர்ந்ததா, அரங்கின் அனைத்து தரப்பினருக்கும் புரிந்ததா என்று மதிப்பிடுவது.

இதை ஏன் செய்யவேண்டும் என்றால் நம் செயல் பயனற்றுப் போய்விடக்கூடாது என்பதற்காக. நம் செயல் உச்சகட்ட விளைவை உருவாக்கவேண்டும் என்பதற்காக.

ஒருசெயல் முதல்முறை செய்யப்படும்போது அது தயக்கங்களுடன், பிழைகளுடன் இருக்கிறது. செய்யச்செய்ய உடலும் உள்ளமும் ஒத்திசைவு கொள்கின்றன. அதன்பின்னர்தான் உள்ளம் இயல்பாக உடலில் வெளிப்படத் தொடங்குகிறது. தன்னியல்பாக நம் கலை நிகழுமென்றால் அதுவே சிறந்த பயிற்சிபெற்ற கலை

ஆகவே பயிற்சி தேவை என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் கூறுவது பயிற்சி என்பதன் எல்லைகள், அதன் குறைபாடுகளைப் பற்றி. முதலில் பயிற்சி தேவை என்பதை ஒப்புக்கொள்ளலாம். எவ்வகையான பயிற்சி என்பது அடுத்த கேள்வி.

ஒரு வசதிக்காகப் பேச்சுநிகழ்வுகளை இரண்டாகப் பகுத்துக்கொள்வோம். ஒருவர் பேசுவதைக் கேட்கும்பொருட்டு, அதற்கான முழுக்கவனத்துடன் ஓர் அரங்கு அமர்ந்திருக்கிறது. அவர்களுக்கு அவருடைய இடமென்ன, அவருடைய சொல்லின் மதிப்பென்ன என்று தெரியும் என்று கொள்வோம்

அந்நிலையில் அவர் எப்படியும் பேசலாம்.அவர்கள் அவர் சொல்லை கூர்ந்து கவனிப்பார்கள். அவருடைய வெளிப்பாட்டின் குறைகளை களைந்துகொள்வார்கள். அவருடைய ஒரு சொல்லைக்கூட தவறவிடமாட்டார்கள். அவர் பேசியவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் ஓட்டி புரிந்துகொள்வார்கள்.

அவர்கள் அவருடைய சொற்களை முன்னரும் கேட்டிருப்பார்கள். அவருடைய உச்சரிப்பும் குரலும் அவர்களுக்குப் பழகியிருக்கும். அவருடன் மானசீகமான உரையாடலில் இருந்துகொண்டிருப்பார்கள். அந்நிலையில் அவர்களுக்கு அவர் சொல்வது ஒரு நீண்ட உரையாடலின் ஒரு பகுதி. அச்சொற்களைப் புரிந்துகொள்ள அவர் அதுவரை பேசிய ஒட்டுமொத்தம் அவர்களுக்கு உதவிசெய்கிறது. அதாவது contecxt அவரைப் பொருள்கொள்ள உதவியாக உள்ளது. சொற்களம் அதில் நிகழும் அனைத்தையும் விளக்குகிறதுஅமைந்து

காந்தி அப்படிப்பட்ட அரங்கிடம்தான் எப்போதும் பேசினார்.ஆகவே அவர் பேசுவது எப்படி ஒலித்தாலும் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு காந்திதான் முக்கியம். காந்தி என்ன சொல்வார், அவருடைய சொற்களென்ன என்பதெல்லாம் முக்கியம். அவரைப் பார்க்கவென்றெ பலநாட்கள் பயணம்செய்து வந்து பலமணிநேரம் காத்திருந்து செவிகூர்பவர்கள் அவர்கள்.

அது காந்தியின் மேடைத்திறன் அல்ல. அந்தக் கூட்டமும் காந்தியும் சேர்ந்து ஒரே திரளாக ஆகிறார்கள். காந்தியை அவர்கள் தங்களில் ஒருவரென உணர்கிறார்கள். நிறைய சந்தர்ப்பங்களில் காந்தி பேசியதுகூட கிடையாது. வெறுமே கைகூப்புகிறார். ஓரிரு சொற்கள் மட்டும் பேசுகிறார். அதுவே போதுமானதாக இருக்கிறது.

நான் பேசுவதும் எனக்காக வந்திருக்கும் அரங்கிடம்தான். அவர்கள் ஏற்கனவே என்னை படித்தவர்கள்.என் மேல் மதிப்பு கொண்டவர்கள். ஒரு பேச்சாளனாக என்னை நினைத்து அவர்கள் வரவில்லை, எழுத்தாளனின் பேச்சைக்கேட்கவே வருகிறார்கள். சாரு நிவேதிதாவையோ யுவன் சந்திரசேகரையோ கேட்கவருபவர்களும் அப்படித்தான். ஆகவே அவர்கள் செவிகொடுக்கிறார்கள், புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அவர்கள் எங்களைப் புரிந்துகொள்ள சூழல்,சொற்களம் இருக்கிறது

நானோ சாருவோ யுவன் சந்திரசேகரோ பேசும்போது கேட்க நன்றாக இருப்பதாக எங்கள் வாசகர்களுக்குத் தோன்றும். ஆனால் அதே அரங்கில் ஒரு வாசகர் அவருடைய நண்பரை அழைத்துவந்திருப்பார். அவரிடம் பேசினால் “என்ன பேசினார்னு சரியா கேக்கலீங்க” “சரியா புரியலீங்க” என்றுதான் சொல்வார். இதை பலமுறை கவனித்திருக்கிறேன்

என் மேடைப்பேச்சு குறைகள் கொண்டது. ஒன்று என் குரல் உடைந்தது, ஓங்கி ஒலிப்பது அல்ல. என் உச்சரிப்பு தெளிவற்றது. பலசொற்களை நான் விழுங்கிவிடுகிறேன். என் சொற்றொடர்களில் கடைசிச்சொற்கள் காற்றாக ஒலிக்கின்றன. நிதானமாக பேசுபவன் சட்டென்று வேகமாகப் பேசுகிறேன். ஒரு விஷயத்தைச் சொல்லி வருபவன் அதில் சிலவற்றை வாசகர் ஊகிக்கவிட்டுவிட்டு இன்னொன்றுக்குச் சென்றுவிடுகிறேன். எதையும் விரிவாக விளக்குவதில்லை. ஒருவகையான ‘வரையறை’ போல சொல்லி கடந்துவிடுகிறேன்.

கோவையில் எப்போ வருவாரோ உரைத்தொடரில் இரு உரைகளை ஆற்றியிருக்கிறேன். சங்கரர் பற்றியும் வியாசர் பற்றியும். இரு உரைகளுமே புகழ்பெற்றவை, இன்றும் கேட்கப்படுபவை. ஆனால் அன்று அரங்கிலிருந்தவர்களில் என் வாசகர்கள் அல்லாதவர்களுக்கு என்ன ஏது என்று புரியவில்லை. என் உச்சரிப்பும் பிடிகிடைக்கவில்லை. ஆகவே அந்த உரைத்தொடரில் நான் மேற்கொண்டு பேசவில்லை. அடுத்தடுத்த உரைகள் தனியாக ஒருங்குசெய்யப்பட்டன. அவற்றுக்கு அந்த வழக்கமான அரங்கினர் வரவில்லை, என் வாசகர்கள் மட்டுமே வந்தனர்.

நீங்கள் ஒரு துறைநிபுணராக, ஆளுமையாக ஏற்கனவே நிலைபெற்றுவிட்டிருந்தால் உங்கள் அறிவும் ஆளுமையும்  வெளிப்பட்டாலே போதுமானது, அது நல்ல உரைதான். ஆனால் பெரும்பாலான உரைகள் அப்படி அல்ல. அவை இரண்டாம்வகையைச் சேர்ந்தவை. அவை நேர் எதிரானவை. அரங்கினர் போதிய அக்கறையுடன், கவனத்துடன் இருப்பதில்லை. மேடையுரையை கேட்கும் பயிற்சி இருப்பதில்லை. சொல்வனவற்றைப் புரிந்துகொள்ளும் அறிவுச்சூழலிலும் அவர்கள் இருப்பதில்லை. அவர்கள் நடுவே ஒரு பொதுத்தன்மையும் இருக்காது. கலவையானவர்களாகவே இருப்பார்கள்.

தமிழ்ச்சூழலில் மேலுமொரு சிக்கல் என்னவென்றால் பொதுவாக மக்கள் மேடையுரைகளின் குறிப்பிட்ட வகையான வெளிப்பாட்டை பழகி அதற்கு என மனம் அமைந்திருப்பார்கள் என்பது. ஓங்கிய குரல், பலவகையான குரல்வேறுபாடுகள், நடிப்புப்பாவனைகள், குறிப்பிட்ட இடைவேளையில் நகைச்சுவை, ஒரே கருத்தை பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லி நிறுவுதல், உரையை பல்வேறு தனிப்பகுதிகளாக அமைத்துக்கொண்டு ஒன்றைச் சொல்லிமுடித்து அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லுதல் என அதன் உத்திகள் பல உள்ள்ன. அவையே நம்மவருக்குப் பழக்கம்.

அதோடு தமிழின் புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர்கள் எவரும் புதிதாக எதையும் சொல்வதில்லை. ஏற்கனவே சொன்னதையே மீண்டும் சொல்கிறார்கள். ஏற்கனவே அரங்கினருக்குக் கொஞ்சம் தெரிந்தவற்றையே விளக்கிச் சொல்கிறார்கள். அதை மிகமிகமிக விரிவாகச் சொல்கிறார்கள். ஒருமுறை சுகி சிவம் நாகர்கோயிலில் பேசுவதை கேட்டேன். நான் அவ்வழியாக கொரியர் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். பெரிய மைதானம். அதை சுற்றிச்செல்ல இருபத்தைந்து நிமிடங்களாகும். அந்த இருபத்தைந்து நிமிடமும் அவர் பேசிக்கொண்டிருந்தது ஓர் ஆனந்தவிகடன் நகைச்சுவைத் துணுக்கைத்தான்.

ஏனென்றால் அதுதான் புரிகிறது, மக்கள் அப்படி பழகியிருக்கிறார்கள். பொதுஅரங்கினரைப் பார்த்தால் எனக்கு எப்போதுமே பீதியாகிறது. அவர்கள் எவரும் ஒழுங்காக அமர்வதில்லை. பேச்சு தொடங்கியபின் வர ஆரம்பிப்பார்கள்.  ‘விஐபி’ வருகைகளுக்கான சலசலப்புகள்.  ‘விஐபி’கள் கிளம்பிச் செல்வதற்கான சலசலப்புகள். அரங்கினர் செல்போனில் பேசுவார்கள், பொரிகடலை சாப்பிடுவார்கள், ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்வார்கள், அறிமுகம்செய்துகொள்வார்கள், இடம் மாறி அமர்வார்கள். ஊடாக டீ -வடை பரிமாறப்படும். துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்படும்.

அரைக்கவனத்துடன் அமர்ந்திருப்பார்கள் அரங்கினர். அவர்கள் எதையும் தொடர்ச்சியாக கவனிப்பதில்லை. அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதைக் கொண்டு மேலே கேட்பவற்றை தோராயமாக புரிந்துகொள்கிறார்கள். ஒரு மேடைப்பேச்சுக்குப் பின் அரங்கினரிடம் பேசினால், அல்லது ஒரு கேள்விபதில் அமர்வு இருந்தால் அவர்கள் புரிந்துகொண்டது என்பது புரியும். சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.  பலசமயம் நேர்த்தலைகீழாக இருக்கும்.

ஒருமுறை நான்  ‘இலக்கியமதிப்பீடுகளின் படி பொழுதுபோக்கு எழுத்து என்பது இலக்கியமல்ல’ என்று ஒருமணிநேரம் பேசி இறங்கியதுமே அந்த அரங்கின் தலைவர் எழுந்து “அருமையா பேசினார், எல்லாமே இலக்கியம்தான், மனுசன் வாசிக்கிறதுதான் இலக்கியம், இதிலே ஒண்ணுமேல் இன்னொண்ணு கீழ்னு வேறுபாடே கெடையாதுன்னு அற்புதமாச் சொன்னார்” என்று என்னை பாராட்டினார்.

ஆகவே நான் என்பேச்சை எவரேனும் தொகுத்துவழங்க ஒப்புக்கொள்வதில்லை. தொகுத்துச் சொல்ல ஆரம்பித்தால் எழுந்து தடுத்துவிடுவேன். ஆனாலும் நன்றியுரையில் அந்த ‘தொகுப்பு’ வந்துவிடும். தொண்ணூறுசதவீதம் நேர்தலைகீழாகவே சொல்லப்படும். அதாவது நாம் என்ன சொன்னாலும் அவர்கள் சொல்லவிரும்பும் ஒன்றாக அதை புரிந்துகொண்டு சொல்வார்கள். ஆகவே கேள்விபதிலை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். பேச்சு முடிந்ததுமே கிளம்பிவிடுவேன்.

நான் இந்த இரண்டாவது வகை அரங்கை ஒத்துக்கொள்வதில்லை. அப்படி தவிர்க்கமுடியாமல் ஒத்துக்கொண்டு சென்ற இடங்களிலெல்லாம் பரிதாபமாக தோற்றிருக்கிறேன். மேடைமுன் ஒருவர் நடமாடிக்கொண்டிருந்தாலே என்னால் பேசமுடியாது.அரங்கின் முன்வரிசையில் அமர்ந்து கூச்சமே இல்லாமல் மேடைநாளிதழை வாசிப்பவர்கள், பெரியமனிதர்களை கண்டு குழைந்துகொண்டிருப்பவர்கள் நம்மவர்கள்.

ஒரு பயிற்சியாளராக நீங்கள் பேசுவது இரண்டாம்தரப்பினரிடம் இல்லையா? அதாவது அக்கறையற்ற, கவனமற்ற, பயிற்சியற்ற கூட்டத்திடம். அவர்கள் ஆர்வம்கொள்ளச்செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கவேண்டும். அவர்களுக்கு தெளிவாக கேட்கவேண்டும். அவர்களுக்கு புரியவேண்டும். அப்படிப்பட்ட உரைதான் தொழிற்களங்களில், பயிற்சிவகுப்புகளில் தேவையாகிறது. அதற்கு முறையான பயிற்சி இன்றியமையாதது.

மேடையில் பேசத்தான் வேண்டுமா? முன்பெல்லாம் அது ஒரு கேளிக்கை, அல்லது எப்போதாவது நிகழும் ஒரு விழா. இன்றையகாலகட்டம் முற்றிலும் தொடர்பற்றவர்கள் சேர்ந்துசெய்யும் செயல்களால் ஆனது. பெருவாரியான மக்களை இணைத்துக்கொண்டு செய்யும் பணிகளே இன்றைய தொழில்கள்.ஆகவே தொடர்புத்திறன் இன்று எந்தத் தொழிலுக்கும் மிகமிக இன்றியமையாதது.

மேடைப்பேச்சு என்பதை இன்று பொதுப்பேச்சு என்று மாற்றிக்கொள்ளலாம். பத்துபேர் கூடிய குழுவில் பேசுவது, காணொளியில்பேசுவது எல்லாமே அதில் அடங்கும். தெளிவாகக் கேட்கும்படிப் பேசுவது, அதற்கேற்ப குரல் முகபாவனைகள் உச்சரிப்பு ஆகியவற்றை அமைத்துக்கொள்வது முதல்தேவை.போதிய அக்கறையும் கவனமும் அற்றவர்களை கவர்ந்து உள்ளிழுக்கும்படிப் பேசுவதும் தெளிவாக அவர்களுக்கு புரியும்படி பேச்சை அமைப்பதும் அடுத்த தேவை

அதற்கு அந்தப்பயிற்சிகள் எப்படி உதவுகின்றன? பொதுவாக நாம் மிக அரிதாகவே வேறுபட்டதன்மை கொண்ட அரங்கினரைப் பார்க்கிறோம். மற்றபடி அரங்கினர் தமிழகமெங்கும் ஒரேதன்மை கொண்டவர்கள். அவர்களின் இயல்பை கூர்ந்து அவதானித்து, அவர்களுடைய எதிர்வினைகளைக்கொண்டு, பேச்சு எப்படி அமையவேண்டும் என்பது திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது. அதுவே உரைக்கான பயிற்சியாக அளிக்கப்படுகிறது

அது ஒருவகை தரப்படுத்தல். அந்த ‘ஸ்டேண்டேர்ட்’ எல்லா செயல்களிலும் கண்டடையப்படுகிறது.அதன்பின்னர்தான் பொதுப்பயிற்சி அளிக்கப்படமுடியும். அந்த சராசரித்தரத்தை பயின்று அடைந்தாகவேண்டும். அதற்கு அப்பால் உள்ள தனித்திறனை அடைவதும் சரி, தனித்தன்மை கொண்ட அரங்கினரை எதிர்கொள்வதும் சரி, அப்பயிற்சிக்கு அப்பால் சென்று நீங்கள் கண்டடைவது.

எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். நீங்கள் பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைபண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா
அடுத்த கட்டுரைஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை